உபாகமம் 13:1-18

13  பின்பு அவர், “உங்கள் நடுவிலிருக்கும் ஒரு தீர்க்கதரிசியோ, கனவுகளைப் பார்த்து எதிர்காலத்தைச் சொல்கிறவனோ உங்களுக்கு ஒரு அடையாளத்தை அல்லது அற்புதத்தைக் காட்டுவதாகச் சொல்லலாம்.  அந்த அடையாளமோ அற்புதமோ நடக்கலாம். அவன் உங்களிடம், ‘வாருங்கள், நாம் வேறு தெய்வங்களைத் தேடிப்போய் அவற்றை வணங்குவோம்’ என்று சொல்லலாம்.  ஆனால், அந்தத் தீர்க்கதரிசியோ கனவு காண்கிறவனோ சொல்வதை நீங்கள் கேட்கக் கூடாது.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அன்பு காட்டுகிறீர்களா+ என்று உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைச் சோதித்துப் பார்க்கிறார்.+  உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வழியில் நீங்கள் நடக்க வேண்டும், அவருக்குப் பயப்பட வேண்டும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், அவருடைய பேச்சைக் கேட்க வேண்டும், அவரையே வணங்க வேண்டும், அவரையே உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.+  அந்தத் தீர்க்கதரிசியை அல்லது கனவு காண்கிறவனைக் கொன்றுபோட வேண்டும்.+ ஏனென்றால், எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சை மீறி நடப்பதற்கு அவன் உங்களைத் தூண்டினான். உங்கள் கடவுளாகிய யெகோவா சொன்ன வழியைவிட்டு விலகும்படி உங்களைத் தூண்டினான். அதனால், தீமையை உங்கள் நடுவிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.+  உங்கள் மகனோ, மகளோ, கூடப் பிறந்த சகோதரனோ, ஆசை மனைவியோ, ஆருயிர் நண்பனோ ரகசியமாக உங்களிடம் வந்து, வேறு தெய்வங்களை வணங்கலாம் என்று சொல்லி ஆசைகாட்டலாம்.+ அந்தத் தெய்வங்கள் உங்களுக்கோ உங்களுடைய முன்னோர்களுக்கோ தெரியாத தெய்வங்களாக இருக்கலாம்.  தேசத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை இருக்கிற ஜனங்களுடைய, அதாவது உங்களுக்குப் பக்கத்திலோ தூரத்திலோ இருக்கிற ஜனங்களுடைய, தெய்வங்களாக அவை இருக்கலாம்.  அந்த நபர் சொல்வதை நீங்கள் கேட்கவும் கூடாது, அதன்படி செய்யவும் கூடாது.+ அவர்மேல் இரக்கமோ கரிசனையோ காட்டக் கூடாது. அவரை ஒளித்துவைக்கவும் கூடாது.  கண்டிப்பாக அவரைக் கொன்றுபோட வேண்டும்.+ முதலில் நீங்கள்தான் அவர்மேல் கல்லெறிய வேண்டும், பின்பு மற்ற எல்லா ஜனங்களும் கல்லெறிய வேண்டும்.+ 10  எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வழியைவிட்டு விலகும்படி அந்த நபர் உங்களைத் தூண்டியதால், அவரைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும்.+ 11  அப்போதுதான், இஸ்ரவேலர்கள் எல்லாரும் இதைக் கேள்விப்பட்டு பயப்படுவார்கள், இதுபோன்ற மோசமான காரியத்தை உங்கள் நடுவே இனி ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.+ 12  குடியிருப்பதற்காக உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற நகரங்கள் ஒன்றில் நீங்கள் ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டால், 13  அதாவது, ‘உதவாக்கரை மனுஷர்கள் சிலர் தங்கள் நகரத்து ஜனங்களிடம், “நாம் போய் வேறு தெய்வங்களை வணங்கலாம்” என்று சொல்லி அவர்களைக் கெட்ட வழிக்கு இழுக்கப் பார்க்கிறார்கள்’ என்ற விஷயத்தைக் கேள்விப்பட்டால், 14  அது உண்மையா இல்லையா என்று நன்றாக விசாரிக்க வேண்டும், அலசி ஆராய வேண்டும்.+ அருவருப்பான இந்தக் காரியத்தை உங்கள் நடுவே யாராவது செய்திருப்பது உண்மை என்பது தெரியவந்தால், 15  அந்த நகரத்து ஜனங்களைக் கண்டிப்பாக வாளால் வெட்டிக் கொல்ல வேண்டும்.+ அந்த நகரத்தையும் அதிலுள்ள எல்லாரையும் அழித்துப்போட வேண்டும். ஆடுமாடுகளைக்கூட உயிரோடு விட்டுவைக்கக் கூடாது.+ 16  நீங்கள் கைப்பற்றிய பொருள்கள் எல்லாவற்றையும் அந்த நகரத்தின் பொது சதுக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும். பின்பு அந்த நகரத்தைச் சுட்டெரித்துவிட வேண்டும். அங்கு கைப்பற்றிய பொருள்களெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குத் தகன பலிபோல் இருக்கும். அந்த நகரம் என்றென்றும் மண்மேடாகக் கிடக்கும். அதை ஒருபோதும் திரும்பக் கட்டக் கூடாது. 17  அழிப்பதற்காக ஒதுக்கிவைக்கப்பட்ட எதையும் நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது.+ அப்போதுதான், யெகோவா அவருடைய கடும் கோபத்தை விட்டுவிட்டு உங்களுக்கு இரக்கமும் கரிசனையும் காட்டுவார். உங்களுடைய முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே உங்களை ஏராளமாகப் பெருக வைப்பார்.+ 18  நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் கடைப்பிடித்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்கிறவர்களாக இருப்பீர்கள்”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா