அப்போஸ்தலரின் செயல்கள் 7:1-60

7  ஆனால் தலைமைக் குரு, “இதெல்லாம் உண்மையா?” என்று அவரிடம் கேட்டார்.  அதற்கு ஸ்தேவான், “சகோதரர்களே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய மூதாதையான ஆபிரகாம் ஆரானில் குடியேறுவதற்கு+ முன்னால் மெசொப்பொத்தாமியாவில் இருந்தபோது மகிமையான கடவுள் அவர்முன் தோன்றி,  ‘நீ உன் தேசத்தையும் உன் சொந்தக்காரர்களையும்விட்டு நான் காட்டப்போகிற தேசத்துக்கு வா’+ என்று சொன்னார்.  அதனால், ஆபிரகாம் கல்தேயர்களுடைய தேசத்தைவிட்டு ஆரானில் குடியேறினார். அவருடைய அப்பா இறந்த பின்பு,+ நீங்கள் இப்போது குடியிருக்கும் இந்தத் தேசத்தில் கடவுள் அவரைக் குடியேற வைத்தார்.+  இருந்தாலும், இங்கே அவருக்கு எந்தவொரு நிலத்தையும் சொத்தாகக் கொடுக்கவில்லை, ஓரடி நிலத்தைக்கூட கொடுக்கவில்லை; ஆனால் அவருக்குக் குழந்தை இல்லாதபோதே, இந்தத் தேசத்தை அவருக்கும் அவருக்குப் பிறகு அவருடைய சந்ததிக்கும் சொத்தாகக் கொடுக்கப்போவதாய் வாக்குறுதி தந்தார்.+  அதுமட்டுமல்ல, அவருடைய சந்ததியில் வருகிறவர்கள் வேறொரு தேசத்தில் அன்னியர்களாகக் குடியிருப்பார்கள் என்றும், அந்தத் தேசத்து மக்கள் 400 வருஷங்களுக்கு அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள் என்றும் சொன்னார்.+  அதோடு, ‘அவர்களை அடிமைப்படுத்திய அந்தத் தேசத்தை நான் தண்டிப்பேன்’+ என்றும், ‘அதன் பின்பு அவர்கள் அங்கிருந்து வெளியே வந்து, இந்த இடத்தில் எனக்குப் பரிசுத்த சேவை செய்வார்கள்’+ என்றும் சொன்னார்.  அதோடு, ஆபிரகாமுடன் விருத்தசேதன ஒப்பந்தத்தைக் கடவுள் செய்தார்;+ அதன்படி, ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றபோது+ எட்டாம் நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்தார்;+ ஈசாக்குக்கு யாக்கோபு பிறந்தார்,* யாக்கோபுக்கு 12 வம்சத் தலைவர்கள் பிறந்தார்கள்.  இந்த வம்சத் தலைவர்கள் யோசேப்புமேல் பொறாமைப்பட்டு+ அவரை எகிப்தியர்களிடம் விற்றார்கள்;+ ஆனாலும், கடவுள் அவரோடு இருந்தார்;+ 10  அவருக்கு வந்த எல்லா கஷ்டங்களிலிருந்தும் அவரை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்னால் ஞானமுள்ளவராக இருப்பதற்கும் அவருடைய பிரியத்தைப் பெறுவதற்கும் உதவி செய்தார். எகிப்து தேசத்தையும் தன்னுடைய வீடு முழுவதையும் நிர்வகிப்பதற்காக பார்வோன் அவரை நியமித்தார்.+ 11  அந்தச் சமயத்தில் எகிப்து, கானான் ஆகிய தேசங்கள் முழுவதிலும் பஞ்சம் ஏற்பட்டது, அது மிகக் கொடியதாக இருந்தது; அதனால், நம்முடைய முன்னோர்களுக்குச் சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லை.+ 12  ஆனால், எகிப்தில் உணவுப் பொருள்கள்* கிடைப்பதாக யாக்கோபு கேள்விப்பட்டபோது, நம் முன்னோர்களை முதல் தடவையாக அங்கே அனுப்பினார்.+ 13  இரண்டாவது தடவை அவர்கள் அங்கே போனபோது, தான் யார் என்பதை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குச் சொன்னார்; அதன் பின்பு, யோசேப்பின் குடும்பத்தைப் பற்றி பார்வோனுக்குத் தெரியவந்தது.+ 14  அதனால், யோசேப்பு தன்னுடைய அப்பா யாக்கோபையும் தன்னுடைய சொந்தக்காரர்கள் எல்லாரையும் கானானிலிருந்து வரச் சொல்லி செய்தி அனுப்பினார்;+ அவர்கள் 75 பேர் இருந்தார்கள்.+ 15  யாக்கோபு எகிப்துக்குப் போனார்,+ பின்பு அங்கே இறந்துபோனார்;+ நம் முன்னோர்களும் அங்கேயே இறந்துபோனார்கள்.+ 16  அவர்களுடைய எலும்புகள் சீகேமுக்குக் கொண்டுபோகப்பட்டன; அங்கே ஏமோரின் மகன்களிடம் ஆபிரகாம் வெள்ளிக் காசுகளை விலையாகக் கொடுத்து வாங்கிய ஒரு கல்லறையில் அவை வைக்கப்பட்டன.+ 17  ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் காலம் நெருங்கியபோது நம் மக்கள் எகிப்தில் ஏராளமாகப் பெருகியிருந்தார்கள். 18  பின்பு, யோசேப்பைப் பற்றித் தெரியாத வேறொருவன் எகிப்துக்கு ராஜாவானான்.+ 19  நம் இனத்தாரிடம் அவன் தந்திரமாக நடந்துகொண்டு, அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளைச் சாகடிப்பதற்காக அவர்களை வெளியே விட்டுவிடச்சொல்லிக் கட்டாயப்படுத்தினான்.+ 20  அந்தச் சமயத்தில்தான் மோசே பிறந்தார்; அவர் தெய்வீக அழகுள்ளவராக* இருந்தார்; தன்னுடைய அப்பாவின் வீட்டில் மூன்று மாதங்களுக்கு வளர்க்கப்பட்டார்.+ 21  ஆனால், அவர் வெளியே விடப்பட்டபோது,+ பார்வோனின் மகள் அவரை எடுத்துக்கொண்டுபோய்த் தன் சொந்த மகனாக வளர்த்தாள்.+ 22  இதனால், மோசே எகிப்தியர்களுடைய எல்லா துறைகளிலும்* பயிற்சி பெற்று, சொல்லிலும் செயலிலும் வல்லவராக ஆனார்.+ 23  அவருக்கு 40 வயதானபோது, தன்னுடைய சகோதரர்களான இஸ்ரவேலர்களின் நிலைமையைப் பார்த்துவிட்டு வர வேண்டுமென்ற எண்ணம் அவர் உள்ளத்தில் எழுந்தது.*+ 24  அவர்களில் ஒருவனை ஓர் எகிப்தியன் அநியாயமாக நடத்துவதைப் பார்த்தபோது, உடனடியாக உதவிக்குப் போய், அவனுக்காக அந்த எகிப்தியனைக் கொன்றுபோட்டு பழிவாங்கினார். 25  தன்னுடைய சகோதரர்களைத் தன் மூலம் கடவுள் காப்பாற்றுவார் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று அவர் நினைத்தார், ஆனால் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. 26  அடுத்த நாள், அவர்களில் இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தபோது, ‘நீங்கள் சகோதரர்கள்தானே? ஏன் ஒருவரை ஒருவர் மோசமாக நடத்துகிறீர்கள்?’ என்று சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்த முயற்சி செய்தார். 27  ஆனால், சக இஸ்ரவேலனை மோசமாக நடத்தியவன் அவரைத் தள்ளிவிட்டு, ‘உன்னை எங்களுக்குத் தலைவனாகவும் நீதிபதியாகவும் நியமித்தது யார்? 28  நேற்று நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல் என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயா?’ என்றான். 29  இதைக் கேட்டதும் மோசே அங்கிருந்து தப்பித்து, மீதியான் தேசத்துக்குப் போய் அன்னியராகக் குடியிருந்தார்; அங்கே அவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்.+ 30  40 வருஷங்களுக்குப் பின்பு, சீனாய் மலைக்குப் பக்கத்திலிருந்த வனாந்தரத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த முட்புதர் நடுவில் ஒரு தேவதூதர் அவருக்குத் தோன்றினார்.+ 31  மோசே அந்தக் காட்சியைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார். அதைக் கூர்ந்து கவனிப்பதற்காக அதன் பக்கத்தில் போனபோது, யெகோவா* அவரிடம், 32  ‘நான் உன்னுடைய முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் கடவுளாக இருக்கிறேன்’+ என்று சொன்னதைக் கேட்டு நடுநடுங்கிப்போனார். அதன் பின்பு, அந்த முட்புதரைக் கூர்ந்து கவனிக்க அவருக்குத் தைரியம் வரவில்லை. 33  அப்போது யெகோவா* அவரிடம், ‘உன் செருப்பைக் கழற்று, ஏனென்றால் நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது. 34  எகிப்தில் என்னுடைய மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நான் கண்ணால் பார்த்தேன், அவர்கள் வேதனையில் குமுறுவதைக் கேட்டேன்;+ அதனால், அவர்களைக் காப்பாற்றுவதற்காக இறங்கி வந்திருக்கிறேன். இப்போது உன்னை எகிப்துக்கு அனுப்பப்போகிறேன்’ என்று சொன்னார். 35  இந்த மோசேயிடம்தான், ‘உன்னைத் தலைவனாகவும் நீதிபதியாகவும் நியமித்தது யார்?’+ என்று அந்த மக்கள் கேட்டு, அவரை ஒதுக்கித்தள்ளினார்கள். ஆனால், முட்புதரில் தோன்றிய தேவதூதர் மூலம் கடவுள் அவரைத்தான் தலைவராகவும் விடுவிக்கிறவராகவும் அனுப்பி வைத்தார்.+ 36  மோசேதான் அந்த மக்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்;+ அந்தத் தேசத்திலும் செங்கடலிலும்+ 40 வருஷங்கள் வனாந்தரத்திலும்+ நிறைய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்.+ 37  ‘கடவுள் உங்களுடைய சகோதரர்களுக்குள் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக நியமிப்பார்’+ என்று இஸ்ரவேல் மக்களிடம் சொன்னவரும் அதே மோசேதான். 38  வனாந்தரத்தில் மக்கள் ஒரு சபையாகக் கூடிவந்தபோது அவர்களோடு இருந்தவர் அவர்தான்; சீனாய் மலையில் பேசிய தேவதூதரோடும் நம்முடைய முன்னோர்களோடும் இருந்தவர் அவர்தான்.+ அழியாத பரிசுத்த வார்த்தைகளை நமக்குக் கொடுப்பதற்காக அவற்றைப் பெற்றுக்கொண்டவரும் அவர்தான்.+ 39  ஆனால், நம்முடைய முன்னோர்கள் அவருக்குக் கீழ்ப்படியவில்லை; அவரை உதறித்தள்ளிவிட்டு,+ மனதளவில் எகிப்துக்கே திரும்பிப் போனார்கள்.+ 40  அவர்கள் ஆரோனிடம், ‘எகிப்திலிருந்து நம்மைக் கூட்டிக்கொண்டு வந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியவில்லை; அதனால் நம்மை வழிநடத்துவதற்குத் தெய்வங்களைச் செய்துகொடுங்கள்’ என்று சொன்னார்கள்.+ 41  அந்தச் சமயத்தில்தான் அவர்கள் ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்து, அதற்குப் பலி செலுத்தினார்கள். தங்கள் கைகளால் செய்த அந்தச் சிலையை வைத்துக் கொண்டாடி மகிழ ஆரம்பித்தார்கள்.+ 42  இதனால், கடவுள் அவர்களிடமிருந்து விலகி, வானத்தின் படையை* வணங்கும்படி அவர்களை விட்டுவிட்டார்.+ இதைப் பற்றித்தான் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில், ‘இஸ்ரவேல் ஜனங்களே, 40 வருஷங்கள் வனாந்தரத்தில் அலைந்தபோது பலிகளையும் காணிக்கைகளையும் எனக்காகவா கொடுத்தீர்கள்? 43  மோளோகின் கூடாரத்தையும்+ ரேப்பான் தெய்வத்தின் நட்சத்திரத்தையும்தானே சுமந்துகொண்டு போனீர்கள்; வணங்குவதற்காக இவற்றைத்தான் உருவங்களாகச் செய்துகொண்டீர்கள்; அதனால், நான் உங்களை பாபிலோனுக்கு அப்பால் நாடுகடத்துவேன்’+ என்று எழுதப்பட்டிருக்கிறது. 44  வனாந்தரத்தில் நம்முடைய முன்னோர்களுக்குச் சாட்சிக் கூடாரம் இருந்தது; தரிசனத்தில் காட்டப்பட்ட மாதிரியின்படி அந்தக் கூடாரத்தை அமைக்க வேண்டுமென மோசேக்குக் கடவுள் கட்டளை கொடுத்திருந்தார். அதன்படியே அந்தக் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.+ 45  நம்முடைய முன்னோர்கள் அந்தக் கூடாரத்தைப் பெற்றுக்கொண்டு, தங்கள் கண்முன் கடவுள் துரத்திவிட்ட மக்களுடைய தேசத்துக்குள் யோசுவாவோடு வந்தபோது அதைக் கொண்டுவந்தார்கள்;+ தாவீதின் நாட்கள்வரை அந்தக் கூடாரம் அங்கேயே இருந்தது. 