எசேக்கியேல் 14:1-23

14  இஸ்ரவேலின் பெரியோர்களில்* சிலர் வந்து என் முன்னால் உட்கார்ந்தார்கள்.+  அப்போது யெகோவா என்னிடம்,  “மனிதகுமாரனே, இந்த ஆட்கள் அருவருப்பான* சிலைகளை விடாப்பிடியாக வணங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஜனங்களைப் பாவக்குழியில் விழ வைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் என்னிடம் வந்து விசாரிக்கும்போது நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?+  அதனால் நீ அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “அருவருப்பான சிலைகளை விடாப்பிடியாக வணங்கிக்கொண்டும், ஜனங்களைப் பாவக்குழியில் விழ வைத்துக்கொண்டும் இருக்கிற ஒரு இஸ்ரவேலன் என்னுடைய தீர்க்கதரிசியிடம் வந்து விசாரித்தால், யெகோவாவாகிய நான் அவனுக்குச் சரியான பதிலைக் கொடுப்பேன். அவனுடைய அருவருப்பான சிலைகள் எந்தளவு அதிகமாக இருக்கிறதோ அந்தளவு அதிகமாக அவனுக்குத் தண்டனை கொடுப்பேன்.  இஸ்ரவேல் ஜனங்களைப் பயந்து நடுங்க வைப்பேன். ஏனென்றால், அவர்கள் எல்லாரும் என்னை விட்டுவிட்டு அருவருப்பான சிலைகளைக் கும்பிடுகிறார்கள்”’+ என்று சொல்.  நீ இஸ்ரவேல் ஜனங்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “உங்களுடைய அருவருப்பான சிலைகளை விட்டுவிட்டுத் திரும்பி வாருங்கள். உங்களுடைய அருவருப்பான பழக்கவழக்கங்களை விட்டொழியுங்கள்.+  என்னைவிட்டு விலகி அருவருப்பான சிலைகளை விடாப்பிடியாக வணங்கிக்கொண்டும், ஜனங்களைப் பாவக்குழியில் விழ வைத்துக்கொண்டும் இருக்கிற இஸ்ரவேலனோ இஸ்ரவேலில் குடியிருக்கிற வேறு ஒருவனோ என்னுடைய தீர்க்கதரிசியிடம் வந்து விசாரித்தால்,+ யெகோவாவாகிய நானே அவனுக்குப் பதில் கொடுப்பேன்.  நான் அவனுக்கு எதிராகத் திரும்பி, அவனைக் கேலிப்பொருளாகவும் மற்றவர்களை எச்சரிக்கும் அடையாளமாகவும் ஆக்குவேன். என்னுடைய ஜனங்களிலிருந்து அவனை ஒழித்துக்கட்டுவேன்.+ அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்”’ என்று சொல்.  ‘ஆனால், அந்தத் தீர்க்கதரிசி ஏமாற்றப்பட்டு ஒரு பதில் தந்தால், அந்தத் தீர்க்கதரிசியை ஏமாற்றியது யெகோவாவாகிய நான்தான்.+ நான் அவனைப் பிடித்து, என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களின் நடுவிலிருந்து ஒழித்துக்கட்டுவேன். 10  விசாரித்தவனும் சரி, தீர்க்கதரிசியும் சரி, குற்றத்துக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும். இரண்டு பேருமே அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டும். 11  அப்போதுதான், இஸ்ரவேல் ஜனங்கள் என்னைவிட்டு விலகிப்போகவோ, தவறுகள் செய்து தங்களைத் தீட்டுப்படுத்தவோ மாட்டார்கள். அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார். 12  யெகோவா மறுபடியும் என்னிடம், 13  “மனிதகுமாரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாகப் பாவமும் துரோகமும் செய்தால் நான் அதைத் தண்டிப்பேன். அங்கிருக்கிற உணவுப் பொருள்களை நாசமாக்குவேன்.*+ பஞ்சத்தை வர வைத்து+ மனுஷர்களையும் மிருகங்களையும் ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவேன்”+ என்று சொன்னார். 14  “‘நோவா,+ தானியேல்,+ யோபு+ ஆகிய மூன்று பேரும் அங்கே இருந்தால்கூட தங்களுடைய நீதியினால் தங்களை மட்டும்தான் காப்பாற்றிக்கொள்ள முடியும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.” 15  “‘ஒருவேளை நான் கொடிய காட்டு மிருகங்களை அனுப்பினால், அவை தேசத்தில் இருக்கிற எல்லாரையும் கொன்றுபோட்டு, மனுஷ நடமாட்டமே இல்லாத அளவுக்கு அதைப் பாழாக்கிவிடும்.+ 16  அங்கே அந்த மூன்று பேர் இருந்தால்கூட தங்களுடைய மகன்களையோ மகள்களையோ காப்பாற்ற முடியாது; தங்களை மட்டும்தான் காப்பாற்றிக்கொள்ள முடியும். தேசம் பாழாகிப்போகும். இதை என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்’* என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.” 17  “‘ஒருவேளை தேசத்துக்கு எதிராக நான் ஒரு வாளை அனுப்பி,+ “வாளே, தேசமெங்கும் போ” என்று சொன்னால், அது அங்கிருக்கிற மனுஷர்களையும் மிருகங்களையும் கொன்றுவிடும்.+ 18  அங்கே அந்த மூன்று பேர் இருந்தால்கூட தங்களுடைய மகன்களையோ மகள்களையோ காப்பாற்ற முடியாது; தங்களை மட்டும்தான் காப்பாற்றிக்கொள்ள முடியும். இதை என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்’* என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.” 19  “‘ஒருவேளை தேசத்தின் மேல் நான் என்னுடைய கோபத்தைக் கொட்டி, கொள்ளைநோயை வர வைத்தால்,+ அது அங்கிருக்கிற மனுஷர்களையும் மிருகங்களையும் கணக்குவழக்கில்லாமல் கொன்று குவிக்கும். 20  அங்கே நோவாவும்+ தானியேலும்+ யோபுவும்+ இருந்தால்கூட தங்களுடைய மகன்களையோ மகள்களையோ காப்பாற்ற முடியாது; தங்களுடைய நீதியினால் தங்களை மட்டும்தான் காப்பாற்றிக்கொள்ள முடியும்.+ இதை என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்’* என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.” 21  “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘எருசலேமில் இருக்கிற மனுஷர்களையும் மிருகங்களையும் கொன்றுபோடுவதற்காக+ வாள், பஞ்சம், கொடிய காட்டு மிருகம், கொள்ளைநோய்+ ஆகிய நான்கு தண்டனைகளை+ நான் கொடுக்கும்போது இப்படித்தான் நடக்கும். 22  ஆனாலும், அங்கிருக்கிற ஆண்களிலும் பெண்களிலும் சிலர் உயிர்தப்பி, வெளியே கொண்டுவரப்படுவார்கள்.+ அவர்கள் உங்களிடம் வருவார்கள். அவர்களுடைய நடத்தையையும் செயல்களையும் நீங்கள் பார்க்கும்போது, நான் எருசலேமைத் தண்டித்ததும் அழித்ததும் நியாயம்தான் என்று புரிந்துகொண்டு உங்கள் மனதைத் தேற்றிக்கொள்வீர்கள்.’” 23  “‘அவர்களுடைய நடத்தையையும் செயல்களையும் பார்க்கும்போது, காரணம் இல்லாமல் நான் அவர்களைத் தண்டிக்கவில்லை என்று புரிந்துகொண்டு உங்கள் மனதைத் தேற்றிக்கொள்வீர்கள்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்களில்.”
இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
நே.மொ., “ரொட்டிக் கோல்களை முறித்துப்போடுவேன்.” இவை ஒருவேளை ரொட்டிகளை மாட்டி வைக்கப் பயன்படுத்தப்பட்ட கோல்களாக இருந்திருக்கலாம்.
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா