எசேக்கியேல் 16:1-63
16 யெகோவா மறுபடியும் என்னிடம்,
2 “மனிதகுமாரனே, எருசலேமுக்கு அவளுடைய அருவருப்பான பழக்கவழக்கங்களைச்+ சுட்டிக்காட்டு.
3 அவளிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “எருசலேமே, நீ கானான் தேசத்தில் பிறந்தாய். உன் அப்பா ஒரு எமோரியன்,+ உன் அம்மா ஒரு ஏத்தியள்.+
4 நீ பிறந்தபோது யாரும் உன்னுடைய தொப்புள்கொடியை அறுக்கவில்லை, உன்னைத் தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தவில்லை, உன் உடம்பில் உப்பு தேய்க்கவில்லை, உன்னைத் துணியால் சுற்றவில்லை.
5 இதில் ஒன்றைக்கூட யாரும் உனக்குச் செய்யவில்லை, அந்தளவுக்குக்கூட உன்மேல் பரிதாபப்படவில்லை. யாருமே உனக்குக் கரிசனை காட்டவில்லை. நீ வெட்டவெளியில் தூக்கி எறியப்பட்டாய். ஏனென்றால், பிறந்த நாளிலேயே நீ வெறுக்கப்பட்டாய்.
6 நான் அந்தப் பக்கமாக வந்தபோது, நீ கால்களை உதைத்துக்கொண்டு உன்னுடைய இரத்தத்திலேயே கிடப்பதைப் பார்த்தேன். அப்போது, ‘நீ வாழ வேண்டும்!’ என்று சொன்னேன். உன்னுடைய இரத்தத்திலேயே கிடந்த உன்னிடம், ‘நீ வாழ வேண்டும்!’ என்று சொன்னேன்.
7 வயலில் முளைக்கிற பயிர்களைப் போல நான் உன்னை ஏராளமாக்கினேன். நீ வளர்ந்து ஆளாகி, அருமையான நகைகளைப் போட்டுக்கொண்டாய். உன் மார்பகங்களும் தலைமுடியும் வளர்ந்தன. ஆனாலும் நீ துணி எதுவும் போடாமல் நிர்வாணமாகவே இருந்தாய்”’ என்று சொல்.
8 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் அந்தப் பக்கமாக வந்தபோது, உன்னைப் பார்த்தேன். நீ காதலிக்கும் பருவத்தில் இருந்ததைக் கவனித்தேன். அதனால், என்னுடைய உடையை உன்மேல் விரித்து+ உன்னுடைய நிர்வாணத்தை மூடினேன். உனக்கு உறுதிமொழி கொடுத்து, உன்னோடு ஒப்பந்தம் செய்தேன். நீ என்னுடையவளாக ஆனாய்.
9 நான் உன்னைத் தண்ணீரால் குளிப்பாட்டி, உன் மேலிருந்த இரத்தத்தைக் கழுவி, உனக்கு எண்ணெய் பூசினேன்.+
10 தையல்* வேலைப்பாடு செய்த உடையை உனக்கு உடுத்திவிட்டேன். அருமையான தோல்* செருப்புகளைக் கால்களில் மாட்டிவிட்டேன். உயர்தரமான நாரிழை* துணியால் உன்னைப் போர்த்தினேன். விலை உயர்ந்த துணிமணிகளை உனக்குப் போட்டுவிட்டேன்.
11 உனக்கு நகைகளைப் போட்டு அலங்காரம் செய்தேன். உன் கைகளில் வளையல்களையும் கழுத்தில் சங்கிலியையும் போட்டுவிட்டேன்.
12 உன் மூக்கில் மூக்குத்தியையும் காதுகளுக்குக் கம்மல்களையும் போட்டுவிட்டேன். உன் தலையில் அழகான கிரீடத்தை வைத்தேன்.
13 நீ தங்கத்திலும் வெள்ளியிலும் நகைகளைப் போட்டுக்கொண்டாய். தையல் வேலைப்பாடு செய்த விலை உயர்ந்த நாரிழை உடையை உடுத்திக்கொண்டாய். உயர்தரமான மாவிலும், தேனிலும், எண்ணெயிலும் செய்யப்பட்ட ரொட்டியைச் சாப்பிட்டாய். நீ பேரழகியாக ஆனாய்.+ ஒரு ராணியாகும் தகுதியைப் பெற்றாய்’” என்று சொன்னார்.
14 “உன்னுடைய அழகைப் பற்றி உலகமே புகழ்ந்து பேச ஆரம்பித்தது.+ என்னுடைய மகிமையை உனக்குக் கொடுத்ததால் நீ அழகே உருவானவளாக இருந்தாய்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”
15 “‘ஆனால் நீ உன்னுடைய அழகையே நம்பினாய்.+ உனக்கு இருந்த புகழைப் பயன்படுத்தி ஒரு விபச்சாரியாக ஆனாய்.+ போவோர் வருவோர் எல்லாருடனும் உல்லாசமாக இருந்தாய்.+ உன்னையே அவர்களுக்குக் கொடுத்தாய்.
16 உன்னுடைய வண்ணவண்ண உடைகளைக் கொண்டுபோய், ஆராதனை மேடுகளை அலங்கரித்து, அங்கே விபச்சாரம் செய்தாய்.+ இதெல்லாம் நடக்கவே கூடாது; ஒருபோதும் நடக்கக் கூடாது.
17 நான் கொடுத்த அழகான தங்க நகைகளையும் வெள்ளி நகைகளையும்கூட நீ எடுத்து ஆண் உருவங்களைச் செய்து அவற்றோடு விபச்சாரம் பண்ணினாய்.+
18 தையல் வேலைப்பாடு செய்த உன்னுடைய உடைகளை அந்த உருவங்களுக்குப் போட்டுவிட்டாய். என்னுடைய எண்ணெயையும் தூபப்பொருளையும் அவற்றுக்குக் கொடுத்தாய்.+
19 உயர்தரமான மாவிலும் எண்ணெயிலும் தேனிலும் செய்யப்பட்ட ரொட்டியை நான் உனக்குக் கொடுத்தேனே. அதைக்கூட வாசனையுள்ள உணவுக் காணிக்கையாக அந்த உருவங்களுக்குப் படைத்தாய்.+ இதையெல்லாம் நீ மறுக்க முடியாது’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”
20 “‘நீ எனக்குப் பெற்ற மகன்களையும் மகள்களையும்+ அந்த உருவங்களுக்கு நரபலி கொடுத்தாய்.+ நீ செய்கிற விபச்சாரத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது!
21 என்னுடைய மகன்களை நீ வெட்டிப்போட்டாய்; அவர்களை நெருப்பில் பலி கொடுத்தாய்.*+
22 அருவருப்பான பழக்கவழக்கங்களிலும் விபச்சாரத்திலும் நீ மூழ்கியிருந்தபோது, குழந்தைப்பருவத்தில் உன் கால்களை உதைத்துக்கொண்டு உன்னுடைய இரத்தத்திலேயே எப்படி நிர்வாணமாகக் கிடந்தாய் என்று நீ மறந்துவிட்டாய்.
23 எல்லா அக்கிரமங்களையும் செய்த உனக்குக் கேடுதான் வரும், கேடுதான் வரும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
24 பொது சதுக்கங்களில் நீ பொய் தெய்வங்களுக்குப் பலிபீடங்களையும்* ஆராதனை மேடுகளையும் கட்டினாய்.
25 ஒவ்வொரு தெருவிலும் இருக்கிற முக்கியமான இடங்களில் அந்த ஆராதனை மேடுகளைக் கட்டினாய். போவோர் வருவோர் எல்லாருக்கும் உன்னையே கொடுத்து உன்னுடைய அழகை அருவருப்பானதாக ஆக்கினாய்.+ விபச்சாரத்துக்குமேல் விபச்சாரம் செய்தாய்.+
26 பக்கத்துத் தேசத்தில் இருக்கிற காமவெறி பிடித்த எகிப்தியர்களோடு நீ உல்லாசமாக இருந்தாய்.+ விபச்சாரத்துக்குமேல் விபச்சாரம் செய்து என் கோபத்தைக் கிளறினாய்.
27 இப்போது நான் உன்னைத் தண்டித்து, உன்னுடைய உணவுப் பொருள்களைப் பறித்துவிடுவேன்.+ உன்னை வெறுக்கிற பெலிஸ்தியப் பெண்களின் கையில் உன்னைக் கொடுத்துவிடுவேன்.+ நீ செய்கிற அசிங்கத்தைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.+
28 ஏற்கெனவே செய்த விபச்சாரத்தில் நீ திருப்தி அடையாமல் அசீரியர்களோடும் விபச்சாரம் செய்தாய்.+ அதற்குப் பின்பும் நீ திருப்தி அடையவில்லை.
29 அதனால் வியாபாரிகளின் தேசத்திலும்* கல்தேயர்களோடும் விபச்சாரம் செய்தாய்.+ அதற்குப் பின்பும் நீ திருப்தி அடையவில்லை.
30 வெட்கங்கெட்ட விபச்சாரியைப் போல நீ இதையெல்லாம் செய்தபோது உன் இதயம் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தது!’*+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
31 ‘ஒவ்வொரு தெருவிலும் இருக்கிற முக்கியமான இடங்களில் பலிபீடங்களையும், பொது சதுக்கங்களில் ஆராதனை மேடுகளையும் கட்டியபோது நீ ஒரு விபச்சாரியைப் போல நடந்துகொள்ளவில்லை. ஏனென்றால், நீ அதற்குக் கூலி வாங்கவில்லை.
32 கணவனுக்குப் பதிலாக வேறு ஆண்களோடு உறவுகொள்கிற நடத்தைகெட்ட மனைவி நீ!+
33 பொதுவாக, விபச்சாரிகள் கூலி வாங்குவார்கள்.+ ஆனால், காமப்பசியைத் தீர்த்துக்கொள்ள வருகிறவர்களுக்குக் கூலி கொடுக்கிற விபச்சாரி நீ மட்டும்தான்.+ நீதான் சுற்றியிருக்கிற எல்லாருக்கும் கூலி கொடுத்து, விபச்சாரத்துக்குக் கூப்பிடுகிறாய்.+
34 நீ மற்ற விபச்சாரிகளுக்கு நேர்மாறாக இருக்கிறாய். நீ செய்வது போல யாரும் விபச்சாரம் செய்வதில்லை! நீதான் மற்றவர்களுக்குக் கூலி கொடுக்கிறாய், அவர்கள் உனக்குக் கூலி கொடுப்பதில்லை. உன்னுடைய வழி நேர்மாறானது.’
35 அதனால் விபச்சாரியே,+ யெகோவாவின் செய்தியைக் கேள்.
36 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ மானமே இல்லாமல் உன்னுடைய காதலர்களோடு விபச்சாரம் செய்து காமப்பசியைத் தீர்த்துக்கொண்டாய். அருவருப்பான சிலைகளுக்கு+ உன்னுடைய மகன்களின் இரத்தத்தைப் பலிகொடுத்தாய்.+
37 அதனால், உன்னோடு உல்லாசமாக இருந்த எல்லாரையும், நீ காதலித்த எல்லாரையும், நீ வெறுத்த எல்லாரையும் உனக்கு எதிராக நான் ஒன்றுகூட்டுவேன். அவர்களை எல்லா பக்கத்திலிருந்தும் வர வைத்து உன்னுடைய நிர்வாணத்தைக் காட்டுவேன். நீ முழு நிர்வாணமாக இருப்பதை அவர்கள் பார்ப்பார்கள்.+
38 கணவனுக்குத் துரோகம் செய்கிற பெண்களுக்கும்,+ கொலை செய்கிற பெண்களுக்கும் கிடைக்க வேண்டிய தண்டனையை நான் உனக்குக் கொடுப்பேன்.+ கோபத்தோடும் எரிச்சலோடும் உன்னைக் கொன்றுபோடுவேன்.+
39 உன்னை அவர்களுடைய கையில் கொடுப்பேன். அவர்கள் உன்னுடைய பலிபீடங்களை உடைப்பார்கள், உன்னுடைய ஆராதனை மேடுகளை இடித்துத் தள்ளுவார்கள்.+ உன்னுடைய உடைகளை உருவி,+ உன்னுடைய அழகான நகைகளைப் பிடுங்கி,+ உன்னை நிர்வாணமாக விட்டுவிடுவார்கள்.
40 ஒரு கும்பலை வர வைப்பார்கள்.+ அவர்கள் உன்மேல் கல்லெறிவார்கள்,+ உன்னை வாளால் வெட்டிப்போடுவார்கள்.+
41 உன்னுடைய வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.+ பெண்கள் பலருடைய கண் முன்னாலேயே உன்னைத் தண்டிப்பார்கள். நான் உன்னுடைய விபச்சாரத்துக்கு ஒரு முடிவுகட்டுவேன்.+ அதற்குப் பிறகு நீ யாருக்கும் கூலி கொடுக்க முடியாது.
42 இப்படி, என்னுடைய ஆக்ரோஷம் அடங்கும்வரை உன்னைத் தண்டிப்பேன்.+ அதன்பின், கோபத்தை விட்டுவிட்டு+ அமைதியாகிவிடுவேன்.’
43 ‘குழந்தைப்பருவத்தில் நீ இருந்த நிலைமையை நினைத்துப் பார்க்காமல்+ இதையெல்லாம் செய்து என் கோபத்தைக் கிளறியதால் அதன் விளைவுகளை நீ அனுபவிக்கும்படி செய்வேன். அதற்குப் பிறகு நீ வெட்கங்கெட்டு நடக்க மாட்டாய், அருவருப்பான காரியங்களைச் செய்ய மாட்டாய்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
44 ‘பழமொழிகளைச் சொல்கிறவர்கள் உன்னைப் பார்த்து, “தாயைப் போல மகள்!”+ என்ற பழமொழியைச் சொல்வார்கள்.
45 கணவனையும் பிள்ளைகளையும் வெறுத்த தாய்க்குப் பிறந்தவள் நீ. கணவனையும் பிள்ளைகளையும் வெறுத்த பெண்களுடைய சகோதரி நீ. உன்னுடைய அம்மா ஒரு ஏத்தியள், உன்னுடைய அப்பா ஒரு எமோரியன்.’”+
46 “‘உன்னுடைய அக்காதான் சமாரியா.+ அவள் தன்னுடைய மகள்களோடு* உனக்கு வடக்கே வாழ்கிறாள்.+ உன்னுடைய தங்கையான சோதோம் தன்னுடைய மகள்களோடு+ உனக்குத் தெற்கே வாழ்கிறாள்.+
47 நீ அவர்களுடைய வழிகளில் போய், அவர்களைப் போலவே அருவருப்பான காரியங்களைச் செய்தாய். கொஞ்சக் காலத்தில் அவர்களைவிட படுமோசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தாய்.+
48 நீயும் உன்னுடைய மகள்களும் செய்தது போல உன்னுடைய தங்கை சோதோமும் அவளுடைய மகள்களும் செய்யவில்லை என்று என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்’* என உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
49 உன் தங்கை சோதோம் செய்த குற்றம் இதுதான்: அவளும் அவளுடைய மகள்களும்+ பெருமைபிடித்து+ அலைந்தார்கள். நன்றாகச் சாப்பிட்டு,+ எதற்கும் கவலைப்படாமல் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.+ ஆனால், ஏழை எளிய ஜனங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.+
50 ஆணவத்தோடு+ என் கண் முன்னாலேயே அருவருப்பான காரியங்களைச் செய்தார்கள்.+ அதனால், அவர்களை நான் அழித்தேன்.+
51 நீ செய்த பாவங்களில் பாதி அளவுகூட சமாரியா+ செய்யவில்லை. உன் சகோதரிகளைவிட அதிகமாக நீ அருவருப்பான காரியங்களைச் செய்தாய். நீ செய்திருக்கிற எல்லா அருவருப்புகளையும் பார்க்கும்போது அவர்கள்கூட உன்னைவிட நீதியுள்ளவர்களாகத் தெரிகிறார்கள்.+
52 உன்னுடைய சகோதரிகள் செய்ததை நீ நியாயப்படுத்திக் காட்டியதால் இப்போது நீ அவமானப்பட வேண்டும். அவர்களைவிட அதிகமாக நீ அருவருப்பான காரியங்களைச் செய்ததால் அவர்களே உன்னைவிட நீதியுள்ளவர்களாகத் தெரிகிறார்கள். உன் சகோதரிகளை நீதியுள்ளவர்கள்போல் காட்டுவதற்காக நீ வெட்கப்படு, அவமானப்படு.’
53 ‘சிறைபிடிக்கப்பட்டுப் போன சோதோமையும் அவளுடைய மகள்களையும், சமாரியாவையும் அவளுடைய மகள்களையும் நான் கூட்டிச்சேர்ப்பேன்; சிறைபிடிக்கப்பட்டுப் போன உன்னுடைய ஜனங்களையும் அவர்களோடு கூட்டிச்சேர்ப்பேன்.+
54 அப்போது, நீ அவமானம் அடைவாய். அவர்களுக்கு ஆறுதல் தந்ததற்காக நீ அவமானப்படுவாய்.
55 உன்னுடைய சகோதரிகளான சோதோமும் சமாரியாவும் அவர்களுடைய மகள்களும் பழைய நிலைமைக்குத் திரும்புவார்கள். நீயும் உன்னுடைய மகள்களும்கூட பழைய நிலைமைக்குத் திரும்புவீர்கள்.+
56 நீ பெருமையோடு வாழ்ந்த சமயத்தில் உன் தங்கையான சோதோமின் பெயரை வாயால் உச்சரிப்பதைக்கூட கேவலமாக நினைத்தாய்.
57 உன்னுடைய அக்கிரமம் வெளிச்சத்துக்கு வருவதற்குமுன் நீ அப்படித்தான் அவளைக் கேவலமாக நினைத்தாய்.+ ஆனால், இப்போது சீரியாவின் மகள்களும் அவளைச் சுற்றியிருக்கிறவர்களும் பெலிஸ்தியர்களின் மகள்களும்+ உன்னைப் பழித்துப் பேசுகிறார்கள். உன்னைச் சுற்றியிருக்கிற எல்லாரும் உன்னைக் கேவலமாகப் பேசுகிறார்கள்.
58 வெட்கக்கேடான, அருவருப்பான காரியங்களைச் செய்ததற்கான விளைவுகளை நீ அனுபவிப்பாய்’ என்று யெகோவா சொல்கிறார்.”
59 “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ செய்தது போலவே நானும் உனக்குச் செய்வேன்.+ ஏனென்றால், என் உறுதிமொழியை மதிக்காமல், என் ஒப்பந்தத்தை மீறினாய்.+
60 ஆனாலும், உன்னுடைய சிறுவயதில் நான் உன்னோடு செய்த ஒப்பந்தத்தை நான் நினைத்துப் பார்ப்பேன். உன்னோடு நிரந்தரமான ஒப்பந்தத்தைச் செய்வேன்.+
61 உன்னுடைய அக்கா தங்கை எல்லாரையும் நீ வரவேற்கும்போது உன்னுடைய நடத்தையை நினைத்துக் கூனிக்குறுகுவாய்.+ அவர்களை உன்னுடைய மகள்களாக நான் கொடுப்பேன், ஆனால் எந்தவொரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் கொடுக்க மாட்டேன்.’
62 ‘உன்னோடு செய்த ஒப்பந்தத்தை நான் உறுதிப்படுத்துவேன். அப்போது, நான் யெகோவா என்று நீ தெரிந்துகொள்வாய்.
63 நீ செய்ததையெல்லாம் நான் மன்னிப்பேன்.*+ அப்போது, நீ உன் நடத்தையை நினைத்துக் கூனிக்குறுகுவாய்.+ அவமானத்தில் உனக்குப் பேச்சுகூட வராது’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “எம்பிராய்டரி.”
^ வே.வா., “கடல்நாய்த் தோல்.”
^ அதாவது, “லினன்.”
^ நே.மொ., “நெருப்பைக் கடக்க வைத்தாய்.”
^ வே.வா., “மண்மேடுகளையும்.”
^ நே.மொ., “கானான் தேசத்திலும்.”
^ அல்லது, “நான் எந்தளவுக்குக் கோபத்தில் கொதித்துப்போனேன்!”
^ அநேகமாக, “சிற்றூர்களோடு.”
^ வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
^ நே.மொ., “செய்ததற்கெல்லாம் பாவப் பரிகாரம் செய்வேன்.”