Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 66—வெளிப்படுத்துதல்

பைபிள் புத்தக எண் 66—வெளிப்படுத்துதல்

பைபிள் புத்தக எண் 66—வெளிப்படுத்துதல்

எழுத்தாளர்: அப்போஸ்தலன் யோவான்

எழுதப்பட்ட இடம்: பத்மு

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 96

வெளிப்படுத்துதலில் உருவக நடை பயன்படுத்தப்பட்டிருப்பது திகிலுண்டாக்குவதற்கா? இல்லவே இல்லை! இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் துன்மார்க்கருக்குத் திகிலை உண்டாக்கலாம். ஆனால் கடவுளின் உண்மை ஊழியர்கள் தேவாவியால் ஏவப்பட்ட இதன் அறிமுகத்தையும் முடிவில் காணப்படும் தூதனின் குறிப்பையும் ஒப்புக்கொள்வார்கள்: “இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளைச் சப்தமாக வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், . . . சந்தோஷமுள்ளவர்கள்.” “இந்தப் புஸ்தகச் சுருளின் தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிற எவனும் சந்தோஷமுள்ளவன்.” (வெளி. 1:​3; 22:​7; NW) தேவாவியால் ஏவப்பட்டு யோவான் எழுதின மற்ற நான்கு புத்தகங்களுக்கு முன்னதாகவே இது எழுதப்பட்டது. எனினும், நம்முடைய பைபிளில் தேவாவியால் ஏவப்பட்ட 66 புத்தகங்களில் கடைசியானதாக வெளிப்படுத்துதல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது சரியானதே. ஏனெனில் வெளிப்படுத்துதலே, மனிதர்களுக்கான கடவுளின் நோக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய தரிசனத்தை அளிக்கிறது. அதன் மூலம் தன் வாசகர்களை தொலைதூர எதிர்காலத்துக்குள் அழைத்துச் செல்கிறது. மேலும், யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதும் வாக்குப்பண்ணப்பட்ட வித்தாகிய, கிறிஸ்துவினுடைய ராஜ்யத்தின் மூலம் அவருடைய அரசாட்சி நியாயநிரூபணம் செய்யப்படுவதுமே பைபிளின் மகத்தான மையப்பொருள்; இந்த மையப்பொருளை, மகிமையான உச்சக்கட்டத்திற்கு இந்தப் புத்தகம் எடுத்துச் செல்கிறது.

2தொடக்க வசனத்தின்படி, இது ‘இயேசு கிறிஸ்துவினாலான ஒரு வெளிப்படுத்துதல், இதைக் கடவுள் அவருக்கு அளித்தார் . . . இவர் தம் தூதனை அனுப்பி அவர் மூலமாய் தம்முடைய அடிமையாகிய யோவானுக்கு அடையாளங்களில் அளித்தார்.’ ஆகவே யோவான், இந்தச் செய்தியை எழுதிய எழுத்தாளர் மட்டுமே; அதன் மூலகாரணர் அல்ல. எனவே, வெளிப்படுத்துகிறவர் யோவான் அல்ல, இந்தப் புத்தகமும் யோவானின் வெளிப்படுத்துதல் அல்ல. (1:​1, NW) எதிர்காலத்துக்கான தம்முடைய அற்புத நோக்கங்களை கடவுள் தம் அடிமைக்கு வெளிப்படுத்தியதே அதன் பெயரை மிகப் பொருத்தமானதாய் ஆக்குகிறது. ஏனெனில் இந்தப் புத்தகத்தின் கிரேக்கப் பெயராகிய அப்பாக்கலிப்ஸிஸ் (A·po·kaʹly·psis [Apocalypse]) என்பதற்கு “திறத்தல்” அல்லது “திரை நீக்குதல்” என்று அர்த்தம்.

3வெளிப்படுத்துதலின் எழுத்தாளர் என அதன் முதல் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட இந்த யோவான் யார்? இயேசு கிறிஸ்துவின் அடிமை என்றும், சகோதரனும், உபத்திரவத்தில் பங்காளியும், பத்மு தீவுக்கு நாடுகடத்தப்பட்டிருந்தவர் என்றும் இவரைப் பற்றி நமக்கு சொல்லப்படுகிறது. அவர் எந்த வாசகர்களுக்காக இதை எழுதினாரோ அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்; ஆதலால் தன்னை யாரென மேலும் அடையாளங்காட்ட வேண்டிய அவசியமில்லை. அவர் அப்போஸ்தலன் யோவானாகவே இருக்க வேண்டும். இந்த முடிவை பெரும்பாலான பூர்வ சரித்திராசிரியர்கள் ஆதரிக்கின்றனர். பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் முதற்பகுதியைச் சேர்ந்த எழுத்தாளராகிய பப்பையாஸ், இந்தப் புத்தகத்தை அப்போஸ்தலன் எழுதினதாக கருதினாரென சொல்லப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டின் ஜஸ்டின் மார்ட்டிர், “யூதனான ட்ரைஃபோவுடன் உரையாடல்” (ஆங்கிலம்) (LXXXI) என்ற தன் புத்தகத்தில் இவ்வாறு சொல்கிறார்: “எங்களுடன் ஒருவர் இருந்தார். அவரின் பெயர் யோவான்; அவர் கிறிஸ்துவின் அப்போஸ்தலரில் ஒருவர். அவர் தனக்கு வெளிப்படுத்தப்பட்ட காட்சியை தீர்க்கதரிசனம் உரைத்தார். a அப்போஸ்தலன் யோவானே எழுத்தாளர் என ஐரீனியஸ் திட்டவட்டமாய் சொல்கிறார். இதை, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த அலெக்ஸாண்டிரியாவின் கிளெமென்டும் டெர்ட்டுல்லியனும் ஆமோதிக்கின்றனர். மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல பைபிள் கல்விமான் ஆரிகென் இவ்வாறு சொன்னார்: “இயேசுவின் மார்பில் சாய்ந்த ஒருவரைப் பற்றியே நான் பேசுகிறேன்; அது யோவானே. அவர் சுவிசேஷத்தில் ஒன்றை எழுதினார், . . . அப்பாக்கலிப்ஸையும் அவரே எழுதினார்.” b

4யோவானின் மற்ற புத்தகங்கள் அன்பை பெருமளவு வலியுறுத்துவது உண்மைதான். அதற்காக, அதிக வல்லமை வாய்ந்த, ஊக்கமிக்க இந்த வெளிப்படுத்துதலை அவர் எழுதியிருக்க முடியாதென்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. யோவானும் அவருடைய சகோதரனாகிய யாக்கோபும்தான் ஒரு சமாரிய பட்டணத்தின் மீது மிகுந்த கோபமூண்டவர்களாய் வானத்திலிருந்து அக்கினி விழுந்து அதிலிருந்தவர்களைப் பட்சிப்பதற்கு அனுமதி கேட்டனர். இதனிமித்தமே இவர்களுக்கு, “பொவனெர்கேஸ்” அல்லது “இடிமுழக்க மக்கள்” என்ற பட்டப் பெயர் கொடுக்கப்பட்டது. (மாற். 3:17; லூக். 9:54) வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்ட விஷயம் வேறுபட்டது என்பதை நாம் நினைவில் வைக்கையில், இதன் எழுத்துநடையிலுள்ள வேறுபாடு எந்த விதத்திலும் இடையூறாய் இருக்காது. இந்தத் தரிசனங்களில் யோவான் கண்டது இதற்கு முன் அவர் கண்ட எதற்கும் ஒத்ததாய் இருக்கவில்லை. மற்ற தீர்க்கதரிசன வேதவசனங்களோடு இந்தப் புத்தகம் குறிப்பிடத்தக்க விதத்தில் ஒத்திசைந்திருப்பது இதைக் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையின் நம்பகமான பாகம் என்பதை எந்த கேள்விக்கும் இடமின்றி நிரூபிக்கிறது.

