எசேக்கியேல் 34:1-31

34  யெகோவா மறுபடியும் என்னிடம்,  “மனிதகுமாரனே, இஸ்ரவேலின் மேய்ப்பர்களுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல். அவர்களிடம் இந்தச் செய்தியைச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேலின் மேய்ப்பர்களுக்குக் கேடுதான் வரும்!+ அவர்கள் தங்களையே மேய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்! ஆனால், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்க வேண்டாமா?+  நீங்கள் கொழுப்பானதைச் சாப்பிடுகிறீர்கள், ஆட்டுமயிரை உடுத்துகிறீர்கள், புஷ்டியான மிருகத்தைத் தேடிப்பிடித்து வெட்டுகிறீர்கள்.+ ஆனால், உங்கள் மந்தையை மேய்ப்பதில்லை.+  துவண்டுபோனதை நீங்கள் தெம்பாக்கவில்லை, நோய் பிடித்ததைக் குணமாக்கவில்லை, காயப்பட்டதுக்குக் கட்டு போடவில்லை, வழிமாறிப்போனதைக் கண்டுபிடித்துக் கொண்டுவரவில்லை, தொலைந்துபோனதைத் தேடிப்போகவில்லை.+ அதற்குப் பதிலாக, கொடூரமாகவும் காட்டுத்தனமாகவும் அவற்றை அடக்கி ஆண்டீர்கள்.+  மேய்ப்பன் இல்லாததால் அவை சிதறிப்போயின.+ அவை நாலாபக்கமும் சிதறிப்போய்க் காட்டு மிருகங்களுக்கு இரையாகிவிட்டன.  என்னுடைய ஆடுகள் எல்லா மலைகளிலும் உயரமான எல்லா குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. அவை பூமியின் எல்லா பக்கத்திலும் சிதறிப்போயின. அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க யாரும் போகவில்லை.  அதனால் மேய்ப்பர்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்:  ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* மேய்ப்பன் இல்லாததால் என்னுடைய ஆடுகள் காட்டு மிருகங்களுக்கு இரையாகிவிட்டன. என் மேய்ப்பர்கள் என் ஆடுகளைத் தேடிப்போகவில்லை, என் ஆடுகளை மேய்ப்பதற்குப் பதிலாகத் தங்களையே மேய்த்துக்கொண்டு இருந்தார்கள்.”’  அதனால் மேய்ப்பர்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்: 10  ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாக வருவேன். என்னுடைய ஆடுகளுக்காக அவர்களைத் தண்டிப்பேன். அதன்பின் அவர்கள் என்னுடைய ஆடுகளை மேய்ப்பதற்கு விட மாட்டேன்.+ அவர்கள் தங்களைத் தாங்களே மேய்க்க மாட்டார்கள். அவர்களுடைய வாயிலிருந்து என்னுடைய ஆடுகளைக் காப்பாற்றுவேன். இனி என் ஆடுகள் அவர்களுக்கு இரையாகாது.’” 11  ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, நானே போய் என்னுடைய ஆடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பேன். நானே அவற்றைக் கவனித்துக்கொள்வேன்.+ 12  சிதறிப்போன ஆடுகளைக் கண்டுபிடித்து கவனித்துக்கொள்கிற மேய்ப்பனைப் போல நான் என்னுடைய ஆடுகளைக் கவனித்துக்கொள்வேன்.+ கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொண்ட நாளில்+ சிதறிப்போன என் ஆடுகளை எல்லா இடங்களிலிருந்தும் காப்பாற்றிக் கொண்டுவருவேன். 13  எல்லா தேசங்களின் நடுவிலிருந்தும் ஜனங்களின் நடுவிலிருந்தும் அவற்றைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவற்றின் தேசமான இஸ்ரவேலுக்குக் கொண்டுவந்து மலைகளிலும் ஓடைகளின் கரைகளிலும் ஜனங்கள் குடியிருக்கிற பகுதிகளிலும் மேய்ப்பேன்.+ 14  பச்சைப்பசேல் என்றிருக்கும் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரவேலின் உயரமான மலைகளில் அவை மேயும்.+ நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவை படுத்துக்கொள்ளும்.+ இஸ்ரவேலின் மலைகளில் இருக்கிற அருமையான புல்வெளிகளில் அவை மேயும்.” 15  “நானே என்னுடைய ஆடுகளை மேய்ப்பேன்.+ நானே அவற்றைச் சுகமாகப் படுத்துக்கொள்ள வைப்பேன்”+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 16  “தொலைந்துபோனதை நான் தேடிப்போவேன்,+ வழிமாறிப்போனதைக் கண்டுபிடித்துக் கொண்டுவருவேன், காயப்பட்டதுக்குக் கட்டு போடுவேன், துவண்டுபோனதைத் தெம்பாக்குவேன். ஆனால், கொழுத்ததையும் புஷ்டியானதையும் வெட்டிப்போடுவேன். அவற்றுக்குச் சரியான தண்டனை கொடுப்பேன்.” 17  ‘என்னுடைய ஆடுகளே, உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “ஒரு செம்மறியாட்டுக்கும் இன்னொரு செம்மறியாட்டுக்கும் இடையே, செம்மறியாட்டுக் கடாக்களுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் இடையே நான் தீர்ப்பு கொடுப்பேன்.+ 18  நீங்கள் மேய்ச்சல் நிலத்தில் மிகச் செழிப்பாக வளர்ந்திருக்கிற புல்லையெல்லாம் மேய்ந்தது போதாதா? மற்ற புல்லையெல்லாம் மிதித்துப்போட வேண்டுமா? தெளிந்த தண்ணீரைக் குடித்துவிட்டு மிச்சமிருக்கிற தண்ணீரை எதற்காகக் காலால் கலக்கிவிட்டீர்கள்? 19  நீங்கள் மிதித்துப்போட்ட புல்வெளியில் இப்போது என்னுடைய ஆடுகள் மேய வேண்டுமா? நீங்கள் காலால் கலக்கிவிட்ட தண்ணீரை என்னுடைய ஆடுகள் குடிக்க வேண்டுமா?” 20  அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா அவர்களிடம் சொல்வது இதுதான்: “இதோ, நான் கொழுத்த ஆடுகளுக்கும் நோஞ்சான் ஆடுகளுக்கும் இடையே தீர்ப்பு கொடுப்பேன். 21  உங்களுடைய பக்கவாட்டினாலும் தோளினாலும் மற்ற ஆடுகளைத் தள்ளினீர்கள். நோய் பிடித்தவற்றை உங்களுடைய கொம்புகளால் முட்டித்தள்ளி, தொலைதூர இடங்களுக்குச் சிதறிப்போக வைத்தீர்கள். 22  நான் என்னுடைய ஆடுகளைக் காப்பாற்றுவேன். அவர்கள் இனி யாருக்கும் இரையாக மாட்டார்கள்.+ ஆடுகளுக்கு இடையே நான் தீர்ப்பு கொடுப்பேன். 23  அவர்களை மேய்க்க ஒரு மேய்ப்பனை அனுப்புவேன்.+ என் ஊழியனாகிய தாவீதுதான் அந்த மேய்ப்பன்.+ அவன் அவர்களை மேய்ப்பான். அவனே அவர்களை மேய்த்து அவர்களுடைய மேய்ப்பனாக இருப்பான்.+ 24  யெகோவாவாகிய நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்.+ என் ஊழியனாகிய தாவீது அவர்களுடைய தலைவனாக இருப்பான்.+ யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன். 25  நான் அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்வேன்.+ மூர்க்கமான காட்டு மிருகங்களைத் தேசத்திலிருந்து ஒழித்துக்கட்டுவேன்.+ அப்போது, அவர்கள் வனாந்தரத்தில் பத்திரமாகத் தங்குவார்கள், காடுகளில் நிம்மதியாகப் படுத்துக்கொள்வார்கள்.+ 26  அவர்களும் என் மலையைச் சுற்றியுள்ள இடமும் ஒரு ஆசீர்வாதமாக இருக்கும்படி செய்வேன்.+ பருவ காலத்தில் மழை பெய்ய வைப்பேன். ஆசீர்வாதங்களை மழை போலக் கொட்டுவேன்.+ 27  காட்டிலுள்ள மரங்கள் கனி கொடுக்கும். நிலம் விளைச்சல் தரும்.+ தேசத்தில் அவர்கள் பத்திரமாகக் குடியிருப்பார்கள். அவர்களுடைய கழுத்திலுள்ள நுகத்தடிகளை நான் உடைத்து, அவர்களை அடிமைப்படுத்திய ஆட்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றும்போது நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.+ 28  இனி மற்ற தேசங்களுக்கு அவர்கள் இரையாக மாட்டார்கள். காட்டு மிருகங்கள் அவர்களைக் கடித்துக் குதறாது. அவர்கள் பத்திரமாகக் குடியிருப்பார்கள். அவர்களைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.+ 29  புகழ்பெற்ற ஒரு தோட்டத்தை நான் அவர்களுக்காகக் கொடுப்பேன். அவர்கள் இனி பஞ்சத்தால் சாக மாட்டார்கள்.+ மற்ற தேசங்களால் அவமானப்பட மாட்டார்கள்.+ 30  ‘அப்போது, யெகோவாவாகிய நான் அவர்களுடைய கடவுளாக அவர்களோடு இருக்கிறேன் என்றும், இஸ்ரவேல் ஜனங்களாகிய அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருக்கிறார்கள் என்றும் தெரிந்துகொள்வார்கள்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”’ 31  ‘என் ஆடுகளே,+ நான் அக்கறையோடு மேய்க்கிற என்னுடைய ஆடுகளே, நீங்கள் சாதாரண மனுஷர்கள். நான் உங்கள் கடவுள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா