ஆகாய் 1:1-15
1 தரியு ராஜா ஆட்சி செய்த இரண்டாம் வருஷம், ஆறாம் மாதம், முதலாம் நாள் ஆகாய்* தீர்க்கதரிசிக்கு+ யெகோவா ஒரு செய்தியைச் சொன்னார். அதை சலாத்தியேலின் மகனாகிய யூதாவின் ஆளுநர் செருபாபேலுக்கும்,+ யோசதாக்கின் மகனாகிய தலைமைக் குரு யோசுவாவுக்கும் சொல்லச் சொன்னார். அந்தச் செய்தி இதுதான்:
2 “‘“யெகோவாவின் ஆலயத்தைக் கட்ட* இன்னும் நேரம் வரவில்லை” என்று இந்த ஜனங்கள் சொல்கிறார்கள்’+ எனப் பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.”
3 மறுபடியும் ஆகாய் தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா இப்படிச் சொன்னார்:+
4 “என்னுடைய வீடு இடிந்து கிடக்கும்போது நீங்கள் மட்டும் ஆடம்பரமான* வீடுகளில் குடியிருப்பது சரியா?+
5 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்கள் வழிகளைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள்.
6 நீங்கள் நிறைய விதைக்கிறீர்கள், ஆனால் கொஞ்சமாகத்தான் அறுக்கிறீர்கள்.+ சாப்பிடுகிறீர்கள், ஆனால் பசியோடுதான் இருக்கிறீர்கள். குடிக்கிறீர்கள், ஆனால் தாகத்தோடுதான் இருக்கிறீர்கள். உடுத்துகிறீர்கள், ஆனால் குளிரில் நடுங்கிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். செய்த வேலைக்குக் கூலி வாங்குகிறீர்கள், ஆனால் ஓட்டைகள் நிறைந்த பையில்தான் அதைப் போடுகிறீர்கள்.’”
7 “‘உங்கள் வழிகளைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
8 ‘மலைகளுக்குப் போய், மரங்களை வெட்டிக்கொண்டு வந்து,+ என்னுடைய ஆலயத்தைக் கட்டுங்கள்.+ அந்த ஆலயத்தைப் பார்த்து நான் சந்தோஷப்படுவேன், அது எனக்குப் புகழ் சேர்க்கும்’+ என்று யெகோவா சொல்கிறார்.”
9 “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் நிறைய விளைச்சலை எதிர்பார்த்தீர்கள், ஆனால் கொஞ்சம்தான் கிடைத்தது. கிடைத்ததை உங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்தீர்கள், ஆனால் நான் அதை ஊதித்தள்ளினேன்.+ உங்களுக்கு ஏன் இந்தக் கதி என்று தெரியுமா? இடிந்து கிடக்கும் என் வீட்டைக் கவனிக்காமல் உங்கள் வீட்டை மட்டும் ஓடி ஓடி கவனித்துக்கொள்கிறீர்களே.+
10 அதனால்தான் வானம் பனியைப் பொழியவில்லை, பூமி விளைச்சலைத் தரவில்லை.
11 நான் பூமியிலும் மலைகளிலும் பஞ்சத்தை வர வைத்தேன். தானியத்துக்கும் எண்ணெய்க்கும் புதிய திராட்சமதுவுக்கும் நிலத்தில் விளையும் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்படி செய்தேன். மனுஷர்களையும் மிருகங்களையும் தவிக்க வைத்தேன். உங்கள் உழைப்பெல்லாம் வீணாகிப்போகும்படி செய்தேன்.’”
12 அதன்பின், சலாத்தியேலின்+ மகன் செருபாபேலும்,+ யோசதாக்கின்+ மகனும் தலைமைக் குருவுமான யோசுவாவும், எல்லா ஜனங்களும் தங்கள் கடவுளான யெகோவா சொன்னதைக் கேட்டு நடந்தார்கள். யெகோவா அனுப்பிய ஆகாய் தீர்க்கதரிசி சொன்னதையும் கேட்டு, யெகோவாவுக்குப் பயந்து நடக்க ஆரம்பித்தார்கள்.
13 அப்போது, யெகோவாவின் தூதுவரான ஆகாய் யெகோவாவின் கட்டளைப்படியே ஜனங்களிடம் போய், “‘நான் உங்களோடு இருக்கிறேன்’+ என்று யெகோவா சொல்கிறார்” என அறிவித்தார்.
14 சலாத்தியேலின் மகனும் யூதாவின் ஆளுநருமான செருபாபேலின்+ மனதையும், யோசதாக்கின் மகனும் தலைமைக் குருவுமான யோசுவாவின்+ மனதையும், ஜனங்கள் எல்லாருடைய மனதையும் யெகோவா தூண்டினார்.+ உடனே அவர்கள், தங்களுடைய கடவுளான பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள்.+
15 அந்த வேலை, தரியு ராஜா ஆட்சி செய்த இரண்டாம் வருஷம், ஆறாம் மாதம், 24-ஆம் நாளில் ஆரம்பித்தது.+
அடிக்குறிப்புகள்
^ அர்த்தம், “பண்டிகை நாளில் பிறந்தவர்.”
^ வே.வா., “திரும்பக் கட்ட.”
^ வே.வா., “மரவேலைப்பாடுகள் செய்யப்பட்ட.”