Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 61—2 பேதுரு

பைபிள் புத்தக எண் 61—2 பேதுரு

பைபிள் புத்தக எண் 61—2 பேதுரு

எழுத்தாளர்: பேதுரு

எழுதப்பட்ட இடம்: பாபிலோன் (?)

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 64

பேதுரு தன் இரண்டாம் நிருபத்தை எழுதி முடித்தபோது, சீக்கிரத்தில் தான் மரணத்தை எதிர்ப்படவிருந்ததை உணர்ந்தார். ஊழியத்தில் உறுதியாய் நிலைத்திருக்க திருத்தமான அறிவு உதவும்; எனவே அதன் முக்கியத்துவத்தைக் குறித்து தன் உடன் கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்ட அவர் பெரிதும் விரும்பினார். அப்போஸ்தலனாகிய பேதுருவின் பெயர் தாங்கிய இந்த இரண்டாம் நிருபத்தை எழுதினவர் அவர்தானோ என சந்தேகிப்பதற்கு ஏதாவது காரணம் இருந்ததா? எழுத்தாளர் குறித்து எழும் எந்தச் சந்தேகங்களையும் இந்தக் கடிதமே நீக்கிவிடுகிறது. எழுத்தாளர் தன்னை “இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு” என சொல்கிறார். (2 பே. 1:1) மேலும் “இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்” என அவர் குறிப்பிடுகிறார். (3:1) இயேசு கிறிஸ்துவின் மறுரூபக் காட்சிக்குக் கண்கண்ட சாட்சி என தன்னையே குறிப்பிடுகிறார்; யாக்கோபுடனும் யோவானுடனும் அதைக் காண பாக்கியம் பெற்ற பேதுரு, கண்கண்ட சாட்சிக்கே உரிய பாணியில் உணர்ச்சி ததும்ப இதை எழுதுகிறார். (1:​16-21) தன்னுடைய மரணத்தை இயேசு முன்னறிவித்ததையும் குறிப்பிடுகிறார்.​—2 பே. 1:14; யோவா. 21:​18, 19.

2எனினும், குறைகாண்போர் சிலர் இந்த இரண்டாம் நிருபத்தை பேதுரு எழுதவில்லை என கூறி அதன் மதிப்பைக் குறைக்க முயலுகின்றனர்; அதற்கு இந்த இரண்டு நிருபங்களின் எழுத்துநடையிலும் காணப்படும் வேறுபாட்டை காரணம் காட்டுகின்றனர். ஆனால் இது உண்மையில் எந்தப் பிரச்சினையையும் உண்டுபண்ண வேண்டியதில்லை, ஏனெனில் இதன் பொருளும் இது எழுதப்பட்ட நோக்கமும் வேறு. மேலும், பேதுரு தன் முதல் நிருபத்தை “உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் மூலம்” எழுதினார். வாக்கியங்களை தானே அமைத்து எழுத சில்வானை ஓரளவு அனுமதித்திருந்தார் என்றால் இந்த இரண்டு நிருபங்களிலும் எழுத்துநடை வேறுபடுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். ஏனெனில் இந்த இரண்டாம் நிருபத்தை சில்வான் எழுதவில்லை. (1 பே. 5:12) இதற்கு, “சர்ச் எழுத்தாளர்களால் போதுமானளவு சான்றளிக்கப்படவில்லை.” ஆதலால் இது அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்ததா என்பதில் சர்ச்சைகள் எழுந்தன. எனினும், “கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் தலைசிறந்த புத்தகப் பெயர்ப் பட்டியல்கள்” என்ற அட்டவணையில் காண்கிறபடி, கார்த்தேஜின் மூன்றாவது ஆலோசனை குழுவிற்கு முன்னிருந்த பல அதிகாரத்துவங்கள், இரண்டு பேதுருவை பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்ததாகவே கருதின. a

3பேதுருவின் இரண்டாம் நிருபம் எப்போது எழுதப்பட்டது? முதல் நிருபம் முடித்தப் பின் வெகு சீக்கிரத்திலேயே இது எழுதப்பட்டிருக்கலாம்; பாபிலோனில் அல்லது அதற்கு அருகில் சுமார் பொ.ச. 64-ல் பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கலாம். ஆனாலும் அது எழுதப்பட்ட இடத்தைக் குறிப்பிடும் நேரடியான ஆதாரம் எதுவும் இல்லை. இது எழுதப்பட்ட சமயத்தில், பெரும்பாலான பவுலின் நிருபங்கள் சபைகளில் வாசிக்கப்பட்டு வந்தன; அது பேதுருவுக்கும் தெரியும். அவர் அவற்றைக் கடவுளால் ஏவப்பட்டவையாக ஏற்று, “மற்ற வேதவாக்கியங்க”ளோடு வகைப்படுத்தினார். பேதுருவின் இரண்டாம் நிருபம் “எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு” என ஆரம்பிக்கிறது. முதல் நிருபம் யாருக்காக எழுதப்பட்டதோ அவர்களுக்காகவும் பேதுரு பிரசங்கித்திருந்த மற்றவர்களுக்காகவும் இது எழுதப்பட்டதாக தெரிகிறது. முதல் நிருபம் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டது. அதைப்போல், இரண்டாம் நிருபமும் பல இடங்களுக்கு அனுப்பப்படுவதற்கு ஏற்ப பொதுவான பொருளைக் கொண்டிருந்தது.​—2 பே. 3:​15, 16; 1:1; 3:1; 1 பே. 1:1.

இரண்டு பேதுருவின் பொருளடக்கம்

4பரலோக ராஜ்யத்துக்கான அழைப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் (1:​1-21). “விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு” அன்புமிக்க கரிசனை காட்டுவதில் பேதுரு முந்திக்கொள்கிறார். ‘கடவுளையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் பற்றிய திருத்தமான அறிவினால்’ அவர்களுக்குத் தகுதியற்ற தயவும் சமாதானமும் பெருகும்படி விரும்புகிறார். ‘அருமையும் மகாமேன்மையுமான வாக்குத்தத்தங்களை’ கடவுள் அவர்களுக்குத் தாராளமாய் கொடுத்திருக்கிறார்; இவற்றின் மூலம் அவர்கள் ஆவியின் குமாரர்களாக பரலோகத்திற்கு போகும் பாக்கியம் பெறுகிறார்கள். எனவே, ஊக்கமான முயற்சியினால் அவர்கள் தங்கள் விசுவாசத்துடன் நற்குணத்தையும், அறிவையும், தன்னடக்கத்தையும், பொறுமையையும், தேவபக்தியையும், சகோதர பாசத்தையும், அன்பையும் கூட்டி வழங்குவார்களாக. இந்தப் பண்புகள் அவர்களில் நிரம்பி வழியத்தக்கதாய் பெருகினால், திருத்தமான அறிவைப் பொறுத்ததில் அவர்கள் ஒருபோதும் செயலற்றவர்களாக அல்லது கனியற்றவர்களாக ஆகமாட்டார்கள். தாங்கள் அழைக்கப்பட்டதையும் தெரிந்தெடுக்கப்பட்டதையும், அதோடு தங்கள் கர்த்தரின் நித்திய ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கவிருப்பதையும் உறுதிசெய்வதற்குச் சகோதரர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். ‘தன் கூடாரத்தை விட்டுப்போவது சீக்கிரம் நேரிடுமென்று’ பேதுரு அறிந்திருக்கிறார்; தான் சென்ற பின்பும் இக்காரியங்களைப் பற்றி பேசும்படி, அவற்றை நினைப்பூட்ட விரும்புகிறார். பரிசுத்த மலையில், ‘இவர் என்னுடைய குமாரன், என் மிகநேசமானவர், இவரை நானே அங்கீகரித்திருக்கிறேன்’ என்ற வார்த்தைகள் ‘உன்னதமான மகிமையிலிருந்து அவருக்குண்டானது.’ அப்போது பேதுரு கிறிஸ்துவின் மகத்துவமிக்க மகிமைக்குக் கண்கண்ட சாட்சியாய் இருந்தார். இவ்வாறு, தீர்க்கதரிசன வார்த்தை மேலுமதிக உறுதியாக்கப்படுகிறது; அதற்குச் செவிசாய்க்க வேண்டும். ஏனெனில், மனிதனின் சித்தத்தினால் அல்ல, “கடவுளினிடமிருந்து வந்ததையே பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டவர்களாய் மனுஷர் பேசினர்.”​—1:​1, 2, NW, 4, 14, தி.மொ., 17, NW, 21, தி.மொ.

5கள்ளப்போதகர்களுக்கு எதிராக கடும் எச்சரிக்கை (2:​1-22). கள்ளத் தீர்க்கதரிசிகளும் போதகர்களும் அழிவுக்கு ஏதுவான பிரிவினைகளை உண்டாக்கி, ஒழுக்கக்கேடான நடக்கையை முன்னேற்றுவிப்பார்கள், சத்தியத்தின்பேரில் நிந்தையைக் கொண்டுவருவார்கள். ஆனால் அவர்களுக்கு வரும் அழிவு தாமதிப்பதில்லை. பாவஞ்செய்த தூதர்களை தண்டித்தார், நோவாவின் நாளில் ஜலப்பிரளயத்தை கொண்டு வந்தார், சோதோம் கொமோராவைச் சாம்பலாக்கினார்; இவ்வாறு கடவுள் யாரையுமே தண்டியாமல் விடவில்லை. ஆனால், பிரசங்கியான நோவாவையும் நீதிமானாகிய லோத்தையும் காப்பாற்றினார். ஆகவே, ‘தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று விடுவிக்கவும் அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்புநாளுக்கென்று வைக்கவும் கர்த்தருக்குத் [“யெகோவாவுக்கு,” NW] தெரியும்.’ ஏனெனில் இவர்கள் துணிகரமுள்ளவர்கள், பிடிவாதக்காரர்கள், புத்தியற்ற மிருகங்களைப் போன்றவர்கள், அறிவில்லாதவர்கள், நிந்தனைக்காரர்கள், வஞ்சகப் போதனைகளில் இன்பங்கொள்கிறவர்கள், விபசாரக்காரர்கள், பேராசைக்காரர்கள், பிலேயாமைப்போல் அநீதியின் கூலியை விரும்புகிறவர்கள். சுதந்திரத்தை உறுதியளிக்கும் இவர்கள்தாமே கேட்டுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். நீதியின் பாதையை அறியாதிருந்தால் அவர்களுக்கு நலமாயிருந்திருக்கும், ஏனெனில் இந்தப் பழமொழி அவர்களுக்குச் சம்பவித்திருக்கிறது: “நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பின.”​—2:​9, 22, தி.மொ.

6யெகோவாவின் நாளை மனதில் நெருங்க வைத்திருத்தல் (3:​1-18). முன் சொல்லப்பட்ட விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ள, கிறிஸ்தவர்களின் தெளிவாக சிந்திக்கும் தன்மையை தூண்டுவித்து பேதுரு எழுதுகிறார். கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, கிறிஸ்துவின் “வருகையைப்பற்றிய வாக்குத்தத்தம் எங்கே” என்று சொல்வர். பூர்வ உலகத்தைக் கடவுள் தண்ணீரால் அழித்தார் என்பதையும், “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது” என்பதையும் இந்த மனிதர்கள் கவனியாது விடுகின்றனர். யெகோவாவுக்கு ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாளைப்போல் இருக்கின்றன; எனினும் ‘தம்முடைய வாக்குத்தத்தத்தைக் குறித்ததில் யெகோவா தாமதமாயில்லை.’ ஆனால் ஒருவரும் அழிக்கப்படுவதை விரும்பாதவராய்ப் பொறுமையாக இருக்கிறார். ஆகையால், யெகோவாவின் நாள் வருவதற்கு காத்திருப்பவர்களாயும், அகலாமல் அதை மனதில் வைத்திருப்பவர்களாயும் கிறிஸ்தவர்கள் தங்கள் நடக்கைக்குக் கவனம் செலுத்துவதன் மூலம் தேவபக்தியின் செயல்களைப் பழக்கமாய்ச் செய்து வரவேண்டும். அந்த நாளில் வானங்கள் அக்கினியால் வெந்தழிந்துபோகும், மூலப்பொருள்கள் கடும் வெப்பத்தால் உருகிப்போகும். ஆனால் கடவுளுடைய வாக்குறுதியின்படி, “புதிய வானங்களும் ஒரு புதிய பூமியும்” உண்டாயிருக்கும்.​—3:​4, தி.மொ., 7, 9, NW, 13.

7ஆகவே, “கறையற்றவர்களும் மாசற்றவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்பட” தங்களாலான அனைத்தையும் அவர்கள் செய்ய வேண்டும். பிரியமுள்ள பவுல் அவர்களுக்கு எழுதியதைப் போலவே, கர்த்தரின் பொறுமையை இரட்சிப்பாய் அவர்கள் கருதவேண்டும். இந்த மேம்பட்ட அறிவுடன், அவர்கள் தங்கள் உறுதியிலிருந்து வழுவிப் போகாதபடி எச்சரிக்கையாய் இருப்பார்களாக. “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக” என்று பேதுரு முடிக்கிறார்.​—3:​14, தி.மொ., 18.

ஏன் பயனுள்ளது

8திருத்தமான அறிவு எந்தளவு இன்றியமையாதது! எபிரெய வேதாகமத்திலிருந்து பெற்ற திருத்தமான அறிவை பேதுரு தன் விவாதங்களில் லாவகமாய் புகுத்துகிறார். அவை பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டது என்பதாக சாட்சி பகருகிறார்: “தீர்க்கதரிசனம் ஒருபோதும் மனுஷசித்தத்தினால் வரவில்லை; கடவுளினிடமிருந்து வந்ததையே பரிசுத்த ஆவியினால் ஏவப்படுகிறவர்களாய் மனுஷர் பேசினார்கள்.” மேலும், பவுலின் ஞானம் ‘அவருக்கு அருளப்பட்டது’ என்றும் சுட்டிக்காட்டுகிறார். (1:​21; 3:​15, தி.மொ.) ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்த வேத வசனங்கள் அனைத்தையும் கவனத்தில் வைத்து, திருத்தமான அறிவை உறுதியாய்ப் பற்றியிருப்பதால் நாம் பேரளவில் பயனடைகிறோம். அப்போது, “சகலமும் சிருஷ்டிப்பின் ஆரம்பமுதல் இருந்த பிரகாரமே இருக்கிறது” என சொல்பவர்களைப்போல் நாமும் ஒருபோதும் அக்கறையற்றவர்களாய் ஆக மாட்டோம். (3:​4, தி.மொ.) பேதுரு தன் நிருபத்தின் 2-ம் அதிகாரத்தில் விவரிப்போரைப் போன்று கள்ளப் போதகர்களின் கண்ணிக்குள் விழ மாட்டோம். மாறாக, பேதுருவும் மற்ற பைபிள் எழுத்தாளர்களும் அளிக்கிற நினைப்பூட்டுதல்களுக்கு நாம் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். ‘சத்தியத்தில் உறுதிப்பட்டு’ நிலைத்திருக்கவும், பொறுமையுடனும் உறுதியுடனும் “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வள”ரவும் இவை நமக்கு உதவுகின்றன.​—1:12; 3:18.

9‘கடவுளையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் பற்றிய திருத்தமான அறிவில்’ பெருகுவதற்கு உதவியளிக்கிறார்; முதலாம் அதிகாரம், 5-லிருந்து 7 வரையான வசனங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள கிறிஸ்தவ பண்புகளை வளர்க்க ஊக்கமாய் முயலும்படி பேதுரு சிபாரிசு செய்கிறார். பின்பு 8-ம் வசனத்தில், அவர் இவ்வாறு மேலும் சொல்கிறார்: ‘இந்தக் காரியங்கள் உங்களில் இருந்து பெருகினால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவைக் குறித்ததில் செயலற்றவர்களாகவோ கனியற்றவர்களாகவோ இருப்பதிலிருந்து இவை உங்களைத் தடுத்துவைக்கும்.’ இந்தக் கொடிய நாட்களில் கடவுளுடைய ஊழியர்களாக செயல்படுவதற்கு இது நிச்சயமாகவே மிகச் சிறந்த ஊக்கமூட்டுதல்!​—1:​2, NW.

10யெகோவா தேவனின் “அருமையும் மகா மேன்மையுமான வாக்குத்தத்தங்க”ளில் பங்குகொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ள ஒருவர் தன்னாலான அனைத்தையும் செய்ய முயலுவது எவ்வளவு முக்கியம்! ஆகவே, ராஜ்ய இலக்கின்பேரில் கண்களை ஊன்ற வைக்கும்படி அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்குப் பின்வருமாறு பேதுரு அறிவுரை கூறுகிறார்: “நீங்கள் அழைக்கப்பட்டதையும் தெரிந்தெடுக்கப்பட்டதையும் உறுதிசெய்துகொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்யும்போது நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதேயில்லை. இவ்விதமாய் நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நித்திய ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியம் உங்களுக்குத் தாராளமாய் அளிக்கப்படும்.” மறுரூப தரிசனத்திற்குக் கண்கண்ட சாட்சியாயிருந்த பேதுரு இயேசுவின் மகத்தான ராஜ்ய மகிமையிடம் கவனத்தைத் திருப்புகிறார். “தீர்க்கதரிசன வசனம் இதினால் நமக்கு அதிக உறுதியானது” என்று மேலும் கூறுகிறார். யெகோவாவின் மகத்தான இந்த ராஜ்யத்தைக் குறித்த எல்லா தீர்க்கதரிசனமும் நிறைவேறுவது உறுதி. இவ்வாறு, ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட பேதுருவின் வார்த்தைகளைத் திடநம்பிக்கையுடன் நாம் எதிரொலிக்கிறோம்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”​—2 பே. 1:​4, 10, 11, 19, தி.மொ.; 3:13; ஏசா. 65:​17, 18.

[அடிக்குறிப்பு]

a பக்கம் 303-ல் உள்ள அட்டவணையைக் காண்க.

[கேள்விகள்]

1. இரண்டு பேதுருவின் எழுத்தாளர் பேதுருவே என்பதை என்ன உண்மைகள் நிரூபிக்கின்றன?

2. இரண்டு பேதுரு பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தது என்பதற்கு எது ஆதாரமளிக்கிறது?

3. இரண்டு பேதுரு எப்போது, எங்கே எழுதப்பட்டிருக்கலாம், யாருக்காக எழுதப்பட்டது?

4. (அ) திருத்தமான அறிவைக் குறித்ததில் கனியுள்ளவர்களாகும்படி சகோதரர்கள் எவ்வாறு பிரயாசப்பட வேண்டும், அவர்களுக்கு என்ன வாக்குறுதி அளிக்கப்படுகிறது? (ஆ) தீர்க்கதரிசன வார்த்தை எவ்வாறு அதிக உறுதியாக்கப்பட்டிருக்கிறது, அதற்கு ஏன் செவிசாய்க்க வேண்டும்?

5. கள்ளப் போதகர்களுக்கு எதிராக என்ன எச்சரிக்கையை பேதுரு கொடுக்கிறார், அத்தகைய மனிதருக்கு எதிரான கடவுளின் நியாயத்தீர்ப்புகள் நிச்சயம் நிறைவேறும் என்பதைக் குறிப்பிட அவர் என்ன பலமான உதாரணங்களைப் பயன்படுத்துகிறார்?

6. (அ) பேதுரு ஏன் எழுதுகிறார், கடவுளுடைய வாக்குறுதிகளைக் குறித்து என்ன சொல்கிறார்? (ஆ) பரியாசக்காரர்களைப் போலல்லாமல் கிறிஸ்தவர்கள் எவ்வாறு தங்களை விழிப்புள்ளவர்களாய் வைத்துக்கொள்ள வேண்டும்?

7. இந்த மேம்பட்ட அறிவை பெற்றவர்களாய் கிறிஸ்தவர்கள் எவ்வாறு கடும் முயற்சியில் ஈடுபட வேண்டும்?

8. (அ) எபிரெய, கிரேக்க வேதாகமங்கள் இரண்டுமே தேவாவியால் ஏவப்பட்டது என்பதை பேதுரு எவ்வாறு உறுதிப்படுத்துகிறார்? (ஆ) திருத்தமான அறிவை உறுதியாய்ப் பற்றியிருப்பதால் நாம் எவ்வாறு பயனடைவோம்?

9. என்ன ஊக்கமான முயற்சி செய்யும்படி நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம், ஏன்?

10. (அ) என்ன வாக்குறுதிகளை பேதுரு வலியுறுத்துகிறார், அவற்றின் சம்பந்தமாக என்ன அறிவுரை கூறுகிறார்? (ஆ) ராஜ்ய தீர்க்கதரிசனங்கள் சம்பந்தமாக பேதுரு என்ன உறுதியளிக்கிறார்?