உபாகமம் 22:1-30

22  பின்பு அவர், “ஒரு இஸ்ரவேலனுடைய ஆடோ மாடோ வழிதவறித் திரிவதை நீங்கள் பார்த்தால், கண்டும்காணாமல் போய்விடக் கூடாது.+ அதை அவனிடம் கண்டிப்பாகக் கொண்டுபோய் விடவேண்டும்.  அவனுடைய வீடு அக்கம்பக்கத்தில் இல்லாவிட்டால் அல்லது அவன் யாரென்று தெரியாவிட்டால், அந்த மிருகத்தை உங்கள் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும். அவன் தேடி வரும்வரை அதை உங்களிடம் வைத்திருக்க வேண்டும். பின்பு, அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.+  அவனிடமிருந்து காணாமல் போனது கழுதையாக இருந்தாலும் துணிமணியாக இருந்தாலும் வேறெதுவாக இருந்தாலும், அதை நீங்கள் கண்டுபிடித்திருந்தால் இப்படித்தான் செய்ய வேண்டும். அதைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்துவிடக் கூடாது.  ஒரு இஸ்ரவேலனுடைய கழுதையோ காளையோ வழியில் விழுந்து கிடப்பதை நீங்கள் பார்த்தால், கண்டும்காணாமல் போய்விடக் கூடாது. அதைத் தூக்கிவிட கண்டிப்பாக அவனுக்கு உதவி செய்ய வேண்டும்.+  ஆண்களின் உடையைப் பெண்கள் போட்டுக்கொள்ளவோ பெண்களின் உடையை ஆண்கள் போட்டுக்கொள்ளவோ கூடாது. அப்படிச் செய்கிறவர்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.  போகும் வழியில், நீங்கள் ஒரு பறவையின் கூட்டை மரத்திலோ தரையிலோ ஒருவேளை பார்க்கலாம். அதில் குஞ்சுகளோ முட்டைகளோ இருக்கலாம். அவற்றின் மேல் தாய்ப் பறவை உட்கார்ந்திருந்தால், தாயையும் குஞ்சுகளையும் சேர்த்து எடுத்துக்கொள்ளக் கூடாது.+  தாய்ப் பறவையைப் போகவிட்ட பின்பு குஞ்சுகளை எடுத்துக்கொள்ளலாம். அப்படிச் செய்தால்தான், நீங்கள் ரொம்பக் காலம் சந்தோஷமாக வாழ்வீர்கள்.  நீங்கள் புது வீடு கட்டினால், மொட்டைமாடிக்குக்+ கைப்பிடிச்சுவர் வைக்க வேண்டும். ஏனென்றால், மாடியிலிருந்து யாராவது கீழே விழுந்தால் உங்கள் வீட்டில் இருக்கிறவர்கள்மேல் கொலைப்பழி* வரும்.  உங்கள் திராட்சைத் தோட்டத்தில் வேறெந்த விதையையும் விதைக்கக் கூடாது.+ அப்படி விதைத்தால், விளைந்த பயிர்களையும் திராட்சைத் தோட்டத்தின் விளைச்சலையும் சேர்த்து வழிபாட்டுக் கூடாரத்துக்குக் கொடுத்துவிட வேண்டும். 10  காளையையும் கழுதையையும் இணைத்து நிலத்தை உழக் கூடாது.+ 11  கம்பளியையும் நாரிழையையும்* சேர்த்து நெய்த உடையை நீங்கள் போட்டுக்கொள்ளக் கூடாது.+ 12  உங்கள் உடையின் நான்கு ஓரங்களிலும் குஞ்சங்கள்* வைக்க வேண்டும்.+ 13  ஒருவன் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு அவளுடன் உறவுகொண்ட பின்பு அவளை வெறுத்து, 14  நடத்தை கெட்டவள் என்று குற்றம்சாட்டி, ‘இந்தப் பெண்ணை நான் கல்யாணம் செய்தேன், ஆனால் இவளோடு உறவுகொண்டபோது இவள் கற்பில்லாதவள் என்று தெரிந்துகொண்டேன்’ என்று சொல்லி அவளுடைய பெயரைக் கெடுத்தால், 15  அவள் கற்புள்ளவள் என்பதற்கான ஆதாரத்தை அவளுடைய அம்மாவும் அப்பாவும் நகரவாசலில் இருக்கிற பெரியோர்களிடம்* கொண்டுபோய்க் காட்ட வேண்டும். 16  அந்தப் பெண்ணின் அப்பா அந்தப் பெரியோர்களிடம், ‘இவனுக்கு நான் என் பெண்ணைக் கொடுத்தேன். ஆனால், இவன் அவளை வெறுக்கிறான். 17  “உங்கள் மகள் கற்பில்லாதவள் என்பதைத் தெரிந்துகொண்டேன்” என்று சொல்லி அவள்மேல் அபாண்டமாகப் பழி போடுகிறான். ஆனால், அவள் கற்புள்ளவள் என்பதற்கு இதோ ஆதாரம்’ என்று சொல்ல வேண்டும். பின்பு, நகரத்துப் பெரியோர்கள் முன்னால் அவர்கள் அந்தத் துணியை விரிக்க வேண்டும். 18  அப்போது, நகரத்துப் பெரியோர்கள்+ அவனைப் பிடித்து தண்டனை விதிக்க வேண்டும்.+ 19  அவனுக்கு 100 வெள்ளி சேக்கல்* அபராதம் விதிக்க வேண்டும். அதை வாங்கி அந்தப் பெண்ணின் அப்பாவிடம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், இஸ்ரவேலிலுள்ள ஒரு கன்னிப்பெண்ணின் பெயரை அவன் கெடுத்திருக்கிறான்.+ அவள் தொடர்ந்து அவனுடைய மனைவியாக இருப்பாள். வாழ்நாள் முழுக்க அவளை அவன் விவாகரத்து செய்யக் கூடாது. 20  ஆனால், அவனுடைய குற்றச்சாட்டு உண்மையாக இருந்து, அவள் கற்புள்ளவள் என்பதற்கு ஆதாரம் இல்லாவிட்டால், 21  அந்தப் பெண்ணை அவளுடைய அப்பாவின் வீட்டு வாசலுக்குக் கொண்டுவர வேண்டும். அந்த நகரத்து ஆண்கள் அவளைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். ஏனென்றால், அவள் தன்னுடைய அப்பாவின்+ வீட்டில் இருந்தபோது ஒழுக்கக்கேடாக நடந்திருக்கிறாள்.* இஸ்ரவேலில் கேவலமான காரியத்தைச் செய்திருக்கிறாள்.+ அதனால், தீமையை உங்கள் நடுவிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.+ 22  ஒருவன் இன்னொருவனுடைய மனைவியோடு உறவுகொள்ளும்போது கையும் களவுமாகப் பிடிபட்டால், அவனும் அவளும் கொல்லப்பட வேண்டும்.+ இப்படி, தீமையை இஸ்ரவேலின் நடுவிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும். 23  ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட கன்னிப்பெண் ஊருக்குள் இருக்கும்போது இன்னொருவன் அவளைப் பார்த்து அவளுடன் உறவுகொண்டால், 24  அந்த இரண்டு பேரையும் நகரவாசலுக்குக் கொண்டுவந்து கல்லெறிந்து கொல்ல வேண்டும். ஏனென்றால், அந்தப் பெண் ஊருக்குள் இருந்தும் உதவிக்காகக் கூச்சல் போடவில்லை. அந்த மனுஷனும் இன்னொருவனுடைய மனைவியாகிய அவளை மானபங்கம் செய்துவிட்டான்.+ அதனால், தீமையை உங்கள் நடுவிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும். 25  ஆனால், நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண்ணை வயல்வெளியில் அவன் பார்த்து அவளைப் பலாத்காரம் செய்தால், அவன் மட்டும்தான் கொல்லப்பட வேண்டும். 26  அந்தப் பெண்ணை நீங்கள் ஒன்றும் செய்யக் கூடாது. மரண தண்டனை பெற வேண்டிய அளவுக்கு எந்தக் குற்றமும் அவள் செய்யவில்லை. ஒருவன் இன்னொருவனைத் தாக்கி படுகொலை செய்வதைப் போலத்தான் இதையும் கருத வேண்டும்.+ 27  ஏனென்றால், அந்தப் பெண்ணை வயல்வெளியில் அவன் கெடுத்தபோது அவள் கூச்சல் போட்டும், காப்பாற்ற யாரும் வராமல் போய்விட்டார்கள். 28  ஆனால், நிச்சயிக்கப்படாத கன்னிப்பெண்ணை ஒருவன் பார்த்து அவளைப் பலவந்தமாய்ப் பிடித்திழுத்து அவளுடன் உறவுகொண்டால், அவர்கள் பிடிபடும்போது,+ 29  அவளுடன் உறவுகொண்டவன் அவளுடைய அப்பாவுக்கு 50 வெள்ளி சேக்கல் கொடுக்க வேண்டும். அவள் அவனுடைய மனைவியாவாள்.+ ஏனென்றால், அவன் அவளை மானபங்கம் செய்துவிட்டான். வாழ்நாள் முழுக்க அவளை அவன் விவாகரத்து செய்யக் கூடாது. 30  ஒருவனும் தன் அப்பாவின் மனைவியைத் தன்னுடைய மனைவியாக்கிக்கொள்ளக் கூடாது. அது அவனுடைய அப்பாவை அவமானப்படுத்துவதாக இருக்கும்”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “இரத்தப்பழி.”
அதாவது, “லினனையும்.”
வே.வா., “தொங்கல்கள்.”
வே.வா., “மூப்பர்களிடம்.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “விபச்சாரம் செய்திருக்கிறாள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா