ஆதியாகமம் 24:1-67

24  ஆபிரகாம் மிகவும் வயதானவராக இருந்தார். அவர் செய்த எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதித்திருந்தார்.+  ஒருநாள் ஆபிரகாம், தன் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் கவனித்துவந்த மூத்த ஊழியரிடம்,+ “தயவுசெய்து என் தொடையின் கீழ் உன் கையை வைத்து,*  நான் குடியிருக்கிற இந்த கானான் தேசத்திலிருந்து என்னுடைய மகன் ஈசாக்குக்கு நீ பெண்ணெடுக்க மாட்டாய் என்று பரலோகத்துக்கும் பூமிக்கும் கடவுளான யெகோவாவின் மேல் சத்தியம் செய்து கொடு.+  நீ என்னுடைய தேசத்துக்குப் போய் என்னுடைய சொந்தத்திலிருந்து+ அவனுக்குப் பெண்ணெடுக்க வேண்டும்” என்று சொன்னார்.  அப்போது அந்த ஊழியர், “என்னோடு இங்கே வர அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இல்லையென்றால் என்ன செய்வது? நீங்கள் விட்டுவந்த தேசத்துக்கே+ உங்கள் மகனை நான் கூட்டிக்கொண்டு போகட்டுமா?” என்று கேட்டார்.  அதற்கு ஆபிரகாம், “வேண்டாம்! என் மகனை நீ அங்கே கூட்டிக்கொண்டு போகக் கூடாது.+  என்னுடைய அப்பாவின் வீட்டிலிருந்தும் என்னுடைய சொந்தக்காரர்களின் தேசத்திலிருந்தும் என்னைக் கூட்டிக்கொண்டு வந்த+ பரலோகத்தின் கடவுளான யெகோவா, என்னுடைய சந்ததிக்கு+ இந்தத் தேசத்தைத் தருவதாக+ வாக்குக் கொடுத்திருக்கிறார்.+ அதனால், அவருடைய தூதனை உனக்கு முன்னால் அனுப்புவார்,+ நீ கண்டிப்பாக அங்கிருந்து என் மகனுக்குப் பெண்ணெடுப்பாய்.+  ஒருவேளை, உன்னோடு வர அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இல்லையென்றால், எனக்குக் கொடுத்த உறுதிமொழியிலிருந்து நீ விடுபடுவாய். ஆனாலும், என் மகனை நீ அங்கே கூட்டிக்கொண்டு போகக் கூடாது” என்று சொன்னார்.  அப்போது, அந்த ஊழியர் தன்னுடைய எஜமான் ஆபிரகாமுடைய தொடையின் கீழ் கை வைத்து, அவர் கேட்டபடியே சத்தியம் செய்து கொடுத்தார்.+ 10  பின்பு, அந்த ஊழியர் தன்னுடைய எஜமானிடமிருந்து 10 ஒட்டகங்களையும் நல்ல நல்ல அன்பளிப்புகளையும் எடுத்துக்கொண்டு மெசொப்பொத்தாமியாவில் இருந்த நாகோரின் நகரத்துக்குப் புறப்பட்டுப் போனார். 11  அந்த நகரத்துக்கு வெளியில் ஒரு கிணற்றைப் பார்த்தபோது அங்கே தன்னுடைய ஒட்டகங்களை ஓய்வெடுக்க விட்டார். அது சாயங்கால நேரமாக இருந்தது. பொதுவாக, அந்த நேரத்தில் பெண்கள் தண்ணீர் எடுக்க வருவார்கள். 12  அப்போது அவர், “யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் கடவுளே, தயவுசெய்து நான் வந்த காரியத்தை நல்லபடியாக முடித்துக் கொடுங்கள். என் எஜமானாகிய ஆபிரகாமின் மேல் எப்போதும் போல அன்பு* காட்டுங்கள். 13  நான் கிணற்றுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். இந்த நகரத்துப் பெண்கள் தண்ணீர் எடுக்க வந்துகொண்டிருக்கிறார்கள். 14  ‘உன்னுடைய ஜாடியிலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு’ என்று நான் கேட்கும்போது, ‘குடியுங்கள், உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுக்கிறேன்’ என்று எந்தப் பெண் சொல்கிறாளோ, அவள்தான் உங்கள் ஊழியன் ஈசாக்குக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கிற பெண் என்று தெரிந்துகொள்வேன். என் எஜமான்மேல் நீங்கள் வைத்திருக்கிற அன்பை* இதன் மூலம் எனக்குக் காட்டுங்கள்” என்று வேண்டிக்கொண்டார். 15  அவர் இப்படிச் சொல்லி முடிப்பதற்குள், ரெபெக்காள் தண்ணீர் ஜாடியைத் தோளில் சுமந்துகொண்டு வந்தாள். அவள் ஆபிரகாமுடைய சகோதரன் நாகோருக்கும்+ அவர் மனைவி மில்காளுக்கும்+ பிறந்த பெத்துவேலின் மகள்.+ 16  அவள் கல்யாணமாகாத இளம் பெண். பார்க்க ரொம்ப அழகாக இருந்தாள். அவள் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் ஜாடியை நிரப்பிக்கொண்டு மேலே வந்தாள். 17  உடனே அந்த ஊழியர் அவளிடம் ஓடிப்போய், “தயவுசெய்து உன் ஜாடியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் கொடு” என்று கேட்டார். 18  அதற்கு அவள், “குடியுங்கள், ஐயா” என்று சொல்லி, உடனே தன்னுடைய ஜாடியைத் தோளிலிருந்து இறக்கி அவருக்குத் தண்ணீர் கொடுத்தாள். 19  அவர் குடித்து முடித்ததும் அவள் அவரிடம், “உங்களுடைய ஒட்டகங்களுக்கும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொடுக்கிறேன்” என்று சொன்னாள். 20  பின்பு, ஜாடியில் இருந்த தண்ணீரை அங்கிருந்த தொட்டியில் சீக்கிரமாக ஊற்றிவிட்டு, மறுபடியும் மறுபடியும் ஓடிப் போய் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவந்தாள். அவருடைய எல்லா ஒட்டகங்களும் குடித்து முடிக்கும்வரை ஊற்றிக்கொண்டே இருந்தாள். 21  அந்த ஊழியர் எதுவும் பேசாமல் அவளை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே, தான் வந்த காரியத்தை யெகோவா கைகூடி வரப் பண்ணிவிட்டாரோ என்று யோசித்துக்கொண்டிருந்தார். 22  எல்லா ஒட்டகங்களும் தண்ணீர் குடித்து முடித்ததும், தங்கத்தில் செய்த அரை சேக்கல்* எடையுள்ள மூக்குவளையத்தையும் 10 சேக்கல்* எடையுள்ள இரண்டு காப்புகளையும் அந்த ஊழியர் அவளுக்கு எடுத்துக்கொடுத்தார். 23  பின்பு அவளிடம், “நீ யாருடைய மகள் என்று தெரிந்துகொள்ளலாமா? இந்த ராத்திரி நாங்கள் தங்குவதற்கு உன் அப்பாவுடைய வீட்டில் இடம் இருக்கிறதா?” என்று கேட்டார். 24  அதற்கு அவள், “நாகோருக்கும் மில்காளுக்கும் பிறந்த பெத்துவேலின் மகள்+ நான்” என்று சொன்னாள். 25  அதோடு, “ராத்திரி தங்குவதற்கு எங்கள் வீட்டில் இடம் இருக்கிறது. ஒட்டகங்களுக்கு வைக்கோலும் நிறைய தீவனமும்கூட இருக்கிறது” என்றாள். 26  அப்போது, அந்த ஊழியர் மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து, யெகோவாவுக்கு நன்றி சொல்லி, 27  “என் எஜமான் ஆபிரகாமின் கடவுளான யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும்! அவர் என் எஜமானுக்கு எப்போதும் போலவே மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் காட்டியிருக்கிறார். என் எஜமானுடைய சகோதரர்களின் வீட்டுக்கே வந்துசேர யெகோவா எனக்கு உதவியிருக்கிறார்” என்று சொன்னார். 28  ரெபெக்காள் இந்த விஷயங்களைத் தன்னுடைய அம்மாவிடமும் மற்றவர்களிடமும் சொல்வதற்காக ஓடினாள். 29  ரெபெக்காளுக்கு லாபான் என்ற அண்ணன் இருந்தார்.+ அவர், நகரத்துக்கு வெளியே கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த அந்த ஊழியரைப் பார்க்க ஓடினார். 30  ஏனென்றால், அந்த ஊழியர் பேசியதைப் பற்றி அவருடைய தங்கை சொல்லியிருந்தாள். அவளுடைய மூக்கிலிருந்த வளையத்தையும் கைகளிலிருந்த காப்புகளையும்கூட லாபான் பார்த்திருந்தார். அதனால், கிணற்றுக்குப் பக்கத்தில் ஒட்டகங்களுடன் நின்றுகொண்டிருந்த அந்த ஊழியரிடம் போய், 31  “யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றவரே, ஏன் இங்கேயே நின்றுகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் என்னுடைய வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன், உங்கள் ஒட்டகங்களுக்கும் ஒரு இடத்தைத் தயார் செய்திருக்கிறேன், வாருங்கள்” என்றார். 32  அதனால், அந்த ஊழியர் லாபானின் வீட்டுக்கு வந்தார். அப்போது, அவர்* ஒட்டகங்களின் சேணத்தை* அவிழ்த்து அவற்றுக்கு வைக்கோலும் தீவனமும் கொடுத்தார். அதோடு, அந்த ஊழியரும் அவருடன் வந்தவர்களும் தங்கள் பாதங்களைக் கழுவுவதற்காகத் தண்ணீர் கொடுத்தார். 33  அந்த ஊழியருக்கு உணவு பரிமாறப்பட்டபோது, “வந்த விஷயத்தைச் சொல்வதற்கு முன்பு நான் சாப்பிட மாட்டேன்” என்று சொன்னார். அதற்கு லாபான், “சரி, சொல்லுங்கள்!” என்றார். 34  அதற்கு அவர், “நான் ஆபிரகாமின் ஊழியன்.+ 35  யெகோவா என் எஜமானை அளவில்லாமல் ஆசீர்வதித்திருக்கிறார். அவருக்கு ஆடுமாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள், வெள்ளி, தங்கம், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள் எல்லாவற்றையும் கொடுத்து அவரைப் பெரிய பணக்காரராக ஆக்கியிருக்கிறார்.+ 36  அதோடு, என் எஜமானின் மனைவி சாராள் வயதான காலத்தில் அவருக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தார்.+ அந்த மகனுக்குத்தான் என் எஜமானுடைய எல்லா சொத்தும் வந்து சேரும்.+ 37  என் எஜமான் என்னிடம், ‘நான் குடியிருக்கிற இந்த கானான் தேசத்திலிருந்து நீ என்னுடைய மகன் ஈசாக்குக்குப் பெண்ணெடுக்காமல்,+ 38  என் அப்பாவின் வீட்டுக்குப் போய் என் குடும்பத்திலிருந்து+ அவனுக்குப் பெண்ணெடு’+ என்று சொல்லி என்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். 39  அப்போது நான் என் எஜமானிடம், ‘என்னோடு வர அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இல்லையென்றால் என்ன செய்வது?’ என்று கேட்டேன்.+ 40  அதற்கு அவர், ‘நான் வணங்குகிற யெகோவா*+ தன்னுடைய தூதனை உன்னோடு அனுப்பி,+ நீ போகிற காரியம் கைகூடும்படி செய்வார். என் குடும்பத்திலிருந்தும் என் அப்பாவின் வீட்டிலிருந்தும் நீ என் மகனுக்குப் பெண்ணெடுக்க வேண்டும்.+ 41  நீ என் சொந்தக்காரர்களிடம் போய்க் கேட்டும் அவர்கள் பெண் தராவிட்டால், எனக்குக் கொடுத்த உறுதிமொழியிலிருந்து நீ விடுபடுவாய்’ என்று சொன்னார்.+ 42  இன்று நான் கிணற்றுப் பக்கமாக வந்தபோது கடவுளிடம், ‘யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் கடவுளே, நான் வந்த காரியத்தை நல்லபடியாக முடித்துக் கொடுங்கள். 43  நான் கிணற்றுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். தண்ணீர் எடுக்க வருகிற ஒரு பெண்ணிடம்,+ “உன்னுடைய ஜாடியிலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு” என்று நான் கேட்கும்போது, 44  அவள் என்னிடம், “குடியுங்கள், உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுக்கிறேன்” என்று சொன்னால், அவள்தான் என் எஜமானுடைய மகனுக்கு யெகோவா தேர்ந்தெடுத்த பெண் என்று தெரிந்துகொள்வேன்’+ என்று வேண்டிக்கொண்டேன். 45  நான் இப்படி மனதில்* சொல்லி முடிப்பதற்குள், ரெபெக்காள் தண்ணீர் ஜாடியைத் தோளில் சுமந்துகொண்டு வந்தாள். அவள் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுத்தாள். அப்போது நான் அவளிடம், ‘தயவுசெய்து, குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடு’ என்று கேட்டேன்.+ 46  அவள் உடனே தன்னுடைய தோளிலிருந்து ஜாடியை இறக்கி, ‘குடியுங்கள்,+ உங்களுடைய ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுக்கிறேன்’ என்று சொன்னாள். நான் குடித்தேன், அதன்பின் ஒட்டகங்களுக்கும் அவள் தண்ணீர் கொடுத்தாள். 47  பின்பு அவளிடம், ‘நீ யாருடைய மகள்?’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘நாகோருக்கும் மில்காளுக்கும் பிறந்த பெத்துவேலின் மகள் நான்’ என்றாள். அப்போது, நான் அவளுடைய மூக்கில் வளையத்தையும் கைகளில் காப்புகளையும்+ போட்டுவிட்டேன். 48  பின்பு மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து, என் எஜமானின் கடவுளாகிய யெகோவாவுக்கு+ நன்றி சொன்னேன். என் எஜமானுடைய மகனுக்கு அவருடைய சகோதரரின் மகளையே பேசி முடிப்பதற்கு உதவி செய்த யெகோவாவைப் புகழ்ந்தேன். 49  இப்போது, என் எஜமானிடம் மாறாத அன்பு காட்டவும் அவருக்கு உண்மையாக இருக்கவும் நீங்கள் விரும்புகிறீர்களா என்று தயவுசெய்து என்னிடம் சொல்லுங்கள். உங்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும் என்னிடம் சொல்லுங்கள். அப்போதுதான், அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று நான் யோசிக்க முடியும்”+ என்று சொன்னார். 50  அதற்கு லாபானும் பெத்துவேலும், “இது யெகோவாவின் ஏற்பாடு. அதனால் நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 51  இதோ, ரெபெக்காள் இருக்கிறாள். அவளைக் கூட்டிக்கொண்டு போங்கள். யெகோவா சொன்னபடியே அவள் உங்கள் எஜமானுடைய மகனுக்கு மனைவியாகட்டும்” என்று சொன்னார்கள். 52  ஆபிரகாமின் ஊழியர் இதைக் கேட்டவுடன் மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து யெகோவாவை வணங்கினார். 53  பின்பு, தங்க நகைகளையும் வெள்ளி நகைகளையும் துணிமணிகளையும் எடுத்து ரெபெக்காளுக்குக் கொடுத்தார். அவளுடைய அண்ணனுக்கும் அம்மாவுக்கும் விலைமதிப்புள்ள பொருள்களைக் கொடுத்தார். 54  அதன்பின், அவரும் அவரோடு இருந்த ஆட்களும் சாப்பிட்டு, குடித்தார்கள். ராத்திரி அங்கேயே தங்கினார்கள். அந்த ஊழியர் காலையில் எழுந்து, “என் எஜமானிடம் போக வேண்டும், என்னை அனுப்பி வையுங்கள்” என்றார். 