ஆதியாகமம் 16:1-16

16  ஆபிராமின் மனைவி சாராய்க்குக் குழந்தை இல்லை.+ அவளுக்கு எகிப்தைச் சேர்ந்த ஆகார்+ என்ற வேலைக்காரி இருந்தாள்.  அதனால் சாராய் ஆபிராமிடம், “யெகோவா எனக்குக் குழந்தை பாக்கியம் தரவில்லை. அதனால், என் வேலைக்காரியை உங்களுக்குக் கொடுக்கிறேன். தயவுசெய்து அவள் மூலம் எனக்குக் குழந்தை பாக்கியம் கொடுங்கள்”+ என்று சொன்னாள். ஆபிராமும் சாராயின் பேச்சைக் கேட்டார்.  ஆபிராம் கானான் தேசத்துக்கு வந்து 10 வருஷங்கள் ஆகியிருந்த சமயத்தில்தான், சாராய் தன்னுடைய எகிப்திய வேலைக்காரி ஆகாரைத் தன் கணவன் ஆபிராமுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.  ஆபிராமினால் ஆகார் கர்ப்பமானாள்; தான் கர்ப்பமாக இருப்பதை அவள் தெரிந்துகொண்டபோது தன்னுடைய எஜமானியைக் கேவலமாகப் பார்க்க ஆரம்பித்தாள்.  அப்போது சாராய் ஆபிராமிடம், “உங்களால்தான் எனக்கு இந்த நிலைமை. என் வேலைக்காரியை உங்களுக்குக் கொடுத்ததே நான்தான். ஆனால், அவள் எப்போது கர்ப்பமானாளோ அப்போதிலிருந்து என்னைக் கேவலமாகப் பார்க்கிறாள். தப்பு என்மேல் இருக்கிறதா, உங்கள்மேல் இருக்கிறதா என்பதை யெகோவாவே முடிவுசெய்யட்டும்” என்று சொன்னாள்.  அதற்கு ஆபிராம், “சாராய், உன் வேலைக்காரிக்கு நீதான் எஜமானி. உனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்” என்று சொன்னார். அதன்பின், ஆகாரை சாராய் நோகடித்தாள்.* அதனால், ஆகார் சாராயிடமிருந்து ஓடிப்போனாள்.  பிற்பாடு, வனாந்தரத்திலுள்ள நீரூற்றுக்குப் பக்கத்தில், அதாவது ஷூருக்குப்+ போகும் வழியிலுள்ள நீரூற்றுக்குப் பக்கத்தில், யெகோவாவின் தூதர் அவளைச் சந்தித்தார்.  அவர் ஆகாரிடம், “சாராயின் வேலைக்காரப் பெண்ணாகிய ஆகாரே, நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “என் எஜமானி சாராயிடமிருந்து ஓடிப்போகிறேன்” என்று சொன்னாள்.  அப்போது யெகோவாவின் தூதர் அவளிடம், “நீ உன் எஜமானியிடம் திரும்பிப் போ; அவளுக்கு அடங்கி நட” என்றார். 10  அதுமட்டுமல்ல, யெகோவாவின் தூதர் அவளிடம், “யாருமே எண்ண முடியாத அளவுக்கு நான் உன் சந்ததியைப் பெருக வைப்பேன்”+ என்று சொன்னார். 11  பின்பு யெகோவாவின் தூதர் அவளிடம், “இப்போது கர்ப்பமாக இருக்கிற நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; அவனுக்கு இஸ்மவேல்* என்று பெயர் வை. ஏனென்றால், உன்னுடைய கதறலை யெகோவா கேட்டிருக்கிறார். 12  உன் மகன் அடங்காதவனாக* இருப்பான். எல்லாரும் அவனை எதிர்ப்பார்கள், எல்லாரையும் அவன் எதிர்ப்பான்; தன்னுடைய சகோதரர்கள் எல்லாருக்கும் எதிராக* வாழ்வான்” என்றார். 13  யெகோவா இதையெல்லாம் சொன்ன பிறகு ஆகார் அவருடைய பெயரைப் புகழ்ந்து, “நீங்கள் எல்லாவற்றையும் பார்க்கிற கடவுள்.+ என்னைப் பார்ப்பவரை நானும் பார்த்துவிட்டேனே!” என்று சொன்னாள். 14  அதனால்தான், அந்தக் கிணறு பெயெர்-லகாய்-ரோயீ* என்று அழைக்கப்பட்டது. (அது காதேசுக்கும் பேரேத்துக்கும் இடையில் இருக்கிறது.) 15  ஆபிராமுக்கு ஆகார் ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். அவனுக்கு இஸ்மவேல்+ என்று ஆபிராம் பெயர் வைத்தார். 16  இஸ்மவேல் பிறந்தபோது ஆபிராமுக்கு 86 வயது.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அவமானப்படுத்தினாள்.”
அர்த்தம், “கடவுள் கேட்கிறார்.”
நே.மொ., “காட்டுக் கழுதையைப் போல்.”
அல்லது, “விரோதமாக.”
அர்த்தம், “என்னைப் பார்க்கிற உயிருள்ளவரின் கிணறு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா