ஆதியாகமம் 37:1-36
37 யாக்கோபு கானான் தேசத்திலேயே வாழ்ந்துவந்தார். அங்குதான் அவருடைய அப்பாவும் அன்னியராக வாழ்ந்திருந்தார்.+
2 யாக்கோபின் வரலாறு இதுதான்.
அவருடைய மகன் யோசேப்பு,+ 17 வயதாக இருந்தபோது பில்காளின் மகன்களோடும் சில்பாளின் மகன்களோடும் சேர்ந்து ஆடுகளை மேய்த்துவந்தான்.+ பில்காளும் சில்பாளும் யாக்கோபின் மனைவிகள். அவர்களுடைய மகன்கள்+ செய்த தவறுகளைப் பற்றி யோசேப்பு ஒருமுறை தன்னுடைய அப்பாவிடம் சொன்னான்.
3 இஸ்ரவேல் வயதானவராக இருந்தபோது யோசேப்பு பிறந்ததால் மற்ற எல்லா மகன்களையும்விட+ அவனை அவர் அதிகமாக நேசித்தார். அவனுக்கு அழகான, நீளமான அங்கியையும் செய்து கொடுத்தார்.
4 அவர் யோசேப்புக்கு அதிக பாசம் காட்டியதை அவனுடைய சகோதரர்கள் பார்த்தபோது அவனை வெறுக்கத் தொடங்கினார்கள். அதனால் அவனிடம் முகம்கொடுத்துக்கூட* பேசவில்லை.
5 ஒருநாள் யோசேப்பு ஒரு கனவு கண்டான், அதைத் தன்னுடைய சகோதரர்களிடம் சொன்னபோது,+ அவர்கள் அவனை இன்னும் அதிகமாக வெறுக்க ஆரம்பித்தார்கள்.
6 அவன் அவர்களிடம், “நான் பார்த்த கனவைப் பற்றிச் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள்.
7 வயல் நடுவே நாம் எல்லாரும் கதிர்களைக் கட்டிக்கொண்டிருந்தோம். அப்போது, என்னுடைய கதிர்க்கட்டு நிமிர்ந்து நின்றது. உங்களுடைய கதிர்க்கட்டுகள் என்னுடைய கதிர்க்கட்டைச் சுற்றிநின்று தலைவணங்கின”+ என்று சொன்னான்.
8 அப்போது அவனுடைய சகோதரர்கள், “அப்படியென்றால் நீ ராஜாவாகி, எங்களை அடக்கி ஆளப்போகிறாயோ?”+ என்று கேட்டார்கள். அவன் பார்த்த கனவைப் பற்றிக் கேட்ட பின்பு அவர்கள் இன்னும் அதிகமாக அவனை வெறுத்தார்கள்.
9 அதன்பின், அவன் இன்னொரு கனவு கண்டான். உடனே தன்னுடைய சகோதரர்களிடம் போய், “நான் இன்னொரு கனவு கண்டேன். இந்தத் தடவை சூரியனும் சந்திரனும் 11 நட்சத்திரங்களும் எனக்கு முன்னால் தலைவணங்கின”+ என்று சொன்னான்.
10 பின்பு, அதைத் தன் சகோதரர்களுக்கு முன்பாகத் தன்னுடைய அப்பாவிடமும் சொன்னான். அப்போது அவர் அவனைக் கண்டித்து, “உன் கனவுக்கு என்ன அர்த்தம்? நானும் உன் அம்மாவும் உன் சகோதரர்களும் உனக்கு முன்னால் தலைவணங்குவோம் என்று சொல்கிறாயா?” என்றார்.
11 அதேசமயத்தில், அவன் சொன்ன விஷயத்தைத் தன்னுடைய மனதில் வைத்துக்கொண்டார். ஆனால் அவனுடைய சகோதரர்களுக்கு ஒரே வயிற்றெரிச்சலாக இருந்தது.+
12 பின்பு, அவனுடைய சகோதரர்கள் தங்கள் அப்பாவின் ஆடுகளை மேய்க்க சீகேமுக்குப்+ பக்கத்தில் போனார்கள்.
13 பிறகு இஸ்ரவேல் யோசேப்பிடம், “சீகேமுக்குப் பக்கத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிற உன் சகோதரர்களைப் போய்ப் பார்த்துவிட்டு வருவாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “சரி அப்பா, பார்த்துவிட்டு வருகிறேன்!” என்று சொன்னான்.
14 அப்போது அவர், “உன் சகோதரர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வா. ஆடுகள் எப்படி இருக்கின்றன என்றும் தயவுசெய்து பார்த்துவிட்டு வந்து சொல்” என்றார். பின்பு, அந்த எப்ரோன் பள்ளத்தாக்கிலிருந்து+ அவனை அனுப்பி வைத்தார், அவன் சீகேம் பக்கமாகப் போனான்.
15 அவன் வயல்வெளியில் நடந்து போய்க்கொண்டிருந்த சமயத்தில் ஒருவர் அவனைப் பார்த்து, “யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார்.
16 அதற்கு அவன், “என் சகோதரர்களைத் தேடுகிறேன். அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள் என்று தெரியுமா? தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்” என்றான்.
17 அப்போது அவர், “அவர்கள் இங்கிருந்து போய்விட்டார்கள். ‘தோத்தானுக்குப் போகலாம்’ என்று அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டேன்” என்றார். அதனால், யோசேப்பு தன்னுடைய சகோதரர்களைத் தேடி தோத்தானுக்குப் போனான். அங்கே அவர்களைக் கண்டுபிடித்தான்.
18 அவன் வருவதை அவனுடைய சகோதரர்கள் தூரத்திலிருந்து பார்த்தார்கள். அவன் பக்கத்தில் வருவதற்குள், அவனை எப்படிக் கொலை செய்யலாம் என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள்.
19 அவர்கள் ஒருவருக்கொருவர், “இதோ, கனவு மன்னன் வருகிறான்!+
20 வாருங்கள், அவனைத் தீர்த்துக்கட்டி, இங்கே இருக்கிற ஒரு தண்ணீர்த் தொட்டிக்குள் போட்டுவிடலாம். ஒரு காட்டு மிருகம் அவனைத் தின்றுவிட்டது என்று சொல்லிவிடலாம். அவன் கனவெல்லாம் என்ன ஆகிறதென்று அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டார்கள்.
21 ரூபன்+ அதைக் கேட்டபோது அவர்களிடமிருந்து அவனைக் காப்பாற்ற நினைத்தான். அதனால் அவர்களிடம், “நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்”+ என்றான்.
22 எப்படியாவது அவர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றித் தன்னுடைய அப்பாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்து, “அவனைக் கொன்றுவிடாதீர்கள்.+ வனாந்தரத்தில் இருக்கிற இந்தத் தொட்டிக்குள் அவனைத் தள்ளிவிடுங்கள். அவனுக்கு வேறு ஒன்றும் செய்துவிடாதீர்கள்”+ என்றான்.
23 யோசேப்பு பக்கத்தில் வந்தவுடனே அவன் போட்டிருந்த அழகான அங்கியை+ அவர்கள் உருவிக்கொண்டார்கள்.
24 பின்பு, அவனைப் பிடித்து அந்தத் தண்ணீர்த் தொட்டிக்குள் தள்ளினார்கள். அந்தச் சமயத்தில் அந்தத் தொட்டி தண்ணீர் இல்லாமல் வறண்டிருந்தது.
25 பின்பு, அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்போது, கீலேயாத்திலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மவேலர்களின்+ கூட்டத்தைப் பார்த்தார்கள். மலைரோஜா பிசினையும் பரிமளத் தைலத்தையும் பிசின் பட்டையையும்+ ஒட்டகங்களில் ஏற்றிக்கொண்டு அவர்கள் எகிப்துக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.
26 யூதா தன்னுடைய சகோதரர்களிடம், “நம்முடைய தம்பியைக் கொலை செய்துவிட்டு அதை மூடி மறைப்பதில் நமக்கு என்ன லாபம்?+
27 வாருங்கள், அவனை இந்த இஸ்மவேலர்களிடம் விற்றுவிடுவோம்.+ நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம். அவன் நம்முடைய தம்பிதானே, நம்முடைய சொந்த இரத்தம்தானே”* என்றான். அதற்கு அவர்கள் சம்மதித்தார்கள்.
28 யோசேப்பைத் தண்ணீர்த் தொட்டியிலிருந்து வெளியே தூக்கி, அந்தப் பக்கமாக வந்த மீதியானிய+ வியாபாரிகளான இஸ்மவேலர்களிடம்* 20 வெள்ளிக் காசுகளுக்கு விற்றார்கள்.+ அந்த ஆட்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்.
29 பிற்பாடு, ரூபன் அந்தத் தண்ணீர்த் தொட்டியின் பக்கமாகத் திரும்பி வந்தபோது, யோசேப்பு அங்கு இல்லாததைப் பார்த்து துக்கத்தில் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டான்.
30 பின்பு தன்னுடைய சகோதரர்களிடம் போய், “தம்பியைக் காணோமே! ஐயோ! இப்போது நான் என்ன செய்வேன்?” என்று பதற்றத்தோடு கேட்டான்.
31 அவர்கள் ஒரு வெள்ளாட்டுக் கடாவை வெட்டி, அதன் இரத்தத்தில் யோசேப்பின் அங்கியை முக்கியெடுத்தார்கள்.
32 பின்பு, அந்த அங்கியைத் தங்களுடைய அப்பாவிடம் அனுப்பி, “இதை நாங்கள் எதேச்சையாகப் பார்த்தோம். இது உங்கள் மகனுடைய அங்கிதானா+ என்று தயவுசெய்து பாருங்கள்” என்று சொல்லச் சொன்னார்கள்.
33 அவர் அதைப் பார்த்ததும், “இது என் மகனுடைய அங்கிதான்! ஐயோ! ஏதோவொரு காட்டு மிருகம் அவனை அடித்துப்போட்டிருக்கும்! அவனைக் கடித்துக் குதறியிருக்கும்!” என்று சொல்லி,
34 துக்கத்தில் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டார். பின்பு, இடுப்பில் துக்கத் துணியை* கட்டிக்கொண்டு, தன்னுடைய மகனுக்காகப் பல நாட்கள் துக்கம் அனுசரித்தார்.
35 அவருடைய மகன்களும் மகள்களும் அவருக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவர் ஆறுதலடையாமல், “என் மகனுக்காக அழுது அழுதே நான் கல்லறைக்குள்* போய்விடுவேன்!”+ என்று சொல்லிப் புலம்பினார். அவனையே நினைத்துக் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தார்.
36 அந்த மீதியானியர்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோய், பார்வோனின் அரண்மனை அதிகாரியாகவும் காவலர்களின் தலைவராகவும்+ இருந்த போத்திபாரிடம்+ விற்றுப்போட்டார்கள்.
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “சமாதானமாக.”
^ நே.மொ., “சதைதானே.”
^ வே.வா., “மீதியானிய வியாபாரிகளிடம்.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.