46  தாவீது கடவுளுடைய பிரியத்தைப் பெற்றார்; அதனால், யாக்கோபின் கடவுளுக்காக ஒரு வீட்டைக் கட்டும் பாக்கியத்தைத் தரும்படி அவர் வேண்டிக்கொண்டார்.+ 47  ஆனால், சாலொமோன்தான் கடவுளுக்காக ஒரு ஆலயத்தை* கட்டினார்.+ 48  ஆனாலும், கைகளால் கட்டப்பட்ட ஆலயங்களில்* உன்னதமான கடவுள் குடியிருப்பதில்லை.+ 49  ‘பரலோகம் என் சிம்மாசனம்,+ பூமி என் கால்மணை.+ அப்படியிருக்கும்போது, எனக்காக எப்படிப்பட்ட ஆலயத்தை* கட்டுவீர்கள்? நான் தங்குவதற்கு எப்படிப்பட்ட இடத்தைத் தருவீர்கள்? 50  இவை எல்லாவற்றையும் என் கையால்தானே படைத்தேன்?+ என்று யெகோவா* கேட்கிறார்’ என ஒரு தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறாரே. 51  பிடிவாதக்காரர்களே, இதயங்களிலும் காதுகளிலும் விருத்தசேதனம் செய்யாதவர்களே, கடவுளுடைய சக்தியை நீங்கள் எப்போதும் எதிர்க்கிறீர்கள்; உங்கள் முன்னோர்கள் செய்தது போலவே நீங்களும் செய்கிறீர்கள்.+ 52  எந்தத் தீர்க்கதரிசியைத்தான் உங்களுடைய முன்னோர்கள் துன்புறுத்தாமல் இருந்தார்கள்?+ நீதியுள்ளவருடைய வருகையைப் பற்றி முன்கூட்டியே அறிவித்த ஆட்களை அவர்கள் கொன்றுபோட்டார்கள்;+ இப்போது நீங்கள் அந்த நீதியுள்ளவரைக் காட்டிக்கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள்;+ 53  தேவதூதர்கள் மூலம் திருச்சட்டத்தைப் பெற்றிருந்தும்+ அதைக் கடைப்பிடிக்காமல் விட்டுவிட்டீர்கள்” என்று சொன்னார். 54  இவற்றையெல்லாம் கேட்டபோது அவர்களுடைய உள்ளம் கொதித்தது; அவரைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தார்கள். 55  அவரோ, கடவுளுடைய சக்தியால் நிறைந்தவராக, வானத்தை உற்றுப் பார்த்து, கடவுளுடைய மகிமையையும் அவருடைய வலது பக்கத்தில் இயேசு நிற்பதையும் பார்த்தார்.+ 56  “அதோ! வானம் திறந்திருப்பதையும் மனிதகுமாரன்+ கடவுளுடைய வலது பக்கத்தில் நிற்பதையும் பார்க்கிறேன்”+ என்று சொன்னார். 57  அதைக் கேட்டதும் அவர்கள் தொண்டைகிழிய கத்தியபடி, தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டு, ஒன்றுசேர்ந்து அவர்மேல் பாய்ந்தார்கள். 58  பின்பு, நகரத்துக்கு வெளியே அவரைக் கொண்டுபோய், அவர்மேல் கல்லெறிய ஆரம்பித்தார்கள்.+ அவருக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்கள்+ தங்களுடைய மேலங்கிகளை சவுல் என்ற இளம் மனிதனுடைய காலடியில் வைத்தார்கள்.+ 59  ஸ்தேவான்மேல் அவர்கள் கல்லெறிந்துகொண்டிருந்தபோது அவர், “எஜமானாகிய இயேசுவே, என் உயிரை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். 60  அதன் பின்பு மண்டிபோட்டு, “யெகோவாவே,* இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதீர்கள்”+ என்று சத்தமாகச் சொல்லி உயிர்விட்டார்.*

அடிக்குறிப்புகள்

அல்லது, “ஈசாக்கு அதேபோல் யாக்கோபுக்குச் செய்தார்.”
வே.வா., “தானியம்.”
வே.வா., “கடவுளுடைய பார்வையில் அழகாக.”
நே.மொ., “ஞானத்திலும்.”
வே.வா., “பார்த்துவிட்டு வரவேண்டும் என்று தீர்மானித்தார்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
அதாவது, “சூரிய, சந்திர, நட்சத்திரங்களை.”
நே.மொ., “வீட்டை.”
நே.மொ., “வீடுகளில்.”
நே.மொ., “வீட்டை.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “தூங்கிவிட்டார்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா