A2
இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பம்சங்கள்
1950-ல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. பிறகு 1961-ல் பரிசுத்த பைபிளின் புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் முழுமையாக வெளியிடப்பட்டது. அதுமுதல் 210-க்கும் அதிகமான மொழிகளில் கோடிக்கணக்கான வாசகர்கள் இந்தத் திருத்தமான, எளிமையான மொழிபெயர்ப்பினால் பயனடைந்திருக்கிறார்கள்.
இன்றுள்ள வாசகர்களின் இதயத்தைத் தொடும் மொழிநடையில் பைபிள் இருக்க வேண்டும் என்பது புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்புக் குழுவினருக்கு நன்றாகத் தெரியும். அதனால், பின்வரும் குறிக்கோள்களை மனதில் வைத்து இந்த மொழிபெயர்ப்பில் பொருத்தமான மொழிநடையையும் வார்த்தைகளையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
எளிமையான, நவீன மொழியைப் பயன்படுத்துவது. தமிழ் பைபிள்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகள் புரிந்துகொள்வதற்குக் கஷ்டமாக இருப்பதால் எளிமையான, நவீன வார்த்தைகளை இந்த மொழிபெயர்ப்பில் பயன்படுத்தியிருக்கிறோம். உதாரணத்துக்கு, “செவ்வையானவர்கள்” (நீதிமொழிகள் 2:21), “கர்த்தராகிய ஆண்டவர்” (ஆமோஸ் 9:8), “சேனைகளின் கர்த்தர்” (2 சாமுவேல் 5:10), “ஆயக்காரர்” (லூக்கா 7:29), “ராஜ்யபாரம்” (1 ராஜாக்கள் 16:23), “ஸ்தானாபதி” (ஏசாயா 37:14), “நாமம்” (எசேக்கியேல் 20:22) போன்ற வார்த்தைகளுக்குப் பதிலாக நவீன வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறோம்.
“வித்து” என்பதற்கான பழங்கால எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகள், செடியின் விதையையும் குறிக்கலாம், மனிதர்களின் வம்சத்தை அல்லது வாரிசையும் குறிக்கலாம். அதனால் இந்த பைபிள் மொழிபெயர்ப்பில், சூழமைவைப் பொறுத்து சரியான அர்த்தத்தைத் தரும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.—ஆதியாகமம் 3:15; எண்ணாகமம் 24:7; மத்தேயு 22:24; யோவான் 8:37.
பைபிள் வார்த்தைகளைத் தெளிவாக்குவது. சில பைபிள் மொழிபெயர்ப்புகளில், சில வார்த்தைகள் தவறான அர்த்தத்தைத் தருகின்றன. அதனால், அந்த வார்த்தைகள் இந்த மொழிபெயர்ப்பில் சரியான அர்த்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, இயேசு “சிலுவையில் அறையப்பட்டார்” என்று சில பைபிள் மொழிபெயர்ப்புகள் சொல்கின்றன. ஆனால், உண்மையில் அவர் சிலுவையில் அறையப்படவில்லை. அதனால் இந்த பைபிளில், “மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்டார்,” அல்லது “மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்பட்டார்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (மத்தேயு 20:19; 27:31, 35) அதேபோல், ‘திராட்சரசம்’ என்ற வார்த்தை “திராட்சமது” என்று சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.—நெகேமியா 5:15.
சிலசமயம், பைபிளில் ஒரு வார்த்தைக்கு நேரடியான அர்த்தமும் இருக்கும், அடையாள அர்த்தமும் இருக்கும். உதாரணத்துக்கு, இதயம் என்ற வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். 1 சாமுவேல் 28:5-ல் அது “இதயம்” என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், ஆதியாகமம் 20:6-ல் அது ‘எண்ணம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆதியாகமம் 45:18-ல் “கொழுமை” என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘அருமையான உணவு’ என்றும், ஆதியாகமம் 6:12-ல் ‘மாம்சம்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக “மனிதர்கள்” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த மொழிபெயர்ப்பின் மற்ற சிறப்பம்சங்கள்:
இந்த பைபிள் மொழிபெயர்ப்பில் வித்தியாசப்பட்ட அடிக்குறிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை:
“வேறு வார்த்தையில்” (வே.வா.) இந்த அடிக்குறிப்புகள் எபிரெயு, அரமேயிக், கிரேக்கு மொழிகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை வேறு விதமாகச் சொல்கின்றன, ஆனால் அந்த விஷயங்களின் அர்த்தம் மாறுவதில்லை.—ஆதியாகமம் 1:2-ல், “சக்தி” என்பதற்கான அடிக்குறிப்பு; யோசுவா 1:8, “வாசி.”
“அல்லது” இந்த அடிக்குறிப்புகள் எபிரெயு, அரமேயிக், கிரேக்கு மொழிகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை வேறு விதமாகச் சொல்கின்றன, ஆனால் அந்த விஷயங்களின் அர்த்தம் மாறுகிறது. மூலப் பதிவை இப்படியும் புரிந்துகொள்ளலாம் என்பதை இந்த அடிக்குறிப்பு காட்டுகிறது.—ஆதியாகமம் 21:6, “என்னோடு சேர்ந்து”; சகரியா 14:21, “கானானியன்.”
“நேரடி மொழிபெயர்ப்பு” (நே.மொ.) இந்த அடிக்குறிப்புகள் எபிரெயு, அரமேயிக், கிரேக்கு மொழிகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கின்றன அல்லது அவற்றின் அடிப்படை அர்த்தத்தைக் கொடுக்கின்றன.—ஆதியாகமம் 30:22, “தந்தார்”; யாத்திராகமம் 32:9, “பிடிவாதக்காரர்கள்.”
அர்த்தம், பின்னணித் தகவல் இந்த அடிக்குறிப்புகள் பெயர்களின் அர்த்தங்களையும் (ஆதியாகமம் 3:17, “ஆதாம்”; யாத்திராகமம் 15:23, “மாரா”), எடைகள் மற்றும் அளவுகளின் விவரங்களையும் (ஆதியாகமம் 6:15, “முழமுமாக”), சுட்டுப்பெயர்கள் குறிக்கிற நபர்களையும் (உபாகமம் 32:12, “அவனை”), இணைப்பிலும் சொல் பட்டியலிலும் நமக்கு உதவியாக இருக்கும் சில தகவல்களையும் குறிப்பிடுகின்றன.—ஆதியாகமம் 37:35, “கல்லறைக்குள்”; மத்தேயு 5:22, “கெஹென்னாவுக்குள்.”
“கடவுளுடைய புத்தகத்துக்கு ஓர் அறிமுகம்” என்ற ஆரம்பப் பகுதி, பைபிளிலுள்ள அடிப்படை போதனைகளைச் சுருக்கமாகச் சொல்கிறது. பைபிளின் கடைசி புத்தகத்துக்கு அடுத்ததாக, “பைபிள் புத்தகங்களின் பட்டியல்,” “பைபிள் வார்த்தைகளின் அட்டவணை,” “பைபிள் வார்த்தைகளின் சொல் பட்டியல்” ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. சில வார்த்தைகள் பைபிளில் என்ன அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வதற்கு “சொல் பட்டியல்” உதவியாக இருக்கிறது. இணைப்பு A-ல் உள்ள பகுதிகள்: “பைபிள் மொழிபெயர்ப்புக்கு உதவும் நியமங்கள்,” “ இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பம்சங்கள்,” “பைபிள் நமக்குக் கிடைத்த விதம்,” “எபிரெய வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்,” “கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்,” “பட்டியல்: யூதாவிலும் இஸ்ரவேலிலும் இருந்த தீர்க்கதரிசிகள் மற்றும் ராஜாக்கள்,” “இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்.” இணைப்பு B-ல் உள்ள பகுதிகள்: வரைபடங்கள், பட்டியல்கள் மற்றும் பைபிளை ஆராய்ந்து படிப்பவர்களுக்குத் தேவையான மற்ற தகவல்கள்.
ஒவ்வொரு பைபிள் புத்தகத்தின் ஆரம்பத்திலும் “முக்கியக் குறிப்புகள்” என்ற பகுதி இருக்கிறது. ஒவ்வொரு அதிகாரத்தின் முக்கியமான குறிப்புகளும், அவற்றோடு சம்பந்தப்பட்ட வசனங்களும் இதில் இருக்கின்றன. அந்தந்த பைபிள் புத்தகத்தின் சாராம்சத்தை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு பக்கத்திலும் இணைவசனங்களின் பட்டியல் இருக்கிறது.