எசேக்கியேல் 36:1-38
36 “மனிதகுமாரனே, இஸ்ரவேலின் மலைகளைப் பற்றி இப்படித் தீர்க்கதரிசனம் சொல்: ‘இஸ்ரவேலின் மலைகளே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்.
2 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “எதிரி உங்களைப் பார்த்து, ‘காலம்காலமாக இருக்கிற குன்றுகள்கூட எங்களுக்குச் சொந்தமாகிவிட்டன’ என்று ஏளனமாகச் சொல்கிறான்.”’+
3 அதனால் நீ இப்படித் தீர்க்கதரிசனம் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “மற்ற தேசங்களைச் சேர்ந்தவர்கள் உங்களைச் சொந்தமாக்கிக்கொள்ள நினைத்து, உங்களைப் பாழாக்கி, எல்லா பக்கத்திலிருந்தும் தாக்கினார்கள். உங்களுக்கு எதிராக இல்லாததையும் பொல்லாததையும் பேசினார்கள்.+
4 அதனால் இஸ்ரவேலின் மலைகளே, உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்! உன்னதப் பேரரசராகிய யெகோவா மலைகளுக்கும், குன்றுகளுக்கும், ஓடைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், சுற்றியுள்ள தேசங்களால் சூறையாடப்பட்டு, வெறுமையாக்கப்பட்டு,+ கேலி செய்யப்பட்ட நகரங்களுக்கும் ஒரு செய்தியைச் சொல்கிறார்.+
5 உன்னதப் பேரரசராகிய யெகோவா அவற்றுக்குச் சொல்வது இதுதான்: ‘மற்ற தேசங்களுக்கும் ஏதோம் முழுவதுக்கும் எதிராக நான் பயங்கர கோபத்தோடு* தீர்ப்பு சொல்வேன்.+ ஏனென்றால், என்னுடைய தேசத்தைச் சூறையாடவும் அதன் மேய்ச்சல் நிலங்களைக் கைப்பற்றவும் அவர்கள் துடித்தார்கள். மிகுந்த ஏளனத்தோடும், தலைகால் புரியாத சந்தோஷத்தோடும்+ என்னுடைய தேசத்தைச் சொந்தம் கொண்டாடினார்கள்.’”’+
6 அதனால், இஸ்ரவேல் தேசத்தைப் பற்றி நீ தீர்க்கதரிசனம் சொல். அதன் மலைகளுக்கும் குன்றுகளுக்கும் ஓடைகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “தேசங்கள் உங்களை அவமானப்படுத்திவிட்டன. அதனால், நான் பயங்கர கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் அந்த ஜனங்களுக்குத் தீர்ப்பு சொல்வேன்.”’+
7 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘சுற்றியிருக்கிற தேசங்கள் உங்களை அவமானப்படுத்தியதால் அவை அவமானப்படுத்தப்படும்+ என்று என்மேல் ஆணையாகச் சொல்கிறேன்.
8 ஆனால் இஸ்ரவேலின் மலைகளே, நீங்கள் என்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்காகக் கிளைகள்விட்டு, கனி தருவீர்கள்.+ ஏனென்றால், அவர்கள் சீக்கிரத்தில் திரும்பி வருவார்கள்.
9 நான் உங்களோடு இருக்கிறேன். உங்களுக்குத் துணையாக இருப்பேன். நீங்கள் பயிர் செய்யப்படுவீர்கள், விதைக்கப்படுவீர்கள்.
10 உங்கள் ஜனங்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் நான் பெருகப் பண்ணுவேன். பாழாக்கப்பட்ட நகரங்கள் திரும்பக் கட்டப்படும்.+ அங்கே ஜனங்கள் குடியிருப்பார்கள்.+
11 உங்கள் ஜனங்களைப் பெருக வைப்பேன். மிருகங்களையும் ஏராளமாக்குவேன்.+ பழையபடி ஜனங்களை உங்கள் நடுவில் குடியிருக்க வைப்பேன்.+ முன்பைவிட அதிகமாக உங்களைச் செழித்தோங்க வைப்பேன்.+ அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்.+
12 என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களை உங்கள் நடுவில் நடமாட வைப்பேன். அவர்கள் உங்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+ நீங்கள் அவர்களுடைய சொத்தாவீர்கள். இனி ஒருபோதும் அவர்களுடைய பிள்ளைகளைப் பறிக்க மாட்டீர்கள்.’”+
13 “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்கள் உங்களிடம், “உங்கள் தேசம் ஜனங்களைக் கொன்று, பிள்ளைகளைப் பறிக்கிற தேசம்” என்று சொல்வதால்,
14 இனியும் நீங்கள் ஜனங்களைக் கொல்லவோ பிள்ளைகளைப் பறிக்கவோ மாட்டீர்கள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
15 ‘இனி மற்ற தேசங்கள் உங்களைக் கேவலமாகப் பேசுவதற்கோ கிண்டல் செய்வதற்கோ நான் விட மாட்டேன்.+ நீங்கள் இனி உங்கள் ஜனங்களைத் தடுக்கி விழவைக்க மாட்டீர்கள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார்.
16 யெகோவா மறுபடியும் என்னிடம் இப்படிச் சொன்னார்:
17 “மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய தேசத்தில் குடியிருந்தபோது கெட்ட வழியில் போய்க் கெட்ட காரியங்களைச் செய்து தேசத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.+ அதனால், மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணைப் போல என்முன் அசுத்தமாக இருந்தார்கள்.+
18 அவர்கள் நிறைய கொலைகள் செய்து, அருவருப்பான* சிலைகளை வணங்கி+ தேசத்தைத் தீட்டுப்படுத்தியதால் அவர்கள்மேல் என் கோபத்தைக் கொட்டினேன்.+
19 அவர்களை மற்ற தேசங்களின் நடுவிலும் ஜனங்களின் நடுவிலும் சிதறிப்போக வைத்தேன்.+ அவர்கள் கெட்ட வழியில் போய் கெட்ட காரியங்களைச் செய்ததற்காகச் சரியான தண்டனை கொடுத்தேன்.
20 ஆனால், அவர்கள் சிதறிப்போன தேசங்களில் இருந்த ஜனங்கள் அவர்களைப் பார்த்து, ‘இவர்கள் யெகோவாவின் ஜனங்களாம்! அவரே அவருடைய தேசத்தைவிட்டு இவர்களைத் துரத்திவிட்டார்!’ என்று சொல்லி என்னுடைய பரிசுத்தமான பெயரைக் களங்கப்படுத்தினார்கள்.+
21 இஸ்ரவேல் ஜனங்கள் எங்கெல்லாம் சிதறிப்போனார்களோ அங்கெல்லாம் என்னுடைய பெயரைக் கெடுத்தார்கள். ஆனால், நான் என்னுடைய பரிசுத்தமான பெயர்மேல் அக்கறை காட்டுவேன்.”+
22 “அதனால், இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேல் ஜனங்களே, நீங்கள் சிதறிப்போன தேசங்களில் என்னுடைய பரிசுத்தமான பெயரைக் கெடுத்தீர்களே. அந்தப் பெயருக்காகத்தான் நடவடிக்கை எடுக்கிறேனே தவிர, உங்களுக்காக அல்ல.”’+
23 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘மற்ற ஜனங்களின் நடுவில் நீங்கள் கெடுத்த என்னுடைய மகத்தான பெயரை நான் பரிசுத்தப்படுத்துவேன்.+ நான் பரிசுத்தமானவர் என்று உங்கள் மூலமாகக் காட்டுவேன். அதைப் பார்க்கும்போது, நான் யெகோவா என்று அந்த ஜனங்கள் தெரிந்துகொள்வார்கள்.+
24 நீங்கள் சிதறிப்போன எல்லா தேசங்களிலிருந்தும் உங்களைக் கூட்டிச்சேர்த்து, மறுபடியும் உங்கள் தேசத்துக்கே கொண்டுவருவேன்.+
25 உங்கள்மேல் சுத்தமான தண்ணீரைத் தெளிப்பேன். அப்போது நீங்கள் சுத்தமாவீர்கள்.+ அசுத்தமான பழக்கங்களினாலும் அருவருப்பான சிலைகளினாலும்+ தீட்டுப்பட்டிருந்த உங்களை நான் முழுமையாகச் சுத்தமாக்குவேன்.+
26 நான் உங்களுக்குப் புதிய இதயத்தையும்+ புதிய மனதையும் கொடுப்பேன்.+ கல் போன்ற இதயத்தை+ எடுத்துவிட்டு, மென்மையான இதயத்தை* உங்களுக்குக் கொடுப்பேன்.
27 என்னுடைய சக்தியை உங்களுக்குக் கொடுத்து என்னுடைய விதிமுறைகளின்படி நடக்க வைப்பேன்.+ நீங்கள் என்னுடைய நீதித்தீர்ப்புகளைக் கடைப்பிடிப்பீர்கள்.
28 உங்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்தில் குடியிருப்பீர்கள். நீங்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய கடவுளாக இருப்பேன்.’+
29 ‘உங்களுடைய எல்லா அசுத்தத்திலிருந்தும் நான் உங்களை விடுதலை செய்வேன். உங்களுக்காக ஏராளமான தானியத்தை விளைய வைப்பேன். உங்கள் தேசத்தைப் பஞ்சத்தால் வாட்டியெடுக்க மாட்டேன்.+
30 மரங்களைக் காய்த்துக் குலுங்க வைப்பேன், வயல்களை அமோகமாக விளைய வைப்பேன். நீங்கள் இனி ஒருபோதும் மற்ற ஜனங்களின் நடுவிலே பஞ்சத்தால் வாடி அவமானப்பட மாட்டீர்கள்.+
31 நீங்கள் முன்பு செய்த கெட்ட காரியங்களையெல்லாம் நினைத்துப் பார்ப்பீர்கள். நீங்கள் செய்த குற்றங்களையும் அருவருப்பான காரியங்களையும் நினைத்து உங்களையே அருவருப்பீர்கள்.’+
32 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் ஜனங்களே, நான் இதையெல்லாம் உங்களுக்காகச் செய்யப்போகிறேன் என்று நினைக்காதீர்கள்.+ நீங்கள் மோசமான காரியங்களைச் செய்ததற்காக வெட்கப்படுங்கள், தலைகுனியுங்கள்.’
33 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்களுடைய குற்றங்களிலிருந்து நான் உங்களைச் சுத்தப்படுத்தும் நாளிலே, ஜனங்களை மறுபடியும் நகரங்களில் குடியிருக்க வைப்பேன்.+ பாழாக்கப்பட்ட இடங்கள் திரும்பவும் கட்டப்படும்படி செய்வேன்.+
34 வருவோர் போவோரெல்லாம் பார்க்கும்படி பாழாய்க் கிடந்த தேசத்தில் மறுபடியும் பயிர் செய்யப்படும்.
35 அப்போது ஜனங்கள், “பாழாக்கப்பட்ட தேசம் ஏதேன் தோட்டத்தைப்+ போல ஆகிவிட்டது. தரைமட்டமாகக் கிடந்த நகரங்கள் இப்போது கோட்டைகளாக நிற்கின்றன. பாழாக்கப்பட்டு வெறிச்சோடிப்போன நகரங்களில் இப்போது ஜனங்கள் குடியிருக்கிறார்கள்”+ என்று சொல்வார்கள்.
36 தரைமட்டமானதை யெகோவாவாகிய நானே கட்டி எழுப்பினேன் என்றும், பாழாக்கப்பட்ட நிலத்தை நானே பயிர்நிலமாக மாற்றினேன் என்றும் உங்களைச் சுற்றியுள்ள மற்ற தேசங்கள் தெரிந்துகொள்ளும். யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன், நானே இதைச் செய்தேன்.’+
37 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘தங்களை மந்தைகள்போல் பெருக வைக்கும்படி இஸ்ரவேல் ஜனங்கள் என்னிடம் கேட்பதற்கு நான் அனுமதிப்பேன்.
38 பின்பு, பாழாக்கப்பட்ட நகரங்களிலே ஜனங்களை மந்தைகள்போல் பெருக வைப்பேன். பரிசுத்தமானவர்களின் கூட்டத்தைப் போலவும், பண்டிகை காலத்தில்+ எருசலேமில் கூடுகிற கூட்டத்தை* போலவும் அவர்கள் ஏராளமாக இருப்பார்கள்.+ அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.’”
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “என் வைராக்கியத் தீயினால்.”
^ இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
^ அதாவது, “கடவுளுடைய அறிவுரைகளைக் கேட்டு நடக்கிற இதயத்தை.”
^ அல்லது, “எருசலேமில் பலிக்காகக் கொண்டுவரப்பட்ட ஆட்டுமந்தைகளை.”