55  அதற்கு அந்தப் பெண்ணின் அண்ணனும் அம்மாவும், “எங்கள் பெண் பத்து நாளாவது எங்களோடு இருக்கட்டுமே, அப்புறம் போகலாமே’ என்று சொன்னார்கள். 56  ஆனால் அவர், “நான் வந்த காரியத்தை யெகோவா நல்லபடியாக முடித்துக் கொடுத்திருக்கிறார், அதனால் நேரம் தாழ்த்தாமல் என்னை அனுப்பி வையுங்கள். நான் என் எஜமானிடம் போக வேண்டும்” என்றார். 57  அப்போது அவர்கள், “பெண்ணையே கூப்பிட்டு அவளுடைய விருப்பத்தைக் கேட்கலாமே” என்று சொன்னார்கள். 58  உடனே ரெபெக்காளைக் கூப்பிட்டு, “இவரோடு போக உனக்குச் சம்மதமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவள் “சம்மதம்தான்” என்று சொன்னாள். 59  அதனால், அவர்கள் ரெபெக்காளையும்*+ அவளுடைய தாதியையும்*+ ஆபிரகாமின் ஊழியரையும் அவருடைய ஆட்களையும் அனுப்பி வைத்தார்கள். 60  அப்போது அவர்கள் ரெபெக்காளிடம், “எங்கள் சகோதரியே, உன்னுடைய வம்சம் லட்சக்கணக்கில் பெருகட்டும்; உன்னுடைய சந்ததி எதிரிகளின் நகரங்களைக் கைப்பற்றட்டும்” என்று சொல்லி வாழ்த்தினார்கள்.+ 61  பின்பு, ரெபெக்காளும் அவளுடைய பணிப்பெண்களும் ஒட்டகங்களில் ஏறி, அந்த ஊழியரின் பின்னால் போனார்கள். இப்படி, அந்த ஊழியர் ரெபெக்காளைக் கூட்டிக்கொண்டு போனார். 62  நெகேபில்+ குடியிருந்த ஈசாக்கு, பெயெர்-லகாய்-ரோயீ+ என்ற கிணற்றின் வழியாக வந்தார். 63  அவர் சாயங்கால நேரத்தில், சில விஷயங்களைத் தியானிப்பதற்காக+ காட்டுவெளியில் நடந்துகொண்டிருந்தார். அவர் நிமிர்ந்து பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவது தெரிந்தது. 64  ரெபெக்காளும் ஈசாக்கைப் பார்த்தாள். உடனே, ஒட்டகத்தைவிட்டு இறங்கினாள். 65  அப்போது அந்த ஊழியரிடம், “நம்மைச் சந்திப்பதற்காக ஒருவர் வருகிறாரே, அவர் யார்?” என்று கேட்டாள். அதற்கு அந்த ஊழியர், “அவர்தான் என் எஜமான்” என்று சொன்னார். அப்போது, அவள் முக்காடு போட்டுக்கொண்டாள். 66  அதன்பின் அந்த ஊழியர், நடந்த எல்லா விஷயங்களையும் ஈசாக்கிடம் சொன்னார். 67  பின்பு, ஈசாக்கு தன்னுடைய அம்மா சாராளின் கூடாரத்துக்கு+ ரெபெக்காளைக் கூட்டிக்கொண்டு போய், தன்னுடைய மனைவியாக்கிக்கொண்டார். அவர் அவளை நேசித்தார்.+ இப்படி, அம்மாவைப் பறிகொடுத்த+ சோகத்திலிருந்து மீண்டு ஆறுதல் அடைந்தார்.

அடிக்குறிப்புகள்

பழங்காலத்தில் இப்படித்தான் உறுதிமொழி கொடுத்தார்கள்.
வே.வா., “மாறாத அன்பு.”
வே.வா., “மாறாத அன்பை.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அநேகமாக, “லாபான்.”
சேணம் என்பது மிருகங்களின் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதற்குப் போடப்படும் தோலினால் ஆன இருக்கை.
வே.வா., “நான் யெகோவாவின் வழியில் நடப்பதால் அவர்.”
நே.மொ., “இதயத்தில்.”
நே.மொ., “தங்கள் சகோதரியான ரெபெக்காளையும்.”
ரெபெக்காள் குழந்தையாக இருந்தபோது அவளுக்குப் பாலூட்டியவள்; இந்தச் சமயத்தில் அவளுடைய பணிப்பெண்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா