எசேக்கியேல் 12:1-28

12  யெகோவா மறுபடியும் என்னிடம்,  “மனிதகுமாரனே, நீ அடங்காத ஜனங்களின் நடுவில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய். பார்ப்பதற்குக் கண்கள் இருந்தும் அவர்கள் பார்ப்பதில்லை, கேட்பதற்குக் காதுகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை.+ ஏனென்றால், அவர்கள் அடங்காத ஜனங்கள்.+  மனிதகுமாரனே, நீ சிறைபிடிக்கப்பட்டுப் போவது போல உன் மூட்டைமுடிச்சுகளைக் கட்டி வை. பின்பு, பகலில் எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது நீ சிறைபிடிக்கப்பட்டுப் போவது போல போ. அவர்கள் கண் முன்னாலேயே உன்னுடைய வீட்டைவிட்டு இன்னொரு இடத்துக்குப் போ. அவர்கள் அடங்காத ஜனங்களாக இருந்தாலும் நீ செய்வதை ஒருவேளை கவனிக்கலாம்.  நீ கட்டி வைத்த மூட்டைமுடிச்சுகளைப் பகல் நேரத்தில் அவர்களுடைய கண் முன்னாலேயே வெளியில் எடுத்து வை. பின்பு, சிறைபிடிக்கப்பட்டுப் போவது போல சாயங்காலத்தில் அவர்களுடைய கண் முன்னாலேயே புறப்பட்டுப் போ.+  அவர்களுடைய கண் முன்னாலேயே சுவரில் ஓட்டை போடு. அதன் வழியாக உன்னுடைய மூட்டைமுடிச்சுகளை வெளியே கொண்டுபோ.+  அவர்களுடைய கண் முன்னாலேயே உன்னுடைய மூட்டைமுடிச்சுகளைத் தோளில் வைத்துக்கொண்டு, இருட்டில் நடந்து போ. தரையைப் பார்க்க முடியாதபடி உன் முகத்தை மூடிக்கொள். ஏனென்றால், இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் உன்னை ஒரு அடையாளமாக ஆக்குகிறேன்”+ என்று சொன்னார்.  அவர் சொன்னபடியே நான் செய்தேன். சிறைபிடிக்கப்பட்டுப் போவது போலப் பகலிலே என்னுடைய மூட்டைமுடிச்சுகளை வெளியில் எடுத்து வைத்தேன். சாயங்காலத்தில் என் கையால் சுவரில் ஓட்டை போட்டேன். இருட்டியதும் மூட்டைமுடிச்சுகளை எடுத்துத் தோளில் வைத்துக்கொண்டு அவர்களுடைய கண் முன்னாலேயே புறப்பட்டுப் போனேன்.  காலையில் மறுபடியும் யெகோவா என்னிடம்,  “மனிதகுமாரனே, அடங்காத ஜனங்களாகிய இஸ்ரவேலர்கள் உன்னிடம், ‘என்ன செய்கிறாய்’ என்று கேட்டார்கள்தானே? 10  அதனால் நீ அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “எருசலேமின் தலைவனுக்கும்+ அந்த நகரத்தில் இருக்கிற இஸ்ரவேல் ஜனங்களுக்கும் கிடைக்கப்போகிற தண்டனையைப் பற்றிய அறிவிப்புதான் இது” என்று சொல்.’ 11  அதோடு நீ அவர்களிடம், ‘நான் ஒரு அடையாளமாக இருக்கிறேன்.+ நான் செய்தது போலவே அவர்களுக்கு நடக்கும். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+ 12  அவர்களுடைய தலைவன் மூட்டைமுடிச்சுகளைத் தோளில் வைத்துக்கொண்டு இருட்டில் புறப்பட்டுப் போவான். சுவரில் ஓட்டை போட்டு அதன் வழியாகத் தன்னுடைய மூட்டைமுடிச்சுகளை எடுத்துக்கொண்டு போவான்.+ தரையைப் பார்க்க முடியாதபடி தன்னுடைய முகத்தை மூடிக்கொள்வான்’ என்று சொல். 13  நான் அவன்மேல் என் வலையை விரிப்பேன். அவன் அதில் சிக்கிக்கொள்வான்.+ நான் அவனை கல்தேயர்களின் தேசமாகிய பாபிலோனுக்கு அனுப்புவேன். ஆனால், அவன் அதைப் பார்க்க முடியாது. அங்கே அவன் செத்துப்போவான்.+ 14  அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றியிருக்கிற எல்லாரையும் அவனுடைய படைவீரர்களையும் நான் எல்லா திசையிலும் சிதறிப்போக வைப்பேன்.+ வாளை உருவி அவர்களைத் துரத்துவேன்.+ 15  நான் அவர்களை மற்ற தேசங்களுக்குச் சிதறிப்போகப் பண்ணும்போது நான் யெகோவா என்று தெரிந்துகொள்வார்கள். 16  சிதறிப்போகிற எல்லா தேசங்களிலும் தங்களுடைய அருவருப்பான பழக்கவழக்கங்களைப் பற்றிச் சொல்லும்படி, அவர்களில் சிலரை வாளிலிருந்தும் பஞ்சத்திலிருந்தும் கொள்ளைநோயிலிருந்தும் தப்பிக்கப் பண்ணுவேன். அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்” என்று சொன்னார். 17  யெகோவா மறுபடியும் என்னிடம், 18  “மனிதகுமாரனே, நீ நடுக்கத்தோடு உணவு சாப்பிடு. கவலையோடும் பதட்டத்தோடும் தண்ணீர் குடி.+ 19  தேசத்திலுள்ள ஜனங்களிடம், ‘இஸ்ரவேல் தேசத்தில் இருக்கிற எருசலேம் ஜனங்களைப் பற்றி உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “அவர்கள் கவலையோடு உணவு சாப்பிடுவார்கள், திகிலோடு தண்ணீர் குடிப்பார்கள். தேசத்தில் வாழ்கிறவர்களுடைய வன்முறையால்+ தேசம் அடியோடு அழிந்துபோகும்.+ 20  ஜனங்கள் வாழ்கிற நகரங்கள் நாசமாகும். தேசம் பாழாகிப்போகும்.+ அப்போது, நான் யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்”’”+ என்று சொன்னார். 21  யெகோவா மறுபடியும் என்னிடம், 22  “மனிதகுமாரனே, ‘காலம்தான் போய்க்கொண்டே இருக்கிறது, எந்தத் தரிசனமும் நிறைவேறின பாடில்லை’+ என்ற பேச்சு இஸ்ரவேலர்கள் மத்தியில் இருக்கிறதே. 23  நீ அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இனி இஸ்ரவேலில் யாரும் அந்த வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். அந்த வார்த்தைகளுக்கு நான் ஒரு முடிவுகட்டுவேன்”’ என்று சொல். அதோடு, ‘காலம் நெருங்கிவிட்டது.+ எல்லா தரிசனங்களும் நிறைவேறும்’ என்று சொல். 24  ஏனென்றால், இனி இஸ்ரவேல் ஜனங்களில் யாரும் போலித் தரிசனங்களைச் சொல்ல மாட்டார்கள், குறிசொல்லி ஏமாற்ற மாட்டார்கள்.+ 25  ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “யெகோவாவாகிய நான் என் செய்தியைச் சொல்வேன். என்னுடைய வார்த்தை ஒவ்வொன்றும் இனி எந்தத் தாமதமும் இல்லாமல் நிறைவேறும்.+ அடங்காத ஜனங்களே, உங்களுடைய காலத்திலேயே+ நான் என் செய்தியைச் சொல்லி அதை நடத்தியும் காட்டுவேன்”’” என்றார். 26  யெகோவா மறுபடியும் என்னிடம், 27  “மனிதகுமாரனே, இஸ்ரவேலர்கள் தங்களுக்குள், ‘இவன் பார்க்கிற தரிசனம் நம்முடைய நாளில் நடக்கவே நடக்காது. எப்போதோ நடக்கப்போவதை இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறான்’+ என்கிறார்கள். 28  அதனால் நீ அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “‘நான் சொல்கிற ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறும், கொஞ்சம்கூட தாமதிக்காது’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்”’ என்று சொல்” என்றார்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா