ஆதியாகமம் 27:1-46

27  வயதான காலத்தில் ஈசாக்கின் கண்பார்வை சுத்தமாக மங்கிவிட்டது. அவர் தன்னுடைய மூத்த மகன் ஏசாவைக்+ கூப்பிட்டு, “மகனே!” என்றார். அதற்கு ஏசா, “சொல்லுங்கள், அப்பா!” என்றான்.  அப்போது அவர், “எனக்கு வயதாகிவிட்டது, எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன் என்று தெரியவில்லை.  அதனால், இப்போது நீ தயவுசெய்து உன்னுடைய வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குப் போய், ஏதாவது ஒரு மிருகத்தை வேட்டையாடிக் கொண்டுவா.+  எனக்குப் பிடித்த மாதிரி அதை ருசியாகச் சமைத்துத் தா. அதை நான் சாப்பிட்டுவிட்டு, உயிரோடு இருக்கும்போதே உன்னை ஆசீர்வதித்துவிடுகிறேன்” என்று சொன்னார்.  ஈசாக்கு தன்னுடைய மகன் ஏசாவிடம் பேசிக்கொண்டிருந்ததை ரெபெக்காள் கேட்டாள். ஏசா மிருகத்தை வேட்டையாடிக் கொண்டுவர காட்டுக்குப் போனான்.+  அப்போது ரெபெக்காள் தன்னுடைய மகன் யாக்கோபிடம்,+ “உன் அண்ணன் ஏசாவோடு உன் அப்பா பேசிக்கொண்டிருந்ததை இப்போதுதான் கேட்டேன்.  அவர் அவனிடம், ‘ஏதாவது ஒரு மிருகத்தை வேட்டையாடிக் கொண்டுவந்து ருசியாகச் சமைத்துத் தா. அதை நான் சாப்பிட்டுவிட்டு, உயிரோடு இருக்கும்போதே யெகோவாவின் முன்னிலையில் உன்னை ஆசீர்வதித்துவிடுகிறேன்’+ என்று சொன்னார்.  மகனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு அப்படியே செய்.+  தயவுசெய்து தொழுவத்துக்குப் போய், கொழுகொழுவென்று இருக்கிற இரண்டு வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டுவா. உன் அப்பாவுக்குப் பிடித்த மாதிரியே அதை ருசியாகச் சமைத்துக் கொடுக்கிறேன். 10  அதை உன் அப்பாவிடம் கொண்டுபோய்க் கொடு. அவர் அதைச் சாப்பிட்டுவிட்டு, உயிரோடு இருக்கும்போதே உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்று சொன்னாள். 11  அப்போது யாக்கோபு தன்னுடைய அம்மா ரெபெக்காளிடம், “என் அண்ணனுக்கு உடம்பு முழுக்க முடி இருக்கிறது,+ ஆனால் எனக்கு இல்லையே. 12  ஒருவேளை அப்பா என்னைத் தடவிப் பார்த்தால்?+ நான் அவரை ஏமாற்றுவதாக நினைத்து, என்னை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாகச் சபித்துவிடுவாரே” என்று சொன்னான். 13  அதற்கு அவனுடைய அம்மா, “மகனே, அந்தச் சாபம் என்மேல் வரட்டும். இப்போது, நான் சொல்வதைச் செய், நீ போய் நான் கேட்டதைக் கொண்டுவா”+ என்று சொன்னாள். 14  அவன் போய், வெள்ளாட்டுக் குட்டிகளைப் பிடித்துத் தன்னுடைய அம்மாவிடம் கொண்டுவந்தான். அவள் அவனுடைய அப்பாவுக்குப் பிடித்த மாதிரியே ருசியாகச் சமைத்தாள். 15  அதன்பின், வீட்டிலே தன்னுடைய பெரிய மகன் ஏசா வைத்திருந்த அருமையான அங்கிகளை எடுத்துத் தன்னுடைய சின்ன மகன் யாக்கோபுக்குப் போட்டுவிட்டாள்.+ 16  அதோடு, வெள்ளாட்டுக் குட்டிகளின் தோலை அவன் கைகளிலும் கழுத்திலும் போட்டுவிட்டாள்.+ 17  பின்பு, தான் சமைத்த ருசியான இறைச்சியையும் ரொட்டியையும் எடுத்துத் தன்னுடைய மகன் யாக்கோபிடம் கொடுத்தாள்.+ 18  யாக்கோபு தன்னுடைய அப்பாவிடம் போய், “அப்பா!” என்றான். அதற்கு ஈசாக்கு, “சொல், மகனே! நீ ஏசாவா யாக்கோபா?” என்று கேட்டார். 19  அப்போது யாக்கோபு, “நான் உங்களுடைய மூத்த மகன் ஏசா.+ நீங்கள் சொன்ன மாதிரியே செய்திருக்கிறேன். தயவுசெய்து எழுந்து உட்காருங்கள், நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைக் கொஞ்சம் சாப்பிடுங்கள். பின்பு என்னை ஆசீர்வதியுங்கள்”+ என்றான். 20  அதற்கு ஈசாக்கு, “மகனே, எப்படி இவ்வளவு சீக்கிரம் வேட்டையாடிவிட்டு வந்தாய்?” என்று கேட்டார். அப்போது யாக்கோபு, “நம்முடைய கடவுள் யெகோவாதான் எனக்கு உதவி செய்தார்” என்றான். 21  பின்பு ஈசாக்கு யாக்கோபிடம், “தயவுசெய்து என் பக்கத்தில் வா மகனே, நிஜமாகவே நீ ஏசாதானா என்று உன்னைத் தடவிப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்”+ என்றார். 22  அதனால், யாக்கோபு தன்னுடைய அப்பா ஈசாக்கின் பக்கத்தில் போனான். அவர் யாக்கோபைத் தடவிப் பார்த்து, “குரல் யாக்கோபின் குரலைப் போல இருக்கிறது, ஆனால் கைகள் ஏசாவின் கைகளைப் போலத்தான் இருக்கிறது”+ என்றார். 23  யாக்கோபின் கைகள் அவனுடைய அண்ணன் ஏசாவின் கைகளைப் போல நிறைய முடியுடன் இருந்ததால், ஈசாக்கினால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், அவனை ஆசீர்வதித்தார்.+ 24  அதன்பின் ஈசாக்கு, “நீ நிஜமாகவே என் மகன் ஏசாதானா?” என்று கேட்டார். அதற்கு அவன், “நான் ஏசாதான்” என்றான். 25  அப்போது ஈசாக்கு, “மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை எனக்குக் கொஞ்சம் தா, நான் அதைச் சாப்பிட்டுவிட்டு உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்றார். யாக்கோபு அதைக் கொண்டுவந்து கொடுத்தான். ஈசாக்கு அதைச் சாப்பிட்டார். பின்பு, அவன் திராட்சமதுவைக் கொண்டுவந்து கொடுத்தான், அவர் அதைக் குடித்தார். 26  அதன்பின் ஈசாக்கு அவனிடம், “தயவுசெய்து என் பக்கத்தில் வா மகனே, எனக்கு ஒரு முத்தம் கொடு”+ என்றார். 27  அதன்படியே, யாக்கோபு அவர் பக்கத்தில் போய் முத்தம் கொடுத்தான். யாக்கோபு போட்டிருந்த அங்கிகளிலிருந்து வாசனை வந்தது.+ அப்போது அவர் அவனை ஆசீர்வதித்து, “இதோ, என் மகனுடைய வாசனை யெகோவா ஆசீர்வதித்த காட்டுவெளியின் வாசனையைப் போல இருக்கிறது. 28  உண்மைக் கடவுள் உனக்கு வானத்தின் பனித்துளிகளையும்+ செழிப்பான நிலங்களையும்+ ஏராளமான தானியங்களையும் புதிய திராட்சமதுவையும்+ கொடுக்கட்டும். 29  எல்லா ஜனங்களும் உனக்குச் சேவை செய்யட்டும், எல்லா தேசத்தாரும் உனக்குத் தலைவணங்கட்டும். உன்னுடைய சகோதரர்களுக்கு நீ எஜமானாக இருப்பாய், அவர்கள் உனக்குத் தலைவணங்கட்டும்.+ உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படட்டும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படட்டும்”+ என்றார். 30  இப்படி, ஈசாக்கு ஆசீர்வதித்து முடித்த பின்பு யாக்கோபு அங்கிருந்து போனான். அவன் போன உடனேயே அவனுடைய அண்ணன் ஏசா வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்தான்.+ 31  அவனும் இறைச்சியை ருசியாகச் சமைத்துத் தன்னுடைய அப்பாவிடம் கொண்டுவந்தான். அவன் அவரிடம், “அப்பா, எழுந்திருங்கள். உங்களுடைய மகன் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிட்டுவிட்டு ஆசீர்வாதம் பண்ணுங்கள்” என்றான். 32  அதற்கு அவனுடைய அப்பா ஈசாக்கு, “நீ யார்?” என்று கேட்டார். அப்போது அவன், “நான்தான் உங்களுடைய மகன், உங்களுடைய மூத்த மகன் ஏசா”+ என்றான். 33  உடனே ஈசாக்கு அதிர்ச்சியில் நடுநடுங்கிப்போய், “அப்படியானால், இதற்குமுன் வேட்டையாடிக் கொண்டுவந்தது யார்? நீ வருவதற்கு முன்பே நான் அதைச் சாப்பிட்டுவிட்டு அவனை ஆசீர்வதித்துவிட்டேனே! அவனுக்குத்தான் ஆசீர்வாதம் போய்ச் சேரும்!” என்றார். 34  அவர் சொன்னதைக் கேட்டதும் ஏசா, “என்னையும் ஆசீர்வதியுங்கள் அப்பா, என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்று சொல்லி பயங்கரமாகக் கதறி அழுதான்.+ 35  ஆனால் அவனுடைய அப்பா, “உன் தம்பி என்னை ஏமாற்றி, உனக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை வாங்கிக்கொண்டான்” என்றார். 36  அதற்கு ஏசா, “யாக்கோபு* என்ற பெயர் அவனுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. எனக்குச் சொந்தமானதை இரண்டு தடவை அவன் பிடுங்கிக்கொண்டான்.+ முன்பு மூத்த மகனின் உரிமையைப் பிடுங்கினான்,+ இப்போது எனக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தையும் பிடுங்கிக்கொண்டான்!”+ என்றான். அதன்பின், “எனக்கென்று ஒரு ஆசீர்வாதத்தைக்கூட நீங்கள் விட்டுவைக்கவில்லையா?” என்று கேட்டான். 37  அதற்கு ஈசாக்கு, “நான் அவனை உனக்கு எஜமானாக நியமித்துவிட்டேன்.+ அவனுடைய சகோதரர்கள் எல்லாரையும் அவனுக்கு வேலையாட்களாகக் கொடுத்துவிட்டேன். தானியங்களையும் புதிய திராட்சமதுவையும் அவனுக்குத் தந்துவிட்டேன்.+ அப்படியிருக்கும்போது, என் மகனே, நான் உனக்கு வேறென்ன கொடுக்க முடியும்?” என்று கேட்டார். 38  அதற்கு ஏசா, “அப்பா, இனி உங்களிடம் ஒரு ஆசீர்வாதம்கூட இல்லையா? அப்பா, என்னை ஆசீர்வதியுங்கள், என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்று சொல்லி, கண்ணீர்விட்டுக் கதறி அழுதான்.+ 39  அப்போது அவனுடைய அப்பா ஈசாக்கு, “செழிப்பான நிலத்தில் நீ வாழ மாட்டாய், வானத்தின் பனித்துளியை நீ அனுபவிக்க மாட்டாய்.+ 40  உன்னுடைய வாளோடுதான் நீ வாழ்வாய்,+ உன்னுடைய சகோதரனுக்குச் சேவை செய்வாய்.+ உன்னால் பொறுக்க முடியாமல் போகும்போதோ, உன்னுடைய கழுத்தில் அவன் சுமத்திய நுகத்தடியை உடைத்துப்போடுவாய்”*+ என்றார். 41  யாக்கோபு தன்னுடைய அப்பாவிடமிருந்து ஆசீர்வாதத்தை வாங்கிக்கொண்டதால் அவன்மேல் ஏசா வெறுப்பை வளர்த்துக்கொண்டான்.+ “இன்னும் கொஞ்சக் காலத்தில் அப்பா செத்துப்போய்விடுவார்.+ அதன்பின் என் தம்பி யாக்கோபைத் தீர்த்துக்கட்டிவிடுவேன்” என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டே இருந்தான். 42  பெரிய மகன் ஏசாவின் திட்டத்தைப் பற்றி ரெபெக்காள் கேள்விப்பட்டபோது, அவள் உடனே தன்னுடைய சின்ன மகன் யாக்கோபை வரவழைத்து, “உன்னுடைய அண்ணன் ஏசா உன்னைப் பழிவாங்கப்போகிறான். உன்னைக் கொலை செய்யத் திட்டம் போட்டிருக்கிறான்.* 43  அதனால் என் மகனே, நான் சொல்கிறபடி செய். உடனே கிளம்பி ஆரானிலுள்ள என் அண்ணன் லாபானிடம் ஓடிப்போ.+ 44  உன்னுடைய அண்ணனின் ஆத்திரம் அடங்கும்வரை நீ கொஞ்சக் காலம் அங்கேயே தங்கியிரு. 45  நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்து அவனுடைய கோபம் தீர்ந்தவுடன் நான் உனக்குச் சொல்லி அனுப்புகிறேன், அப்போது நீ வரலாம். ஒரே நாளில் உங்கள் இரண்டு பேரையும் நான் ஏன் இழக்க வேண்டும்?” என்றாள். 46  பின்பு ரெபெக்காள் ஈசாக்கிடம், “இந்த ஏத்தியப் பெண்களால் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.+ யாக்கோபும் ஒரு ஏத்தியப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால் நான் செத்துப்போவதே மேல்”+ என்று புலம்பிக்கொண்டே இருந்தாள்.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “குதிங்காலைப் பிடித்துக்கொண்டவன்; இன்னொருவனின் இடத்தை எடுத்துக்கொண்டவன்.”
அதாவது, “உன்னுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவாய்.”
வே.வா., “உன்னைக் கொல்லப்போவதை நினைத்து மனதைத் தேற்றிக்கொள்கிறான்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா