Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 7—நியாயாதிபதிகள்

பைபிள் புத்தக எண் 7—நியாயாதிபதிகள்

பைபிள் புத்தக எண் 7—நியாயாதிபதிகள்

எழுத்தாளர்: சாமுவேல்

எழுதப்பட்ட இடம்: இஸ்ரவேல்

எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. ஏ. 1100

காலப்பகுதி: ஏ. பொ.ச.மு. 1450-ஏ. 1120

இஸ்ரவேல் வரலாற்றில் அதிகமாக போர்கள் நடந்த ஒரு காலப்பகுதியை தொகுத்து வழங்குகிறது இப்புத்தகம். பேய் மதத்துடன் அழிவுக்கேதுவான தொடர்புகளையும், யெகோவா தாம் நியமித்த நியாயாதிபதிகளைக் கொண்டு மனந்திரும்பிய மக்களை இரக்கமாக விடுவித்ததையும் மாறிமாறி விவரிக்கிறது. ஒத்னியேல், ஏகூத், சம்கார் என வரிசையாக வந்த நியாயாதிபதிகளின் வல்லமைவாய்ந்த செயல்கள் விசுவாசத்தை வளர்ப்பதாக இருக்கின்றன. எபிரெயர் புத்தகத்தை எழுதியவர் சொன்னார்: “கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, . . . என்பவர்களை . . . குறித்து நான் விவரஞ்சொல்ல வேண்டுமானால் காலம் போதாது. விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், . . . பலவீனத்தில் பலன்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.” (எபி. 11:​32-34) இவர்களைத் தவிர, தோலா, யாவீர், இப்சான், ஏலோன், அப்தோன் ஆகியோரும் நியாயாதிபதிகளாய் சேவித்தனர். ஆகவே இந்தக் காலப்பகுதியில் உண்மையுள்ள நியாயாதிபதிகளாய் சேவித்தவர்கள் மொத்தம் 12 பேர். (சாமுவேல் பொதுவாக நியாயாதிபதிகளோடு சேர்க்கப்படுவதில்லை.) இந்த நியாயாதிபதிகள் செய்த போர்களில் யெகோவா அவர்களுக்காக போரிட்டார். அவரது ஆவியால் நிரப்பப்பட்டு அவர்கள் வீரத்தோடு போராடினர். எல்லா புகழையும் மகிமையையும் தங்கள் கடவுளுக்கே அவர்கள் சமர்ப்பித்தார்கள்.

2 செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பில் இந்தப் புத்தகம் க்ரிட்டாய் (Kri·taiʹ) என அழைக்கப்படுகிறது. எபிரெயு பைபிளில் இது, ஷோஃபெட்டிம் (Sho·phetimʹ) எனப்படுகிறது. இது “நியாயாதிபதிகள்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஷோஃபெட்டிம் என்பது ஷாஃபட் (sha·phatʹ) என்ற வினைச்சொல்லிலிருந்து வருகிறது, ‘நியாயம் விசாரிப்பது, நியாயம் நிரூபிப்பது, தண்டிப்பது, ஆளுவது’ என்றெல்லாம் பொருள்படுகிறது. இது ‘யாவருக்கும் நியாயாதிபதியாகிய கடவுளால்’ நியமிக்கப்படுபவர்களின் பொறுப்பை நன்றாக சித்தரிக்கிறது. (எபி. 12:23) யெகோவா தம்முடைய மக்களை அந்நியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்கு இவர்களை குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பயன்படுத்தினார்.

3நியாயாதிபதிகள் எப்போது எழுதப்பட்டது? இந்தப் புத்தகத்திலுள்ள இரண்டு கூற்றுகள் இதற்கு விடையை நமக்கு தருகின்றன. இதில் முதலாவதை பார்க்கலாம்: “ஆகையால் எபூசியர் இந்நாள்மட்டும் . . . எருசலேமில் குடியிருக்கிறார்கள்.” (நியா. 1:21) அரசனாகிய தாவீது, தனது ஆட்சியின் எட்டாவது ஆண்டில், அதாவது பொ.ச.மு. 1070-ல் “சீயோன் கோட்டையை” எபூசியரிடமிருந்து கைப்பற்றினார். ஆகவே நியாயாதிபதிகள் புத்தகம் அந்தக் காலப்பகுதிக்கு முன்பு எழுதப்பட்டிருக்க வேண்டும். (2 சா. 5:​4-7) பின்வரும் இந்த இரண்டாவது கூற்று நான்கு தடவை தோன்றுகின்றன: “அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை.” (நியா. 17:6; 18:1; 19:1; 21:25) ஆகையால் “இஸ்ரவேலிலே ராஜா” இருந்த காலத்தில், அதாவது, பொ.ச.மு. 1117-ல் சவுல் முதல் ராஜாவான பிறகு இந்தப் பதிவு எழுதப்பட்டது. ஆகையால் பொ.ச.மு. 1117-க்கும் 1070-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.

4இதன் எழுத்தாளர் யார்? சந்தேகமில்லாமல், அவர் யெகோவாவின் வைராக்கியமுள்ள ஊழியர். நியாயாதிபதிகள் காலம் முடிந்து அரசர்கள் காலம் ஆரம்பித்த இக்கட்டத்தில், சாமுவேலே யெகோவாவின் வணக்கத்தை ஆதரிப்பதில் முதன்மையானவராக விளங்கினார். மேலும் உண்மையுள்ள தீர்க்கதரிசிகளின் வரிசையில் அவரே முதல் நபராகவும் இருக்கிறார். ஆகவே சாமுவேலே, நியாயாதிபதிகளின் சரித்திரத்தைப் பதிவுசெய்வதற்கு நியாயப்படித் தகுதியானவராக இருந்திருப்பார்.

5எந்தக் காலப்பகுதியை நியாயாதிபதிகள் புத்தகம் உட்படுத்துகிறது? இதை 1 இராஜாக்கள் 6:​1-லிருந்து கணக்கிடலாம். சாலொமோன் தனது ஆட்சியின் நான்காவது ஆண்டில் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டத் தொடங்கினார் என அந்த வசனம் காட்டுகிறது. அது, ‘இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷம்.’ (“நானூற்று எண்பதாம்” என்பது வரிசைமுறை எண் (ordinal number) என்பதால், அது 479 முழு ஆண்டுகளைக் குறிக்கிறது.) இந்த 479 ஆண்டுகளில் அறியப்பட்ட காலப்பகுதிகள்: மோசேயின் வழிநடத்துதலின்கீழ் வனாந்தரத்தில் இருந்த 40 ஆண்டுகள் (உபா. 8:2), சவுல் ஆட்சி செய்த 40 ஆண்டுகள் (அப். 13:21), தாவீது ஆட்சி செய்த 40 ஆண்டுகள் (2 சா. 5:4, 5), சாலொமோன் ஆட்சி செய்த முதல் மூன்று ஆண்டுகளும் ஆகும். மொத்தமான இந்த 123 ஆண்டுகளை 1 இராஜாக்கள் 6:​1-ன் 479 ஆண்டுகளிலிருந்து கழித்தால், மீதம் 356 ஆண்டுகள் கிடைக்கின்றன. இது, இஸ்ரவேலர் கானான் தேசத்திற்குள் நுழைந்ததற்கும் சவுலினுடைய ஆட்சியின் தொடக்கத்துக்கும் இடையேயுள்ள காலப்பகுதியை குறிக்கிறது. a இந்த 356 ஆண்டு காலப்பகுதியில் ஏறக்குறைய 330 ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை நியாயாதிபதிகளின் புத்தகம் பதிவுசெய்கிறது. அதாவது யோசுவாவின் மரணத்திலிருந்து சாமுவேலின் காலம் வரைக்கும் நடைபெற்ற பெரும்பாலான சம்பவங்களை உள்ளடக்குகிறது.

6நியாயாதிபதிகள் புத்தகத்தின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு இடமில்லாமல் இருக்கிறது. யூதர்கள் அதை பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலின் பாகமாக எப்பொழுதும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். சங்கீதம் 83:9-18; ஏசாயா 9:4; 10:26; எபிரெயர் 11:​32-34 ஆகியவற்றின்படி, எபிரெய மற்றும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள் அதன் பதிவிலிருந்து மேற்கோள்கள் எடுத்திருக்கின்றனர். அதன் ஒளிவுமறைவற்ற தன்மையையும் பாருங்கள். இப்புத்தகம் இஸ்ரவேலின் குறைபாடுகளையும் பின்வாங்குதலையும் அப்பட்டமாக வெளியரங்கமாக்குகிறது. அதேசமயத்தில் யெகோவாவின் எல்லையற்ற தயவை உயர்த்திக் காட்டுகிறது. எந்த மனித நியாயாதிபதியும் அல்ல; யெகோவாவே, இஸ்ரவேலின் மீட்பராக மகிமையைப் பெறுகிறார்.

7மேலும், தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் நியாயாதிபதிகள் புத்தகத்தின் உண்மை தன்மையை ஆதரிக்கின்றன. கானானியருடைய பாகால் மத சம்பந்தமான கண்டுபிடிப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. பூர்வ கானானிய பட்டணமாகிய யுகாரிட்டில் (சைப்ரஸ் தீவின் வடகிழக்கு முனைக்கு எதிரேயிருக்கும் சிரியாவின் கடற்கரையோரத்திலுள்ள தற்போதைய ராஸ் ஷமாராவில்) 1929-ம் ஆண்டின் ஆரம்பத்தில் செய்யப்பட்ட அகழாராய்ச்சிக்குப் பிறகே பாகால் வணக்கத்தைப் பற்றி தகவல் கிடைத்தது. அதற்கு முன்னர், பைபிள் குறிப்பிடுவதைத் தவிர, அதிகம் அறியப்படவில்லை. ஆய்வின்படி, பொருளாசை, வெறித்தனமான தேசப்பற்று, பாலின வணக்கம் ஆகியவை பாகால் வணக்கத்தின் சிறப்பு அம்சங்கள் என்பது தெரியவந்துள்ளது. கானான் தேசத்திலுள்ள ஒவ்வொரு நகரமும் பாகால் ஆலயங்களாலும், மேடைகள் என்று அறியப்பட்ட பலிபீட ஸ்தலங்களாலும் நிறைந்திருந்ததாக தெரிகிறது. இந்தக் கோயில்களுக்குள் பாகாலின் சிலைகள் இருந்திருக்கலாம். வெளியிலிருந்த பலிபீடங்களுக்கு அருகில் கல்தூண்கள் காணப்பட்டன. அவை பாகாலின் லிங்கவுரு சின்னங்களாக இருக்கலாம். அருவருப்பான மனித பலிகள் இந்தக் கோயில்களை இரத்தக் களரியாக்கின. இஸ்ரவேலர்களும் பாகால் மதத்தால் கறைபடுத்தப்பட்டனர். இதனால், அவர்களும் அவ்வாறே தங்கள் குமாரரையும் குமாரத்திகளையும் பலிசெலுத்தினார்கள். (எரே. 32:35) பாகாலின் தாய் அஷேராவை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு புனித கம்பம் இருந்தது. பாகாலின் மனைவியாகிய அஸ்தரோத் கருவள தேவதையாக இருந்தாள். காமவெறிபிடித்த பாலின சடங்குகளினால் அவள் வணங்கப்பட்டாள். ஆண்களும் பெண்களுமான இருசாராருமே “அர்ப்பணிக்கப்பட்ட” விபச்சாரர்களாய் ஆலயத்தில் சேவித்தனர். பாகால் மதமும் அதை மிருகத்தனமாக பின்பற்றுபவர்களும் முழுவதுமாக அழிக்கப்பட வேண்டுமென்று யெகோவா கட்டளையிட்டது ஆச்சரியமான விஷயமல்ல. “உன் கண் அவர்களுக்கு இரங்காதிருப்பதாக; அவர்கள் தேவர்களை நீ சேவியாமல் இருப்பாயாக.”​—உபா. 7:​16. b

நியாயாதிபதிகள் புத்தகத்தின் பொருளடக்கம்

8இந்தப் புத்தகம் நியாயமாகவே, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. முதல் இரண்டு அதிகாரங்கள் இஸ்ரவேலில் அந்தச் சமயத்தில் இருந்த நிலைமைகளை விவரிக்கின்றன. 3 முதல் 16 வரையான அதிகாரங்கள் அந்த 12 நியாயாதிபதிகளின் மீட்புச் செயல்களை விவரிக்கின்றன. பின்பு 17 முதல் 21 வரையான அதிகாரங்கள், இஸ்ரவேலில் ஏற்பட்ட உள்நாட்டு போர்கள் சிலவற்றை விவரிக்கின்றன.

9நியாயாதிபதிகளின் காலத்தில் இஸ்ரவேலில் இருந்த நிலைமைகள் (1:​1–2:23). தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிராந்தியங்களில் குடியேறும்படி பிரிந்துசெல்லும் இஸ்ரவேலின் கோத்திரங்கள் விவரிக்கப்படுகின்றன. கானானியரை இஸ்ரவேலர்கள் முற்றிலும் துரத்திவிடாமல் தங்கள் மத்தியில் வாழும்படி அனுமதித்தனர். அநேகரை தங்களிடம் கட்டாயமாக வேலைசெய்யும்படி வைத்துக்கொண்டனர். ஆகையால் யெகோவாவின் தூதர் அறிவிக்கிறார்: “அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள்.” (2:3) பிற்காலத்தில், யெகோவாவையும் அவருடைய செயல்களையும் அறியாத ஒரு புதிய சந்ததி எழும்புகிறது. இதன் விளைவாக அந்த மக்கள் பாகாலையும் மற்ற தெய்வங்களையும் வணங்கும்படி சீக்கிரத்தில் யெகோவாவை விட்டுவிலகுகின்றனர். யெகோவாவின் கரம் அவர்களுக்கு எதிராக இருக்கிறது. ஆகவே அவர்கள் “மிகவும் நெருக்கப்பட்ட” நிலைக்குள்ளாகின்றனர். அவர்கள் பிடிவாதமாக இருந்து நியாயாதிபதிகளுக்குங்கூட செவிகொடுக்க மறுக்கின்றனர். இதன் காரணமாக இஸ்ரவேலை சோதிக்கும்படி யெகோவா விட்டுவைத்த புறஜாதியரில் ஒருவரையும் அவர் வெளியே துரத்துவதில்லை. பிறகு நடந்த சம்பவங்களைப் புரிந்துகொள்வதற்கு இந்தச் சூழமைவு உதவுகிறது.​—2:15.

10நியாயாதிபதி ஒத்னியேல் (3:​1-11). கானானியருக்கு இஸ்ரவேலர் சிறைபட்டிருந்தனர். இதன் விளைவாக கடுந்துன்பத்தை அனுபவித்த இஸ்ரவேல் புத்திரர் உதவிக்காக யெகோவாவை நோக்கிக் கூப்பிடத் தொடங்குகின்றனர். கடவுள் முதலாவதாக ஒத்னியேலை நியாயாதிபதியாக எழுப்புகிறார். ஒத்னியேல் மனித வல்லமையாலும் ஞானத்தினாலும் நியாயம் விசாரிக்கிறாரா? இல்லவே இல்லை. ஏனெனில், இஸ்ரவேலின் சத்துருக்களைத் தோற்கடித்துக் கீழ்ப்படுத்துவதற்கு ‘அவன்மேல் யெகோவாவின் ஆவி வந்தது’ என நாம் வாசிக்கிறோம். அதன் பிறகு “தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.”​—3:​10, 11, தி.மொ.

11நியாயாதிபதி ஏகூத் (3:​12-30). இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்கு 18 ஆண்டுகள் அடிமைப்பட்டிருக்கின்றனர். உதவிக்காக அவர்கள் எழுப்பும் கூக்குரலை யெகோவா மறுபடியும் கேட்கிறார். ஆகவே நியாயாதிபதி ஏகூத்தை அவர் எழுப்புகிறார். இடது கைப்பழக்கமுள்ள ஏகூத், அந்த அரசனோடு இரகசியமாக பேசுவதற்கு அனுமதியைப் பெறுகிறார். தானே செய்த இருபுறமும் கூர்மையான வாளை தன் அங்கிக்குள் வைத்துக்கொண்டு ராஜாவை சந்திக்கிறார். திடீரென்று வாளை எடுத்து, பருமனான எக்லோனின் வயிற்றில் குத்தி அவனைக் கொன்றுவிடுகிறார். மோவாபுக்கு எதிராக போரிடுவதில் இஸ்ரவேலர் உடனடியாக ஏகூத்தின் சார்பில் திரண்டு வருகின்றனர். தேசம் மறுபடியுமாக தேவ சமாதானத்தை 80 ஆண்டுகள் அனுபவித்து மகிழ்கிறது.

12நியாயாதிபதி சம்கார் (3:31). சம்கார் 600 பெலிஸ்தரை கொன்று குவிப்பதன் மூலமாக இஸ்ரவேலை காப்பாற்றுகிறார். அவர் பயன்படுத்தின ஆயுதம் வெறும் ஒரு தாற்றுக்கோல்தான்! ஆகவே அந்த வெற்றி யெகோவாவின் வல்லமையால் கிடைத்தது என்பது நிச்சயம்.

13நியாயாதிபதி பாராக் (4:​1–5:31). இஸ்ரவேல் அடுத்தபடியாக கானானிய அரசன் யாபீனுக்கும், சக்கரங்களில் இரும்பு அரிவாள் பொருத்தப்பட்ட 900 இரதங்கள் இருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் அவனுடைய சேனாதிபதியாகிய சிசெராவுக்கும் அடிமைப்படுகிறது. இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் யெகோவாவை நோக்கி கூக்குரலிடத் தொடங்குகின்றனர். இச்சமயத்தில் நியாயாதிபதியாகிய பாராக்கை அவர் எழுப்புகிறார். பெண் தீர்க்கதரிசியாகிய தெபொராள் இவருக்குத் திறம்பட்ட முறையில் ஆதரவளிக்கிறாள். பாராக்கும் அவருடைய படையும் பெருமைபாராட்டாதபடி, அந்தப் போர் யெகோவாவின் வழிநடத்துதலால் நடக்கும் என தெபொராள் அறிவிக்கிறாள். பின்வருமாறு தீர்க்கதரிசனம் சொல்கிறாள்: “ஒரு ஸ்திரீயின் கையிலே யெகோவா சிசெராவை ஒப்புக்கொடுப்பார்.” (4:​9, தி.மொ.) நப்தலி மற்றும் செபுலோனின் கோத்திரத்தாரை தாபோர் மலையில் ஒன்றுசேரும்படி பாராக் அழைக்கிறார். 10,000 பேரைக் கொண்ட அவருடைய படை போர் செய்வதற்காக மலையிலிருந்து இறங்குகிறது. உறுதியான விசுவாசத்தால் வெற்றி பெறுகிறது. ‘யெகோவா சிசெராவையும் அவனுடைய சகல ரதங்களையும் சேனையனைத்தையும் கலங்கடிக்கத் தொடங்குகிறார்.’ கீசோன் நதிப் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளத்தால் அவர்களை மூழ்கடிக்கிறார். “ஒருவனும் மீந்திருக்கவில்லை.” (4:​15, 16, தி.மொ.) கேனியனான ஏபேரின் மனைவி யாகேலின் கூடாரத்துக்கு அடைக்கலம் தேடி சிசெரா ஓடி வருகிறான். அவன் கூடாரத்தில் படுத்துக் கொண்டிருக்கையில், கூடார ஆணி தரையில் புதையுமளவாக அவனுடைய தலையில் அடிக்கிறாள் யாகேல். இவ்வாறு அந்தச் சங்காரம் உச்சக்கட்டத்தை அடைந்தது. “இப்படி தேவன் . . . யாபீனை . . . தாழ்த்தினார்.” (4:23) தெபொராளும் பாராக்கும் மகிழ்ச்சி பொங்க பாடுகின்றனர். சிசெராவுக்கு எதிராக நட்சத்திரங்களுங்கூட தங்கள் சுற்றுப்பாதைகளிலிருந்து போரிடும்படி செய்த யெகோவாவின் வெல்லமுடியாத வல்லமையை போற்றிப் புகழ்ந்து பாடுகின்றனர். நிச்சயமாகவே, இது ‘யெகோவாவை ஸ்தோத்தரிப்பதற்குரிய’ ஒரு காலம்! (5:​2, தி.மொ.) இதைப் பின்தொடர்ந்து நாற்பது ஆண்டுகள் சமாதானம் நிலவுகிறது.

14நியாயாதிபதி கிதியோன் (6:​1–9:57). இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கெட்ட காரியங்களை செய்கின்றனர். அத்தேசம் மீதியானியரால் பாழாக்கப்படுகிறது. யெகோவா தம்முடைய தூதன் மூலம் கிதியோனுக்கு நியாயாதிபதி பொறுப்பை அளிக்கிறார். “நான் உன்னோடேகூட இருப்பேன்” என்ற வார்த்தைகளால் யெகோவாதாமே நம்பிக்கையூட்டுகிறார். (6:16) தன் சொந்த ஊரிலுள்ள பாகாலின் பலிபீடத்தை உடைத்து நொறுக்குவதே கிதியோனின் முதல் வீரச்செயல். எதிரிகளின் ஒன்றுதிரண்ட படைகள் இப்போது ஆற்றைக் கடந்து யெஸ்ரயேலுக்குள் வருகின்றன. கிதியோன் இஸ்ரவேலரை போரிடும்படி அழைக்கையில் ‘யெகோவாவின் ஆவி கிதியோனை ஆட்கொள்ளுகிறது.’ (6:​34, தி.மொ.) மயிருள்ள ஒரு தோலை போரடிக்கும் தரையில் விரித்து, பனி விழும்படி இருமுறை கேட்கிறார், இவ்வாறு கடவுள் தன்னோடு இருக்கிறார் என்பதற்கு இரட்டிப்பான அடையாளத்தை கிதியோன் பெறுகிறார்.

1532,000 பேரைக் கொண்ட கிதியோனின் படை மிகப் பெரியது என யெகோவா சொல்கிறார். இதனால், வெற்றிக்கு தங்களுடைய படை பலமே காரணம் என இவர்கள் பெருமைபாராட்டுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார். ஆகவே முதலாவதாக பயப்படுபவர்கள் வீட்டுக்கு திரும்பிச் செல்லும்படி அனுப்பிவிடப்படுகின்றனர். இதனால் 10,000 பேர் மட்டுமே மீந்திருக்கிறார்கள். (நியா. 7:3; உபா. 20:8) பின்பு, தண்ணீர் குடிக்கும்போது செய்யப்படும் சோதனையால் இன்னும் பலர் திருப்பி அனுப்பப்படுகின்றனர். விழிப்பாகவும் உஷாராகவும் இருக்கும் 300 பேரே தேறுகின்றனர். இரவில் கிதியோன் மீதியானிய பாளையத்தை வேவுபார்க்கிறார். அங்கே ஒரு சொப்பனத்தின் அர்த்தத்தை பின்வருமாறு ஒருவன் சொல்வதை அவர் கேட்கிறார்: ‘இது கிதியோனின் பட்டயமே அல்லாமல் வேறல்ல. . . . உண்மையான தேவன் மீதியானியரையும், இந்தச் சேனை அனைத்தையும் அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்.’ (நியா. 7:14, NW) கடவுளை கிதியோன் பணிந்து கொண்டு, தனது ஆட்களை மூன்று அணிகளாக பிரித்து மீதியானியரின் பாளையத்தைச் சுற்றி நிறுத்துகிறார். அமைதி தவழும் அந்த இரவின் நிசப்தம் திடீரென குலைக்கப்படுகிறது. எக்காள சப்தம் பீறிடுகிறது; பெரிய பானைகள் டமார் டமாரென உடைக்கப்படுகின்றன; தீவட்டிகளின் திடீர் ஒளி கும்மிருட்டை அடித்து விரட்டுகிறது; கிதியோனின் 300 ஆட்கள், ‘யெகோவாவின் பட்டயம், கிதியோனின் பட்டயம்’ என ஒருசேர முழங்குகின்றனர். (7:​20, தி.மொ.) எதிரிகளின் பாளையத்தில் பயங்கர கூச்சல் குழப்பம். ஒருவரோடொருவர் சண்டையிட்டு, தலைதெரிக்க ஓடிப்போகின்றனர். இஸ்ரவேலர் அவர்களை விரட்டியடித்து கொன்று குவிக்கின்றனர். எதிரிகளுடைய அதிபதிகளையும் அவர்கள் மிச்சம் வைக்கவில்லை. இப்பொழுது இஸ்ரவேல் மக்கள், தங்களை ஆளும்படி கிதியோனை கேட்கின்றனர். ஆனால் அவரோ மறுத்து விடுகிறார். “யெகோவாவே உங்கள் ராஜாவாயிருப்பார்” என்று சொல்கிறார். (8:​23, தி.மொ.) எனினும், யுத்தத்தில் கொள்ளையடித்த பொருட்களால் அவர் ஓர் ஏபோத்தை செய்கிறார். இதற்கு மட்டுக்குமீறி மதிப்புக் கொடுக்கப்படுகிறது. இறுதியில் அதுவே கிதியோனுக்கும் அவருடைய வீட்டாருக்கும் கண்ணியாகிறது. கிதியோன் நியாயாதிபதியாக செயலாற்றும் 40 ஆண்டுகளின்போது தேசம் அமைதியாக இருக்கிறது.

16அபிமெலேக்கு என்பவன் மறுமனையாட்டி மூலம் கிதியோனுக்கு பிறந்த குமாரர்களில் ஒருவனாவான். இவன் கிதியோனின் மரணத்திற்குப் பின்பு அதிகாரத்தை தவறான வழியில் அபகரிக்கிறான். தனது சகோதரர்களான 70 பேரை படுகொலை செய்கிறான். கிதியோனின் இளைய குமாரனாகிய யோதாம் மாத்திரமே தப்புகிறான். அவன் கெரிசீம் மலையின் உச்சியிலிருந்து, அபிமெலேக்குக்கு வரவிருக்கும் அழிவை அறிவிக்கிறான். மரங்களைப் பற்றிய இந்த உவமையில், அபிமெலேக்குவின் ‘ராஜ பதவியை’ தாழ்வான முட்செடிக்கு ஒப்பிடுகிறான். சீக்கிரத்தில் அபிமெலேக்கு சீகேமில் உள்நாட்டுச் சண்டையில் சிக்கிக்கொள்கிறான். தேபேசு துருகத்திலிருந்து ஒரு பெண் ஏந்திரக்கல்லை தூக்கிப் போட அவனுடைய மண்டை பிளக்கிறது. இவ்வாறு அவன் ஒரு பெண்ணால் கேவலமான மரணத்தை எதிர்ப்பட்டான்.​—நியா. 9:53; 2 சா. 11:21.

17நியாயாதிபதிகள் தோலாவும் யாவீரும் (10:1-5). யெகோவாவின் வல்லமையால் விடுதலையைக் கொண்டுவந்த அடுத்த நியாயாதிபதிகள் இவர்கள். இவர்கள் முறையே 23 மற்றும் 22 ஆண்டுகள் நியாயம் விசாரித்தனர்.

18நியாயாதிபதி யெப்தா (10:​6–12:7). இஸ்ரவேலர் விக்கிரகாராதனையை விட்டு விலகாததால் யெகோவாவின் கோபம் அவர்களுக்கு எதிராக மறுபடியும் பற்றியெரிகிறது. அந்த ஜனங்கள் இப்பொழுது அம்மோனியராலும் பெலிஸ்தராலும் ஒடுக்கப்படுகின்றனர். நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டிருந்த யெப்தா, போரில் இஸ்ரவேலுக்குத் தலைமை தாங்கும்படி திரும்பவும் வரவழைக்கப்படுகிறார். ஆனால் இந்தப் போராட்டத்தில் யார் உண்மையில் நியாயாதிபதி? யெப்தாவின் சொந்த வார்த்தைகளே இதற்கு விடையை அளிக்கின்றன: “நியாயாதிபதியாகிய யெகோவாவே இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்ப்பார்.” (11:​27, தி.மொ.) யெகோவாவின் ஆவி இப்போது அவர்மீது இறங்குகிறது. தான் அம்மோனிலிருந்து சமாதானமாக திரும்பி வருகையில் தன்னை சந்திக்கத் தனது வீட்டிலிருந்து முதலாவதாக வருபவரை யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்வதாக பொருத்தனை செய்கிறார். யெப்தா அம்மோனியர்களை படுதோல்வி அடையச் செய்து, அவர்களை கொன்று குவிக்கிறார். அவர் மிஸ்பாவிலுள்ள தன் வீட்டுக்கு வெற்றி முகத்தோடு திரும்பிவருகிறார். யெகோவாவின் வெற்றியில் மகிழ்ச்சியடைந்த அவருடைய சொந்த மகளே அவரை முதலாவதாக சந்திக்க ஓடி வருகிறாள். இருப்பினும் யெப்தா தன் வேண்டுதலை நிறைவேற்றுகிறார். எவ்வாறு? பாகாலின் மதச்சடங்கு முறைகளின்படி மகளை நரபலி கொடுப்பதன் மூலமாகவா? இல்லவே இல்லை. தன்னுடைய ஒரே மகளை யெகோவாவுக்குத் துதியுண்டாக, அவருடைய ஆலயத்தில் தனிப்பட்ட சேவைக்கு முழுமையாக அர்ப்பணித்துவிடுகிறார்.

19அம்மோனுக்கு எதிராக போரிடுவதற்கு எப்பிராயீம் கோத்திரத்தார் அழைக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யெப்தாவை பயமுறுத்துகின்றனர். வேறுவழியில்லாமல் யெப்தா அவர்களைத் துரத்திவிடுகிறார். மொத்தம் 42,000 எப்பிராயீம் கோத்திரத்தார் கொல்லப்படுகின்றனர். அவர்களில் பலர் யோர்தானை கடக்குமிடங்களில் கொல்லப்படுகின்றனர். அங்கே “ஷிபோலேத்” என்ற சொல்லை திருத்தமாய் உச்சரிக்கத் தவறுவதால் அடையாளம் கண்டுபிடிக்கப்படுகின்றனர். யெப்தா தொடர்ந்து ஆறு ஆண்டுகள் இஸ்ரவேலை நியாயம் விசாரிக்கிறார்.​—12:6.

20நியாயாதிபதிகள் இப்சான், ஏலோன், அப்தோன் (12:​8-15). இவர்களைப் பற்றி அதிகம் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இவர்கள் முறையே ஏழு, பத்து, மற்றும் எட்டு ஆண்டுகள் நியாயம் விசாரித்ததாக சொல்லப்படுகிறது.

21நியாயாதிபதி சிம்சோன் (13:​1–16:31). மறுபடியும் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தருடைய கைகளில் மாட்டிக்கொள்கின்றனர். இந்தத் தடவை நியாயம் விசாரிப்பதற்கு சிம்சோனை யெகோவா எழுப்புகிறார். இவருடைய பெற்றோர் இவரை பிறப்பிலிருந்தே நசரேயனாக வளர்க்கின்றனர். இது அவருடைய தலைமயிர் ஒருபோதும் கத்தி படாமல் வளர்க்கப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது. சிம்சோன் வளர்ந்து வருகையில், யெகோவா இவரை ஆசீர்வதிக்கிறார். காலப்போக்கில் ‘யெகோவாவின் ஆவி அவரைத் தூண்டத்தொடங்குகிறது.’ (13:​25, தி.மொ.) இவருடைய பலத்தின் இரகசியம், அவருடைய தசையில் அல்ல, மாறாக, யெகோவா அருளும் வல்லமையிலேயே இருக்கிறது. ‘யெகோவாவின் ஆவி வல்லமையோடு அவர்மேல் இறங்குகையில்’ கையில் ஆயுதமேதுமின்றி ஒரு சிங்கத்தைக் கொல்கிறார். பிறகு பெலிஸ்தரின் நம்பிக்கை துரோகத்துக்கு பதிலடி கொடுப்பவராக அவர்களில் 30 பேரை கொலை செய்கிறார். (14:​6, 19, தி.மொ.) ஒரு பெலிஸ்த பெண்ணுக்கும் சிம்சோனுக்கும் திருமணம் செய்வதாக நிச்சயம் செய்யப்படுகிறது. ஆனால் பெலிஸ்தர்கள் இது சம்பந்தமாக சிம்சோனுக்கு நம்பிக்கைதுரோகம் செய்துவிடுகின்றனர். இதனால் சிம்சோன் 300 நரிகளைப் பிடித்து, வாலோடு வால் சேர்த்துவைத்து, அவற்றின் வால்களுக்கிடையே பந்தங்களை வைத்துக் கட்டுகிறார். அந்த பந்தங்களை கொழுத்திவிடுகிறார். பெலிஸ்தரின் தானிய வயல்களையும், திராட்சத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் எரித்துப்போடும்படி அவற்றை ஓடவிடுகிறார். பின்பு பெலிஸ்தரை ‘கடுமையாகத் தாக்கி, அவர்களை வெட்டி வீழ்த்தினார்.’ (15:​8, பொ.மொ.) சிம்சோனை கட்டி தங்களிடம் ஒப்படைக்கும்படி, அவருடைய உடன் இஸ்ரவேலரான யூதா கோத்திரத்தாரை பெலிஸ்தர் வற்புறுத்துகின்றனர். ஆனால் மறுபடியும் ‘யெகோவாவின் ஆவி அவர்மேல் வல்லமையோடு இறங்குகிறது.’ (தி.மொ.) அவருடைய கட்டுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி அவருடைய கைகளிலிருந்து அறுந்து விழுகின்றன. சிம்சோன் ஆயிரம் பெலிஸ்தர்களை அடித்துக் கொன்றுபோடுகிறார்​—“குவியல் குவியலாக”! (15:​14-16) அழிப்பதற்காக அவர் பயன்படுத்திய போராயுதம் என்ன? “ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பு.” அந்த யுத்த களத்தில் அற்புதமான ஒரு நீரூற்றை உண்டாக்கி களைப்பாயிருந்த தம்முடைய ஊழியருக்கு யெகோவா புத்துணர்ச்சியூட்டுகிறார்.

22அடுத்தபடியாக சிம்சோன் காசாவில் ஒரு வேசியின் வீட்டில் இரவு தங்குகிறார். அங்கே பெலிஸ்தர் சத்தம் எதுவும் ஏற்படுத்தாமல் அவரை சூழ்ந்துகொள்கின்றனர். எனினும், யெகோவாவின் ஆவி மறுபடியும் அவருக்கு உதவுகிறது. அவர் நடுராத்திரியில் எழுந்து, அந்தப் பட்டணத்தின் வாசல் கதவுகளையும் அதன் இரண்டு நிலைகளையும் தகர்த்தெறிகிறார். பிறகு அவற்றை எபிரோனுக்கு எதிரேயுள்ள ஒரு மலையின் உச்சிக்கு எடுத்துச் செல்கிறார். இதன்பின்பு வஞ்சகி தெலீலாளை காதலிக்கிறார். பெலிஸ்தரின் கைப்பாவையாக செயல்படும் அவள், சிம்சோனுடைய ‘மகா பலத்தின் இரகசியம் என்ன’ என கேட்டு அவரை நச்சரிக்கிறாள். யெகோவாவுக்கான தன் நசரேய ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தும் தன் நீண்ட தலைமயிரே தன் பெரும் பலத்துக்கு உண்மையான காரணம் என்பதை அவர் கடைசியாக வெளிப்படுத்திவிடுகிறார். சிம்சோன் தூங்குகையில் அவருடைய தலைமயிரை கத்தரிக்கும்படி செய்கிறாள் அந்த வஞ்சகி. இந்தச் சமயத்தில் அவர் போரிட வெகுண்டு எழுகிறார். ஆனால் பிரயோஜனமில்லை. ஏனெனில் “யெகோவாவே அவரைவிட்டு விலகிவிட்டார்.” (16:​20, NW) பெலிஸ்தர் அவரைப் பிடித்து, கண்களைப் பிடுங்கி, தங்கள் சிறைச்சாலையில் அடிமையாக மாவாட்டுவதற்கு வைக்கின்றனர். பெலிஸ்தர் தங்கள் தெய்வமான தாகோனுக்கு புகழ்சேர்க்க ஒரு பெரிய பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்கின்றனர். அப்போது தங்களுக்கு வேடிக்கை காட்டி மகிழ்ச்சியூட்டும்படி சிம்சோனை அழைத்து வருகின்றனர். இப்பொழுதோ, அவருடைய தலைமயிர் மறுபடியும் வளர்ந்திருந்தது. இதனுடைய மதிப்பை பெலிஸ்தர் கவனிக்கத் தவறி, தாகோனின் ஆலய வீட்டின் இரண்டு பெரிய தூண்களுக்கிடையே சிம்சோனை நிறுத்தி வைக்கின்றனர். அவர் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்: “யெகோவாவே, ஆண்டவரே, . . . இந்த ஒருவிசைமாத்திரம் என்னை நினைத்தருளும், கடவுளே, பலப்படுத்தியருளும்.” யெகோவா அவரை நிச்சயமாகவே நினைத்தருளுகிறார். சிம்சோன் அந்தத் தூண்களைப் பற்றிப் பிடித்து யெகோவாவின் வல்லமையால் ‘பலமாய் சாய்க்கவே அந்த வீடு . . . விழுகிறது. அவர் உயிரோடிருக்கையில் அவரால் கொல்லப்பட்டவர்களைப் பார்க்கிலும் அவர் சாகும்போது அவரால் கொல்லப்பட்டவர்கள் அதிகம்.’​—16:​28-30, தி.மொ.

23இப்பொழுது நாம் 17-லிருந்து 21 வரையான அதிகாரங்களுக்கு வருகிறோம். இவை, இந்தச் சமயத்தில் இஸ்ரவேலில் ஏற்படும் விசனகரமான உள்நாட்டு போர்கள் சிலவற்றை விவரிக்கின்றன. இந்தச் சம்பவங்கள் நியாயாதிபதிகளினுடைய காலப்பகுதியின் ஆரம்பத்திலேயே நடைபெறுகின்றன. இது மோசே மற்றும் ஆரோனின் பேரப்பிள்ளைகளாகிய யோனத்தானும் பினேகாசும் இன்னும் உயிரோடிருப்பதாக சொல்லப்படுவதிலிருந்து தெரிய வருகிறது.

24மீகாவும் தாண் புத்திரரும் (17:​1–18:31). எப்பிராயீம் கோத்திரத்தை சேர்ந்த மீகா, தனக்கென்று சொந்தமான மத அமைப்பை ஏற்படுத்திக்கொள்கிறான். விக்கிரக ‘சுவாமிக்கு ஒரு அறைவீட்டில்’ செதுக்கப்பட்ட சொரூபத்தையும் லேவிய ஆசாரியனையும் வைக்கிறான். (17:​5, தி.மொ.) தாண் கோத்திரத்தார் வடக்கில் குடியிருப்பதற்காக இடத்தை தேடிச் செல்லும் வழியில் இங்கு வருகிறார்கள். அவர்கள் மீகாவிடமிருந்து அவனுடைய மத சொரூபங்களையும் ஆசாரியனையும் கொள்ளையடித்து விடுகின்றனர். பின்னர் வடக்கே தொலைதூரத்தில், நடப்பது ஏதும் அறியாமல் சுகமாய் வாழ்ந்துவரும் லாகீஸ் பட்டணத்தாரை அழித்துவிட்டு, அங்கே தாண் என்ற பட்டணத்தை தங்களுக்காக கட்டுகின்றனர். மீகா உண்டாக்கிய விக்கிரகத்தை அங்கு வைக்கின்றனர். இவ்வாறு, உண்மையான வணக்கத்துக்குரிய யெகோவாவின் ஆலயம் சீலோவில் இருந்துவருகிற காலமெல்லாம், இவர்கள் தாங்களாக ஏற்படுத்தின மதத்தையே பின்பற்றுகின்றனர்.

25கிபியாவில் பென்யமீனரின் பாவம் (19:​1–21:25). பதிவுசெய்யப்பட்டுள்ள அடுத்த சம்பவம், பிறகு ஓசியா இவ்வாறு சொல்வதற்கு காரணமாகிறது: “இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்கள் முதல் பாவஞ்செய்துவந்தாய்.” (ஓசி. 10:9) எப்பிராயீமிலிருந்து தன் மறுமனையாட்டியை கூட்டிக்கொண்டு ஒரு லேவியன் வீடு திரும்புகிறான். வழியில், பென்யமீனின் கிபியாவில் உள்ள ஒரு கிழவருடைய வீட்டில் இரவு தங்குகிறான். அந்தப் பட்டணத்தின் போக்கிரிகள் அந்த வீட்டைச் சூழ்ந்துகொள்கின்றனர். அந்த லேவியனோடு பாலுறவு கொள்ள வேண்டுமென வற்புறுத்துகின்றனர். எனினும், அவனுக்குப் பதிலாக அவன் மறுமனையாட்டியை அவர்கள் இரவுமுழுவதும் பலாத்காரம் செய்கின்றனர். காலையில் அந்த வீட்டு வாசலில் அவள் செத்துக் கிடக்கிறாள். அந்த லேவியன் அவளுடைய உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறான். அதை 12 துண்டுகளாக வெட்டி, அவற்றை இஸ்ரவேல் தேசமெங்கும் அனுப்புகிறான். இவ்வாறு அந்த 12 கோத்திரங்களும் பரீட்சைக்கு உட்படுத்தப்படுகின்றன. அவர்கள் கிபியாவைத் தண்டித்து, அந்த ஒழுக்கக்கேடான நிலைமையை இஸ்ரவேலிலிருந்து நீக்குவார்களா? பென்யமீன் இந்த இழிவான குற்றத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மற்ற கோத்திரங்களோ கோபத்தில் பொங்கி எழுகின்றன. அவர்கள் அனைவரும் சபையாக மிஸ்பாவில் யெகோவாவிற்கு முன்பாக கூடுகிறார்கள், அங்கே, சீட்டுப்போட்டு கிபியாவில் பென்யமீனுக்கு எதிராக செல்வதற்கு தீர்மானிக்கின்றனர். இருமுறை படுதோல்வி அடைகின்றனர், இரத்தம் ஆறாக பாய்ந்தோடுகிறது. பிறகு, மற்ற கோத்திரங்கள் பதுங்கியிருந்து போரிட்டு பென்யமீன் கோத்திரத்தை ஏறக்குறைய அழித்தே விடுகிறார்கள். 600 ஆண்கள் மாத்திரமே ரிம்மோன் கன்மலைக்கு ஓடிவிடுகிறார்கள். ஒரு கோத்திரம் முற்றிலும் அழிந்து போனதைக் குறித்து பின்னால் இஸ்ரவேலர் வருந்துகின்றனர். தப்பிப்பிழைத்திருக்கும் பென்யமீனருக்கு யாபேஸ் கிலேயாத்திலும் சீலோவிலும் இருக்கும் குமாரத்திகளிலிருந்து மனைவிகளை அளிக்கின்றனர். இதோடு இஸ்ரவேலின் போர்கள் மற்றும் சச்சரவு நிறைந்த காலப்பகுதியைப் பற்றிய பதிவு முடிவுக்கு வருகிறது. நியாயாதிபதிகள் புத்தகத்தின் முடிவான வார்த்தைகள் மீண்டும் சொல்கிறபடி, “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.”​—நியா. 21:25.

ஏன் பயனுள்ளது

26நியாயாதிபதிகள் புத்தகம், வெறுமனே போர்களும் இரத்தம் சிந்துதலும் அடங்கிய ஒரு பதிவு மட்டுமே அல்ல. மாறாக, இது யெகோவாவைத் தம்முடைய மக்களின் மகா மீட்பராக உயர்த்திக் காட்டுகிறது. கடவுளுடைய பெயரை தாங்கிய மக்கள் இருதயப்பூர்வமாக மனந்திரும்பும்போது, அவர் எவ்வாறு ஒப்பற்ற இரக்கத்தையும் நீடிய பொறுமையையும் காட்டுகிறார் என்பதையும் இப்புத்தகம் வெளிப்படுத்துகிறது. யெகோவாவின் வணக்கத்தை அது நேரடியாக ஆதரித்து சிபாரிசு செய்வதிலும், பேய்மதம், கலப்பு விசுவாசம், ஒழுக்கக்கேடான கூட்டுறவுகள் ஆகியவற்றின் மடமையைக் குறித்து கண்டிப்பாக எச்சரிப்பதிலும் அதிக பயனுள்ளதாய் இருக்கிறது. பாகால் வணக்கத்தை யெகோவா கடுமையாக கண்டனம் செய்ததை காட்டுகிறது. இது, தற்காலத்தில் அதற்குச் சமமாயுள்ள பொருளாசை, நாட்டுப்பற்று, பாலுறவு ஒழுக்கக்கேடு ஆகியவற்றிற்கு முற்றிலும் விலகியிருக்கும்படி நம்மை தூண்ட வேண்டும்.​—2:​11-18.

27நியாயாதிபதிகளின் பயமற்ற, தைரியமுள்ள விசுவாசத்தை கவனித்துப் பார்ப்பது, அதைப் போன்ற விசுவாசத்தை நம் இருதயத்தில் தூண்டுவிக்க வேண்டும். எபிரெயர் 11:​32-34-ல் அவர்கள் மிக உயர்வாய் புகழப்படுவதில் ஆச்சரியமேதுமில்லை! யெகோவாவின் பெயர் பரிசுத்தப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடினார்கள். ஆனால் தங்களுடைய சொந்த பலத்தினால் அவ்வாறு செய்யவில்லை. தங்கள் வல்லமையின் ஊற்றுமூலம், யெகோவாவின் ஆவிதான் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். மேலும் அதை மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொண்டார்கள். அவ்வாறே, பாராக், கிதியோன், யெப்தா, சிம்சோன், இன்னும் மற்றவர்களை கடவுள் பலப்படுத்தியதுபோல் இன்றும் நம்மை பலப்படுத்துவார் என்ற திடநம்பிக்கையுடன், ‘ஆவியின் பட்டயமாகிய’ கடவுளுடைய வார்த்தையை எடுத்துக்கொள்ளலாம். ஆம், நாம் யெகோவாவிடம் ஜெபித்து அவர்மீது சார்ந்திருக்க வேண்டும். அப்போதுதான், சிம்சோன் சரீர பலமுள்ளவனாக இருந்ததுபோல, ஆவிக்குரிய விதத்தில் நாமும் பலமுள்ளவர்களாக இருந்து, ‘மலையென தோன்றும்’ பெரிய இடையூறுகளை யெகோவாவின் ஆவியின் உதவியால் மேற்கொள்ள முடியும்.​—எபே. 6:​17, 18; நியா. 16:28.

28மீதியானியரின் நாட்களில் செய்ததுபோல், தம்முடைய மக்கள்மீது எதிரிகள் சுமத்தும் பாரத்தை யெகோவா எவ்வாறு சுக்குநூறாக நொறுக்கிப்போடுவார் என்பதைக் காட்டுவதற்கு தீர்க்கதரிசி ஏசாயா இரண்டு இடங்களில் நியாயாதிபதிகள் புத்தகத்திலிருந்து எடுத்துக் குறிப்பிடுகிறார். (ஏசா. 9:4; 10:26) இது, தெபொராளும் பாராக்கும் பாடின பாட்டையும் நமக்கு நினைப்பூட்டுகிறது. அதில் பின்வரும் ஊக்கமான ஜெபம் அடங்கியுள்ளது: ‘[யெகோவாவே], உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; உம்மில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள்.’ (நியா. 5:​31) அவரில் அன்புகூருகிறவர்கள் யார்? இவர்கள் ராஜ்ய சுதந்தரவாளிகள் என்று காண்பித்து, மத்தேயு 13:​43-ல் இதைப் போன்ற கூற்றை இயேசு கிறிஸ்துவே பயன்படுத்தினார்: “அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்.” இவ்வாறு, நியாயாதிபதிகளின் புத்தகம், நீதியுள்ள நீதிபதியும் ராஜ்ய வித்துமாகிய இயேசு அதிகாரம் செலுத்தப்போகிற அந்தக் காலத்தை முன்குறிப்பிட்டு காட்டுகிறது. கடவுளுடைய எதிரிகளைப் பற்றிய சங்கீதக்காரரின் பின்வரும் ஜெபத்துக்கு இசைவாக, இயேசுவின் மூலம் தம்முடைய பெயருக்கு மகிமையையும் பரிசுத்தத்தையும் யெகோவா கொண்டுவருவார்: “மீதியானியருக்குச் செய்தது போலவும் கீசோன் ஆற்றண்டை சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்தது போலவும் அவர்களுக்குச் செய்யும். . . . அப்பொழுது, யெகோவா என்னும் திருநாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணர்ந்துகொள்வார்கள்.”​—சங். 83:​9, 17, தி.மொ.; நியா. 5:​20, 21.

[அடிக்குறிப்புகள்]

a அப்போஸ்தலர் 13:​20-ல் சொல்லப்பட்டுள்ள ‘ஏறக்குறைய நானூற்றைம்பது வருடங்கள்’ நியாயாதிபதிகளின் காலப்பகுதிக்கு ஒத்துவரவில்லை, அதற்கு முந்தினது என பெரும்பாலான நவீன மொழிபெயர்ப்புகள் குறிப்பிடுகின்றன; இவை, பொ.ச.மு. 1918-ல் ஈசாக்கின் பிறப்பிலிருந்து பொ.ச.மு. 1467-ல் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பங்கிட்டது வரையான காலப்பகுதியை உள்ளடக்குவதாக தோன்றுகின்றன. (வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 462) எபிரெயர் 11:​32-ல் குறிப்பிடப்பட்டுள்ள நியாயாதிபதிகள் பட்டியலின் வரிசைக்கிரமம், நியாயாதிபதிகளின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதிலிருந்து வேறுபடுகிறது. ஆனால் இதுதானே நியாயாதிபதிகள் புத்தகத்திலுள்ள சம்பவங்கள் கால வரிசைமுறைப்படி தொடர்ந்து வருகிறதில்லை என அர்த்தப்படுத்துவதில்லை. ஏனெனில் சந்தேகத்திற்கு இடமின்றி சாமுவேல், தாவீதுக்குப் பிறகு வரவில்லை!

b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக். 228-9, 948.

[கேள்விகள்]

1. என்ன விதங்களில் நியாயாதிபதிகளின் காலப்பகுதி குறிப்பிடத்தக்கதாக இருந்தது?

2. நியாயாதிபதிகள் புத்தகத்தின் எபிரெயப் பெயர் எப்படி பொருத்தமாயிருக்கிறது?

3. நியாயாதிபதிகள் எப்போது எழுதப்பட்டது?

4. நியாயாதிபதிகள் புத்தகத்தின் எழுத்தாளர் யார்?

5. நியாயாதிபதிகளின் காலப்பகுதியை எவ்வாறு கணக்கிடலாம்?

6. நியாயாதிபதிகள் புத்தகத்தின் நம்பகத்தன்மையை எது நிரூபிக்கிறது?

7. (அ) நியாயாதிபதிகளில் உள்ள விவரப்பதிவை தொல்பொருள் ஆராய்ச்சி எவ்வாறு ஆதரிக்கிறது? (ஆ) யெகோவா ஏன் பாகால் வணக்கத்தாரை முற்றிலும் அழிக்கும்படி சரியாகவே கட்டளையிட்டார்?

8. நியாயாதிபதிகளின் புத்தகம் என்ன பகுதிகளாக நியாயப்படி பிரிகிறது?

9. நியாயாதிபதிகளின் முதல் இரண்டு அதிகாரங்கள் என்ன சூழமைவை அளிக்கின்றன?

10. எந்த வல்லமையால் ஒத்னியேல் நியாயம் விசாரிக்கிறார், அதன் பலன் என்ன?

11. இஸ்ரவேலுக்கு விடுதலையைக் கொண்டுவருவதில் யெகோவா ஏகூத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்?

12. சம்காரின் வெற்றி கடவுளுடைய வல்லமையால் உண்டானதென எது காட்டுகிறது?

13. என்ன குறிப்பிடத்தக்க சம்பவங்களின் முடிவாக பாராக்கும் தெபொராளும் வெற்றிப் பாடலை பாடுகின்றனர்?

14, 15. யெகோவா ஆதரவளிப்பதைப் பற்றிய என்ன அடையாளத்தை கிதியோன் பெறுகிறார், இந்த ஆதரவு, மீதியானியர் முடிவாக தோற்கடிக்கப்படுவதில் எவ்வாறு மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது?

16. ஆட்சியை அபகரித்த அபிமெலேக்குக்கு என்ன தண்டனை கிடைக்கிறது?

17. நியாயாதிபதிகளாகிய தோலாவையும் யாவீரையும் பற்றி பதிவு என்ன சொல்கிறது?

18. (அ) என்ன விடுதலையை யெப்தா கொண்டுவருகிறார்? (ஆ) யெகோவாவுக்குச் செய்த என்ன பொருத்தனையை யெப்தா உண்மையுடன் நிறைவேற்றுகிறார், எவ்வாறு?

19. என்ன சம்பவங்கள் “ஷிபோலேத்” பரீட்சைக்கு வழிநடத்துகின்றன?

20. எந்த மூன்று நியாயாதிபதிகள் அடுத்தபடியாக குறிப்பிடப்படுகின்றனர்?

21, 22. (அ) என்ன பராக்கிரம செயல்களை சிம்சோன் நடப்பிக்கிறார், எந்த வல்லமையால்? (ஆ) பெலிஸ்தர் சிம்சோனை எவ்வாறு வீழ்த்துகின்றனர்? (இ) என்ன சம்பவங்கள் சிம்சோனின் மிகப் பெரிய வீரச்செயலில் உச்சக்கட்டத்தை அடைகின்றன, இந்த நேரத்தில் சிம்சோனை நினைத்தருளுவது யார்?

23. என்ன சம்பவங்கள் 17 முதல் 21 வரையான அதிகாரங்களில் விவரிக்கப்படுகின்றன, இவை எப்பொழுது நடைபெற்றன?

24. தாண் கோத்திரத்தை சேர்ந்த சிலர் எவ்வாறு தங்களுக்கென்று தனியே ஒரு மதத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்?

25. இஸ்ரவேலில் உள்நாட்டுச் சச்சரவு எவ்வாறு கிபியாவில் உச்சக்கட்டத்தை அடைகிறது?

26. நியாயாதிபதிகளில் கொடுக்கப்பட்டுள்ள என்ன எச்சரிக்கைகள் தற்காலத்துக்கும் பொருந்துகின்றன?

27. நியாயாதிபதிகளின் நல்ல முன்மாதிரியால் இன்று நாம் எவ்வாறு பயனடையலாம்?

28. ராஜ்ய வித்தின்மூலம் யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படப்போவதை நியாயாதிபதிகளின் புத்தகம் எவ்வாறு முன்குறித்து காட்டுகிறது?