உபாகமம் 21:1-23

21  பின்பு அவர், “உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கும் தேசத்திலே ஒருவன் திறந்தவெளியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தால், கொலையாளி யாரென்று தெரியாமலும் இருந்தால்,  உங்களுடைய பெரியோர்களும்* நியாயாதிபதிகளும்+ அந்த இடத்துக்குப் போக வேண்டும். உடல் கிடக்கிற இடத்துக்கும் சுற்றியுள்ள நகரங்களுக்கும் உள்ள தூரத்தை அவர்கள் அளக்க வேண்டும்.  பின்பு, அந்த உடல் கிடக்கிற இடத்துக்கு மிகவும் பக்கத்திலுள்ள நகரத்தின் பெரியோர்கள் மந்தையிலிருந்து ஒரு இளம் பசுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தப் பசு அதுவரை வேலையில் பழக்கப்படாததாகவும், நுகத்தடியில் பூட்டப்படாததாகவும் இருக்க வேண்டும்.  அதன்பின், தண்ணீர் ஓடுகிற ஒரு பள்ளத்தாக்குக்கு அந்த இளம் பசுவை அவர்கள் கொண்டுவந்து அதன் கழுத்தை வெட்ட வேண்டும். அந்தப் பள்ளத்தாக்கு உழவு செய்யப்படாததாகவும் விதை விதைக்கப்படாததாகவும் இருக்க வேண்டும்.+  யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கும் அவர் பெயரில் ஆசீர்வாதம் செய்வதற்கும்+ லேவியர்களான குருமார்களை யெகோவா தேர்ந்தெடுத்திருப்பதால் அவர்களும் அங்கு வர வேண்டும்.+ வன்முறை சம்பந்தப்பட்ட வழக்குகளை எப்படித் தீர்க்க வேண்டுமென்று அவர்கள் சொல்வார்கள்.+  அந்த உடல் கிடக்கிற இடத்துக்கு மிகவும் பக்கத்திலுள்ள நகரத்தின் பெரியோர்கள் எல்லாரும், பள்ளத்தாக்கில் வெட்டப்பட்ட அந்த இளம் பசுவின் மேல் தங்கள் கைகளைக் கழுவ வேண்டும்.+  பின்பு அவர்கள், ‘நாங்கள் இவனைக் கொலை செய்யவில்லை, இவன் கொலை செய்யப்பட்டதை நாங்கள் பார்க்கவும் இல்லை.  யெகோவாவே, நீங்கள் விடுவித்த+ உங்களுடைய இஸ்ரவேல் ஜனங்களைக் குற்றப்படுத்தாதீர்கள். இந்த அப்பாவி மனுஷனைக் கொன்ற பழியை உங்களுடைய ஜனங்கள்மேல் சுமத்தாதீர்கள்’+ என்று சொல்ல வேண்டும். அப்போது, அந்தக் கொலைப்பழி* அவர்கள்மேல் வராது.  இப்படி, நீங்கள் யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்தால் அந்த அப்பாவி மனுஷனின் கொலைப்பழியைச் சுமக்காமல் இருப்பீர்கள். 10  உங்கள் கடவுளாகிய யெகோவா போரில் தோற்கடித்த எதிரிகளை நீங்கள் ஒருவேளை பிடித்துக்கொண்டு வந்திருக்கலாம்.+ 11  அவர்களில் ஒரு அழகான பெண்ணை உங்களில் ஒருவன் பார்த்து, அவளிடம் மயங்கி, அவளை மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால், 12  அவளைத் தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வரலாம். அப்போது, அவள் தன் தலையை மொட்டையடித்துக்கொண்டு, நகங்களை வெட்டிக்கொள்ள வேண்டும். 13  பிடித்துவரப்பட்டபோது போட்டிருந்த உடையை மாற்றிக்கொண்டு அவனுடைய வீட்டில் இருக்க வேண்டும். அவள் தன்னுடைய அப்பா அம்மாவுக்காக ஒரு மாதம் முழுவதும் துக்கம் அனுசரிக்க வேண்டும்.+ பின்பு, அவன் அந்தப் பெண்ணோடு உறவுகொள்ளலாம். அவர்கள் இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்வார்கள். 14  அந்தப் பெண்ணை அவனுக்குப் பிடிக்காமல்போனால், அவள் இஷ்டப்படுகிற இடத்துக்குப் போக அவளை விட்டுவிட வேண்டும்.+ அவளை விற்கவோ கொடுமைப்படுத்தவோ கூடாது; ஏனென்றால், அவளைக் கட்டாயப்படுத்தி மனைவியாக்கிக்கொண்டான்.* 15  ஒருவேளை ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருக்கலாம். அவர்களில் ஒருத்தியை அவன் அதிகமாக நேசிக்கலாம். அந்த இரண்டு மனைவிகளுக்கும் மகன்கள் பிறக்கலாம். அவனுக்குப் பிடிக்காதவள் பெற்றெடுத்த மகன் மூத்த மகனாக இருந்தால்,+ 16  தன்னுடைய மகன்களுக்குச் சொத்தைப் பிரித்துக் கொடுக்கும் நாளில், பிடிக்காதவளுக்குப் பிறந்த மகனுக்குப் பதிலாகப் பிடித்தவளுக்குப் பிறந்த மகனை மூத்த மகனாக நடத்தக் கூடாது. 17  பிடிக்காதவளுக்குப் பிறந்த மகனுக்கு எல்லாவற்றிலும் இரண்டு பங்கைக் கொடுத்து மூத்த மகனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அவன்தான் முதல் வாரிசு.* மூத்த மகனின் உரிமை அவனுக்குத்தான் கிடைக்க வேண்டும்.+ 18  ஒருவேளை ஒரு மகன் பிடிவாதக்காரனாகவும், அடங்காதவனாகவும், அம்மா அப்பாவின் பேச்சைக் கேட்காதவனாகவும் இருக்கலாம்.+ அவனைத் திருத்துவதற்கு அவர்கள் எவ்வளவோ பாடுபட்டும் அவன் திருந்தாமல் இருந்தால்,+ 19  அவர்கள் அவனைப் பிடித்து நகரவாசலில் இருக்கிற பெரியோர்களிடம் கொண்டுபோக வேண்டும். 20  அங்கே அவர்களிடம், ‘இந்தப் பையன் ரொம்பப் பிடிவாதக்காரனாக இருக்கிறான், அடங்குவதே கிடையாது. எங்கள் பேச்சைக் கேட்பதே இல்லை. எப்போது பார்த்தாலும் குடித்துக்கொண்டும்+ தின்றுகொண்டும்+ இருக்கிறான்’ என்று சொல்ல வேண்டும். 21  அப்போது, அந்த நகரத்தின் ஆண்கள் எல்லாரும் அவனைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். இப்படி, உங்கள் நடுவிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும். இஸ்ரவேலர்கள் எல்லாரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள்.+ 22  ஒருவன் ஒரு பெரிய பாவத்தைச் செய்திருந்தால் அதற்காக அவனுக்கு மரண தண்டனை கொடுக்கப்படலாம்.+ அவனுடைய உடலை மரக் கம்பத்தில் தொங்கவிடுவதாக இருந்தால்,+ 23  ராத்திரி முழுவதும் அதை மரக் கம்பத்திலேயே விட்டுவிடக் கூடாது.+ அந்த நாளிலேயே அவனைக் கண்டிப்பாக அடக்கம் செய்துவிட வேண்டும். ஏனென்றால், மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கிற தேசத்தை நீங்கள் தீட்டுப்படுத்தக் கூடாது”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்களும்.”
வே.வா., “இரத்தப்பழி.”
வே.வா., “அவளை அவமானப்படுத்திவிட்டான்.”
வே.வா., “அவனுடைய ஆண்மையின் முதல் பலன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா