Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 9—1 சாமுவேல்

பைபிள் புத்தக எண் 9—1 சாமுவேல்

பைபிள் புத்தக எண் 9—1 சாமுவேல்

எழுத்தாளர்கள்: சாமுவேல், காத், நாத்தான்

எழுதப்பட்ட இடம்: இஸ்ரவேல்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 1078

காலப்பகுதி: ஏ. பொ.ச.மு. 1180-1078

இஸ்ரவேலின் தேசிய அமைப்பில் பொ.ச.மு. 1117-ம் ஆண்டில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. மனித அரசர் ஒருவர் நியமிக்கப்பட்டார்! அந்தச் சமயத்தில் சாமுவேல் இஸ்ரவேலில் யெகோவாவின் தீர்க்கதரிசியாக சேவித்துவந்தார். இஸ்ரவேல் மக்கள் வற்புறுத்திக் கேட்டதால் முடியாட்சி அமைக்கப்பட்டது. யெகோவா இதை முன்னறிந்திருந்தார். ஆகவே சாமுவேலுக்கு இதை முன்கூட்டியே அறிவித்து விட்டார். இருந்தபோதிலும் இது சாமுவேலுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறப்பிலிருந்தே யெகோவாவுடைய சேவைக்கென அர்ப்பணிக்கப்பட்டு, யெகோவாவின் அரசதிகாரத்திற்கு பெரும் மதிப்பு காட்டிய சாமுவேல், கடவுளுடைய பரிசுத்த தேசத்திலுள்ள தனது சக உறுப்பினர்களுக்கு ஏற்படப்போகும் கேடுகளை முன்கண்டார். யெகோவா சொன்ன பிறகுதான் சாமுவேல் மக்களின் வற்புறுத்துதலுக்கு இணங்கினார். “அரசாட்சிமுறையைச் சாமுவேல் ஜனங்களுக்கு விவரித்துக்காட்டி அதைப் புஸ்தகத்தில் எழுதி யெகோவாவின் சந்நிதியில் வைத்தான்.” (1 சா. 10:​25, தி.மொ.) இவ்வாறு நியாயாதிபதிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. மனித அரசர்களின் சகாப்தம் தொடங்கியது. இந்த அரசர்களால், இஸ்ரவேல் முன்னோருபோதும் இல்லாதளவு சக்தி வாய்ந்ததாகவும் செல்வாக்கு மிக்கதாகவும் எழும்பவிருந்தது; ஆனாலும் இறுதியில் யெகோவாவின் தயவையும் அங்கீகாரத்தையும் இழக்கவிருந்தது.

2இந்த மிக முக்கிய காலப்பகுதியில் நடந்த சம்பவங்களை கடவுளின் ஏவுதலால் எழுத யாருக்கு தகுதியிருக்கிறது? இவற்றை எழுத ஆரம்பிக்க உண்மையுள்ள சாமுவேலை யெகோவா பொருத்தமாகவே தேர்ந்தெடுத்தார். சாமுவேல் என்பதற்கு, “கடவுளுடைய பெயர்” என்று அர்த்தம். அதற்கேற்பவே, யெகோவாவின் பெயரை உயர்ந்தோங்கச் செய்வதில் அவர் பெரும்பங்கு வகித்தார். இந்தப் புத்தகத்தில், முதல் 24 அதிகாரங்களை சாமுவேல் எழுதியதாக தெரிகிறது. அவர் இறந்த பிறகு, காத்தும் நாத்தானும் இப்புத்தகத்தை தொடர்ந்து எழுதினர். சவுலின் மரணம் வரையாக நடந்த கடைசி ஒருசில ஆண்டுகளின் பதிவுகளோடு முடித்தார்கள். இது 1 நாளாகமம் 29:​29, 30-ல் (NW) குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது, அது வாசிப்பதாவது: “தாவீது ராஜாவின் செயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை, முன்னுரைப்பவரான சாமுவேலின் குறிப்பேட்டிலும் தீர்க்கதரிசி நாத்தானின் குறிப்பேட்டிலும் தரிசனங்கள் கண்ட காத்தின் குறிப்பேட்டிலும் எழுதப்பட்டுள்ளன.” சாமுவேலின் புத்தகங்கள், இராஜாக்கள் மற்றும் நாளாகமம் புத்தகங்களைப்போல இல்லை; ஏனெனில் இவை முந்தின பதிவுகளைக் குறிப்பிடுவதில்லை. இவ்வாறு தாவீதின் காலத்தில் வாழ்ந்த சாமுவேலும் காத்தும் நாத்தானுமே எழுத்தாளர்களாக இருக்க வேண்டும் என உறுதி செய்யப்படுகிறது. இம்மூவரும் யெகோவாவின் தீர்க்கதரிசிகளாக நம்பிக்கைக்குரிய பதவிகளை வகித்தனர். மேலும், அத்தேசத்தை வலுவிழக்கச் செய்த விக்கிரகாராதனையை எதிர்த்தனர்.

3சாமுவேலின் இரண்டு புத்தகங்களும் தொடக்கத்தில் ஒரே சுருளாக, அல்லது தொகுதியாக இருந்தன. இந்தப் பகுதியின் கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு பிரசுரிக்கப்பட்டபோது, இது இரண்டு புத்தகங்களாக பிரிக்கப்பட்டது. செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பில், ஒன்று சாமுவேல் என்பது முதல் ராஜ்யங்கள் என்று அழைக்கப்பட்டது. இப்படி பிரிக்கப்பட்டதும், ஒன்று அரசர் ஆகமம் என்ற பெயரும் லத்தீன் வல்கேட் மொழிபெயர்ப்பில் ஏற்கப்பட்டன. இந்நாள்வரை கத்தோலிக்க பைபிள்களில் அப்படித்தான் உள்ளன. ஒன்று மற்றும் இரண்டு சாமுவேல் தொடக்கத்தில் ஒரே புத்தகமாக இருந்ததை 1 சாமுவேல் 28:​24-ஐப் பற்றிய மஸோரெட்டிக் குறிப்புரை காட்டுகிறது. இந்த வசனம் சாமுவேல் புத்தகத்தின் மத்தியில் இருப்பதாக அது கூறுகிறது. இந்தப் புத்தகம் ஏறக்குறைய பொ.ச.மு. 1078-ல் எழுதி முடிக்கப்பட்டதாக தோன்றுகிறது. ஆகவே ஒன்று சாமுவேல், ஏறக்குறைய பொ.ச.மு. 1180 முதல் 1078 வரையான, நூற்றுக்கும் சற்று அதிகமான ஆண்டுகள் அடங்கிய காலப்பகுதியை உள்ளடக்கியதாக இருக்கலாம்.

4இந்தப் பதிவின் திருத்தமான தன்மையைக் குறித்த அத்தாட்சிகள் ஏராளம். சம்பவங்கள் நடந்ததாக சொல்லப்பட்ட இடங்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளன. மிக்மாசில் பெலிஸ்தரின் ராணுவ முகாம் ஒன்றை யோனத்தான் தாக்கி, வெற்றி பெற்றார்; இது பெலிஸ்தரை முற்றிலும் முறியடிப்பதற்கு வழிநடத்தியது; சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் படைத்தலைவர் ஒருவரும், சாமுவேல் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள இடங்களின் தடங்களையே பின்பற்றி துருக்கியரை முறியடித்ததாக சொல்லப்படுகிறது.​—14:4-14. a

5எனினும், இந்தப் புத்தகம் தேவாவியால் ஏவப்பட்டதற்கும் இதன் நம்பகத்தன்மைக்கும் இதைப் பார்க்கிலும் உறுதியான நிரூபணங்கள் இருக்கின்றன. இஸ்ரவேலர்கள் தங்களை ஆள ஓர் அரசனைக் கேட்பார்கள் என்ற யெகோவாவின் தீர்க்கதரிசனம், கவனத்தைக் கவரும் விதத்தில் நிறைவேற்றம் அடைந்ததை இது காட்டுகிறது. (உபா. 17:14; 1 சா. 8:5) ஓசியா பல ஆண்டுகளுக்குப் பிறகு, யெகோவா பின்வருமாறு சொல்வதாக மேற்கோள் காட்டி, இந்தப் பதிவு உண்மை என உறுதிப்படுத்தினார்: “நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.” (ஓசி. 13:11) இயேசுவின் ‘நாட்களை முன்னறிவித்த’ தீர்க்கதரிசி என சாமுவேலை பேதுரு அடையாளம் காட்டினார். இவ்வாறு சாமுவேல் தேவாவியால் ஏவப்பட்டாரென அர்த்தப்படுத்தினார். (அப். 3:24) இஸ்ரவேலின் சரித்திரத்தை பவுல் சுருக்கமாக குறிப்பிடுகையில் 1 சாமுவேல் 13:​14-ஐ மேற்கோளாக குறிப்பிட்டார். (அப். 13:​20-22) தமது நாளிலிருந்த பரிசேயரை இயேசு பின்வருமாறு கேட்பதன் மூலம், இந்த விவரப்பதிவு நம்பத்தக்கதுதான் என முத்திரையிட்டார்: ‘தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?’ பின்பு தாவீது தேவசமூகத்து அப்பங்களைக் கேட்டதைப் பற்றிய விவரத்தைக் கூறினார். (மத். 12:​1-4; 1 சா. 21:​1-6) ஏற்கெனவே குறிப்பிட்டபடி, எஸ்றாவுங்கூட இந்த விவரத்தை உண்மையானதாக ஏற்றுக்கொண்டார்.​—1 நா. 29:29, 30.

6இது தாவீதின் நடவடிக்கைகளைப் பற்றிய மூலப் பதிவு. ஆகவே வேதாகமம் முழுவதிலும் தாவீதைப் பற்றி குறிப்பிடப்படுகிற ஒவ்வொரு இடமும், சாமுவேலின் இந்தப் புத்தகம் கடவுளின் ஏவப்பட்ட வார்த்தையின் பாகமாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களில் சில, தாவீதினுடைய சங்கீதங்களின் முகவரிகளிலும்கூட குறிப்பிடப்படுகின்றன. உதாரணங்கள்: சங்கீதம் 59 (1 சா. 19:11), சங்கீதம் 34 (1 சா. 21:13, 14), சங்கீதம் 142 (1 சா. 22:1 அல்லது 1 சா. 24:​1, 3). இவ்வாறு, கடவுளுடைய சொந்த வார்த்தையின் சான்று, ஒன்று சாமுவேல் புத்தகத்தின் நம்பகத்தன்மைக்கு சந்தேகத்திற்கு இடமின்றி அத்தாட்சி அளிக்கிறது.

ஒன்று சாமுவேலின் பொருளடக்கம்

7இந்தப் புத்தகம் இஸ்ரவேலின் நான்கு தலைவர்களுடைய வாழ்நாளில் நடந்தவற்றை ஓரளவாகவோ முழுமையாகவோ விளக்குகிறது: பிரதான ஆசாரியர் ஏலி, தீர்க்கதரிசி சாமுவேல், முதல் அரசன் சவுல், மற்றும் அடுத்த அரசனாக அபிஷேகம் செய்யப்பட்ட தாவீது.

8ஏலியின் நியாயவிசாரிப்பும் இளைஞன் சாமுவேலும் (1:​1–4:22). தொடக்கத்தில், லேவியனாகிய எல்க்கானாவின் பிரியமான மனைவி அன்னாள் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறாள். இவளுக்கு பிள்ளை இல்லை. இதனால் எல்க்கானாவின் மற்றொரு மனைவியான பெனின்னாள் அவளை ஏளனம் செய்கிறாள். இவர்களுடைய குடும்பம் ஒவ்வொரு வருடமும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டுள்ள சீலோவுக்குப் பயணம் செய்வது வழக்கம். அங்கு ஒருமுறை அன்னாள் ஒரு குமாரனுக்காக யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபிக்கிறாள். தன்னுடைய ஜெபம் கேட்கப்பட்டால், அந்தப் பிள்ளையை யெகோவாவின் சேவைக்கு முழுமையாக ஒப்புக்கொடுப்பதாக அவள் பொருத்தனை செய்துகொள்கிறாள். கடவுள் அவளுடைய ஜெபத்துக்குப் பதிலளிக்கிறார், அவள் சாமுவேல் என்ற ஒரு குமாரனை பெற்றெடுக்கிறாள். பிள்ளை பால்மறந்தவுடனே, அவனை யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருகிறாள். அங்கு அவனை ‘யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவனாக’ பிரதான ஆசாரியனாகிய ஏலியின் கவனிப்பில் விடுகிறாள். (1:​28, தி.மொ.) அப்பொழுது அன்னாள் நன்றியுணர்ச்சியால் சந்தோஷமான பாடலின் மூலம் தன் மனதிலுள்ளதை வெளிப்படுத்துகிறாள். அந்தச் சிறுவன் “ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாக யெகோவாவுக்குப் பணிவிடை செய்”கிறவனாகிறான்.​—2:​11, தி.மொ.

9ஏலிக்கு பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. அவர் வயதானவராக இருக்கிறார். அவருடைய இரண்டு குமாரர்கள் ‘யெகோவாவை லட்சியம் செய்யாத,’ ஒன்றுக்கும் உதவாத போக்கிரிகளாய் இருக்கின்றனர். (2:​12, தி.மொ.) அவர்கள் தங்கள் பேராசையையும் ஒழுக்கக்கேடான இச்சையையும் திருப்தி செய்வதற்கே தங்கள் ஆசாரிய பதவியைப் பயன்படுத்துகின்றனர். அவர்களைக் கண்டித்துத் திருத்துவதற்கு ஏலி தவறுகிறார். ஆகையால் ஏலியின் குடும்பத்திற்கு எதிராக யெகோவா தெய்வீக செய்திகளை அனுப்புகிறார். “உன் வீட்டில் ஒரு கிழவனும் இருப்பதில்லை” என்றும் ஏலியின் குமாரர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள் என்றும் எச்சரிக்கிறார். (1 சா. 2:​30-34; 1 இரா. 2:27) கடைசியாக, திடுக்கிடச் செய்யும் நியாயத்தீர்ப்புச் செய்தியுடன் சிறுவனாகிய சாமுவேலை ஏலியினிடம் அனுப்புகிறார். இவ்வாறு இளைஞன் சாமுவேல் இஸ்ரவேலில் தீர்க்கதரிசியாக அங்கீகரிக்கப்படுகிறார்.​—1 சா. 3:​1, 11.

10காலப்போக்கில், பெலிஸ்தரை எழும்பச் செய்வதன் மூலம் யெகோவா இந்த நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிறார். இஸ்ரவேலுக்கு எதிராக போர் வலுக்க ஆரம்பிக்கிறது. ஆகவே இஸ்ரவேலர் சத்தமாக கூச்சலிட்டு உடன்படிக்கைப் பெட்டியை சீலோவிலிருந்து தங்களுடைய ராணுவ முகாமுக்கு கொண்டுவருகின்றனர். இந்தக் கூச்சலை பெலிஸ்தர் கேட்கின்றனர். அதோடு, இந்தப் பெட்டி இஸ்ரவேலின் முகாமுக்குள் கொண்டுவரப்பட்டதையும் அவர்கள் அறிய வருகின்றனர். இதனால் அவர்கள் தங்களைப் பலப்படுத்தி, இஸ்ரவேலரை முற்றிலும் முறியடித்து பெரும் வெற்றி பெறுகின்றனர். பெட்டி கைப்பற்றப்படுகிறது, ஏலியின் இரண்டு குமாரர்களும் சாகின்றனர். தன் இருதயம் படபடக்க, ஏலி இந்தச் செய்தியைக் கேள்விப்படுகிறார். பெட்டியைப் பற்றி குறிப்பிட்டவுடனே, அவர் தன் இருக்கையிலிருந்து பின்னாக விழுந்து, கழுத்து முறிந்து இறந்துபோகிறார். இவ்வாறு அவருடைய 40 ஆண்டு நியாயாதிபதித்துவம் முடிவடைகிறது. நிச்சயமாகவே, “மகிமை இஸ்ரவேலைவிட்டு விலகிப்போயிற்று,” ஏனெனில் தம்முடைய மக்களுடன் யெகோவாவின் பிரசன்னம் இருப்பதை அந்தப் பெட்டிதான் குறித்துக்காட்டும்.​—4:22.

11சாமுவேல் இஸ்ரவேலை நியாயம் விசாரிக்கிறார் (5:1–7:17). யெகோவாவின் பெட்டியை மந்திரப் பொருளாக பயன்படுத்தக்கூடாது என்பதை இப்பொழுது பெலிஸ்தரும் கற்றுக்கொள்ள வேண்டும்! அந்தப் பெட்டியை அஸ்தோத்தில் இருக்கிற தாகோனின் கோயிலில் அவர்கள் வைத்தபோது, அவர்களுடைய தெய்வம் முகங்குப்புற தரையில் விழுகிறது. அடுத்த நாளிலும் தாகோன் வாசற்படியில் முகங்குப்புற விழுவதுடன், அதன் தலையும் இரண்டு கைகளும் முறிந்துபோகின்றன. இது முதற்கொண்டு ‘தாகோனின் வாசற்படியை மிதிக்காதிருக்கும்’ மூடநம்பிக்கை பெலிஸ்தரிடையே தோன்றுகிறது. (5:​5) பெலிஸ்தர் உடனடியாக பெட்டியை காத் பட்டணத்துக்கும், பிறகு எக்ரோனுக்கும் கொண்டு செல்கின்றனர். ஆனால் எல்லாம் வீணே! பெளத்திரம், சுண்டெலிகளால் வாதை, திகில் ஆகியவற்றின் உருவில் வேதனைகள் வருகின்றன. மரண எண்ணிக்கை மலைபோல அதிகரிக்கிறது. பெலிஸ்த அதிபதிகள் அதிகமாக கலக்கமடைகின்றனர். இதனால் இரண்டு கறவைப் பசுக்களால் இழுக்கப்படும் புது வண்டியில் பெட்டியை இஸ்ரவேலுக்குத் திரும்ப அனுப்பிவிடுகின்றனர். பெத்ஷிமேசில் இஸ்ரவேலர் பெட்டிக்குள் பார்த்ததால் அவர்கள் அழிக்கப்படுகின்றனர். (1 சா. 6:19; எண். 4:​6, 20) கடைசியாக, பெட்டி லேவியரின் பட்டணமாகிய கீரியாத்யாரீமிலுள்ள அபினதாபின் வீட்டிற்கு வந்து சேருகிறது.

12அந்தப் பெட்டி 20 ஆண்டுகளாக அபினதாபின் வீட்டில் இருக்கிறது. சாமுவேல் வாலிபராக வளர்ந்து விட்டார். பாகாலையும் அஸ்தரோத் சொரூபங்களையும் விட்டு விலகி, யெகோவாவை தங்கள் முழு இருதயத்தோடும் சேவிக்கும்படி இஸ்ரவேலரை ஊக்கப்படுத்துகிறார். இஸ்ரவேலர் அவர் சொல்லைக் கேட்டு அப்படியே செய்கின்றனர். யெகோவாவை வணங்கும்படி மிஸ்பாவில் அவர்கள் கூடிவருகின்றனர். அப்போது பெலிஸ்தரின் அதிபதிகள், இஸ்ரவேலர் எதிர்பாராதபோது திடீரென போரிட்டு அவர்களைப் பிடித்துவிடுகின்றனர். சாமுவேலின் மூலம் இஸ்ரவேலர் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகின்றனர். யெகோவாவினிடமிருந்து வரும் பலத்த இடிமுழக்கம் அந்தப் பெலிஸ்தரை கலங்கடிக்கிறது. பலிசெலுத்தி வேண்டுதல் செய்வதால் இஸ்ரவேலர் பலப்படுத்தப்பட்டு, எதிரிகளை தீர்த்துக்கட்டுகின்றனர். அந்தச் சமயம் முதற்கொண்டு, ‘சாமுவேலின் நாளெல்லாம் யெகோவாவின் கை பெலிஸ்தியருக்கு விரோதமாகவே இருக்கிறது.’ (7:​13, தி.மொ.) எனினும், சாமுவேலுக்கு பணியிலிருந்து ஓய்வே இல்லை. எருசலேமுக்கு வடக்கில்தானே உள்ள ராமாவிலிருந்து, பெத்தேல், கில்கால், மற்றும் மிஸ்பாவுக்கு ஆண்டுதோறும் சென்று, தன் வாழ்நாள் முழுவதும் இஸ்ரவேலை தொடர்ந்து நியாயம் விசாரித்து வருகிறார். ராமாவில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தையும் கட்டுகிறார்.

13இஸ்ரவேலின் முதல் அரசன் சவுல் (8:1–12:25). யெகோவாவின் சேவையில் சாமுவேல் முதிர்வயதானவராகிவிட்டார். அவருடைய குமாரர்களோ தங்கள் தகப்பனுடைய வழிகளில் நடப்பதில்லை. அவர்கள் லஞ்சம் வாங்கி, நியாயத்தைப் புரட்டுகிறார்கள். இந்தச் சமயத்தில் இஸ்ரவேலின் மூப்பர்கள்: “சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கையுடன் சாமுவேலை அணுகுகின்றனர். (8:5) மிகவும் கலக்கமுற்றவராக, சாமுவேல் யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்கிறார். யெகோவா பின்வருமாறு பதிலளிக்கிறார்: “அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள். . . . இப்போதும் அவர்கள் சொல்லைக் கேள்.” (8:​7-9) எனினும், மக்களுடைய கலகத்தனமான வேண்டுதலினால் சந்திக்கவிருக்கும் மிக மோசமான விளைவுகளைப் பற்றி சாமுவேல் அவர்களை முதலாவது எச்சரிக்க வேண்டும். பயங்கர கண்டிப்பு, வரிசெலுத்துதல், சுதந்திரம் பறிபோதல் போன்ற சங்கடங்களுக்கு மக்கள் உட்படுவர்; இதனால், மனக்கசப்புற்று துயரம் தாங்காமல் அவர்கள் யெகோவாவிடம் கூக்குரலிட வேண்டி நேரிடும் என்று எச்சரித்தார். இருப்பினும் மக்கள் தங்களுடைய விருப்பத்தில் பிடிவாதமாக இருக்கின்றனர். ஒரு அரசன் வேண்டும் என வற்புறுத்திக் கேட்கின்றனர்.

14இப்போது, பென்யமீன் கோத்திரத்தானான கீசின் குமாரனும் இஸ்ரவேலில் அதுவரையிலும் இருந்த எல்லாரையும்விட அழகும் உயரமுமான சவுலை நாம் சந்திக்கிறோம். அவர் சாமுவேலிடம் செல்லும்படி வழிநடத்தப்படுகிறார்; அவரோ சவுலுக்கு விருந்து வைத்து கனம்பண்ணுகிறார்; அபிஷேகம் செய்கிறார்; பின்பு மிஸ்பாவில் கூடின கூட்டத்தில் இஸ்ரவேல் ஜனம் முழுவதற்கும் அவரை அறிமுகப்படுத்தி வைக்கிறார். முதலில் சவுல் பொருள்களின் குவியலுக்கு நடுவே ஒளிந்துகொள்கிறார். இருந்தபோதிலும், கடைசியாக யெகோவா தெரிந்துகொண்ட நபராக அறிவிக்கப்படுகிறார். அரசதிகாரத்துக்கு செலுத்த வேண்டிய கடமைகளைக் குறித்து இஸ்ரவேலருக்கு சாமுவேல் மறுபடியும் நினைப்பூட்டுகிறார். அவற்றை ஒரு புத்தகத்தில் எழுதிவைக்கிறார். எனினும், அம்மோனியரின்மீது வெற்றிபெற்று, கிலேயாத்திலுள்ள யாபேசை முற்றுகையிலிருந்து விடுவிக்கும் வரையில் அரசனாக சவுலின் அதிகாரம் வலுவடையவில்லை. இந்த வெற்றிக்குப் பிறகுதான் மக்கள் அவருடைய அரசாதிகாரத்தை கில்காலில் உறுதிப்படுத்துகின்றனர். யெகோவாவுக்குப் பயப்பட்டு, அவரை சேவித்து, அவருக்குக் கீழ்ப்படியும்படி மறுபடியும் மக்களுக்கு சாமுவேல் அறிவுரை கூறுகிறார். ஓர் அடையாளத்தை அனுப்பும்படி, அதாவது பருவம் தவறி அறுவடை காலத்தில் இடிமுழக்கங்கள் ஏற்படவும் மழை பெய்யவும் செய்யுமாறு யெகோவாவிடம் விண்ணப்பிக்கிறார். அரசராக தம்மை வேண்டாமென அவர்கள் தள்ளிவிட்டதால் மக்கள் அஞ்சி நடுங்கும் விதத்தில் யெகோவா தம்முடைய கோபத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

15சவுலின் கீழ்ப்படியாமை (13:​1–15:35). பெலிஸ்தர் தொடர்ந்து இஸ்ரவேலை தாக்கி வருகின்றனர். ஆகவே சவுலின் தைரியமுள்ள குமாரனான யோனத்தான் பெலிஸ்த ராணுவ முகாம் ஒன்றை முறியடிக்கிறார். இதற்குப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்பதற்காக ‘கடற்கரை மணலத்தனை போன்ற’ பெரும் படையுடன் எதிரிகள் வருகின்றனர். அவர்கள் மிக்மாசில் பாளையம் இறங்குகின்றனர். இஸ்வேலருடைய படைகள் கலங்கிப்போகின்றன. ‘யெகோவாவின் வழிநடத்துதலை நமக்குக் கொடுக்க சாமுவேல் மட்டும் வந்துவிட்டால் நலமாயிருக்கும்!’ சாமுவேலுக்காக காத்திருப்பதில் சவுல் பொறுமையிழந்து விடுகிறார். சர்வாங்க தகன பலியைத் தானே துணிகரமாய்ச் செலுத்தி பாவம் செய்கிறார். திடீரென்று சாமுவேல் வருகிறார். சவுலின் நொண்டிச் சாக்குகளை ஏற்றுக்கொள்ள மறுத்து, யெகோவாவின் நியாயத்தீர்ப்பை சாமுவேல் அறிவிக்கிறார்: ‘இப்போதோ உமது அரசாட்சி நிலைநிற்காது; யெகோவா உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளாதபடியினால் யெகோவா தமது இருதயத்திற்கேற்ற ஒரு மனுஷனைத்தேடி அவனைத் தமது ஜனத்தின்மேல் அதிபதியாக ஏற்படுத்துவார்.’​—13:14, தி.மொ.

16யெகோவாவின் பெயரைக் குறித்து யோனத்தான் பக்திவைராக்கியத்தோடு இருந்தார். மறுபடியும் பெலிஸ்தரின் ஒரு காவற்படையை அவர் தாக்குகிறார். இந்தச் சமயத்தில் அவருடைய ஆயுததாரி மாத்திரமே அவருடன் இருக்கிறார். இவர்கள் மடமடவென்று ஏறக்குறைய 20 ஆட்களை கொன்று வீழ்த்துகின்றனர். அப்பொழுது ஏற்பட்ட ஒரு பூமியதிர்ச்சி எதிரிகளை இன்னும் குழப்புகிறது. அவர்கள் முறியடிக்கப்படுகின்றனர், இஸ்ரவேலர் முழுமூச்சாக பின்தொடர்ந்து தாக்குகின்றனர். எனினும், போர் முடிவதற்கு முன்பு போர்வீரர்கள் சாப்பிடக் கூடாது என சவுல் ஆணையிட்டிருந்தார். அவசரப்பட்டு செய்யப்பட்ட இந்த ஆணையினால் அந்த வெற்றியின் முழு வலிமை குறைந்துவிடுகிறது. அந்த வீரர்கள் சீக்கிரத்தில் களைத்துப்போகிறார்கள். அப்போதுதானே கொல்லப்பட்ட இறைச்சியை இரத்தம் வடிவதற்கு முன்பே சாப்பிட்டு யெகோவாவுக்கு எதிராக பாவம் செய்கிறார்கள். ஆனால் யோனத்தானோ அந்த ஆணையைப் பற்றிக் கேள்விப்படுவதற்கு முன்பே தேன்கூட்டிலிருந்து தேனை சாப்பிட்டு தன் களைப்பைப் போக்கிக்கொள்கிறார். அந்த ஆணையை ஒரு தடை என தைரியமாகவும் வெளிப்படையாகவும் கண்டனம் செய்கிறார். இஸ்ரவேலில் பெரிய இரட்சிப்பை யோனத்தான் நடப்பித்ததால், அவர் கொல்லப்படாதபடி மக்கள் அவரை காப்பாற்றுகின்றனர்.

17வெறுக்கத்தக்க அமலேக்கியரின்மீது அளித்த நியாயத்தீர்ப்பை யெகோவா நிறைவேற்றுவதற்கு இப்போது காலம் வருகிறது. (உபா. 25:​17-19) அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். மனிதனாகட்டும், மிருகமாகட்டும், எதையுமே விட்டுவைக்கக் கூடாது. கொள்ளைப் பொருட்கள் எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. எல்லாவற்றையும் முற்றிலும் அழித்துவிட வேண்டும். எனினும், சவுல் கீழ்ப்படியாமல், அமலேக்கிய அரசனாகிய ஆகாகை உயிருடன் விட்டுவைக்கிறார். மேலும் யெகோவாவுக்குப் பலிசெலுத்துவதற்கென கண்துடைப்புக்குச் சொல்லி, ஆடுமாடுகளில் மிகச் சிறந்தவற்றையும் பாதுகாத்து வைக்கிறார். இது இஸ்ரவேலின் கடவுளை அவ்வளவு வெறுப்பூட்டுவதால், சவுலை புறக்கணித்துத் தள்ளுவதாய் இரண்டாம் தடவையாக அறிவிக்கும்படி சாமுவேலை ஏவுகிறார். சவுலின் சாக்குப்போக்குகளைப் புறக்கணித்து, சாமுவேல் பின்வருமாறு அறிவிக்கிறார்: ‘யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் யெகோவாவுக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம். . . . நீர் யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார்.’ (1 சா. 15:​22, 23) அப்பொழுது சவுல், சாமுவேலை கெஞ்சிக் கேட்கும்படி அவருடைய மேலங்கியைப் பிடிக்கிறார், அது கிழிந்துவிடுகிறது. அதைப் போலவே யெகோவா ராஜ்யத்தை சவுலினிடமிருந்து நிச்சயமாக பிடுங்கி அவரைவிட உத்தமராக இருப்பவருக்குக் கொடுப்பார் என சாமுவேல் உறுதியாக கூறுகிறார். சாமுவேல் பட்டயத்தை எடுத்து ஆகாகை கொன்றுபோடுகிறார். பிறகு சாமுவேல், இனிமேல் சவுலை ஒருபோதும் பார்க்கப்போவதில்லை என அவரைப் புறக்கணித்துவிட்டுப் போய்விடுகிறார்.

18தாவீது அபிஷேகம் செய்யப்படுவதும், அவருடைய வீரதீரமும் (16:​1–17:58). அடுத்தபடியாக, எதிர்கால அரசனை தெரிந்தெடுத்து அபிஷேகம் செய்வதற்காக யெகோவா சாமுவேலை யூதாவின் பெத்லகேமிலுள்ள ஈசாயின் வீட்டுக்கு அனுப்புகிறார். ஈசாயின் குமாரர் ஒவ்வொருவராக சாமுவேலுக்கு முன்பு கடந்து செல்கின்றனர், ஆனால் அவர்கள் நிராகரிக்கப்படுகின்றனர். யெகோவா சாமுவேலுக்குப் பின்வருமாறு நினைப்பூட்டுகிறார்: “மனிதன் பார்க்கும் விதத்தில் கடவுள் பார்ப்பதில்லை, ஏனென்றால் மனிதனோ கண்ணுக்குப் புலப்படுவதைப் பார்க்கிறான்; ஆனால் யெகோவாவோ இருதயம் எப்படிப்பட்டது என்று பார்க்கிறார்.” (16:​7, NW) கடைசியாக, எல்லாரிலும் இளைஞன், ‘சிவந்தமேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுமுள்ளவன்’ என விவரிக்கப்படுகிற தாவீதை தாம் அங்கீகரிப்பதாக யெகோவா சொல்கிறார். சாமுவேல் தாவீதை எண்ணெய்யால் அபிஷேகம் செய்கிறார். (16:12) இப்பொழுது யெகோவாவின் ஆவி தாவீதின்மீது வருகிறது. ஆனால் சவுலிடத்திலோ ஒரு கெட்ட ஆவி உருவாகிறது.

19பெலிஸ்தர் மறுபடியும் இஸ்ரவேலுக்கு எதிராக படையெடுத்து, ஆறு முழம், ஒரு ஜாண் (ஏறக்குறைய 2.9 மீ) உயரமுடைய ஓர் இராட்சதனான தங்கள் வீரன் கோலியாத்தை நிற்கவைக்கின்றனர். அவன் அவ்வளவு பெரிய உருவமுடையவனாக இருப்பதால் அவனுடைய போர்க்கவசத்தின் எடை 57 கிலோ; அவனுடைய ஈட்டி அலகின் எடையோ ஏறக்குறைய 6.8 கிலோ. (17:​4, 5, 7) ஒவ்வொரு நாளும் இந்தக் கோலியாத், தேவதூஷணமாக பேசியும் இஸ்ரவேலரை தரக்குறைவாக ஏசியும் வருகிறான். தன்னிடம் நேருக்குநேர் மோதுவதற்கு ஓர் ஆளை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி கேட்டு, சவால்விடுகிறான். ஆனால் யாருமே பதில் சொல்கிறதில்லை. சவுல் தன் கூடாரத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறார். எனினும், இந்தப் பெலிஸ்தன் இவ்வாறு நிந்திப்பதைப் பற்றி தாவீது கேள்விப்படுகிறார். நியாயமான கோபத்துடனும் தேவாவியால் ஏவப்பட்ட தைரியத்துடனும், தாவீது பின்வருமாறு கூறுகிறார்: “ஜீவனுள்ள கடவுளின் சேனைகளை அவமானமாய்ப் பேச விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தியன் யார்”? (17:​26, தி.மொ.) தான் முன்னொருபோதும் போர்க்கவசம் தரித்துப் பழக்கமில்லாததால் சவுலின் போர்க்கவசத்தை அணிந்துகொள்ள தாவீது மறுத்து விடுகிறார். மேய்ப்பனின் கோலையும் ஒரு கவணையும், ஐந்து கூழாங்கற்களையும் மாத்திரமே எடுத்துக்கொண்டு கோலியாத்துடன் போரிட தாவீது செல்கிறார். இந்த இளம் ஆட்டிடையனுடன் தன்னை இணையாக கருதுவதை மதிப்புக் குறைவென எண்ணி, கோலியாத் தாவீதைச் சாடுகிறான். பின்வரும் நம்பிக்கையான பதில் தாவீதிடமிருந்து கணீரென ஒலிக்கிறது: “நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் எறிவல்லயத்தோடும் என்னிடம் வருகிறாய்; நானோ . . . சேனைகளின் யெகோவாவினுடைய திருநாமத்திலே உன்னிடம் வருகிறேன்.” (17:​45, தி.மொ.) தாவீது தனது கவணிலிருந்து ஒரு கல்லை எடுத்து நன்றாய் குறிபார்த்து எறிகிறார். அந்தப் பெலிஸ்தரின் வீரன் தரையில் விழுகிறான்! இந்தக் காட்சியை இரண்டு படைகளும் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இச்சமயத்தில் தாவீது ஓடிப்போய், அந்த இராட்சதனின் பட்டயத்தை உறையிலிருந்து இழுத்து, அவனுடைய தலையை வெட்டிப்போடுகிறார். யெகோவாவிடமிருந்து வந்த எத்தகைய மகா விடுதலை! இஸ்ரவேலரின் பாளையத்தில் எத்தகைய மகிழ்ச்சி ஆரவாரம்! இப்பொழுது தங்களுடைய மாவீரன் மாண்டுவிட்டதால், பெலிஸ்தர் தலைதெறிக்க ஓட்டம் பிடிக்கின்றனர். களிப்பு மிகுந்த இஸ்ரவேலரோ, அவர்களை மூர்க்கமாய் துரத்திச் செல்கின்றனர்.

20தாவீதை சவுல் துரத்துதல் (18:​1–27:12). யெகோவாவின் பெயரின் நிமித்தமாக தாவீது தைரியமாக செயல்பட்டதால் அவருக்கு ஓர் அருமையான நண்பர் கிடைக்கிறார். அவரே யோனத்தான். இவர் சவுலின் குமாரனும் அந்த ராஜ்யத்தை ஆளுவதற்கு உரிமையுள்ள வாரிசும் ஆவார். ‘யோனத்தான் தாவீதை தன் உயிரைப்போலச் சிநேகிக்கிறார்.’ இவ்விருவரும் நட்புக்கான ஓர் உடன்படிக்கை செய்துகொள்கின்றனர். (18:​1-3) தாவீதின் புகழ் இஸ்ரவேலில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனால் சவுலோ, தன் குமாரத்தி மீகாளை தாவீதுக்கு மணம்செய்து கொடுத்திருந்தும் கோபத்துடன் அவரைக் கொல்ல முயற்சிக்கிறார். சவுலின் பகைமை மேலும் மேலும் வளர்ந்து வெறியாகிறது. ஆகவே தாவீது, யோனத்தானின் அன்பான உதவியால் தப்பியோடுகிறார். இருவரும் பிரிகையில் அழுகின்றனர். யோனத்தான் தாவீதினிடம் தன் விசுவாசத்தை உறுதிப்படுத்தி, பின்வருமாறு கூறுகிறார்: “எனக்கும் உமக்கும் என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும் யெகோவாவே என்றும் நடுநிற்கும் சாட்சி.”​—20:42, தி.மொ.

21பகைமை கொண்ட சவுலினிடமிருந்து தப்பியோடும் சமயத்தில், தாவீதுடன் அவருடைய ஆதரவாளரான சிறு கூட்டத்தினரும் கடும் பசியுடன் நோபுக்கு வருகின்றனர். இங்கே ஆசாரியனாகிய அகிமெலேக்கு, தாவீதும் அவருடைய ஆட்களும் பெண்களுக்கு விலகி சுத்தமாக இருக்கிறார்கள் என்ற நிச்சயத்தைப் பெற்ற பின்பு, பரிசுத்த சமூகத்து அப்பங்களைச் சாப்பிடும்படி அனுமதிக்கிறார். இப்போது கோலியாத்தின் பட்டயத்துடன், தாவீது பெலிஸ்த பிராந்தியத்திலுள்ள காத் பட்டணத்துக்குத் தப்பியோடிவிடுகிறார். அங்கே பைத்தியக்காரன்போல் நடிக்கிறார். பின்பு அதுல்லாம் கெபிக்கும், அங்கிருந்து மோவாபுக்கும் செல்கிறார். பிற்பாடு தீர்க்கதரிசி காத்தின் அறிவுரையின்படி யூதா தேசத்துக்குத் திரும்பிவருகிறார். தாவீதிற்கு ஆதரவாக கலகம் எழும்பும் என பொறாமைவெறி பிடித்த சவுல் பயப்படுகிறார். ஆகவே நோபிலுள்ள எல்லா ஆசாரியரையும் ஏதோமியனான தோவேக்கு கொன்றுபோடும்படி செய்கிறார். அபியத்தார் மாத்திரமே தப்பியோடி தாவீதுடன் சேர்ந்துகொள்கிறார். அவர் அந்தக் கூட்டத்துக்கு ஆசாரியராகிறார்.

22யெகோவாவின் உத்தமமுள்ள ஊழியனாக, தாவீது இப்போது பெலிஸ்தருக்கு எதிராக கொரில்லாப் போர் செய்து வெற்றியும் பெறுகிறார். எனினும், தாவீதைப் பிடிக்கும்படி சவுல் போர்வீரர்களைக் கூட்டிச்சேர்த்து “என்கேதியின் வனாந்தரத்தில்” முழு தீவிரத்துடன் தொடர்ந்து தேடுகிறார். (24:1) யெகோவாவுக்குப் பிரியமானவரான தாவீது, எதிரிகளின் கையிலிருந்து எல்லா சமயத்திலேயும் எப்படியோ தப்பித்துக்கொண்டே இருக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் சவுலைக் கொன்றுபோடுவதற்கான வாய்ப்பு கிடைத்தும் தாவீது அவரை கொல்லாமல் விட்டுவிடுகிறார். ஆனால் அதற்கு அத்தாட்சியாக சவுலின் மேலங்கியின் ஒரு துண்டை மாத்திரம் வெட்டிக்கொள்கிறார். இந்தத் தீங்கற்ற செயலுக்காகவுங்கூட தாவீதின் இருதயம் அடித்துக்கொள்கிறது. ஏனெனில் யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு எதிராக செயல்பட்டதாக அவருக்குத் தோன்றுகிறது. யெகோவாவின் ஏற்பாட்டின்மீது அவருக்கு என்னே சிறந்த மதிப்பு!

23சாமுவேல் மரணமடைந்துவிட்டதாக பதிவுசெய்யப்படுகிறபோதிலும் (25:1) அவரைப் பின்தொடர்ந்து வரும் எழுத்தாளர் அந்த விவரப்பதிவை தொடருகிறார். தாவீதும் அவருடைய ஆட்களும் யூதாவில் மாகோனிலுள்ள நாபாலின் மேய்ப்பர்களை சிநேகப்பான்மையுடன் நடத்தினார்கள். அதற்கு கைமாறாக தங்களுக்கு உணவு அளிக்கும்படி நாபாலை தாவீது கேட்டுக்கொள்கிறார். தாவீதின் மனிதர்மீது நாபால் ‘சீறி’ விழுகிறான். தாவீது அவனை தண்டிக்கப் புறப்படுகிறார். (25:14) இந்த ஆபத்தை நாபாலின் மனைவி அபிகாயில் உணருகிறாள். ஆகவே தாவீதுக்கு இரகசியமாக உணவுப் பொருட்களைக் கொண்டுசென்று அவரைச் சாந்தப்படுத்துகிறாள். இந்த விவேகமான நடத்தைக்காக தாவீது அவளை ஆசீர்வதித்து சமாதானத்தோடே வழியனுப்புகிறார். நடந்ததையெல்லாம் அவள் நாபாலுக்குத் தெரிவிக்கையில், அவன் அதிர்ச்சியடைகிறான். பத்து நாட்களுக்குப் பின்பு நாபால் மரித்துவிடுகிறான். பின்பு தாவீது அழகும் நற்குணமும் நிறைந்த அபிகாயிலை மணந்துகொள்கிறார்.

24சவுல் மூன்றாவது தடவையாக தாவீதை வெறியுடன் தேடிச்செல்கிறார். இருப்பினும் மறுபடியும் ஒருமுறை தாவீதின் இரக்கத்தை பெறுகிறார். சவுலுக்கும் அவரோடிருந்தவர்களுக்கும் “யெகோவா . . . அயர்ந்த நித்திரை வரச்” செய்கிறார். தாவீது அந்தப் பாளையத்துக்குள் நுழைந்து சவுலின் ஈட்டியை எடுத்துக்கொள்கிறார். ஆனால் “யெகோவா அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல்” தன் கையைப் போட மறுக்கிறார். (26:​11, 12, தி.மொ.) இரண்டாவது தடவையாக அடைக்கலம் தேடி பெலிஸ்தரிடம் தஞ்சம்புகும் நிர்பந்தம் தாவீதுக்கு நேரிடுகிறது. அவர்கள் சிக்லாகை அவருக்கு இருப்பிடமாக கொடுக்கின்றனர். இங்கிருந்து இஸ்ரவேலின் மற்ற சத்துருக்களுக்கு எதிராக அவர் தொடர்ந்து தாக்குதல் செய்கிறார்.

25சவுலின் தற்கொலை (28:​1–31:13). பெலிஸ்தரின் அதிபதிகள் ஒன்றிணைந்த படையுடன் சூநேமில் பாளையம் இறங்குகின்றனர். சவுல் இவர்களுக்கு எதிராக கில்போவா மலையில் பாளையம் இறங்குகிறார். சவுல் வழிநடத்துதலைப் பெற துடிக்கிறார், ஆனால் யெகோவாவிடமிருந்து ஒரு பதிலும் கிடைப்பதில்லை. சாமுவேலிடம் மாத்திரம் தொடர்புகொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! சவுல் மாறுவேடம் போட்டுக்கொண்டு, பெலிஸ்தரின் அணிவகுப்புகளுக்குப் பின்னால் எந்தோரில் ஆவி மத்தியஸ்தம் செய்பவளைத் தேடிச்செல்கிறார். இவ்வாறு மற்றொரு பெரிய பாவத்தைச் செய்கிறார். தனக்காக சாமுவேலிடம் தொடர்பு கொள்ளும்படி அவளிடம் கெஞ்சுகிறார். சவுல் பதட்டத்தில் அவசர முடிவுக்கு வந்து, இறந்த சாமுவேல்தான் தோன்றியிருப்பதாக நினைத்துக்கொள்கிறார். எனினும், அரசனுக்கு ஆறுதலான செய்தி எதையும் “சாமுவேல்” சொல்லவில்லை. நாளைக்கு அவர் சாவார், யெகோவாவின் வார்த்தைகளின்படியே, அந்த ராஜ்யம் அவரிடமிருந்து பறிக்கப்படும். மறுபுறத்தில், பெலிஸ்தரின் அதிபதிகள் போருக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர். தாவீதும் அவருடைய மனிதரும் தங்கள் மத்தியில் இருப்பதைக் கண்டு, பெலிஸ்தருக்குச் சந்தேகம்! அதனால் அவர்கள் தாவீதையும் அவரோடிருந்தவர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிடுகின்றனர். தாவீதின் மனிதர் சரியான நேரத்தில் சிக்லாகுக்கு வந்து சேருகின்றனர்! சூறையாடும் அமலேக்கியரின் ஒரு கூட்டம் தாவீது மற்றும் அவரோடிருந்தவர்களின் உடைமைகளை கொள்ளையடித்து, அவர்களது குடும்பத்தாரை சிறைபிடித்துச் சென்றுவிட்டது. ஆனால் தாவீதும் அவரோடிருந்தவர்களும் அவர்களை விரட்டிச்சென்று பிடிக்கின்றனர். எந்தச் சேதமின்றி அனைவரும் மீட்கப்படுகின்றனர்.

26கில்போவா மலையில் போர் நடக்கிறது. இஸ்ரவேல் தரப்பில் படுதோல்வி! பெலிஸ்தர் அத்தேசத்தின் முக்கிய நிலப்பகுதிகளை கைப்பற்றுகின்றனர். யோனத்தானும் சவுலின் மற்ற குமாரர்களும் கொல்லப்படுகின்றனர். குற்றுயிராக கிடந்த சவுல் தன் சொந்த பட்டயத்தைக் கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். வெற்றியடைந்த பெலிஸ்தர் சவுலின் சடலத்தையும் அவருடைய மூன்று குமாரரின் சடலத்தையும் பெத்சான் பட்டணத்தின் மதில்களின்மீது தொங்கவிடுகின்றனர். ஆனால் யாபேஸ்-கீலேயாத் மனிதர் அவற்றை அந்த அவமதிப்பான நிலையிலிருந்து எடுத்துவிடுகிறார்கள். இஸ்ரவேலருடைய முதல் அரசனின் துன்பம் மிகுந்த ஆட்சி அதன் படுமோசமான முடிவை அடைந்துவிட்டது.

ஏன் பயனுள்ளது

27ஒன்று சாமுவேலில் எப்பேர்ப்பட்ட சரித்திரம் அடங்கியுள்ளது! ஒவ்வொரு நுட்பவிவரமும் முழுக்க முழுக்க நேர்மைத் தன்மையுடையது. இஸ்ரவேலின் பலவீனம், பலம் ஆகிய இரண்டையுமே இது அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது. இப்பகுதியைப் பொறுத்தமட்டில், இஸ்ரவேலில் நான்கு தலைவர்கள் இருந்தார்கள். கடவுளுடைய சட்டத்துக்குச் செவிகொடுத்த இருவர், செவிகொடாத இருவர். ஏலியும் சவுலும் எவ்வாறு தவறினர் என்பதை கவனியுங்கள்: ஏலி செயல்படத் தவறினார், சவுலோ துணிகரமாக முந்திக்கொண்டு செயல்பட்டார். மறுபட்சத்தில், சாமுவேலும் தாவீதும் இளமை பருவத்திலிருந்தே யெகோவாவின் வழிகளில் பிரியம் வைத்திருந்தனர். அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் செழித்தோங்கினர். கண்காணிகள் யாவருக்கும் எத்தகைய மதிப்புவாய்ந்த பாடங்களை நாம் இதில் காண்கிறோம்! இவர்கள் உறுதியுள்ளவர்களாகவும், யெகோவாவின் அமைப்பில் சுத்தத்தையும் ஒழுங்கையும் காப்பதில் ஜாக்கிரதை உள்ளவர்களாகவும், கடவுளுடைய ஏற்பாடுகளை மதித்து நடப்பவர்களாகவும், அஞ்சாதவர்களாகவும், உணர்ச்சி வசப்படாமல் நிதானமுள்ளவர்களாகவும், தைரியமுள்ளவர்களாகவும், மற்றவர்கள்மீது அன்பும் கரிசனையும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம்! (2:​23-25; 24:​5, 7; 18:​5, 14-16) வெற்றிச்சிறந்த இந்த இருவரும் இளமையிலிருந்தே நல்ல தேவராஜ்ய பயிற்றுவிப்பைப் பெற்றிருந்தனர்; யெகோவாவின் செய்தியைப் பேசுவதிலும் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்டதை காத்துவருவதிலும் தைரியமுள்ளவர்களாக இருந்தனர் என்பதை கவனியுங்கள். (3:19; 17:​33-37) இன்று யெகோவாவை வணங்கும் இளைஞர்கள் அனைவரும் இளம் ‘சாமுவேல்களாகவும்,’ ‘தாவீதுகளாகவும்’ ஆவார்களாக!

28“அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ண” சவுல் தவறினதற்காக அவர்மீது நியாயத்தீர்ப்பைக் கூறும்படி சாமுவேலை யெகோவா ஏவினார். அவை இந்தப் புத்தகத்தின் பயனுள்ள வார்த்தைகள் எல்லாவற்றோடுங்கூட தெளிவாய் நினைவில் வைக்கப்பட வேண்டியவை. (உபா. 25:19) ‘பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம்’ என்ற இந்தப் பாடம் ஓசியா 6:​6, மீகா 6:​6-8, மாற்கு 12:33 ஆகியவற்றில் பல்வேறு சூழ்நிலைகளில் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லப்படுகிறது. (1 சா. 15:22) நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் குரலுக்கு முழுமையாகவும் பூரணமாகவும் கீழ்ப்படிவதன்மூலம், தேவாவியால் ஏவப்பட்ட இந்தப் பதிவிலிருந்து இன்று நாம் பயனடைவது இன்றியமையாதது! இரத்தத்தின் பரிசுத்தத் தன்மையை உணர்ந்து சட்டங்களுக்கு கீழ்ப்படிவதும் 1 சாமுவேல் 14:​32, 33-ல் (NW) நம்முடைய கவனத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. இரத்தத்தைச் சரியாக வடிக்காமல் மாம்சத்தைச் சாப்பிடுவது “யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவம்” செய்வதாக கருதப்பட்டது. அப்போஸ்தலர் 15:​28, 29-ல் தெளிவாக காட்டியிருக்கிறபடி, இது கிறிஸ்தவ சபைக்கும் பொருந்துகிறது.

29கடவுள் பரலோகத்திலிருந்து ஆட்சி புரிவதை நடைமுறைக்கு ஒத்துவராததாய் கருதிய ஒரு ஜனத்தின் பரிதபிக்கத்தக்க தவற்றை சாமுவேலின் முதல் புத்தகம் விளக்கிக் காட்டுகிறது. (1 சா. 8:​5, 19, 20; 10:​18, 19) மனித ஆட்சி எவ்வளவு பிரயோஜனமற்றது என்பதும் எவ்வளவு கேடு விளைவிக்கத்தக்கது என்பதும் தெள்ளத் தெளிவாகவும் தீர்க்கதரிசன முறையிலும் வருணிக்கப்பட்டுள்ளன. (8:​11-18; 12:​1-17) தொடக்கத்தில் சவுல், கடவுளுடைய ஆவியை பெற்ற பணிவுள்ள மனிதனாக காட்டப்படுகிறார் (9:21; 11:6), ஆனால் நீதியை நேசிப்பதிலிருந்து வழுவியபோதும், கடவுளில் அவர் வைத்திருந்த விசுவாசம் குறைந்தபோதும் நிதானம் தவறினார், அவருடைய இருதயத்திலும் வன்மம் குடிகொண்டது. (14:​24, 29, 44) அவர் தொடக்கத்தில் காட்டிய பக்திவைராக்கியம், பின்பு துணிகரமாக முந்திக்கொண்டு செயல்பட்டதாலும், கீழ்ப்படியாததாலும், கடவுளுக்குத் துரோகம் செய்ததாலும் பயனற்றுப் போனது. (1 சா. 13:9; 15:9; 28:7; எசே. 18:24) அவருடைய விசுவாசக் குறைவினால் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டது; அது, பொறாமைக்கும் பகைமைக்கும் கொலைக்கும் வழிநடத்தியது. (1 சா. 18:​9, 11; 20:33; 22:​18, 19) அவர் கடவுளுக்கும் ஜனங்களுக்கும் பயனற்றவராக வாழ்ந்தார், பயனற்றவராகவே இறந்தார். இது ‘முரண்டுபிடிக்கும்’ அனைவருக்குமே ஓர் எச்சரிக்கையாக அமைகிறது.​—2 பே. 2:​10-12, NW.

30எனினும், நல்ல உதாரணங்களையும் இப்பதிவு குறிப்பிடுகிறது. உதாரணமாக, உண்மையுள்ள சாமுவேலின் போக்கைக் கவனியுங்கள், இவர் மோசடி செய்யாமல், பட்சபாதமில்லாமல், லஞ்சம் வாங்காமல் தன் வாழ்நாள் முழுவதும் இஸ்ரவேலுக்கு சேவை செய்தார். (1 சா. 12:​3-5) இவர் தன் சிறுவயது முதற்கொண்டே கீழ்ப்படிவதற்குத் தயாராக இருந்தார் (3:5). மேலும் மதிப்பும் மரியாதையும் காட்டுபவராகவும் (3:​6-8), தன் கடமைகளை நிறைவேற்றுவதில் நம்பத்தகுந்தவராகவும் (3:15) இருந்தார். தனது ஒப்புக்கொடுத்தலிலும் பக்தியிலும் தடுமாறாதவராக இருந்ததோடு மட்டுமல்லாமல் (7:​3-6; 12:2), செவிகொடுத்துக் கேட்பதற்கு மனமுள்ளவராகவும் (8:21), யெகோவாவின் தீர்மானங்களைக் கடைப்பிடிக்க தயாராகவும் இருந்தார் (10:24). எவருக்கும் முகதாட்சண்யம் காட்டாமல் தீர்ப்பில் உறுதியுள்ளவராகவும் (13:13), கீழ்ப்படிதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் (15:22), ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் உறுதியுடனும் (16:​6, 11) இருந்தார். மேலும் அவர் மற்றவர்களிடமிருந்து நற்சான்றையும் பெற்றார். (2:26; 9:6) இளமையில் அவர் செய்த ஊழியம், இன்றுள்ள இளைஞரையும் ஊழியத்தை ஏற்கும்படி உற்சாகப்படுத்த வேண்டும். (2:​11, 18) அது மட்டுமல்லாமல் அவர் உயிரோடிருந்த நாளெல்லாம் ஊழியத்திலிருந்து ஓய்வுபெறாமல் தொடர்ந்து நிலைத்திருந்ததானது, முதிர்வயதின் காரணமாக சோர்வடைந்தவர்களை திடப்படுத்தவும் வேண்டும்.​—7:15.

31யோனத்தானின் மிகச் சிறந்த முன்மாதிரியும் உள்ளது. தான் சுதந்தரித்திருக்க வேண்டிய அரசப் பதவிக்குத் தாவீது அபிஷேகம் செய்யப்பட்டதால் அவர் மனக்கசப்படையவில்லை. மாறாக, அவர் தாவீதின் நல்ல பண்புகளை உணர்ந்து நட்புக்கு அடையாளமாக அவருடன் ஓர் உடன்படிக்கையும் செய்தார். இதைப் போன்ற சுயநலமற்ற தோழமைகள், இன்று யெகோவாவை உண்மையுடன் சேவிப்போர் மத்தியில் அதிக உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும்.​—23:​16-18.

32பெண்களுக்கு அன்னாள் ஒரு முன்மாதிரி. அவள் யெகோவாவின் வணக்க ஸ்தலத்திற்கு தன் கணவரோடுகூட தவறாமல் சென்றாள். அவள் ஜெபசிந்தைகொண்ட மனத்தாழ்மையுள்ள பெண். தான் நேர்ந்துகொண்டபடியே சொல் தவறாமல் தன் குமாரனை யெகோவாவின் சேவைக்கு அர்ப்பணித்தாள். இவ்வாறு யெகோவா செய்த தயவுக்காக இதயப்பூர்வமான நன்றியைக் காட்டினாள். அந்தக் குமாரன் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் பயனுள்ள சேவையில் முழுமையாய் ஈடுபடுவதைக் காணும் அருமையான பலன் அவளுக்குக் கிடைத்தது. (1:​11, 21-23, 27, 28) மேலும், அபிகாயிலின் முன்மாதிரியும் உள்ளது. பெண்மைக்குரிய பணிவையும் புத்திக்கூர்மையையும் அவள் காட்டினாள். இதனால் தாவீது அவளைப் புகழ்ந்தார். கடைசியில் அபிகாயில் தாவீதுக்கு மனைவியானாள்.​—25:​32-35.

33“யெகோவாவினால் அபிஷேகம்பண்ணப்பட்ட” சவுல், கேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார்; அவர் தாவீதை வனாந்தரத்தில் வேட்டையாடி பின்தொடர்ந்தார். அந்தச் சந்தர்ப்பங்களில் தாவீது இயற்றிய சங்கீதங்களில், யெகோவாவின்மீது அவர் கொண்டிருந்த அன்பு, உருக்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. (1 சா. 24:​6, NW; சங். 34:​7, 8; 52:8; 57:​1, 7, 9) இகழ்ந்து பேசிய கோலியாத்துக்கு அறைகூவல் விடும்போது எத்தகைய இருதயப்பூர்வ மதித்துணர்வுடன் தாவீது யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்தினார்! “நானோ . . . சேனைகளின் யெகோவாவினுடைய திருநாமத்திலே உன்னிடம் வருகிறேன். இன்றைய தினமே யெகோவா உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; . . . கடவுள் இஸ்ரவேலரோடே இருக்கிறார் என்று பூலோகத்தார் யாவரும் இதினால் அறிந்துகொள்வார்கள். யெகோவா இரட்சிப்பது பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் யெகோவாவினுடையது; அவர் உங்களை எங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்.” (1 சா. 17:​45-47, தி.மொ.) தைரியமும் பற்றுறுதியுமுள்ள தாவீதை யெகோவா ‘அபிஷேகம்பண்ணினார்.’ யெகோவாவே பூமி முழுவதற்கும் கடவுளாகவும் இரட்சிப்பின் ஒரே உண்மையான ஊற்றுமூலமாகவும் இருப்பதாக தாவீது மகிமைப்படுத்தினார். (2 சா. 22:​51, தி.மொ.) அஞ்சா நெஞ்சமுள்ள இவரது முன்மாதிரியை நாம் எப்போதும் பின்பற்றுவோமாக!

34கடவுளுடைய ராஜ்ய நோக்கங்களின் நிறைவேற்றத்தைப் பற்றி சாமுவேலின் முதலாம் புத்தகம் என்ன சொல்கிறது? இதுதான் இந்த பைபிள் புத்தகத்தின் சிறப்பம்சம்! எவ்வாறெனில், இப்பதிவிலேயே தாவீது நமக்கு அறிமுகமாகிறார். அவருடைய பெயர் “மிக நேசமானவர்” என பொருள்படலாம். யெகோவாவால் நேசிக்கப்பட்டு ‘அவருடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷனாக’ இஸ்ரவேலில் அரசனாயிருப்பதற்குத் தகுதியுள்ளவராக தாவீது தெரிந்தெடுக்கப்பட்டார். (1 சா. 13:14) இவ்வாறு அந்த ராஜ்யம், ஆதியாகமம் 49:​9, 10 பிரகாரம் யாக்கோபு ஆசீர்வதித்தபடியே யூதா கோத்திரத்துக்கு சென்றது; மேலும், அந்த அரசதிகாரம், சகல ஜனங்களின் கீழ்ப்படிதலுக்கும் உரியவரான அரசர் வரும்வரை யூதா கோத்திரத்தில் நிலைத்திருக்க வேண்டியிருந்தது.

35மேலும், தாவீதின் பெயர் அந்த ராஜ்ய வித்தோடு சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வித்தானவர் பெத்லகேமில் பிறந்தார், தாவீதின் வம்சத்தில் வந்தார். (மத். 1:​1, 6; 2:1; 21:​9, 15) அவரே மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து, “யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர்,” மேலும் “தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமா[னவர்]. (வெளி. 5:5; 22:16) ராஜ்ய வல்லமையில் ஆட்சி செய்பவராக, இந்த “தாவீதின் குமாரன்,” கடவுளுடைய எதிரிகளை அழிப்பதிலும், பூமி முழுவதிலும் யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதிலும் பிரசித்திபெற்ற தமது முற்பிதா காட்டிய மனவுறுதியையும் தைரியத்தையும் காட்டுவார். இந்த ராஜ்ய வித்தில்தான் நம் நம்பிக்கை எவ்வளவு உறுதியாய் உள்ளது!

[அடிக்குறிப்பு]

a கடைசி சிலுவைப் போரின் கதை, (ஆங்கிலம்) 1923, மேஜர் விவியன் கில்பர்ட், பக்கங்கள் 183-6.

[கேள்விகள்]

1. பொ.ச.மு. 1117-ல் இஸ்ரவேலின் தேசிய அமைப்பில் என்ன மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது, அதனால் வரவிருந்த விளைவென்ன?

2. ஒன்று சாமுவேல் புத்தகத்தை யார் எழுதினார்கள், அவர்களுடைய தகுதிகள் என்ன?

3. (அ) பைபிளில் ஒன்று சாமுவேல் எவ்வாறு ஒரு தனி புத்தகமாயிற்று? (ஆ) அது எப்பொழுது எழுதி முடிக்கப்பட்டது, என்ன காலப்பகுதியை உள்ளடக்குகிறது?

4. ஒன்று சாமுவேலில் உள்ள பதிவின் திருத்தமான தன்மை எவ்வாறு ஆதரிக்கப்பட்டுள்ளது?

5. ஒன்று சாமுவேலின் உண்மைத் தன்மைக்கு பைபிள் எழுத்தாளர்கள் எவ்வாறு சாட்சிபகருகின்றனர்?

6. ஒன்று சாமுவேல் நம்பகமானது என்பதை பைபிளின் வேறு என்ன அத்தாட்சி காட்டுகிறது?

7. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள சரித்திரம் இஸ்ரவேலில் எந்தத் தலைவர்களின் வாழ்நாளில் நடந்தவற்றை விளக்குகிறது?

8. சாமுவேலின் பிறப்பு மற்றும் அவர் ‘யெகோவாவின் பணிவிடைக்காரனான’ சூழ்நிலைகள் யாவை?

9. சாமுவேல் எவ்வாறு இஸ்ரவேலில் தீர்க்கதரிசியாகிறார்?

10. யெகோவா எவ்வாறு ஏலியின் குடும்பத்தின்மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிறார்?

11. உடன்படிக்கைப் பெட்டி மந்திரப் பொருள் இல்லை என்பது எவ்வாறு நிரூபிக்கப்படுகிறது?

12. சாமுவேல் சரியான வணக்கத்தை ஆதரிப்பதன் பலனாக உண்டாகும் ஆசீர்வாதங்கள் யாவை?

13. எவ்வாறு இஸ்ரவேலர் யெகோவாவை அரசராக வேண்டாமென்று புறக்கணிக்கின்றனர், இதனால் என்ன விளைவுகள் சம்பவிக்கும் என சாமுவேல் எச்சரிக்கிறார்?

14. சவுலுக்கு அரசதிகாரம் எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது?

15. எந்தத் துணிகரமான பாவம் சவுலின் தோல்விக்கு காரணமாகிறது?

16. முன்பின் யோசியாத சவுலின் ஆணையால் என்ன தொந்தரவுகள் ஏற்படுகின்றன?

17. சவுலின் மிக மோசமான இரண்டாவது பாவத்திற்கு பிறகு அவர் எவ்வகையில் மேலுமாக புறக்கணிக்கப்படுகிறார்?

18. எந்த அடிப்படையில் யெகோவா தாவீதைத் தெரிந்தெடுக்கிறார்?

19. யெகோவாவின் பெயரில் தாவீது பெற்ற முதல் வெற்றி எது?

20. தாவீதினிடம் யோனத்தானுக்கு இருந்த மனப்பான்மை எவ்வாறு சவுலின் மனப்பான்மையிலிருந்து வேறுபடுகிறது?

21. சவுலினிடமிருந்து தாவீது தப்பியோடும் சமயத்தில் நடந்த முக்கிய சம்பவங்கள் யாவை?

22. தாவீது எவ்வாறு யெகோவாவிடம் பற்றுறுதியையும் அவருடைய ஏற்பாட்டிற்கு மதிப்பையும் செயலில் காட்டுகிறார்?

23. அபிகாயில் தாவீதுடன் சமாதானம் செய்துகொண்டு, இறுதியில் அவருக்கு மனைவியாவது எவ்வாறு?

24. மறுபடியும் தாவீது எவ்வாறு சவுலை கொலை செய்யாமல் விடுகிறார்?

25. மிக மோசமான எந்த மூன்றாவது பாவத்தை சவுல் செய்கிறார்?

26. இஸ்ரவேலருடைய முதல் அரசனின் துன்பம் மிகுந்த ஆட்சி எவ்வாறு முடிவடைகிறது?

27. (அ) ஏலியும் சவுலும் எதில் தவறினார்கள்? (ஆ) எவ்விதங்களில் சாமுவேலும் தாவீதும் கண்காணிகளுக்கும் இளம் ஊழியர்களுக்கும் சிறந்த முன்மாதிரியாக உள்ளனர்?

28. கீழ்ப்படிதல் எவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது, ஒன்று சாமுவேலின் என்ன அறிவுரையை பைபிளின் மற்ற எழுத்தாளர்கள் பின்னால் திரும்பத் திரும்ப எடுத்துரைக்கின்றனர்?

29. இஸ்ரவேலரைப் பொறுத்தவரை, ஒரு ஜனத்தின் எந்தத் தவற்றினால் ஏற்பட்ட விளைவுகளை ஒன்று சாமுவேல் விளக்கிக் காட்டுகிறது, முரண்டு பிடிப்போருக்கு என்ன எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது?

30. தற்கால ஊழியர்கள் சாமுவேலின் என்ன நல்ல பண்புகளை வளர்த்துவரலாம்?

31. யோனத்தான் எதில் சிறந்த முன்மாதிரி?

32. அன்னாளிடத்திலும் அபிகாயிலிடத்திலும் என்ன சிறந்த பண்புகளைக் கவனிக்க வேண்டும்?

33. தாவீதின் பயமற்ற அன்பும் பற்றுறுதியும் என்ன போக்கைப் பின்தொடரும்படி நம்மை உந்துவிக்க வேண்டும்?

34. யெகோவாவின் ராஜ்ய நோக்கங்கள் எவ்வாறு தாவீதின் சம்பந்தமாக மேலும் வெளிப்படுகின்றன?

35. தாவீதின் பெயர் எவ்வாறு ராஜ்ய வித்தானவரோடு சம்பந்தப்பட்டதாயிற்று, தாவீதின் என்ன பண்புகளை அந்த வித்தானவர் இனியும் காட்டுவார்?