உபாகமம் 9:1-29

9  பின்பு அவர், “இஸ்ரவேலர்களே, கேளுங்கள். இன்றைக்கு நீங்கள் யோர்தானைக் கடந்துபோய்,+ உங்களைவிட பெரியதாகவும் பலம்படைத்ததாகவும் இருக்கிற தேசங்களைக் கைப்பற்றப்போகிறீர்கள்.+ அங்கிருக்கிற நகரங்கள் மாபெரும் நகரங்கள், வானத்தைத் தொடுமளவுக்கு உயரமான மதில்கள் உள்ள நகரங்கள்.+  அங்கு ஏராளமான ஏனாக்கியர்கள் இருக்கிறார்கள்.+ அவர்கள் மிகவும் உயரமானவர்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கே தெரியும். அவர்களோடு மோத யாராலும் முடியாது என்று ஜனங்கள் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறீர்கள்.  அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு முன்னால் போவார் என்பதை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.+ அவர் சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.+ அவர் உங்கள் கண் முன்னால் அவர்களைத் தோற்கடித்து, அழித்துவிடுவார். யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, நீங்கள் அவர்களைச் சீக்கிரமாகத் துரத்தியடிப்பீர்கள், ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவீர்கள்.+  உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முன்னாலிருந்து அவர்களைத் துரத்தியடிக்கும்போது, ‘நாங்கள் நீதிமான்களாக இருப்பதால்தான் இந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள யெகோவா எங்களைக் கூட்டிக்கொண்டுவந்தார்’ என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.+ அந்த ஜனங்கள் பொல்லாதவர்களாக இருப்பதால்தான்+ யெகோவா அவர்களைத் துரத்தியடிக்கிறார்.  நீங்கள் ஏதோ நீதிமான்களாகவும் உள்ளத்தில் நேர்மையானவர்களாகவும் இருப்பதால் அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கப்போவதாக நினைத்துக்கொள்ளாதீர்கள். அவர்கள் பொல்லாதவர்களாக இருப்பதால்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முன்னாலிருந்து அவர்களைத் துரத்தியடிக்கிறார்.+ அதோடு, உங்கள் முன்னோர்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காகவும்+ யெகோவா அவர்களைத் துரத்தியடிக்கிறார்.  அதனால், நீங்கள் ஏதோ நீதிமான்களாக இருப்பதால் உங்கள் கடவுளாகிய யெகோவா இந்த நல்ல தேசத்தை உங்களுக்குத் தருகிறார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் எல்லாரும் முரண்டுபிடிக்கிற ஜனங்கள்.+  வனாந்தரத்தில் நீங்கள் எப்படியெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கோபத்தைக் கிளறினீர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.+ நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாளிலிருந்து இந்த இடத்துக்கு வந்து சேரும்வரை, யெகோவாவின் பேச்சை மீறி நடந்திருக்கிறீர்கள்.+  ஓரேபிலும் யெகோவாவின் கோபத்தைக் கிளறினீர்கள். யெகோவாவுக்கு உங்கள்மேல் பயங்கர கோபம் வந்ததால், உங்களை ஒழித்துக்கட்ட நினைத்தார்.+  யெகோவா உங்களோடு செய்த ஒப்பந்தத்தின் கற்பலகைகளைப்+ பெற்றுக்கொள்வதற்காக நான் மலையில் ஏறிப்போனேன். ராத்திரி பகலாக 40 நாட்கள்+ எதையும் சாப்பிடாமலும் குடிக்காமலும் அங்கேயே இருந்தேன். 10  அப்போது, யெகோவா தன்னுடைய சக்தியால்* எழுதிய அந்த இரண்டு கற்பலகைகளை என்னிடம் தந்தார். நீங்கள் எல்லாரும் ஒன்றுகூடிவந்த நாளில், மலைமேல் எரிந்துகொண்டிருந்த நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா சொன்ன எல்லா வார்த்தைகளும் அவற்றில் எழுதப்பட்டிருந்தன.+ 11  40 நாட்களுக்குப் பின்பு, ஒப்பந்தம் எழுதப்பட்ட அந்த இரண்டு கற்பலகைகளை யெகோவா என்னிடம் கொடுத்தார். 12  பின்பு யெகோவா என்னிடம், ‘உடனே கீழே இறங்கிப் போ! நீ எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த ஜனங்கள் தறிகெட்டு நடக்கிறார்கள்.+ எவ்வளவு சீக்கிரமாக என் வழியைவிட்டு விலகிவிட்டார்கள்! ஒரு உலோகச் சிலையை உண்டாக்கி அதை வணங்குகிறார்கள்’+ என்றார். 13  பின்பு யெகோவா என்னிடம், ‘இந்த ஜனங்களைப் பற்றி எனக்குத் தெரியும், இவர்கள் முரண்டுபிடிப்பவர்கள்.+ 14  இந்த உலகத்தில் இவர்களுடைய பெயரே இல்லாதபடி இவர்களை ஒழித்துக்கட்டலாம் என்று நினைத்திருக்கிறேன். இவர்களைவிட பெரிய தேசமாகவும் பலம்படைத்த தேசமாகவும் உன்னை உருவாக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்’+ என்றார். 15  அதற்குப் பின்பு, மலையிலிருந்து கீழே இறங்கி வந்தேன். அப்போது அந்த மலையில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.+ ஒப்பந்தம் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை என்னுடைய கைகளில் வைத்திருந்தேன்.+ 16  நான் உங்களைப் பார்த்தபோது, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துகொண்டிருந்தீர்கள்! ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்து வணங்கிக்கொண்டிருந்தீர்கள். அவ்வளவு சீக்கிரத்தில் யெகோவாவின் வழியைவிட்டு விலகிப்போயிருந்தீர்கள்!+ 17  அதனால், என் கைகளிலிருந்த இரண்டு கற்பலகைகளையும் வீசியெறிந்தேன். அவை உங்கள் கண் முன்னால் சுக்குநூறாக உடைந்தன.+ 18  பிறகு, நான் முன்பு போலவே ராத்திரி பகலாக 40 நாட்கள் எதையும் சாப்பிடாமலும் குடிக்காமலும் யெகோவாவுக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தேன்.+ ஏனென்றால், நீங்கள் யெகோவாவுக்குப் பிடிக்காத எத்தனையோ பாவங்களைச் செய்து அவருடைய கோபத்தைக் கிளறியிருந்தீர்கள். 19  யெகோவா பயங்கர கோபத்தோடு உங்களை ஒழித்துக்கட்ட நினைத்ததால்+ நான் நடுநடுங்கிப்போய் யெகோவாவிடம் கெஞ்சினேன். அந்தத் தடவையும் அவர் என் வேண்டுதலைக் கேட்டார்.+ 20  ஆரோன்மேலும் யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்ததால் அவரை அழிக்க நினைத்தார்.+ அந்தச் சமயத்திலும் நான் ஆரோனுக்காக அவரிடம் மன்றாடினேன். 21  பின்பு, அந்தப் பாழாய்ப்போன கன்றுக்குட்டி சிலையைத்+ தீயில் சுட்டெரித்தேன். அதை நன்றாக இடித்துத் தூள் தூளாக்கி, மலையிலிருந்து பாய்ந்துவந்த தண்ணீரில் கொட்டிவிட்டேன்.+ 22  அதோடு, தபேராவிலும்+ மாசாவிலும்+ கிப்ரோத்-அத்தாவாவிலும்+ நீங்கள் யெகோவாவின் கோபத்தைக் கிளறினீர்கள். 23  யெகோவா உங்களை காதேஸ்-பர்னேயாவிலிருந்து அனுப்பியபோது,+ ‘நீங்கள் போய் அந்தத் தேசத்தைக் கைப்பற்றுங்கள், நான் கண்டிப்பாக அதை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்று சொன்னார். ஆனால், நீங்கள் மறுபடியும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளையை மீறி நடந்தீர்கள்.+ அவர்மேல் விசுவாசம் வைக்கவில்லை,+ அவருக்குக் கீழ்ப்படியவில்லை. 24  எனக்குத் தெரிந்த நாளிலிருந்தே நீங்கள் யெகோவாவின் பேச்சை மீறிவந்திருக்கிறீர்கள். 25  உங்களை அழித்துவிடுவதாக யெகோவா சொல்லியிருந்ததால் ராத்திரி பகலாக 40 நாட்கள் யெகோவாவின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தேன்.+ 26  நான் யெகோவாவிடம் மன்றாடி, ‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து உங்களுடைய ஜனங்களை அழித்துவிடாதீர்கள். இவர்கள் உங்களுடைய சொத்து.+ நீங்கள் உங்களுடைய மகத்துவத்தால் இவர்களை விடுவித்து, உங்களுடைய கைபலத்தால் எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்கள்.+ 27  உங்கள் ஊழியர்களாகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் நினைத்துப் பாருங்கள்.+ இந்த ஜனங்களுடைய பிடிவாதத்தையும் அக்கிரமத்தையும் பாவத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.+ 28  இல்லாவிட்டால், “வாக்குக் கொடுத்த தேசத்துக்கு இஸ்ரவேலர்களைக் கூட்டிக்கொண்டு போக யெகோவாவுக்குச் சக்தியில்லை. அவர்களை அவர் வெறுத்துவிட்டார். அதனால்தான் அவர்களை வனாந்தரத்துக்குக் கொண்டுவந்து கொன்றுபோட்டார்” என்று எகிப்தியர்கள் சொல்வார்களே.+ 29  இவர்கள் உங்களுடைய ஜனங்கள்தானே? உங்களுடைய சொத்துதானே?+ நீங்கள் உங்களுடைய மகா வல்லமையாலும் பலத்தாலும் இவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தீர்களே!’+ என்று சொன்னேன்” என்றார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “விரலால்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா