அப்போஸ்தலரின் செயல்கள் 4:1-37

4  பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தபோது, குருமார்களும் ஆலயத்தின் காவல் தலைவரும் சதுசேயர்களும்+ அவர்களிடம் வந்தார்கள்.  அந்த அப்போஸ்தலர்கள் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டும், இயேசு உயிரோடு எழுப்பப்பட்டுவிட்டார் என வெளிப்படையாக அறிவித்துக்கொண்டும் இருந்ததைப் பார்த்து அவர்கள் எரிச்சலடைந்தார்கள்.+  அதனால், அவர்களைக் கைது செய்தார்கள்; ஏற்கெனவே சாயங்காலம் ஆகியிருந்ததால், அடுத்த நாள்வரை அவர்களைக் காவலில் வைத்தார்கள்;+  ஆனாலும், அந்த இரண்டு பேரும் பேசியதைக் கேட்ட நிறைய பேர் நம்பிக்கை வைத்தார்கள்; அப்படி நம்பிக்கை வைத்த ஆண்களின் எண்ணிக்கை சுமார் 5,000.+  அடுத்த நாள் யூதத் தலைவர்களும் பெரியோர்களும்* வேத அறிஞர்களும் எருசலேமில் கூடிவந்தார்கள்.  அவர்களோடு முதன்மை குரு அன்னாவும்+ காய்பாவும்+ யோவானும் அலெக்சந்தரும் முதன்மை குருவின் சொந்தக்காரர்கள் எல்லாரும் கூடிவந்தார்கள்.  பின்பு, பேதுருவையும் யோவானையும் தங்கள் நடுவில் நிறுத்தி, “எந்த அதிகாரத்தில், யாருடைய பெயரில் இதைச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.  அப்போது பேதுரு கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டு,+ “மக்களை ஆளுகிறவர்களே, பெரியோர்களே,  ஊனமாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட நல்ல காரியத்தைப்+ பற்றி இன்று எங்களை விசாரிக்கிறீர்கள்; இவனைக் குணமாக்கியது யாரென்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள். 10  நாசரேத்தூர் இயேசு கிறிஸ்துவின் பெயரில்தான்+ இந்த மனுஷன் குணமாகி உங்களுக்கு முன்னால் நிற்கிறான் என்பதை நீங்களும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் தெரிந்துகொள்ளுங்கள். இயேசுவை நீங்கள் மரக் கம்பத்தில் அறைந்து கொன்றீர்கள்,+ ஆனால் அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார்.+ 11  அந்த இயேசுதான், ‘கட்டிடம் கட்டுகிறவர்களாகிய உங்களால் கொஞ்சம்கூட மதிக்கப்படாத கல்லாக இருந்தபோதிலும் மூலைக்குத் தலைக்கல்லாக+ ஆகியிருக்கிறார்.’ 12  அவரைத் தவிர வேறு யாராலும் மீட்பு இல்லை;+ ஏனென்றால், நாம் மீட்புப் பெறும்படி பூமியிலுள்ள மனுஷர்களுக்கு அவருடைய பெயரைத் தவிர வேறெந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்”+ என்று சொன்னார். 13  பேதுருவும் யோவானும் கல்வியறிவு இல்லாத* சாதாரண ஆட்கள்+ என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்ததால், அந்த இரண்டு பேரும் பயமில்லாமல்* பேசியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள்+ என்பதையும் புரிந்துகொண்டார்கள். 14  குணமாக்கப்பட்ட மனிதன் அவர்களோடு நிற்பதைப் பார்த்ததால்,+ அவர்களுக்கு எதிராக எதுவும் பேச முடியவில்லை.+ 15  அதனால், நியாயசங்கத்தைவிட்டு வெளியே போகும்படி அவர்கள் இரண்டு பேருக்கும் கட்டளை கொடுத்தார்கள்; பின்பு, தங்களுக்குள் கூடிப்பேசி, 16  “இவர்களை என்ன செய்வது?+ இவர்கள் மூலம் நிஜமாகவே ஒரு பெரிய அற்புதம் நடந்திருக்கிறது, எருசலேமில் குடியிருக்கிற எல்லாருக்கும் இது தெரியும்,+ நம்மால் இதை மறுக்க முடியாது. 17  ஆனாலும், இந்த விஷயம் மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாகப் பரவாமல் இருப்பதற்கு, இனிமேல் யாரிடமும் இந்தப் பெயரில் பேசக் கூடாதென்று இவர்களை மிரட்டி வைப்போம்”+ என்று சொல்லிக்கொண்டார்கள். 18  பின்பு இரண்டு பேரையும் கூப்பிட்டு, இயேசுவின் பெயரில் எதையும் பேசவோ கற்பிக்கவோ கூடாது என்று கட்டளையிட்டார்கள். 19  அதற்கு பேதுருவும் யோவானும், “கடவுள் சொல்வதைக் கேட்காமல் நீங்கள் சொல்வதைக் கேட்பது கடவுளுக்கு முன்னால் சரியாக இருக்குமா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 20  எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது”+ என்று சொன்னார்கள். 21  அவர்களோ, மறுபடியும் அந்த இரண்டு பேரையும் மிரட்டிவிட்டு, விடுதலை செய்தார்கள்; ஏனென்றால், அவர்களைத் தண்டிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அதோடு, நடந்த அற்புதத்தைக் குறித்து கடவுளை மகிமைப்படுத்திக்கொண்டிருந்த மக்கள் எல்லாரையும் நினைத்துப் பயந்தார்கள்.+ 22  அற்புதமாகக் குணமடைந்த அந்த மனிதன் 40 வயதைத் தாண்டியவனாக இருந்தான். 23  அவர்கள் விடுதலையான பின்பு மற்ற சீஷர்களிடம் போய், முதன்மை குருமார்களும் பெரியோர்களும் தங்களிடம் சொன்னதைத் தெரிவித்தார்கள். 24  அவர்கள் எல்லாரும் அதைக் கேட்டபோது, ஒருமனதோடு குரலை உயர்த்தி, கடவுளிடம், “உன்னதப் பேரரசரே, நீங்கள்தான் பரலோகத்தையும் பூமியையும் கடலையும் அவற்றில் இருக்கிற எல்லாவற்றையும் படைத்தீர்கள்.+ 25  எங்களுடைய மூதாதையாகவும் உங்களுடைய ஊழியராகவும் இருந்த தாவீதுக்கு+ உங்கள் சக்தியைக் கொடுத்து, ‘தேசங்கள் ஏன் கொந்தளித்தன? மக்கள் ஏன் வீணான காரியங்களை யோசிக்கிறார்கள்? 26  யெகோவாவுக்கும்* அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கும்* விரோதமாக பூமியின் ராஜாக்கள் அணிவகுத்து நின்றார்கள், ஆட்சியாளர்கள் ஒன்றுகூடி வந்தார்கள்’+ என்று சொன்னீர்கள். 27  அதன்படியே, உங்களால் அபிஷேகம் செய்யப்பட்ட+ உங்கள் பரிசுத்த ஊழியரான இயேசுவுக்கு எதிராக ஏரோதுவும் பொந்தியு பிலாத்துவும்+ இஸ்ரவேல் மக்களும் மற்ற தேசத்து மக்களும் இந்த நகரத்தில் ஒன்றுகூடினார்கள். 28  உங்கள் வல்லமையாலும் நோக்கத்தாலும் நீங்கள் முன்கூட்டியே தீர்மானித்த விஷயங்களை நிறைவேற்றினார்கள்.+ 29  இப்போதும் யெகோவாவே,* அவர்களுடைய மிரட்டல்களைக் கவனியுங்கள்; உங்கள் வார்த்தையை முழு தைரியத்தோடு பேசிக்கொண்டே இருக்க உங்களுடைய ஊழியர்களுக்கு உதவி செய்யுங்கள். 30  உங்கள் கையை நீட்டி உங்களுடைய பரிசுத்த ஊழியராகிய இயேசுவின் பெயரில்+ நோயாளிகள் குணமாகும்படி செய்யுங்கள், அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்யுங்கள்”+ என்று மன்றாடினார்கள். 31  அவர்கள் மன்றாடி முடித்தபோது,* அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது; அவர்கள் எல்லாரும் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டு,+ அவருடைய வார்த்தையைத் தைரியமாகப் பேச ஆரம்பித்தார்கள்.+ 32  நம்பிக்கை வைத்த ஏராளமான மக்கள் ஒரே இதயத்தோடும் ஒரே மனதோடும் இருந்தார்கள்; ஒருவரும் தங்களுடைய உடைமைகளில் ஒன்றைக்கூட தங்களுடையது என்று சொல்லிக்கொள்ளவில்லை; எல்லாவற்றையும் பொதுவாக வைத்துப் பயன்படுத்தினார்கள்.+ 33  அதோடு, எஜமானாகிய இயேசு உயிரோடு எழுந்ததைப் பற்றி+ அப்போஸ்தலர்கள் வலிமைமிக்க விதத்தில்* சாட்சி கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்; கடவுளுடைய அளவற்ற கருணை அவர்கள் எல்லாருக்கும் மிகுதியாகக் கிடைத்தது. 34  சொல்லப்போனால், அவர்கள் எல்லாருடைய தேவையும் பூர்த்தி செய்யப்பட்டது;+ நிலங்களையோ வீடுகளையோ வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து, 35  அப்போஸ்தலர்களிடம் கொடுத்தார்கள்.+ அது அவரவர் தேவைக்கு ஏற்றபடி எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.+ 36  சீப்புரு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்ற லேவியர் ஒருவர் இருந்தார்; அப்போஸ்தலர்கள் இவரை பர்னபா+ என்றும் கூப்பிட்டார்கள். “ஆறுதலின் மகன்” என்பதுதான் அதன் அர்த்தம். 37  இவரும் தன் நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து அப்போஸ்தலர்களிடம் கொடுத்தார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்களும்.”
அவர்களுக்குப் படிப்பறிவே இல்லை என்று அர்த்தம் கிடையாது. ரபீக்களுடைய பள்ளிகளில் படிக்காததைத்தான் இது குறிக்கிறது.
வே.வா., “தைரியமாக.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “அவருடைய கிறிஸ்துவுக்கும்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “உருக்கமாக ஜெபம் செய்த பின்பு.”
வே.வா., “மிகவும் திறமையாக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா