உபாகமம் 2:1-37

2  பிறகு மோசே, “அதன்பின் யெகோவா என்னிடம் சொன்னபடியே நாம் அங்கிருந்து திரும்பி, செங்கடலுக்குப் போகும் வழியாக வனாந்தரத்துக்குப் புறப்பட்டோம்.+ சேயீர் மலைப்பகுதியைச் சுற்றிப் பல நாட்கள் பயணம் செய்தோம்.  கடைசியில் யெகோவா என்னிடம்,  ‘இந்த மலைப்பகுதியைச் சுற்றிப் பயணம் செய்தது போதும். இப்போது வடதிசைக்குப் போங்கள்.  ஜனங்களுக்கு நீ இந்தக் கட்டளைகளைக் கொடு: “சேயீரில் வாழ்கிற+ உங்கள் சகோதரர்களாகிய ஏசாவின் வம்சத்தாருடைய+ எல்லையைக் கடக்கப்போகிறீர்கள். அவர்கள் உங்களைப் பார்த்துப் பயப்படுவார்கள்.+ நீங்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.  அவர்களோடு எந்த வம்புக்கும் போகக் கூடாது.* அவர்களுடைய தேசத்தில் ஒரு அடி நிலத்தைக்கூட நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், சேயீர் மலைப்பகுதியை ஏசாவுக்குக் கொடுத்திருக்கிறேன்.+  அவர்களிடமிருந்து உணவையும் தண்ணீரையும் நீங்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டும்.+  உங்கள் கடவுளாகிய யெகோவா நீங்கள் செய்த எல்லாவற்றையும் ஆசீர்வதித்திருக்கிறார். இவ்வளவு பெரிய வனாந்தரத்தில் நீங்கள் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியையும் அவர் பார்த்திருக்கிறார். இந்த 40 வருஷங்களாக உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு இருந்திருக்கிறார், உங்களுக்கு ஒரு குறையும் இருந்ததில்லை”’+ என்று சொன்னார்.  அதனால் அரபா, ஏலாத், எசியோன்-கேபேர்+ வழியாகப் போகாமல், சேயீரில் வாழ்கிற நம் சகோதரர்களாகிய ஏசாவின் வம்சத்தாருடைய+ எல்லையைக் கடந்துபோனோம். பின்பு அங்கிருந்து திரும்பி, மோவாப் வனாந்தரத்துக்குப்+ போகும் வழியாகப் பயணம் செய்தோம்.  அப்போது யெகோவா என்னிடம், ‘மோவாப் தேசத்தாரோடு எந்த வம்புக்கும் போகாதீர்கள், அவர்களோடு போர் செய்யாதீர்கள். அவர்களுடைய தேசத்தில் எந்த இடத்தையும் நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், லோத்து வம்சத்தாருக்கு+ ஆர் நகரத்தைக் கொடுத்திருக்கிறேன். 10  (முன்பு அங்கு ஏமியர்கள்+ வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் ஏனாக்கியர்களைப் போல ஏராளமாக இருந்தார்கள். அவர்களைப் போலவே பலசாலிகளாகவும், உயரமானவர்களாகவும் இருந்தார்கள். 11  ரெப்பாயீமியர்களும்+ பார்ப்பதற்கு ஏனாக்கியர்களைப்+ போல் இருந்தார்கள். மோவாபியர்கள் அவர்களை ஏமியர்கள் என்று அழைத்தார்கள். 12  சேயீரில் முன்பு ஓரியர்கள்+ வாழ்ந்தார்கள். ஆனால், ஏசாவின் வம்சத்தார் அவர்களை ஒழித்துக்கட்டிவிட்டு அங்கே குடியேறினார்கள்.+ இஸ்ரவேலர்களும் அவர்களுக்குக் கிடைக்கப்போகும் தேசத்தில் அப்படித்தான் செய்வார்கள். அந்தத் தேசத்தை யெகோவா நிச்சயம் அவர்களுக்குக் கொடுப்பார்.) 13  அதனால், நீங்கள் சேரெத் பள்ளத்தாக்கை* கடந்து போங்கள்’ என்றார். அதன்படியே, நாம் சேரெத் பள்ளத்தாக்கைக்+ கடந்து போனோம். 14  காதேஸ்-பர்னேயாவிலிருந்து நடக்கத் தொடங்கி, சேரெத் பள்ளத்தாக்கைக் கடப்பதற்குள் 38 வருஷங்கள் ஓடிவிட்டன. அதற்குள், போர்வீரர்களாகிய அந்தத் தலைமுறையைச் சேர்ந்த எல்லாரும் யெகோவா ஆணையிட்டுச் சொன்னபடியே இறந்துபோனார்கள்.+ 15  அவர்கள் நம் நடுவிலிருந்து அடியோடு ஒழிந்துபோகும்வரை யெகோவா அவர்களுக்கு விரோதமாக இருந்தார்.+ 16  அந்தப் போர்வீரர்கள் எல்லாரும் இறந்தவுடன்,+ 17  யெகோவா மறுபடியும் என்னிடம், 18  ‘இன்றைக்கு நீங்கள் மோவாப் பிரதேசத்தை, அதாவது ஆர் நகரத்தை, கடந்துபோக வேண்டும். 19  அம்மோனியர்களின் எல்லையை நெருங்கும்போது, அவர்களுக்குத் தொல்லை கொடுக்காமலும் அவர்களைச் சண்டைக்கு இழுக்காமலும் இருங்கள். அவர்களுடைய தேசத்தில் எந்த இடத்தையும் நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், அதை லோத்து வம்சத்தாருக்குக் கொடுத்திருக்கிறேன்.+ 20  அந்தத் தேசமும் ரெப்பாயீமியர்களின் தேசமாகக் கருதப்பட்டது.+ (முன்பு ரெப்பாயீமியர்கள் அங்கு வாழ்ந்தார்கள். அப்போது அம்மோனியர்கள் அவர்களை சம்சூமியர்கள் என்று அழைத்தார்கள். 21  அவர்கள் ஏனாக்கியர்களைப் போல் ஏராளமாக இருந்தார்கள். அவர்களைப் போலவே பலசாலிகளாகவும், உயரமானவர்களாகவும் இருந்தார்கள்.+ ஆனால், அம்மோனியர்களைப் பயன்படுத்தி யெகோவா அவர்களை அழித்தார். அம்மோனியர்கள் அவர்களை ஒழித்துக்கட்டிவிட்டு அவர்களுடைய தேசத்தில் குடியேறினார்கள். 22  இப்படித்தான் ஓரியர்களை அழிப்பதற்காக, இன்று சேயீரில் வாழும் ஏசாவின் வம்சத்தாருக்குக்+ கடவுள் உதவினார். அவர்கள் ஓரியர்களை ஒழித்துக்கட்டிவிட்டு,+ இன்றுவரை அவர்களுடைய தேசத்தில் வாழ்ந்துவருகிறார்கள். 23  காசாவரை+ கிராமங்களில் வாழ்ந்துவந்த ஆவீமியர்களை கப்தோரிலிருந்து*+ வந்த கப்தோரியர்கள் ஒழித்துக்கட்டிவிட்டு அங்கே குடியேறினார்கள்.) 24  நீங்கள் புறப்பட்டு அர்னோன் பள்ளத்தாக்கை*+ கடந்து போங்கள். இதோ, எஸ்போனின் ராஜாவும் எமோரியனுமான சீகோனை உங்கள் கையில் கொடுத்திருக்கிறேன்.+ அவனோடு போர் செய்து அவனுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். 25  இன்றுமுதல், பூமியிலுள்ள எல்லா ஜனங்களும் உங்களை நினைத்துப் பயப்படும்படி செய்வேன். அவர்கள் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கதிகலங்குவார்கள், நடுநடுங்குவார்கள்’*+ என்று சொன்னார். 26  பின்பு, சமாதான செய்தியைச்+ சொல்வதற்காக நான் கெதெமோத் வனாந்தரத்திலிருந்து+ எஸ்போனின் ராஜாவான சீகோனிடம் தூதுவர்களை அனுப்பி, 27  ‘உங்கள் தேசத்தின் வழியாகப் போக எங்களுக்கு அனுமதி கொடுங்கள். நாங்கள் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல் நெடுஞ்சாலையில் மட்டும் நடந்துபோவோம்.+ 28  அப்படி நடந்துபோவதற்கு அனுமதி கொடுங்கள். எங்களுக்குத் தேவையான உணவையும் தண்ணீரையும் நீங்கள் விலைக்குக் கொடுத்தால் போதும். 29  அப்போது, நாங்கள் யோர்தானைக் கடந்து எங்கள் கடவுளாகிய யெகோவா தரும் தேசத்துக்குப் போவோம். சேயீரில் வாழ்கிற ஏசாவின் வம்சத்தாரும் ஆரில் வாழ்கிற மோவாபியர்களும் எங்களுக்கு அப்படித்தான் செய்தார்கள்’ என்று சொன்னேன். 30  ஆனால், எஸ்போனின் ராஜாவான சீகோன் தன்னுடைய தேசத்தின் வழியாகப் போக நமக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஏனென்றால், அவனுடைய இதயம் இறுகிப்போகும்படி நம் கடவுளாகிய யெகோவா விட்டுவிட்டார்.+ அவனை நம் கையில் கொடுப்பதற்காகத்தான் அப்படிப் பிடிவாதமாக இருக்கும்படி அவனை விட்டுவிட்டார். அதன்படியே, அவன் நம் கையில் கொடுக்கப்பட்டான்.+ 31  அப்போது யெகோவா என்னிடம், ‘இதோ, சீகோனையும் அவன் தேசத்தையும் உங்கள் கையில் தந்திருக்கிறேன். நீங்கள் போய் அவனுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்’+ என்று சொன்னார். 32  நம்மோடு போர் செய்வதற்காக சீகோன் தன் ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு யாகாசுக்கு வந்தபோது,+ 33  நம் கடவுளாகிய யெகோவா அவனை நம் கையில் கொடுத்தார். அவனையும் அவன் மகன்களையும் அவனுடைய எல்லா ஆட்களையும் நாம் தோற்கடித்தோம். 34  அவனுடைய எல்லா நகரங்களையும் கைப்பற்றி அழித்தோம். அங்கிருந்த ஆண்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் ஒருவர்விடாமல் கொன்றுபோட்டோம்.+ 35  அந்த நகரங்களில் கைப்பற்றிய பொருள்களையும் ஆடுமாடுகளையும் மட்டும் நமக்காக வைத்துக்கொண்டோம். 36  அர்னோன் பள்ளத்தாக்கின்* ஓரத்தில் உள்ள ஆரோவேரிலிருந்து+ (அந்தப் பள்ளத்தாக்கில் உள்ள நகரத்திலிருந்து) கீலேயாத்வரை எந்த ஊரையும் நாம் விட்டுவைக்கவில்லை. நம்முடைய கடவுளான யெகோவா அவை எல்லாவற்றையும் நம் கையில் கொடுத்தார்.+ 37  ஆனாலும் அம்மோனியர்களின் தேசத்தை நாம் நெருங்கவில்லை.+ அதாவது யாபோக் பள்ளத்தாக்கின்+ எந்தப் பகுதியையும், மலைப்பகுதியிலுள்ள எந்த நகரத்தையும், நம் கடவுளாகிய யெகோவா நமக்குத் தடைசெய்த மற்ற எந்த இடத்தையும் நாம் நெருங்கவில்லை” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அவர்களுடைய கோபத்தைத் தூண்டக் கூடாது.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கை.”
அதாவது, “கிரேத்தாவிலிருந்து.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கை.”
வே.வா., “பிரசவ வேதனைப்படுவதுபோல் வேதனைப்படுவார்கள்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா