எசேக்கியேல் 10:1-22
10 நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, கேருபீன்களுடைய தலைகளுக்கு மேலே இருந்த தளத்தின் மேல் நீலமணிக் கல்லைப் போல ஒன்று தெரிந்தது. அது பார்ப்பதற்குச் சிம்மாசனத்தைப் போல இருந்தது.+
2 அப்போது கடவுள் நாரிழை* உடை போட்டிருந்தவரிடம்,+ “சக்கரங்களுக்கு நடுவிலும்+ கேருபீன்களுக்குக் கீழாகவும் போய், அவர்களுக்கு இடையிலுள்ள நெருப்புத் தணலை+ இரண்டு கைகளிலும் எடுத்து நகரத்தின் மேல் வீசு”+ என்று சொன்னார். அதன்படியே, அவர் அங்கு போவதை நான் பார்த்தேன்.
3 அவர் போனபோது கேருபீன்கள் ஆலயத்தின் வலது பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். அதன் உட்பிரகாரத்தை மேகம் மூடியது.
4 யெகோவாவின் மகிமை+ கேருபீன்களுக்கு மேலே இருந்து எழும்பி, ஆலயத்தின் வாசல் கதவுக்கு வந்தது. ஆலயம் கொஞ்சம் கொஞ்சமாக மேகத்தால் நிரம்பியது.+ பிரகாரம் முழுவதும் யெகோவாவின் மகிமையால் பிரகாசித்தது.
5 கேருபீன்களுடைய சிறகுகளின் சத்தம் வெளிப்பிரகாரம்வரை கேட்டது. சர்வவல்லமையுள்ள கடவுளின் பேச்சு சத்தத்தைப் போல அது இருந்தது.+
6 பின்பு கடவுள் நாரிழை உடை போட்டிருந்தவரிடம், “சக்கரங்களுக்கு நடுவே போய், கேருபீன்களுக்கு இடையில் இருக்கிற நெருப்புத் தணலை எடு” என்று சொன்னார். உடனே, அவர் போய் சக்கரத்துக்குப் பக்கத்தில் நின்றார்.
7 அப்போது, கேருபீன்களில் ஒருவர் கையை நீட்டி, கேருபீன்களுக்கு இடையில் இருந்த நெருப்புத் தணலில்+ கொஞ்சத்தை எடுத்து, நாரிழை உடை போட்டிருந்தவருடைய+ இரண்டு கைகளிலும் வைத்தார். அவரும் அதை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
8 கேருபீன்களுடைய சிறகுகளுக்குக் கீழே மனுஷ கைகளைப் போன்ற கைகள் இருந்தன.+
9 நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, கேருபீன்களுக்குப் பக்கத்தில் நான்கு சக்கரங்கள் தெரிந்தன. ஒவ்வொரு கேருபீனுக்குப் பக்கத்திலும் ஒவ்வொரு சக்கரம் இருந்தது. அந்தச் சக்கரங்கள் படிகப்பச்சைக் கல் போல ஜொலித்தன.+
10 நான்கு சக்கரங்களும் பார்ப்பதற்கு ஒரேபோல் இருந்தன. அவை ஒவ்வொன்றும், ஒரு சக்கரத்துக்குள் இன்னொரு சக்கரத்தை வைத்தது போல இருந்தன.
11 அவை திரும்பாமலேயே எல்லா திசைகளிலும் போயின. கேருபீன்களுடைய முகத்தின்* திசையிலேயே அவை திரும்பாமல் போயின.
12 கேருபீன்களுடைய உடல் முழுவதும், அவர்களுடைய முதுகுகளும், கைகளும், சிறகுகளும், சக்கரங்களும் கண்களால் நிறைந்திருந்தன. அந்த நான்கு பேருடைய சக்கரங்களுமே சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.+
13 அந்தச் சக்கரங்களிடம் ஒரு குரல், “சக்கரங்களே!” என்று கூப்பிடுவதைக் கேட்டேன்.
14 ஒவ்வொருவருக்கும்* நான்கு முகங்கள் இருந்தன. முதலாவது முகம் கேருபீனின் முகமாகவும், இரண்டாவது முகம் மனுஷ முகமாகவும், மூன்றாவது முகம் சிங்க முகமாகவும், நான்காவது முகம் கழுகு முகமாகவும் இருந்தது.+
15 கேபார் ஆற்றுக்குப்+ பக்கத்தில் நான் பார்த்த அதே ஜீவன்கள்தான் அந்தக் கேருபீன்கள். அவர்கள் எழுந்து போகும்போது,
16 அவர்களோடு அந்தச் சக்கரங்களும் போயின. கேருபீன்கள் தங்களுடைய சிறகுகளை உயர்த்தி பூமியிலிருந்து மேலே எழும்பியபோது அந்தச் சக்கரங்களும் வேறு பக்கம் திரும்பாமல் கூடவே எழும்பின.+
17 அவர்கள் நின்றபோது அவையும் நின்றன. அவர்கள் எழுந்து போனபோது அவையும் எழுந்து போயின. ஏனென்றால், அந்த ஜீவன்களைத் தூண்டிய சக்தி அந்தச் சக்கரங்களிலும் இருந்தது.
18 பின்பு, யெகோவாவின் மகிமை+ ஆலயத்தின் வாசல் கதவைவிட்டுப் புறப்பட்டுப் போய் கேருபீன்களுக்கு மேலாக நின்றது.+
19 நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, அந்தக் கேருபீன்கள் சிறகுகளை உயர்த்தி பூமியிலிருந்து மேலே எழும்பினார்கள். கூடவே அந்தச் சக்கரங்களும் எழும்பின. அவர்கள் யெகோவாவுடைய ஆலயத்தின் கிழக்கு நுழைவாசலில் நின்றார்கள். இஸ்ரவேலின் கடவுளுடைய மகிமை அவர்கள்மேல் இருந்தது.+
20 கேபார் ஆற்றுக்குப்+ பக்கத்தில் இஸ்ரவேலின் கடவுளுடைய சிம்மாசனத்துக்குக் கீழே நான் பார்த்த அதே ஜீவன்கள்தான் அவர்கள். அதனால் அவர்கள் கேருபீன்கள் என்று தெரிந்துகொண்டேன்.
21 அந்த நான்கு பேருக்கும் நான்கு முகங்களும், நான்கு சிறகுகளும், அந்தச் சிறகுகளுக்குக் கீழே மனுஷ கைகளைப் போன்ற கைகளும் இருந்தன.+
22 அவர்களுடைய முகங்கள், கேபார் ஆற்றுக்குப் பக்கத்தில் நான் பார்த்த முகங்களைப் போலவே இருந்தன.+ அவர்கள் ஒவ்வொருவரும் திரும்பாமல் நேராகப் போனார்கள்.+
அடிக்குறிப்புகள்
^ அதாவது, “லினன்.”
^ நே.மொ., “அந்தத் தலையின்.”
^ அதாவது, “கேருபீன்கள் ஒவ்வொருவருக்கும்.”