5ஆரம்ப கால அத்தாட்சியின்படி, எருசலேமின் அழிவுக்குப் பெரும்பாலும் 26 ஆண்டுகளுக்குப் பின், ஏறக்குறைய பொ.ச. 96-ல் யோவான் வெளிப்படுத்துதலை எழுதினார். இது பேரரசன் டொமிஷியனுடைய ஆட்சி காலம் முடிவடையும் சமயமாக இருந்திருக்கும். “திருச்சபைக்கு முரணான கருத்துக்களுக்கு எதிராக” (ஆங்கிலம்) (V xxx) என்ற தன் புத்தகத்தில் ஐரீனியஸ் அப்பாக்கலிப்ஸைக் குறித்து இவ்வாறு சொல்வதன் மூலம் இதற்கு சான்றளிக்கிறார்: “அதைக் கண்டது வெகு காலத்துக்கு முன்பல்ல, பெரும்பாலும் நம்முடைய நாளிலேயே, டொமிஷியனுடைய ஆட்சி காலம் முடியும் தறுவாயிலேயே. c யூஸிபியஸ், ஜெரோம் ஆகியோரும் இந்த அத்தாட்சியை ஆதரிக்கின்றனர். எருசலேமை அழிப்பதற்கு ரோம படையை வழிநடத்திய டைட்டஸின் சகோதரன்தான் டொமிஷியன். டைட்டஸின் மரணத்திற்குப்பின் இவன் பேரரசனானான்; இது வெளிப்படுத்துதல் புத்தகம் எழுதப்பட்டதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. தன்னை கடவுளாக வணங்க வேண்டுமென்று இவன் கட்டளையிட்டு, (“நம்முடைய கர்த்தரும் கடவுளும்” என்று அர்த்தப்படும்) டொமினஸ் எட் டியஸ் நாஸ்டர் என்ற பட்டப்பெயரை தனக்கு சூட்டிக் கொண்டான். d பொய்க் கடவுட்களை வணங்கினவர்களுக்குப் பேரரசனை வணங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை; ஆனால் ஆரம்ப கால கிறிஸ்தவர்களால் இதில் ஈடுபட முடியாது. இந்த விஷயத்தில் அவர்கள் தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுக்க மறுத்தனர். இவ்வாறு, டொமிஷியனின் ஆட்சி கால முடிவில் (பொ.ச. 81-96), கிறிஸ்தவர்களின்மீது கொடூர துன்புறுத்துதல் துவங்கியது. டொமிஷியனே யோவானைப் பத்மு தீவுக்கு நாடுகடத்தினானென கருதப்படுகிறது. பொ.ச. 96-ல் டொமிஷியன் படுகொலை செய்யப்பட்டபோது, அவனுக்குப் பதில் சகிப்புத்தன்மை மிக்க பேரரசன் நெர்வா பதவி ஏற்றான்; இவனே யோவானை விடுதலை செய்ததாக தோன்றுகிறது. பத்மு தீவில் சிறைப்பட்டிருந்த சமயத்திலேயே யோவான், தான் எழுத்தில் வடித்த தரிசனங்களைப் பெற்றார்.

6யோவான் கண்டவையும் சபைகளுக்கு எழுதும்படி சொல்லப்பட்டவையும், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் ஒழுங்கின்றி பதிவுசெய்யப்பட்ட தரிசனங்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தொடக்கத்திலிருந்து முடிவுவரை வெளிப்படுத்துதல் முழுவதும், சம்பவிக்க இருப்பவற்றின் ஒத்திசைவான காட்சியை நமக்கு அளிக்கிறது. முடிவில் கடவுளுடைய ராஜ்ய நோக்கங்கள் முழுமையாய் வெளிப்படுத்தப்படும் வரை வரிசையாக தரிசனங்கள் தொடருகின்றன. ஆகவே நாம், வெளிப்படுத்துதல் புத்தகத்தை நிறைவானதாகவே காண வேண்டும்; அது ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட, ஒத்திசைவான பாகங்கள் உள்ளதாகவும், யோவானின் காலத்திலிருந்து வெகு காலத்துக்கு அப்பால் நம்மை அழைத்துச் செல்வதாகவும் உள்ளது. அதன் அறிமுகத்துக்குப் பின் (வெளி. 1:​1-9), இந்தப் புத்தகம் 16 தரிசனங்களாக பிரிக்கப்படலாம்: (11:​10–3:22; (24:​1–5:14; (36:​1-17; (47:​1-17; (58:​1–9:21; (610:​1-11:19; (712:​1-17; (813:​1-18; (914:​1-20; (1015:​1–16:21; (1117:​1-18; (1218:​1–19:10; (1319:​11-21; (1420:​1-10; (1520:​11–21:8; (1621:​9–22:5. இந்தத் தரிசனங்கள் அனைத்தும் உற்சாகமூட்டும் முடிவுரையோடு நிறைவுறுகின்றன; அதில் மனிதனோடு தொடர்புகொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் யெகோவா, இயேசு, தூதன், யோவான் ஆகியோர் தங்கள் முடிவான வார்த்தைகளை சொல்கின்றனர்.​—22:​6-21.

வெளிப்படுத்துதலின் பொருளடக்கம்

7அறிமுகம் (1:1-9). வெளிப்படுத்துதலுக்கு மூலகாரணர் கடவுள் என்பதையும், அதற்கு வழிமூலமாக செயல்பட்டது தூதன் என்பதையும் யோவான் விவரிக்கிறார்; மேலும் ஆசிய மாகாணத்தின் ஏழு சபைகளுக்கு இதை எழுதுகிறார். அவர்களை இயேசு கிறிஸ்து, “ஒரு ராஜ்யமாக்கித் தமது கடவுளும் பிதாவுமாயிருக்கிற” சர்வவல்லவராகிய யெகோவா தேவனுக்கு “ஆசாரியருமாக்கினார்.” பத்மு தீவில் நாடுகடத்தப்பட்டிருக்கும் யோவான், “இயேசுவின் உபத்திரவத்திலும் ஆளுகையிலும் சகிப்பிலும்” அவர்களுடன் தானும் உடன் பங்காளி என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார்.​—1:​6, 9, தி.மொ.

8ஏழு சபைகளுக்குச் செய்திகள் (1:​10–3:22). முதல் தரிசனம் தொடங்குகிறது. கடவுளுடைய வழிநடத்துதலால் யோவான், கர்த்தருடைய நாளில் தான் இருப்பதாக காண்கிறார். அவர் காண்பதை ஒரு புத்தக சுருளில் எழுதும்படியாக சொல்லப்படுகிறது. அதோடு, எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா ஆகிய ஏழு சபைகளுக்கு அனுப்பும்படியும் எக்காளத்தைப் போன்ற குரல் அவரிடம் சொல்கிறது. குரல் வந்த திசையில், ஏழு விளக்குத்தண்டுகளின் மத்தியில் “மனுஷகுமாரனுக்கொப்பான ஒருவர்” தம் வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களை வைத்திருப்பதை யோவான் காண்கிறார். அவர், “முதலும் இறுதியுமானவ”ராக தம்மை அடையாளம் காட்டுகிறார். மேலும், மரணமடைந்து, ஆனால் இப்பொழுது நித்தியமாய் உயிரோடிருக்கிறவராகவும், மரணத்துக்கும் ஹேடீஸுக்குமுரிய திறவுகோல்களை உடையவராகவும் தம்மை அடையாளம் காட்டுகிறார். எனவே அவர் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துதான். “அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; ஏழு விளக்குத் தண்டுகளும் ஏழு சபைகளாம்” என அவர் விளக்குகிறார்.​—1:​13, 17, 20, தி.மொ.

9எபேசு சபையின் தூதனுக்கு எழுதும்படி யோவானுக்குச் சொல்லப்படுகிறது. அச்சபை கடினமாக உழைத்தது, சகிப்புத்தன்மை காட்டியது, பொல்லாதவர்களைச் சகிக்க மறுத்தது. இருந்தபோதிலும், ஆரம்பத்தில் இருந்த அன்பு இப்போது இல்லை, தணிந்துவிட்டது; அது மனந்திரும்பி முந்தின செயல்களை தொடர வேண்டும். உபத்திரவமும் வறுமையும் இருப்பினும், அது உண்மையில் ஐசுவரியமுள்ளதாயிருக்கிறது; பயப்படக்கூடாது என சிமிர்னாவிலுள்ள சபைக்குச் சொல்லப்படுகிறது: “நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.” “சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில்” இருக்கும் பெர்கமுவிலுள்ள சபை, கிறிஸ்துவின் பெயரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதில் விசுவாசதுரோகிகள் இருக்கின்றனர். இவர்கள் மனந்திரும்ப வேண்டும் அல்லது கிறிஸ்து தம்முடைய வாயின் நீண்ட பட்டயத்தால் அவர்களுடன் போரிடுவார். தியத்தீராவிலுள்ள சபை, “அன்பையும் விசுவாசத்தையும் ஊழியத்தையும் சகிப்பையும்” வெளிக்காட்டிய போதிலும், ‘யேசபேல் என்னும் ஸ்திரீக்கு’ இடங்கொடுக்கிறது. எனினும், உண்மையாய் நிலைத்திருப்போர், “ஜாதிகள்மேல் அதிகாரம்” பெறுவார்கள்.​—2:​10, 13, 19, 20, தி.மொ., 26.

10சர்தையிலுள்ள சபை உயிருள்ளது என பெயரெடுத்திருக்கிறது; ஆனால் அது செத்ததாயிருக்கிறது. ஏனெனில் அதன் செயல்கள் கடவுளுக்கு முன்பாக முழுமையடையவில்லை. எனினும், ஜெயங்கொள்ளுகிறவர்களின் பெயர்கள், ஜீவபுத்தகத்தில் அழிக்கப்படாதபடி இடம்பெற்றிருக்கும். பிலதெல்பியாவிலுள்ள சபை கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்திருக்கிறது; ஆகவே அவர் அந்தச் சபையை “பூமியில் குடியிருக்கிறவர்களைப் பரீட்சிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற பரீட்சை வேளை”யிலிருந்து பாதுகாப்பதாக வாக்குறுதியளிக்கிறார். ஜெயங்கொள்கிறவரை, தம்முடைய கடவுளின் ஆலயத்தில் தூணாயிருக்கும்படி கிறிஸ்து செய்வார். “என் கடவுளின் நாமத்தையும் என் கடவுளுடைய நகரத்தின் நாமத்தையும், . . . புதிய எருசலேமின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மீது எழுதுவேன்” என கிறிஸ்து சொல்கிறார். ‘கடவுளின் சிருஷ்டிப்புக்கு ஆதி’யானவராக தம்மை அடையாளம் காட்டும் கிறிஸ்து, லவோதிக்கேயா சபை அனலுமின்றி குளிருமின்றி இருப்பதால் தம் வாயினின்று வாந்திபண்ணப்படுமெனவும் சொல்கிறார். தங்கள் ஐசுவரியத்தைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளும் அந்தச் சபையிலுள்ளவர்கள் உண்மையில் தரித்திரரும், குருடரும், நிர்வாணிகளும்தான். அவர்களுக்கு வெண்வஸ்திரங்கள் தேவை; மேலும் பார்வையடைய அவர்களுக்குக் கலிக்கம் தேவை. கிறிஸ்து உள்ளே வர கதவைத் திறக்கும் எவருடனும் அவர் போஜனம் பண்ணுவார். கிறிஸ்து, தம்முடைய பிதாவோடு அவருடைய சிங்காசனத்தில் உட்கார்ந்தார்; அதைப்போலவே, தம்முடைய சிங்காசனத்தில் தம்மோடு உட்காருவதற்கு ஜெயங்கொள்கிறவனை இயேசு அனுமதிப்பார்.​—3:​10, 12, 14, தி.மொ.

11யெகோவாவின் பரிசுத்தத்தையும் மகிமையையும் பற்றிய தரிசனம் (4:​1–5:14). இரண்டாவது தரிசனம், யெகோவாவின் பிரகாசமான சிங்காசனத்துக்கு முன்பாக நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தக் காட்சி அதன் அழகில் ஜொலிக்கிறது. மகிமை பிரகாசத்தில் அது விலைமதியா மணிக்கற்களைப் போலுள்ளது. சிங்காசனத்தைச் சுற்றி கிரீடம் அணிந்த 24 மூப்பர்கள் வீற்றிருக்கின்றனர். நான்கு ஜீவன்கள் யெகோவா பரிசுத்தரென துதிசெலுத்துகின்றன; மேலும், அவர் சகலத்தையும் படைத்தவர் என்பதால், “மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்கு” தகுந்தவர் என வணங்கப்படுகிறார்.​—4:11.

12‘சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர்’ ஏழு முத்திரைகளையுடைய ஒரு புத்தகச் சுருளைக் கையில் பிடித்திருக்கிறார். ஆனால் அந்தச் சுருளைத் திறப்பதற்கு யார் தகுதியானவர்? “யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர்” மாத்திரமே தகுதியானவர்! ‘அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியான’ இவர் அந்தப் புத்தகச் சுருளை யெகோவாவிடமிருந்து வாங்குகிறார்.​—5:​1, 5, 12.

13ஆட்டுக்குட்டியானவர் அந்தச் சுருளின் ஆறு முத்திரைகளை உடைக்கிறார் (6:​1–7:17). மூன்றாவது தரிசனம் இப்போது ஆரம்பமாகிறது. ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளைத் திறக்க தொடங்குகிறார். முதலாவதாக, வெள்ளைக் குதிரையின்மீதுள்ள குதிரைவீரன், ‘ஜெயிப்பவராகவும் தன் ஜெயத்தை முடிப்பவராகவும்’ சவாரி செய்கிறார். பின்பு அக்கினி நிறமான குதிரைமீதுள்ள சவாரியாளன் பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துவிடுகிறான். கருப்புக் குதிரையின்மீது சவாரி செய்யும் மற்றொருவன் தானியத்தை பங்கீடு செய்கிறான். மரணம் சவாரி செய்கிற மங்கின நிறமுள்ள குதிரை வருகிறது; அதை நெருங்கப் பின்தொடர்கிறது ஹேடீஸ். ஐந்தாவது முத்திரை உடைக்கப்படுகிறது, ‘கடவுளுடைய வார்த்தையினிமித்தம் கொல்லப்பட்டவர்கள்’ தங்கள் இரத்தத்துக்காக பழிவாங்கும்படி கேட்பது தெரிகிறது. (6:​2, 9, தி.மொ.) ஆறாவது முத்திரையை உடைத்தபோது, பெரும் பூமியதிர்ச்சி உண்டாகிறது, சூரியனும் சந்திரனும் இருளடைகின்றன; யெகோவாவின் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்து தங்களை மறைத்துக்கொள்ள மலைகள் தங்கள்மீது விழும்படி பூமியின் பலவான்கள் கேட்கின்றனர்.

14இதற்குப் பின்பு, நான்காவது தரிசனம் தொடங்குகிறது. கடவுளுடைய அடிமைகளின் நெற்றிகளில் முத்திரையிடப்பட்டு தீரும் வரையில் பூமியின் நான்கு காற்றுகளையும் தடுத்து வைத்திருக்கும் நான்கு தூதர்கள் காணப்படுகின்றனர். அவர்களுடைய எண்ணிக்கை 1,44,000. அதன்பின் சகல தேசங்களிலிருந்தும் வரும் எண்ணற்ற திரள் கூட்டத்தார், கடவுளுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்பாக நிற்கின்றனர்; மேலும், தங்கள் இரட்சிப்புக்குக் காரணம் அவர்கள் இருவருமே என்று சொல்லி, கடவுளுடைய ஆலயத்தில் இரவும் பகலும் சேவிப்பதையும் யோவான் காண்கிறார். ஆட்டுக்குட்டியானவர் தாமே ‘இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்.’​—7:17.

15ஏழாவது முத்திரை உடைக்கப்படுகிறது (8:​1–12:17). பரலோகங்களில் அமைதி ஏற்படுகிறது. பின்பு ஏழு எக்காளங்கள் ஏழு தூதர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. முதல் ஆறு எக்காளத் தொனிகள் சேர்ந்து ஐந்தாவது தரிசனமாகின்றன.

16முதல் மூன்று எக்காளங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊதப்படுகின்றன. அப்போது, பூமியின்மீதும், சமுத்திரத்தின்மீதும், நதிகளின்மீதும் நீரூற்றுகளின்மீதுங்கூட இடுக்கண்கள் சரமாரியாக பொழிகின்றன. நான்காவது எக்காளம் ஊதப்படுகையில், சூரியனிலும், சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் மூன்றிலொரு பங்கு இருளடைகிறது. ஐந்தாவது எக்காளம் தொனிக்கையில், வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் வெட்டுக்கிளிகளின் வாதையை அவிழ்த்துவிடுகிறது; இந்த வெட்டுக்கிளிகள், “தங்கள் நெற்றிகளில் கடவுளின் முத்திரை” காணப்படாதவர்களைத் தாக்குகின்றன. இது “முதல் ஆபத்து”; இன்னும் இரண்டு வரவிருக்கின்றன. ஆறாவது எக்காளம், நான்கு தூதர்களைக் கட்டவிழ்த்துவிடுவதை அறிவிக்கிறது; அவர்கள் கொல்வதற்கு வருகின்றனர். “கோடாகோடி” குதிரைவீரர்கள் இன்னுமதிக இக்கட்டை ஏற்படுத்தி படுகொலையில் இறங்குகின்றனர்; ஆனாலும் மனிதர்கள் தங்கள் தீய செயல்களைவிட்டு மனந்திரும்புவதில்லை.​—9:​4, 12, 16, தி.மொ.

17ஆறாவது தரிசனம் தொடங்குகையில், பலமுள்ள மற்றொரு தூதன் வானத்திலிருந்து இறங்குகிறார். “ஏழாந்தூதனுடைய சத்தத்தின் நாட்களில் . . . நற்செய்தியாகக் கூறியபடியே தெய்வ ரகசியம்” நிறைவடைய போவதை அறிவிக்கிறார். யோவானிடம் சாப்பிடும்படி ஒரு புத்தகச் சுருள் கொடுக்கப்படுகிறது. அது அவருடைய வாயிற்கு “தேனைப்போல் தித்திப்பாய்” இருக்கிறது; ஆனால் அவருடைய வயிற்றையோ அது கசப்பாக்குகிறது. (10:​7, 9, தி.மொ.) இரண்டு சாட்சிகள் இரட்டுடுத்தி 1,260 நாட்கள் தீர்க்கதரிசனம் உரைக்கின்றனர்; பின்பு ‘அபிஸ்ஸிலிருந்து ஏறிவரும் மூர்க்க மிருகத்தால்’ அவர்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களுடைய பிணங்கள் “மகா நகரத்தின் விசாலமான வீதியிலே” மூன்றரை நாட்கள் அப்படியே விடப்படுகின்றன. அவர்களைக் குறித்து பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்படுகின்றனர், ஆனால் அவர்களை கடவுள் உயிரோடெழுப்புகையில் அது திகிலாக மாறுகிறது. அந்த மணிநேரத்தில், பெரும் பூமியதிர்ச்சி உண்டாகிறது. “இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று.”​—11:​7, 8, 14.

18இப்போது ஏழாம் தூதன் தன் எக்காளத்தை ஊதுகிறார். “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின” என்று பரலோக குரல்கள் அறிவிக்கின்றன. “இருபத்துநான்கு மூப்பர்” கடவுளை வணங்கி நன்றி செலுத்துகின்றனர், ஆனால் தேசங்கள் கோபமடைகின்றன. மரித்தோரை நியாயந்தீர்க்கிறதற்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்குப் பலனளிக்கிறதற்கும், ‘பூமியைக் கெடுக்கிறவர்களைக் கெடுப்பதற்கு’மான கடவுளின் குறித்த காலம் இது. அவருடைய ஆலய பிரகாரம் திறக்கிறது, அதில் அவருடைய உடன்படிக்கை பெட்டி காணப்படுகிறது.​—11:​15, 16, 18.

19ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டதைப் பற்றிய அறிவிப்பைத் தொடர்ந்து வந்த ஏழாவது தரிசனம் பரலோகத்தில் ‘ஒரு பெரிய அடையாளத்தை’ காட்டுகிறது. அது “சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை” பெற்றெடுக்கும் ஒரு பெண்ணின் தரிசனம். “அக்கினிமயமான பெரிய வலுசர்ப்பம்” அந்தப் பிள்ளையை விழுங்க தயாராய் நிற்கிறது, ஆனால் அந்தப் பிள்ளையோ கடவுளுடைய சிங்காசனத்திடம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மிகாவேல் வலுசர்ப்பத்தை எதிர்த்து போர் செய்கிறார், ‘பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பை’ கீழே பூமிக்குத் தள்ளிப்போடுகிறார். இதனால், ‘பூமிக்கு ஐயோ ஆபத்து’! ஸ்திரீயைத் துன்புறுத்துகிற வலுசர்ப்பம், அவளுடைய வித்தின் மீதியானோருடன் போரிட செல்கிறது.​—12:1, 3, 5, 9, 12, தி.மொ.; 8:13.

20சமுத்திரத்திலிருந்து வரும் மூர்க்க மிருகம் (13:1-18). ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளுமுள்ள ஒரு மூர்க்க மிருகம், சமுத்திரத்திலிருந்து எழுந்து வருவதை எட்டாவது தரிசனம் இப்போது காட்டுகிறது. அது வலுசர்ப்பத்தினிடமிருந்து அதன் வல்லமையைப் பெறுகிறது. மரணத்துக்கேதுவாக காயமடைந்திருந்த அதன் தலைகளில் ஒன்று ஆறியிருந்தது; பூமி முழுவதும் அந்த மிருகத்தை வியந்து போற்றியது. அது கடவுளுக்கு எதிராக தூஷணங்களைப் பேசி பரிசுத்தவான்களுடன் போர் செய்கிறது. ஆனால், இதோ! யோவான் மற்றொரு மூர்க்க மிருகத்தைக் காண்கிறார், இது பூமியிலிருந்து எழும்புகிறது. இதற்கு ஆட்டுக்குட்டியைப் போல் இரண்டு கொம்புகள் உள்ளன, ஆனால் வலுசர்ப்பத்தைப்போல் பேச தொடங்குகிறது. இது பூமியின் குடிகளை மோசம்போக்கி, அந்த முதல் மூர்க்க மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கும்படி அவர்களிடம் சொல்கிறது. எல்லாரும் இந்தச் சொரூபத்தை வணங்கும்படி வற்புறுத்தப்படுகின்றனர், இல்லையேல் கொல்லப்படுவர். இந்த மூர்க்க மிருகத்தின் முத்திரை அல்லது அதன் இலக்கம் இல்லாமல் ஒருவரும் வாங்கவோ விற்கவோ முடியாது. அதன் இலக்கம் 666.

21“நித்திய நற்செய்தியும்” சம்பந்தப்பட்ட செய்திகளும் (14:1-20). மகிழ்ச்சிக்குரிய விதமாய், சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், தங்கள் நெற்றிகளில் ஆட்டுக்குட்டியானவரின் பெயரையும் பிதாவின் பெயரையும் உடைய 1,44,000 பேரையும் யோவான் ஒன்பதாவது தரிசனத்தில் காண்கிறார். அவர்கள் “கடவுளுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மனுஷரிலிருந்து கொள்ளப்பட்ட”வர்களாக ‘சிங்காசனத்திற்கு முன்பாகப் புதுப்பாட்டைப் பாடுகிறார்கள்.’ மற்றொரு தூதன், ‘அறிவிப்பதற்கு மகிழ்ச்சியான செய்தியாக நித்திய சுவிசேஷத்தையுடையவராக’ நடுவானத்தில் தோன்றி, “கடவுளுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்” என்று சொல்கிறார். இன்னுமொரு தூதன் “மகா பாபிலோன் விழுந்தது!” என்று அறிவிக்கிறார். மூன்றாவதொருவர், மூர்க்க மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்குவோர் கடவுளுடைய கோபாக்கினைப் பாத்திரத்திலுள்ளதைக் குடிப்பார்கள் என்று அறிவிக்கிறார். “மனுஷகுமாரனுக்கொப்பான ஒருவர்” தம் அரிவாளால் அறுக்கிறார்; மற்றொரு தூதனும் தன் அரிவாளை நீட்டி பூமியின் திராட்சக் குலைகளை அறுத்துச் சேர்த்து, “கடவுளுடைய கோபாக்கினையின் பெரிய ஆலை”க்குள் எறிகிறார். நகரத்துக்கு வெளியே அந்தத் திராட்ச ஆலை மிதிக்கப்படுகையில், குதிரைகளின் கடிவாள உயரமளவாகவும், ‘இருநூறுமைல் தூரமளவாகவும்’ (சுமார் 296 கிமீ) இரத்தம் பெருகுகிறது.​—14:3, 4, 6-8, NW, 14, 19, 20, தி.மொ.

22கடைசி ஏழு வாதைகளுடன் தூதர்கள் (15:1-16:21). பரலோக நீதிமன்றத்தின் மற்றொரு காட்சியுடன் பத்தாவது தரிசனம் தொடங்குகிறது. மூர்க்க மிருகத்தை வென்றவர்கள் ‘நித்தியத்தின் ராஜாவாகிய’ யெகோவாவை அவருடைய மகத்துவமும் அற்புதமுமான செயல்களுக்காக மகிமைப்படுத்துகின்றனர். ஏழு தூதர்கள் பரலோகத்திலுள்ள பிரகாரத்திலிருந்து வெளிவருகின்றனர்; கடவுளுடைய கோபாக்கினை நிறைந்த ஏழு பொற்கலசங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. முதல் ஆறு கலசங்கள் பூமி, சமுத்திரங்கள், நதிகள் மற்றும் நீரூற்றுகள் மீதும், சூரியன், மூர்க்கமிருகத்தின் சிங்காசனம், ஐப்பிராத் நதி மீதும் ஊற்றப்படுகின்றன. இவ்வாறு “சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு” வழியுண்டாக்கும்படி ஐப்பிராத் நதி வற்றிப்போக செய்யப்பட்டது. பேய்த்தனக் கூற்றுகள், ‘பூலோகமெங்குமுள்ள ராஜாக்களை அர்மகெதோனில் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக்’ கூட்டிச் சேர்க்கின்றன. ஏழாவது கலசம் ஆகாயத்தில் ஊற்றப்படுகிறது; திகிலுண்டாக்கும் இயற்கை நிகழ்வுகளின் மத்தியில், அந்த மகா நகரம் மூன்று பாகங்களாய் பிளவுறுகிறது. தேசங்களின் நகரங்கள் வீழ்கின்றன, “தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தை” பாபிலோன் பெறுகிறது.​—15:3; 16:12, 14, 19.

23பாபிலோன்மீது கடவுளின் ஆக்கினைத்தீர்ப்பு; ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் (17:​1–19:10). 11-வது தரிசனம் தொடங்குகிறது. ‘பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணின,’ ‘மகா பாபிலோன், வேசிகளுக்குத் தாயின்மீது’ கடவுளின் ஆக்கினைத்தீர்ப்பு இதோ வருகிறது! பரிசுத்தவான்களின் இரத்தத்தைக் குடித்து வெறித்தவளாய் அவள், ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளுமுடைய சிவப்புநிற மூர்க்க மிருகத்தின்மீது சவாரி செய்கிறாள். இந்த மிருகம், ‘இருந்தது, இப்பொழுது இல்லாதது, இனி பாதாளக்குழியிலிருந்து ஏறிவருவதாக’ இருக்கிறது. இதன் பத்துக் கொம்புகள் ஆட்டுக்குட்டியானவரோடு போர் செய்கின்றன, ஆனால் அவர் “கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால்” அதை வெல்லுகிறார். அந்தப் பத்துக் கொம்புகள் அந்த வேசியைத் தாக்கி அவளைக் கொன்று போடுகின்றன. 12-வது தரிசனம் தொடங்குகையில், தன் மகிமையால் பூமியைப் பிரகாசிக்கச் செய்கிற மற்றொரு தூதன், “பாபிலோன் விழுந்தது! விழுந்தது!” என்று சொல்கிறார். அதன் வாதைகளில் பங்கு பெறாதபடிக்கு அதைவிட்டு வெளியே வரும்படி கடவுளுடைய ஜனங்கள் கட்டளையிடப்படுகின்றனர். பூமியின் ராஜாக்களும் மற்ற பலவான்களும் அதற்காக அழுகின்றனர்; ‘ஐயையோ மகா நகரமே! பாபிலோனே பலத்த நகரமே ஒரே நாழிகையில் உன் ஆக்கினைத் தீர்ப்பு வந்துவிட்டதே!’ என்று புலம்புகின்றனர். அதன் பெரும் செல்வங்கள் பாழாய் போயின. ஒரு பெரிய ஏந்திரக் கல் சமுத்திரத்தில் எறியப்படுகிறதுபோல் பாபிலோன், இனி ஒருபோதும் காணப்படாதபடி வேகமாய் தள்ளுண்டு போயிற்று. கடவுளுடைய பரிசுத்தவான்களின் இரத்தம் கடைசியாக பழித்தீர்க்கப்பட்டது! பரலோகத்தில் நான்கு தடவை இவ்வாறு திரும்பத் திரும்பத் தொனிக்கிறது: ‘ஜனங்களே நீங்கள், யாவைத் துதியுங்கள்!’ அவர் அந்த மகா வேசியின்மீது ஆக்கினைத்தீர்ப்பை நிறைவேற்றினதால் யாவைத் துதியுங்கள்! யெகோவா அரசராக ஆளத்தொடங்கிவிட்டதால் யாவைத் துதியுங்கள்! மிகுந்த சந்தோஷப்பட்டு களிகூருங்கள், ஏனெனில் “ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்”!​—17:​2, 5, 8, 14; 18:​2, 10; 19:1, 3, 4, 6, NW, 7.

24ஆட்டுக்குட்டியானவர் நீதியாய் போர் செய்கிறார் (19:​11–20:10). பதிமூன்றாவது தரிசனத்தில், “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா” பரலோக சேனைகளை நீதியான போரில் வழிநடத்துகிறார். ராஜாக்களும் பலவான்களும் பிணமாகி, ஆகாயத்துப் பறவைகளுக்கு இரையாகின்றனர். மூர்க்க மிருகமும் கள்ளத் தீர்க்கதரிசியும் கந்தகம் எரிகிற அக்கினி கடலுக்குள் உயிரோடு தள்ளப்படுகின்றனர். (19:16) 14-வது தரிசனம் தொடங்குகையில், ஒரு தூதன் “பாதாளத்தின் [அபிஸ்ஸின்] திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி” வருவது தெரிகிறது. ‘பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பம்’ பிடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்குக் கட்டி வைக்கப்படுகிறது. முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குள்ளவர்கள் ‘தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் ஆசாரியராயிருந்து, அவரோடுகூட ஆயிரம் வருஷம் அரசாளுகிறார்கள்.’ அதன்பின்பு, கட்டவிழ்த்து விடப்பட்ட சாத்தான், பூமியின் ஜனத்தாரை மோசம்போக்க செல்வான்; ஆனால், தன்னைப் பின்பற்றுவோரோடுகூட அவன் அக்கினி கடலுக்குள் தள்ளப்படுவான்.​—20:1, 2, 6.

25நியாயத்தீர்ப்பு நாளும் புதிய எருசலேமின் மகிமையும் (20:​11–22:5). மெய்சிலிர்க்க வைக்கும் 15-வது தரிசனம் உடனே தொடர்கிறது. கடவுளுடைய பெரிய வெண்சிங்காசனத்துக்கு முன்பு, மரித்த பெரியோரும் சிறியோரும் நியாயந்தீர்க்கப்படுகின்றனர். மரணமும் ஹேடீஸும் அக்கினிக் கடலுக்குள் தள்ளப்படுகின்றன; “இது இரண்டாம் மரணம்.” ஜீவ புத்தகத்தில் பெயர் காணப்படாதவன் எவனும் அவற்றோடு சேர்த்து அக்கினிக்கடலில் தள்ளப்படுகிறான். புதிய எருசலேம் பரலோகத்திலிருந்து இறங்கி வருகிறது. கடவுள் மனிதவர்க்கத்தினருடன் வாசம்செய்கிறார்; அவர்கள் கண்களிலிருந்து கண்ணீரைத் துடைக்கிறார். மரணமோ, துக்கமோ, அலறுதலோ, வருத்தமோ இனிமேலும் இல்லை! ஆம், கடவுள் ‘சகலத்தையும் புதிதாக்குகிறார்.’ மேலும் அவர் தம்முடைய வாக்கை உறுதிப்படுத்துபவராய் இவ்வாறு சொல்கிறார்: “இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது.” வெற்றிபெறுவோர் இவற்றைச் சுதந்தரிப்பர். கோழைகளும், விசுவாசமற்றவர்களும், ஒழுக்கக்கேட்டை நடப்பிப்பவர்களும் அல்லது ஆவியுலகத் தொடர்பையோ விக்கிரகாராதனையையோ அனுசரிப்பவர்களும் இவற்றைச் சுதந்தரிப்பதில்லை.​—20:14; 21:1, 5.

26பதினாறாவதும் கடைசியுமான தரிசனம் யோவானுக்குக் காட்டப்படுகிறது. அதுவே 12 வாசல்களையும், 12 அப்போஸ்தலர்களின் பெயர்களையும் 12 அஸ்திவாரக் கற்களையும் உடைய புதிய எருசலேமாகிய “ஆட்டுக்குட்டியானவருடைய மனைவி.” அது சதுர வடிவமானது. அதன் மகிமை பிரகாசம் அதிலுள்ள இரத்தினம், பொன், முத்துக்கள் ஆகியவற்றால் சுட்டிக்காட்டப்படுகிறது. யெகோவாவும் ஆட்டுக்குட்டியானவரும் இந்த நகரத்தின் ஆலயம், இதன் ஒளியும்கூட. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகச் சுருளில் பேரெழுதப்பட்டவர்கள் மாத்திரமே இதற்குள் பிரவேசிக்கலாம். (21:9) ஜீவதண்ணீருள்ள சுத்தமான நதி ஒன்று, சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு இந்த நகரத்தின் பெருஞ்சாலை வழியாக ஓடுகிறது. இதன் இரு புறங்களிலும் ஜீவவிருட்சங்கள் உள்ளன. இவை ஒவ்வொரு மாதமும் புதிய கனிகளைத் தருகின்றன, அவற்றின் இலைகள் ஆரோக்கியத்திற்கானவை. கடவுளுடையதும் ஆட்டுக்குட்டியானவருடையதுமான சிங்காசனம் இந்த நகரத்தில் இருக்கும். கடவுளுடைய அடிமைகள் அவருடைய முகத்தைக் காண்பார்கள். ‘யெகோவா தேவன் அவர்கள்மீது பிரகாசிப்பார், அவர்கள் அரசர்களாக என்றென்றும் ஆளுவார்கள்.’​—22:5, NW.

27முடிவு (22:​6-21). “இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள்” என்பதாக உறுதியளிக்கப்படுகின்றன. இந்தத் தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளைக் கைக்கொள்கிறவர்கள் அனைவரும் உண்மையிலேயே சந்தோஷமுள்ளவர்கள்! இவற்றைக் காதாரக் கேட்ட, கண்ணார கண்ட யோவான், அந்தத் தூதனை வணங்குவதற்கு குனிகிறார். கடவுளை மாத்திரமே வணங்கும்படி அந்தத் தூதன் அவருக்கு நினைப்பூட்டுகிறார். இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை முத்திரை போடக்கூடாது; ஏனெனில் குறிக்கப்பட்ட “காலம் சமீபமாயிருக்கிறது.” இந்த நகரத்துக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள். ஏனெனில் நகரத்துக்கு வெளியில் அருவருப்பானவர்களும் “பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும்” இருக்கிறார்கள். இந்தச் சாட்சியைத் தம்முடைய தூதன்மூலம் தாமே சபைகளுக்கு அனுப்பினாரென்றும், தாம் “தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கி”றாரென்றும் இயேசு சொல்கிறார். “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” ‘ஜீவ விருட்சங்களிலிருந்தும் பரிசுத்த நகரத்திலிருந்தும்’ தன் பங்கை இழக்காதபடிக்கு, ஒருவனும் இந்தத் தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளோடு எதையும் கூட்டாமல் அல்லது அதிலிருந்து எடுத்துப்போடாமல் இருப்பானாக.​—22:6, 10, 15-17, 19.

ஏன் பயனுள்ளது

28தேவாவியால் ஏவப்பட்ட பைபிளின் 66 புத்தகங்களின் தொகுப்புக்கு வெளிப்படுத்துதலின் புத்தகம் எத்தகைய மகிமையான முடிவுரையை அளிக்கிறது! எதுவும் விட்டுப் போகவில்லை. திட்டவட்டமற்ற எதுவும் குறிப்பிடப்படவில்லை. இப்பொழுது நாம் தொடக்கத்தோடுகூட மகத்தான முடிவையும் தெளிவாக காண்கிறோம். பைபிளின் இந்தக் கடைசி பாகம், முதல் பாகத்தில் தொடங்கப்பட்டதை முடிக்கிறது. காணக்கூடிய வானங்களையும் பூமியையும் கடவுள் படைத்ததை ஆதியாகமம் 1:1 விவரித்தது; அப்படியே, ஏசாயா 65:​17, 18; 66:22; 2 பேதுரு 3:​13-லுங்கூட தீர்க்கதரிசனம் உரைத்தபடி, வெளிப்படுத்துதல் 21:​1-4 ஒரு புதிய வானம் ஒரு புதிய பூமியைப் பற்றியும், அது மனிதவர்க்கத்துக்குத் தரவிருக்கிற எண்ணிலடங்கா ஆசீர்வாதங்களைப் பற்றியும் விவரிக்கிறது. கீழ்ப்படியாவிடில் நிச்சயமாக சாவான் என்று முதல் மனிதனுக்குச் சொல்லப்பட்டது. அதுபோல், கீழ்ப்படிவோருக்கு, “இனி மரணமுமில்லை” என்று நம்பிக்கையை கடவுள் உறுதியளிக்கிறார். (ஆதி. 2:17; வெளி. 21:4) மனிதகுல வஞ்சகனாக சர்ப்பமானவன் முதலில் தோன்றினபோது, அவனுடைய தலை நசுக்கப்படவிருப்பதைக் கடவுள் முன்னறிவித்தார்; பிசாசும் சாத்தானுமாயிருக்கிற இந்தப் பழைய பாம்பு, முடிவில் எவ்வாறு அழிவுக்குள் தள்ளப்படுகிறதென்று வெளிப்படுத்துதல் தெரிவிக்கிறது. (ஆதி. 3:​1-5, 15; வெளி. 20:10) கீழ்ப்படியாமற்போன மனிதன் ஏதேனிய ஜீவ விருட்சத்தைவிட்டு வெளியே துரத்தப்பட்டான்; ஆனால், கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்க “ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு” அடையாளப்பூர்வ ஜீவ விருட்சங்கள் உள்ளன. (ஆதி. 3:​22-24; வெளி. 22:2) தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஏதேனிலிருந்து நதி உற்பத்தியாகி ஓடியது. அதுபோல், உயிரளிப்பதும் உயிரைக் காப்பதுமான அடையாளக்குறிப்பான நதி கடவுளுடைய சிங்காசனத்திலிருந்து வருவதாக காட்டப்படுகிறது. இது எசேக்கியேலின் முந்தின தரிசனத்துக்கு இணையாக உள்ளது. மேலும் இது, “நித்திய ஜீவனுக்கேதுவாக ஊறுகிற நீரூற்”றைப் பற்றிய இயேசுவின் வார்த்தைகளையும் நினைப்பூட்டுகிறது. (ஆதி. 2:10; வெளி. 22:1, 2; எசே. 47:​1-12; யோவா. 4:​13, 14) கடவுளுடைய சமுகத்திலிருந்து முதல் மனிதனும் மனுஷியும் துரத்தப்பட்டனர். ஆனால், அதைப் போல் அல்லாமல் வெற்றி சிறந்த உண்மையுள்ளவர்கள் அவருடைய முகத்தைத் தரிசிப்பார்கள். (ஆதி. 3:24; வெளி. 22:4) வெளிப்படுத்துதலின் மெய்சிலிர்க்க வைக்கும் இந்தத் தரிசனங்களை கலந்தாலோசிப்பது நிச்சயமாகவே பயனுள்ளது!

29பொல்லாப்புமிக்க பாபிலோனைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை வெளிப்படுத்துதல் எவ்வாறு ஒன்றாக இணைக்கிறது என்பதையும் கவனியுங்கள். சொல்லர்த்தமான பாபிலோன் வீழ்ச்சியடைவதற்கு வெகு முன்பாகவே ஏசாயா அதைக் கண்டு, “பாபிலோன் விழுந்தது, விழுந்தது” என்று அறிவித்தார். (ஏசா. 21:9) எரேமியாவும் பாபிலோனுக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்தார். (எரே. 51:​6-12) ஆனால் வெளிப்படுத்துதல், “மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்” என்று அடையாள அர்த்தத்தில் பேசுகிறது. இதுவும் வீழ்ச்சியடைய வேண்டும். இதைத் தரிசனத்தில் கண்ட யோவான், “மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது!” என்று அறிவிக்கிறார். (வெளி. 17:5; 18:2) மற்ற ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி நிர்மூலமாக்கி ‘வரையறையில்லா காலத்துக்கும்’ நிற்கவிருக்கும் கடவுளால் ஏற்படுத்தப்படும் ஒரு ராஜ்யத்தைப் பற்றிய தானியேலின் தரிசனம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இது வெளிப்படுத்துதலிலுள்ள பரலோக அறிவிப்புடன் எவ்வாறு பொருந்துகிறது என்பதைக் கவனியுங்கள்: “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம்பண்ணுவார்.” (தானி. 2:44, NW; வெளி. 11:15) நிலையான ‘கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் பெறுவதற்கு மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வருவதைப்’ பற்றி தானியேலின் தரிசனம் விவரித்தது; அதைப் போலவே வெளிப்படுத்துதலும் இயேசு கிறிஸ்துவை “பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி”யாகவும், “மேகங்களுடனே வருகிற”வராகவும், அடையாளங்காட்டி, “கண்கள் யாவும் அவரைக் காணும்” என்று சொல்கிறது. (தானி. 7:13, 14; வெளி. 1:5, 7) தானியேலின் தரிசனங்களில் வரும் மிருகங்களுக்கும் வெளிப்படுத்துதலின் மிருகங்களுக்கும் இடையே சில இணைப்பொருத்தங்களையும் கவனிக்கலாம். (தானி. 7:​1-8; வெளி. 13:​1-3; 17:12) விசுவாசத்தைப் பலப்படுத்தும் படிப்புக்கு ஏற்ற ஏராளமான விஷயங்கள் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் நிச்சயம் உண்டு.

30கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி எத்தகைய அதிசயமான பல அம்சங்கள் அடங்கிய தரிசனத்தை வெளிப்படுத்துதல் அளிக்கிறது! பூர்வ கால தீர்க்கதரிசிகளும் இயேசுவும் அவருடைய சீஷர்களும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி சொன்னவற்றை வெகு அற்புதமான விதத்தில் தெளிவாய் காண செய்கிறது. ராஜ்யத்தின் மூலம் யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதன் இறுதி காட்சி இங்கே நமக்குள்ளது: ‘சர்வவல்லவராகிய யெகோவா தேவன் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்.’ “மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்வதற்கு” தகுதியானவர். நிச்சயமாகவே, அவரே ‘தம்முடைய மகா வல்லமையை ஏற்று’ கிறிஸ்துவின் மூலமாய் ஆளத்தொடங்குகிறார். “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா”வாகிய இந்த அரச குமாரன் எவ்வளவு வைராக்கியமிக்கவர் என்பது, அவர் தேசங்களைச் சங்கரித்து, “தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்”கையில் காட்டப்படுகிறது! யெகோவாவினுடைய அரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்படுவதே பைபிளின் மகத்தான பொருள். அது, அதன் உச்சக்கட்டத்தைப் படிப்படியாக எட்டுகையில், அவருடைய ராஜ்ய நோக்கங்களில் பங்குகொள்ளும் எல்லாரும் எல்லாமும் பரிசுத்தமாயிருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறது. ‘தாவீதின் திறவுகோலை உடைய’ ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்தமுள்ளவரென்று குறிப்பிடப்படுகிறது, பரலோகத்திலுள்ள தூதர்களும் அவ்வாறே சொல்கின்றனர். முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குள்ளவர்கள், ‘மகிழ்ச்சியுள்ளோரும் பரிசுத்தரும்’ என்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ‘தீட்டுள்ளதும் அருவருப்பையும் நடப்பிக்கிற எவனும்,’ ‘எருசலேமாகிய பரிசுத்த நகரத்துக்குள்’ பிரவேசிப்பதேயில்லை. ‘தேவனுக்கு முன்பாக ராஜாக்களும் ஆசாரியர்களுமாக’ இருக்கும்படி ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள், இது யெகோவாவுக்கு முன்பாக பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு உறுதியான உற்சாகமூட்டுதலை தருகிறது. ‘திரள் கூட்டத்தாருங்கூட’ பரிசுத்த சேவை செய்வதற்கு, ‘தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுக்க’ வேண்டும்.​—வெளி. 4:​8, 11; 11:17; 19:​15, 16; 3:7; 14:​10; 20:6; 21:​2, 10, 27; 22:19; 5:​9, 10; 7:​9, 14, 15.

31வெளிப்படுத்துதல் புத்தகத்தின் மூலமாக மட்டுமே நாம் சில அம்சங்களை அறிய வருகிறோம். அவற்றை கவனிக்கையில், கடவுளுடைய மகிமையான பரிசுத்த ராஜ்யத்தைப் பற்றிய தரிசனம் நம் மனதில் நிலையான வடிவைப் பெறுகிறது. இங்கே, தாங்கள் மாத்திரமே கற்றுக்கொள்ள முடிந்த புதிய பாட்டைப் பாடிக்கொண்டு, சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவருடன் இருக்கும் ராஜ்ய சுதந்தரவாளிகளின் முழுமையான காட்சியை நாம் காண்கிறோம். ராஜ்யத்தில் பிரவேசிக்கும்படி பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,44,000 என்பதையும், இவர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலின் அடையாளப்பூர்வமான 12 கோத்திரங்களிலிருந்து முத்திரையிடப்படுகிறவர்கள் என்பதையும் வெளிப்படுத்துதல் மட்டுமே நமக்குச் சொல்கிறது. முதலாம் உயிர்த்தெழுதலில் கிறிஸ்துவுடன் பங்குகொள்ளும் இந்த ‘ஆசாரியர்களும் அரசர்களும்’ அவரோடுகூட “ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்” என்பதையும் வெளிப்படுத்துதல் மாத்திரமே காட்டுகிறது. ‘புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தின்’ முழுமையான காட்சியையும் அதன் பிரகாசமான மகிமையையும் காண்கிறோம்; யெகோவாவும் ஆட்டுக்குட்டியானவரும் அதன் ஆலயமாயிருப்பதையும் காண்கிறோம். மேலும், அதன் 12 வாசல்களையும் அஸ்திவாரக் கற்களையும், அவர்கள்மீது யெகோவா பிரகாசிக்கச் செய்யும் நித்திய வெளிச்சத்தால் அதில் என்றென்றுமாக ஆளும் அரசர்களையும் அறிகிறோம். இவையனைத்தையும் வெளிப்படுத்துதல் மாத்திரமே நமக்கு அளிக்கிறது.​—14:​1, 3; 7:​4-8; 20:6; 21:​2, 10-14, 22; 22:5.

32“புதிய வானத்தையும்,” “புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை”யும் பற்றிய இந்தத் தரிசனம், ராஜ்ய வித்தைப் பற்றி பூர்வ காலங்கள் முதற்கொண்டு வேதவாக்கியங்கள் முன்னறிவித்திருக்கிற அனைத்தையும் தொகுக்கிறதென்றே சொல்லலாம். ‘பூமியின் வம்சங்களெல்லாம் தங்களை நிச்சயமாய் ஆசீர்வதித்துக்கொள்ளவிருக்கிற’ ஒரு வித்தையும், ‘தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்தையும்’ காண ஆபிரகாம் ஆவலோடு காத்திருந்தார். இப்பொழுது, வெளிப்படுத்துதலின் தரிசனத்தில், ஆசீர்வாதத்துக்குரிய இந்த நகரம் ‘புதிய வானமாக’ தெளிவாக அடையாளம் காட்டப்படுகிறது. அது, புதிய எருசலேமும் (கிறிஸ்துவின் மணவாட்டி) அவளுடைய மணவாளனும் ஒருசேர உருவான ஒரு புதிய அரசாங்கம், கடவுளுடைய ராஜ்யம் ஆகும். அவர்கள் ஒன்று சேர்ந்து பூமி முழுவதன்மீதும் நீதியுள்ள ஓர் அரசாங்கத்தை நிர்வகிப்பார்கள். ஏதேனின் கலகத்துக்கு முன்பாக மனிதன் அனுபவித்து மகிழ்ந்த பாவமும் மரணமும் இல்லாத சந்தோஷ நிலையில் அவர்கள் ‘தம்முடைய ஜனங்கள்’ ஆகலாமென உண்மையுள்ள மனிதர்களுக்கு யெகோவா வாக்குறுதியளிக்கிறார். மேலும் கடவுள் “அவர்கள் கண்களினின்று கண்ணீர் யாவையும் துடைப்பார்” என்பதை வலியுறுத்த இருமுறை வெளிப்படுத்துதல் அதை நமக்கு சொல்கிறது.​—ஆதி. 12:​3; 22:​15-18; எபி. 11:10; வெளி. 7:17; 21:​1-4, தி.மொ.

33தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களுக்கு எத்தகைய மகத்தான முடிவுரை! ‘சீக்கிரத்தில் சம்பவிக்க’ இருக்கும் இந்தக் காரியங்கள் எவ்வளவு அதிசயமானவை! (வெளி. 1:1) ‘தீர்க்கதரிசிகளின் ஏவப்பட்ட வெளிப்படுத்துதல்களின் கடவுளாகிய’ யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுத்தப்படுகிறது. (22:6, NW) 16 நூற்றாண்டுகளாக எழுதப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேற்றமடைவது காட்டப்படுகிறது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் விசுவாச செயல்கள் பலனளிக்கப்படுகின்றன! “பழைய பாம்பு” செத்துவிடுகிறது. அதனுடைய சேனைகள் அழிக்கப்படுகின்றன, பொல்லாங்குக்கு இனி இடமில்லை. (12:9) ‘கடவுளுடைய ராஜ்யம்’ அவருக்குத் துதியுண்டாக “புதிய வானமாக” ஆளுகை செய்கிறது. பைபிளின் முதல் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள யெகோவாவின் நோக்கத்தின்படியே பூமி நிரப்பப்பட்டு கீழ்ப்படுத்தப்படும். அப்படிப்பட்ட புதுப்பிக்கப்பட்ட பூமியில் நித்தியத்துக்கும் ஆசீர்வாதங்கள் பெற்று வாழும் எதிர்பார்ப்பு மனிதவர்க்கத்துக்கு முன் இருக்கிறது. (ஆதி. 1:28) வேதவாக்கியம் முழுவதும் “கடவுளால் ஏவப்பட்டது . . . கற்பிப்பதற்கும் கடிந்துகொள்வதற்கும் காரியங்களைச் சீர்திருத்துவதற்கும் நீதியில் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ள”தாக உண்மையிலேயே நிரூபித்திருக்கிறது. அதிக திறமைவாய்ந்த முற்றிலும் தகுதிபெற்ற மனிதர்களை இந்த அதிசயமான நாள் வரை வழிநடத்துவதற்கு யெகோவா அதைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆகவே உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தும்படி இந்த வேதவசனங்களைப் படிப்பதற்கான சமயம் இதுவே. கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெறும்படி அவற்றின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சரியான பாதையில் அவற்றைப் பின்பற்றுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், பைபிளின் கடைசி புத்தகம் முடிவாக சொல்வதுபோல் நீங்களும் முழு நம்பிக்கையோடு சொல்லலாம்: “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.”​—2 தீ. 3:​16, NW; வெளி. 22:20.

34‘நம்முடைய கர்த்தருக்கும்,’ வித்தாகிய ‘அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யம்,’ ‘சர்வவல்லவராகிய யெகோவா தேவனின்’ ஈடற்ற பெயரை நித்தியமாக பரிசுத்தப்படுத்தும். அப்படிப்பட்ட ராஜ்யத்தை வரவேற்பதில் ஒப்பற்ற மகிழ்ச்சியை நாம் இப்பொழுது அடையலாம்!​—வெளி. 11:​15, 17.

[அடிக்குறிப்புகள்]

a நைஸீனுக்கு முந்திய பிரமுகர்கள், (ஆங்கிலம்) தொ. 1, பக்கம் 240.

b தி எக்லெஸியாஸ்டிக்கல் ஹிஸ்டரி, யூஸிபியஸ், VI, xxv, 9, 10.

c நைஸீனுக்கு முந்திய பிரமுகர்கள், தொ. 1, பக்கங்கள் 559-60.

d இராயர்களின் வாழ்க்கை, (ஆங்கிலம்) (டொமிஷியன், XIII, 2).

[கேள்விகள்]

1. (அ) வெளிப்படுத்துதலின் உருவக மொழியைக் குறித்ததில் எதைக் கடவுளுடைய ஊழியர்கள் ஒப்புக்கொள்வார்கள்? (ஆ) வெளிப்படுத்துதல் ஏன் சரியாகவே பைபிளில் கடைசி புத்தகமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது?

2. எந்த முறையில் வெளிப்படுத்துதலை யோவான் பெற்றார், இந்தப் புத்தகத்தின் தலைப்பு ஏன் மிக பொருத்தமானது?

3. யோவான் என்ற பெயரிலுள்ள இந்த எழுத்தாளர் யாரென வெளிப்படுத்துதல் குறிப்பிடுகிறது, பூர்வ சரித்திராசிரியர்கள் இதை எவ்வாறு ஆதரிக்கின்றனர்?

4. (அ) யோவானின் மற்ற புத்தகங்களோடு ஒப்பிட வெளிப்படுத்துதலில் எழுத்துநடை வேறுபடுவதை எது விளக்குகிறது? (ஆ) வெளிப்படுத்துதல் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையின் நம்பகமான பாகமாயுள்ளதென எது நிரூபிக்கிறது?

5. வெளிப்படுத்துதலை யோவான் எப்போது எழுதினார், என்ன சூழ்நிலைமைகளின்கீழ்?

6. வெளிப்படுத்துதலின் புத்தகத்தை என்னவாக நாம் கருத வேண்டும், அதை எவ்வாறு பிரிக்கலாம்?

7. வெளிப்படுத்துதலின் மூலக்காரணரைக் குறித்து யோவான் என்ன சொல்கிறார், அந்த ஏழு சபைகளோடு என்ன காரியங்களில் தானும் பங்காளி என சொல்கிறார்?

8. (அ) என்ன செய்யும்படி யோவான் கட்டளையிடப்படுகிறார்? (ஆ) விளக்குத்தண்டுகளின் மத்தியில் யாரைக் காண்கிறார், இவர் விளக்கிக் கூறுவது என்ன?

9. எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா ஆகிய சபைகளுக்கு என்ன போற்றுதலும் அறிவுரையும் கொடுக்கப்படுகின்றன?

10. லவோதிக்கேயா, சர்தை, பிலதெல்பியா ஆகிய சபைகளுக்கு என்ன செய்திகள் அனுப்பப்படுகின்றன?

11. என்ன அற்புதமான தரிசனத்தை அடுத்தபடியாக யோவான் காண்கிறார்?

12. ஏழு முத்திரைகளையுடைய அந்தப் புத்தகச் சுருளைத் திறப்பதற்கு யார் மாத்திரமே தகுதியானவர்?

13. முதல் ஆறு முத்திரைகள் உடைக்கப்படும்போது எந்தக் கூட்டு தரிசனம் சேர்ந்து வருகிறது?

14. அடுத்தபடியாக, கடவுளுடைய அடிமைகளையும் எண்ணற்ற திரள் கூட்டத்தாரையும் குறித்து என்ன காட்டப்படுகிறது?

15. ஏழாம் முத்திரை உடைக்கப்படுகையில் தொடர்ந்து வருவது என்ன?

16. (அ) ஒன்றன்பின் ஒன்றாக முதல் ஐந்து எக்காளங்கள் ஊதப்படுவதோடு சேர்ந்து என்ன ஏற்படுகிறது, மூன்று ஆபத்துக்களில் முதலாவது எது? (ஆ) ஆறாவது எக்காளம் என்ன அறிவிக்கிறது?

17. இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று என்ற அறிவிப்பில் என்ன நிகழ்ச்சிகள் முடிவு பெறுகின்றன?

18. ஏழாவது எக்காளம் ஊதப்படுகையில் என்ன முக்கியமான அறிவிப்பு செய்யப்படுகிறது, இப்போது இது எதற்கு குறித்த காலம்?

19. என்ன அடையாளமும் போரும் பரலோகத்தில் ஏற்படுகின்றன, அதன் விளைவு என்ன?

20. அடுத்தபடியாக எந்த இரண்டு மூர்க்க மிருகங்கள் தரிசனத்தில் தோன்றுகின்றன, இவை பூமியிலுள்ள மனிதரின்மீது எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றன?

21. சீயோன் மலையின்மேல் யோவான் என்ன காண்கிறார், தேவதூதர்கள் எதில் பங்குகொள்கின்றனர், என்ன அறிவிக்கின்றனர், பூமியின் திராட்சை எவ்வாறு மிதிக்கப்படுகிறது?

22. (அ) அடுத்தபடியாக யெகோவாவை யார் மகிமைப்படுத்துகின்றனர், ஏன்? (ஆ) கடவுளுடைய கோபாக்கினை நிறைந்த ஏழு கலசங்கள் எங்கே ஊற்றப்படுகின்றன, உலகத்தைத் திடுக்கிட செய்யும் என்ன நிகழ்ச்சிகள் பின்தொடருகின்றன?

23. (அ) எவ்வாறு கடவுளின் ஆக்கினைத்தீர்ப்பு மகா பாபிலோன்மீது நிறைவேற்றப்படுகிறது? (ஆ) என்ன அறிவிப்புகளும் புலம்பலும் அதன் வீழ்ச்சியோடு சேர்ந்து உண்டாகின்றன, என்ன மகிழ்ச்சியான துதி பரலோகம் முழுவதிலும் தொனிக்கிறது?

24. (அ) ஆட்டுக்குட்டியானவர் தொடுக்கும் போர் எவ்வாறு தீர்வானதாயிருக்கிறது? (ஆ) ஆயிர ஆண்டுகளின்போது என்ன நடக்கிறது, அவற்றின் முடிவில் என்ன சம்பவிக்கிறது?

25. மெய்சிலிர்க்க வைக்கும் என்ன தரிசனம் பின்தொடருகிறது, காணப்பட்டவற்றை யார் சுதந்தரிப்பர்?

26. (அ) புதிய எருசலேமைப் பற்றிய என்ன விவரிப்பு கொடுக்கப்படுகிறது? (ஆ) உயிரைக் காக்கும் என்ன காரியங்கள் அந்த நகரத்தில் காணப்படுகின்றன, அதன் ஒளி எங்கிருந்து வருகிறது?

27. (அ) இந்தத் தீர்க்கதரிசனத்தைக் குறித்து யோவானுக்கு என்ன உறுதியளிக்கப்படுகிறது? (ஆ) என்ன முக்கியமான அழைப்போடும் எச்சரிக்கையோடும் வெளிப்படுத்துதல் முடிகிறது?

28. பைபிளின் முதல் பாகத்தில் தொடங்கப்பட்ட பதிவை வெளிப்படுத்துதல் முடிக்கிறது என்பதை என்ன உதாரணங்களால் புரிந்துகொள்ள முடிகிறது?

29. (அ) பாபிலோனைக் குறித்த தீர்க்கதரிசனங்களை வெளிப்படுத்துதல் எவ்வாறு ஒன்றாக இணைக்கிறது? (ஆ) ராஜ்யத்தையும் மிருகங்களையும் பற்றி தானியேலிலும் வெளிப்படுத்துதலிலுமுள்ள தரிசனங்களுக்கிடையே என்ன இணைப்பொருத்தங்களைக் கவனிக்க வேண்டும்?

30. (அ) ராஜ்யத்தின் மூலம் யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதைப் பற்றிய என்ன முழுமையான காட்சியை வெளிப்படுத்துதல் அளிக்கிறது? (ஆ) பரிசுத்தத்தைக் குறித்து என்ன வலியுறுத்தப்படுகிறது, இது யாரைப் பாதிக்கிறது?

31. ராஜ்யத்தைப் பற்றிய என்ன அம்சங்கள் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் மாத்திரமே நம் கவனத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன?

32. (அ) “புதிய வானத்தையும்,” ‘புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தையும்’ பற்றிய தரிசனம் எவ்வாறு ராஜ்ய வித்தைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டிருந்த எல்லாவற்றையும் தொகுக்கிறது? (ஆ) பூமியில் மனிதகுலத்துக்கு என்ன ஆசீர்வாதங்களை ராஜ்யம் உறுதியளிக்கிறது?

33. (அ) கடவுளுடைய நிறைவேற்றப்பட்ட நோக்கங்களைப் பற்றி, மொத்தத்தில் என்ன அதிசயமான தரிசனத்தை வெளிப்படுத்துதல் அளிக்கிறது? (ஆ) எவ்வாறு ‘வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டதும் பயனுள்ளதுமாக’ நிரூபிக்கப்பட்டிருக்கிறது, கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் அதற்குக் கீழ்ப்படிவதற்கும் ஏன் இதுவே சமயம்?

34. ஒப்பற்ற மகிழ்ச்சியை எவ்வாறு நாம் இப்பொழுது அடையலாம், ஏன்?