உபாகமம் 4:1-49

4  பின்பு, “இஸ்ரவேலர்களே, நீங்கள் கடைப்பிடிப்பதற்காக இப்போது நான் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிற விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கேட்டு நடங்கள். அப்போது வாழ்வு பெறுவீர்கள்,+ உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா கொடுக்கப்போகிற தேசத்துக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள்.  என் கட்டளைகளோடு நீங்கள் எதையும் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது.+ உங்கள் கடவுளாகிய யெகோவா தந்திருக்கிற அந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.  பாகால் பேயோரின் விஷயத்தில் யெகோவா என்ன செய்தார் என்பதை உங்கள் கண்களாலேயே பார்த்திருக்கிறீர்கள். உங்கள் ஜனங்களில் பாகால் பேயோரைக் கும்பிட்ட ஒவ்வொருவனையும் உங்கள் கடவுளாகிய யெகோவா அழித்துப்போட்டார்.+  ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவாவை உறுதியாய்ப் பிடித்துக்கொண்ட நீங்கள் எல்லாரும் இன்று உயிரோடு இருக்கிறீர்கள்.  இதோ, என் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே, அவருடைய விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.+ உங்களுக்குச் சொந்தமாகப்போகும் தேசத்தில் நீங்கள் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.  நீங்கள் அவற்றைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.+ அப்போது, இந்த விதிமுறைகளைப் பற்றிக் கேள்விப்படுகிற ஜனங்களுக்கு முன்னால் ஞானமும்+ புத்தியும்*+ உள்ளவர்களாக இருப்பீர்கள். அவர்கள் உங்களைப் பார்த்து, ‘இந்த மாபெரும் தேசத்தைச் சேர்ந்த ஜனங்கள் உண்மையிலேயே ஞானமும் புத்தியுமுள்ள ஜனங்கள்’ என்று சொல்வார்கள்.+  நாம் கூப்பிடுகிறபோதெல்லாம் நமக்குப் பக்கத்தில் வருகிற நம் கடவுளாகிய யெகோவாவைப் போல ஒரு கடவுள் வேறெந்தத் தேசத்துக்காவது உண்டா?+  இன்று நான் உங்களுக்குக் கொடுப்பதைப் போன்ற* நீதியான விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் வேறெந்தத் தேசத்துக்காவது இருக்கிறதா?+  உங்கள் கண்களால் பார்த்தவற்றை மறந்துவிடாதபடி மிகக் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் இருங்கள். இவை உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களுடைய நெஞ்சைவிட்டு நீங்கக் கூடாது. இவற்றை உங்களுடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.+ 10  ஓரேபில் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நீங்கள் நின்ற நாளில் யெகோவா என்னிடம், ‘என் வார்த்தைகளைக் கேட்பதற்காக+ இந்த ஜனங்களை என்னிடம் ஒன்றுகூடிவரச் செய். அப்போது, இந்தப் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவர்கள் எனக்குப் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வார்கள்,+ தங்களுடைய பிள்ளைகளுக்கும் அவற்றைச் சொல்லிக்கொடுப்பார்கள்’+ என்றார். 11  அதனால், நீங்கள் அந்த மலையின் அடிவாரத்தில் வந்து நின்றீர்கள். அந்த மலையில் வானத்தைத் தொடுமளவுக்கு நெருப்பு எரிந்தது. இருண்ட மேகங்களும் பயங்கரமான இருட்டும் சூழ்ந்துகொண்டன.+ 12  அந்த நெருப்பிலிருந்து யெகோவா பேசினார்.+ அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்டீர்கள், ஆனால் நீங்கள் எந்த உருவத்தையும் பார்க்கவில்லை.+ அவருடைய குரலை மட்டும்தான் கேட்டீர்கள்.+ 13  நீங்கள் கடைப்பிடிப்பதற்காக பத்துக் கட்டளைகளைக்+ கொடுத்து, உங்களோடு ஒரு ஒப்பந்தத்தை அவர் செய்தார்.+ பின்பு, அந்தக் கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.+ 14  நீங்கள் கைப்பற்றப்போகிற தேசத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் உங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று யெகோவா என்னிடம் சொன்னார். 15  அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள், ஓரேபிலே நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா உங்களோடு பேசிய நாளில் நீங்கள் எந்த உருவத்தையும் பார்க்கவில்லை. 16  ஆகவே, எந்தவொரு வடிவத்திலும் சின்னங்களையோ சிலைகளையோ உண்டாக்காதீர்கள்.+ ஆண் உருவம், பெண் உருவம், 17  பூமியிலுள்ள மிருகத்தின் உருவம், வானத்தில் பறக்கிற பறவையின் உருவம்,+ 18  தரையில் ஊருகிற பிராணியின் உருவம், தண்ணீரில் நீந்துகிற மீனின் உருவம் என எந்த உருவத்தையாவது உண்டாக்கி+ அக்கிரமம் செய்துவிடாதீர்கள். 19  வானத்துப் படைகளான சூரிய, சந்திர, நட்சத்திரங்களைப் பார்க்கும்போது, அவற்றுக்குமுன் மண்டிபோட்டு வணங்க வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு வந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.+ பூமியிலுள்ள எல்லா ஜனங்களுக்காகவும் அவற்றை உங்கள் கடவுளாகிய யெகோவா படைத்திருக்கிறார். 20  இருந்தாலும், யெகோவா உங்களைத்தான் அவருடைய சொந்த ஜனமாகத் தேர்ந்தெடுத்து, இரும்பு உலை போன்ற எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். இன்றுவரை நீங்கள்தான் அவருடைய சொத்தாக இருக்கிறீர்கள்.+ 21  நீங்கள் செய்த தவறால் யெகோவா என்மேல் கோபப்பட்டார்.+ உங்களுடைய கடவுளாகிய யெகோவா, நான் இந்த யோர்தானைக் கடக்க மாட்டேன் என்றும், அவர் சொத்தாகக் கொடுக்கப்போகிற நல்ல தேசத்துக்குள் போக மாட்டேன் என்றும் உறுதியாகச் சொல்லிவிட்டார்.+ 22  அதனால் நான் இந்தத் தேசத்திலேயே செத்துவிடுவேன், யோர்தானைக் கடந்துபோக மாட்டேன்.+ ஆனால், நீங்கள் அதைக் கடந்துபோய் அந்த நல்ல தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள். 23  உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு செய்த ஒப்பந்தத்தை மறக்காதபடி கவனமாக இருங்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா தடை செய்திருக்கிற எந்தவொரு உருவத்தையும் உண்டாக்காதீர்கள்.+ 24  உங்கள் கடவுளாகிய யெகோவா, சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.+ தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுளாக இருக்கிறார்.+ 25  அந்தத் தேசத்தில் நீங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பெற்று நீண்ட காலம் வாழ்ந்தபின், நீங்கள் தறிகெட்டுப்போய் ஏதாவது ஒரு உருவத்தை உண்டாக்கினாலோ,+ உங்கள் கடவுளாகிய யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்து அவரைக் கோபப்படுத்தினாலோ,+ 26  யோர்தானைக் கடந்துபோய் நீங்கள் சொந்தமாக்கப்போகிற அந்தத் தேசத்திலிருந்து சீக்கிரமாக அழிந்துபோவீர்கள், இது நிச்சயம். இன்று பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்து இதைச் சொல்கிறேன். அந்தத் தேசத்தில் நீங்கள் ரொம்பக் காலம் வாழ மாட்டீர்கள், அடியோடு அழிந்துபோவீர்கள்.+ 27  யெகோவா உங்களை மற்ற தேசத்தாரின் நடுவில் சிதறிப்போக வைப்பார்.+ யெகோவா உங்களைத் துரத்தியடிக்கிற தேசங்களில், கொஞ்சம் பேர்தான் தப்பிப்பீர்கள்.+ 28  மரத்தாலும் கல்லாலும் மனுஷர்கள் செய்த தெய்வங்களுக்கு, அதாவது பார்க்கவோ கேட்கவோ ருசிக்கவோ முகரவோ முடியாத தெய்வங்களுக்கு, அங்கே நீங்கள் சேவை செய்ய வேண்டியிருக்கும்.+ 29  அங்கே நீங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும்+ உங்கள் கடவுளாகிய யெகோவாவை நாடித் தேடினால், நிச்சயம் அவரைக் கண்டடைவீர்கள்.+ 30  பிற்காலத்தில் நீங்கள் இந்தக் கஷ்டங்களையெல்லாம் அனுபவித்து மனவேதனையில் துடிக்கும்போது உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்புவீர்கள், அவர் சொல்வதைக் கேட்பீர்கள்.+ 31  உங்கள் கடவுளாகிய யெகோவா இரக்கமுள்ள கடவுள்.+ அவர் உங்களைக் கைவிடவும் மாட்டார், அழிக்கவும் மாட்டார். உங்களுடைய முன்னோர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தை அவர் மறக்கவும் மாட்டார்.+ 32  கடவுள் மனுஷனைப் படைத்த நாளிலிருந்து இத்தனை காலமாக இப்படிப்பட்ட அற்புதமான செயல்கள் பூமியில் எங்காவது நடந்திருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள். வானத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை விசாரித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட செயல்களைப் பற்றி யாராவது கேள்விப்பட்டிருப்பார்களா?+ 33  நெருப்பின் நடுவிலிருந்து கடவுள் பேசியதை உங்களைப் போல வேறு யாராவது கேட்டிருக்கிறார்களா, கேட்டு உயிரோடு இருந்திருக்கிறார்களா?+ 34  உங்கள் கடவுளாகிய யெகோவா எகிப்தில் உங்கள் கண் முன்னாலேயே தண்டனைத் தீர்ப்புகள் கொடுத்து, அதிசயங்களையும் அற்புதங்களையும்+ செய்து, போராலும்+ கைபலத்தாலும்+ மகா வல்லமையாலும் பயங்கரமான செயல்களாலும்+ உங்களை விடுதலை செய்தாரே. இதுபோல் வேறெந்தக் கடவுளாவது ஒரு ஜனத்தை இன்னொரு ஜனத்தின் நடுவிலிருந்து தனக்காகப் பிரித்தெடுத்தது உண்டா? 35  யெகோவாதான் உண்மைக் கடவுள், அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை+ என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளத்தான் இதையெல்லாம் அவர் செய்தார்.+ 36  பரலோகத்திலிருந்து அவர் பேசுவதை நீங்கள் கேட்டீர்கள், பூமியில் அவருடைய நெருப்பு பற்றியெரிவதைப் பார்த்தீர்கள், அந்த நெருப்பிலிருந்து வந்த அவருடைய குரலைக் கேட்டீர்கள்.+ உங்களைத் திருத்துவதற்குத்தான் இப்படியெல்லாம் நடக்கும்படி அவர் செய்தார். 37  கடவுள் உங்களுடைய முன்னோர்களை நேசித்ததாலும் அவர்களுடைய வம்சத்தாரைத் தேர்ந்தெடுத்ததாலும்,+ அவர் உங்களோடு இருந்து, தன்னுடைய மகா வல்லமையால் எகிப்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வந்தார். 38  உங்களைவிட பலம்படைத்த மாபெரும் தேசங்களை உங்கள் முன்னால் துரத்தியடித்தார். அவர்களுடைய தேசங்களை உங்களுக்குச் சொத்தாகக் கொடுப்பதற்கு அப்படிச் செய்தார். அவர் நினைத்தபடியே இன்று நடந்துவருகிறது.+ 39  அதனால், மேலே வானத்திலும் கீழே பூமியிலும் யெகோவாதான் உண்மைக் கடவுள் என்பதை இந்த நாளில் தெரிந்துகொள்ளுங்கள்.+ அதை இதயத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ 40  நான் இன்று உங்களுக்குச் சொல்கிற அவருடைய விதிமுறைகளையும் கட்டளைகளையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், நீங்களும் உங்களுடைய சந்ததியாரும் சந்தோஷமாக இருப்பீர்கள், உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தில் நீடூழி வாழ்வீர்கள்”+ என்று சொன்னார். 41  அந்தச் சமயத்தில், யோர்தானின் கிழக்கே மூன்று நகரங்களை+ மோசே தேர்ந்தெடுத்தார். 42  ஒருவன் எந்த முன்விரோதமும் இல்லாமல் இன்னொருவனைத் தெரியாத்தனமாகக் கொலை செய்திருந்தால்,+ இவற்றில் ஏதாவது ஒரு நகரத்துக்கு ஓடிப்போய் உயிர் பிழைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.+ 43  பீடபூமியாகிய* வனாந்தரத்திலுள்ள பேசேர் நகரத்தை+ ரூபன் கோத்திரத்தாருக்கு அவர் கொடுத்தார், கீலேயாத்திலுள்ள ராமோத் நகரத்தை+ காத் கோத்திரத்தாருக்குக் கொடுத்தார், பாசானிலுள்ள கோலான் நகரத்தை+ மனாசே கோத்திரத்தாருக்குக் கொடுத்தார்.+ 44  இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே கொடுத்த திருச்சட்டம்+ இதுதான். 45  இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபின், மோசே அவர்களுக்குக் கொடுத்த எச்சரிப்புகளும்* விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் இவைதான்.+ 46  யோர்தான் பிரதேசத்தில் பெத்-பேயோருக்கு+ எதிரில் உள்ள பள்ளத்தாக்கில், எஸ்போனில்+ வாழ்ந்துவந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தில், இவற்றைக் கொடுத்தார். எகிப்திலிருந்து வந்தபின், மோசேயும் இஸ்ரவேலர்களும் அந்த ராஜாவை வீழ்த்தியிருந்தார்கள்.+ 47  அவனுடைய தேசத்தையும் பாசானின் ராஜாவாகிய ஓகின்+ தேசத்தையும் இஸ்ரவேலர்கள் கைப்பற்றியிருந்தார்கள். எமோரியர்களுடைய இந்த இரண்டு ராஜாக்களின் தேசங்களும் யோர்தான் பிரதேசத்துக்குக் கிழக்கே, 48  அர்னோன் பள்ளத்தாக்கின்* ஓரத்திலிருந்த ஆரோவேர்+ தொடங்கி சியோன் மலை வரையிலும், அதாவது எர்மோன் மலை வரையிலும்,+ 49  யோர்தான் பிரதேசத்துக்குக் கிழக்கே உள்ள அரபா முழுவதிலும், பிஸ்கா+ மலைச் சரிவுகளின் கீழே உள்ள அரபா கடல்* வரையிலும் பரந்திருந்தன.

அடிக்குறிப்புகள்

வே.வா., “புரிந்துகொள்ளுதலும்.”
வே.வா., “கொடுக்கிற முழு திருச்சட்டத்திலும் உள்ளதைப் போன்ற.”
பீடபூமி என்பது மேடாக இருக்கிற பரந்த நிலப்பகுதி.
வே.வா., “நினைப்பூட்டுதல்களும்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”
அதாவது, “உப்புக் கடல்; சவக் கடல்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா