எசேக்கியேல் 46:1-24
46 “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘கிழக்கே பார்த்தபடி இருக்கிற உட்பிரகார நுழைவாசல்+ வாரத்தில் ஆறு நாட்களுக்கு+ மூடப்பட்டிருக்க வேண்டும்.+ ஆனால், ஓய்வுநாளிலும் மாதப் பிறப்பு* நாளிலும் அது திறக்கப்பட வேண்டும்.
2 தலைவர் வெளியிலிருந்து வந்து, நுழைவு மண்டபத்தின் வழியாகப் போய்,+ கதவு நிலைக்குப் பக்கத்தில் நிற்பார். அவருடைய தகன பலியையும் சமாதான பலிகளையும் குருமார்கள் செலுத்துவார்கள். வாசலறையில் அவர் கடவுளை வணங்கிவிட்டு வெளியே போவார். ஆனால், நுழைவாசல் சாயங்காலம்வரை மூடப்படக் கூடாது.
3 ஓய்வுநாட்களிலும் மாதப் பிறப்பு நாட்களிலும்+ தேசத்திலுள்ள ஜனங்கள்கூட அந்த நுழைவாசலில் யெகோவாவை வணங்குவார்கள்.
4 தலைவர் ஓய்வுநாளிலே, குறையில்லாத ஆறு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் யெகோவாவுக்குத் தகன பலியாகக் கொடுக்க வேண்டும்.+
5 அந்தச் செம்மறியாட்டுக் கடாவோடு சேர்த்து ஒரு எப்பா அளவு* மாவை உணவுக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளோடு சேர்த்து அவரால் முடிந்த உணவுக் காணிக்கையைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு எப்பா அளவு மாவுக்கும் மூன்றரை லிட்டர்* எண்ணெயைக் கொடுக்க வேண்டும்.+
6 மாதப் பிறப்பு நாளில் குறையில்லாத ஒரு இளம் காளையையும், ஆறு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் கொடுக்க வேண்டும். அவற்றுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது.+
7 அந்த இளம் காளைக்காக ஒரு எப்பா அளவு மாவையும், அந்தச் செம்மறியாட்டுக் கடாவுக்காக ஒரு எப்பா அளவு மாவையும், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளுக்காக அவரால் முடிந்ததையும் உணவுக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு எப்பா அளவு மாவுக்கும் மூன்றரை லிட்டர் எண்ணெயைக் கொடுக்க வேண்டும்.
8 நுழைவு மண்டபத்தின் வழியாகத்தான் தலைவர் உள்ளே வர வேண்டும், அதன் வழியாகத்தான் வெளியேயும் போக வேண்டும்.+
9 பண்டிகை நாட்களில்+ யெகோவாவை வணங்குவதற்காக வருகிற ஜனங்கள் வடக்கு நுழைவாசல்+ வழியாக வந்தால் தெற்கு நுழைவாசல்+ வழியாக வெளியே போக வேண்டும், தெற்கு நுழைவாசல் வழியாக வந்தால் வடக்கு நுழைவாசல் வழியாக வெளியே போக வேண்டும். வந்த வாசல் வழியாக யாரும் திரும்பிப் போகக் கூடாது. எதிர் வாசல் வழியாகத்தான் போக வேண்டும்.
10 ஜனங்கள் உள்ளே வரும்போது அவர்களுடைய தலைவரும் உள்ளே வர வேண்டும், அவர்கள் வெளியே போகும்போது அவரும் வெளியே போக வேண்டும்.
11 பண்டிகை நாட்களிலும் பண்டிகைக் காலங்களிலும், இளம் காளையோடு சேர்த்து ஒரு எப்பா அளவு மாவையும், செம்மறியாட்டுக் கடாவோடு சேர்த்து ஒரு எப்பா அளவு மாவையும், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளோடு சேர்த்து அவரால் முடிந்ததையும் உணவுக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு எப்பா அளவு மாவுக்கும் மூன்றரை லிட்டர் எண்ணெயைக் கொடுக்க வேண்டும்.+
12 தலைவர் அவராகவே விருப்பப்பட்டு தகன பலியையோ+ சமாதான பலிகளையோ யெகோவாவுக்குக் கொடுக்க வந்தால், கிழக்கே பார்த்தபடி இருக்கிற நுழைவாசல் அவருக்காகத் திறக்கப்பட வேண்டும். ஓய்வுநாளில் கொடுப்பதைப் போலவே அந்த நாளிலும் அவர் தகன பலியையும் சமாதான பலிகளையும் கொடுப்பார்.+ அவர் வெளியே போனதும் நுழைவாசல் மூடப்பட வேண்டும்.+
13 யெகோவாவுக்குத் தகன பலியாக, குறையில்லாத ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டி தினமும் கொடுக்கப்பட வேண்டும்.+ ஒவ்வொரு நாள் காலையிலும் அது கொடுக்கப்பட வேண்டும்.
14 அதோடு சேர்த்து, உணவுக் காணிக்கையாக, ஒரு எப்பா அளவிலே ஆறில் ஒரு பங்கு* மாவு ஒவ்வொரு நாள் காலையிலும் கொடுக்கப்பட வேண்டும். தவறாமல் யெகோவாவுக்குச் செலுத்தும் உணவுக் காணிக்கையாகிய நைசான மாவின் மேல் தெளிப்பதற்காக ஒன்றேகால் லிட்டர்* எண்ணெயும் கொடுக்கப்பட வேண்டும். இது நிரந்தரச் சட்டம்.
15 தினமும் செலுத்தப்படுகிற* தகன பலியாக, செம்மறியாட்டுக் கடாக் குட்டியும் உணவுக் காணிக்கையும் எண்ணெயும் காலை வேளைகளில் கொடுக்கப்பட வேண்டும்.’
16 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘தலைவர் தன்னுடைய மகன்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலத்தைக் கொடுத்தால் அது அவருடைய மகன்களின் நிலமாக ஆகும். அவர்களுக்குக் கிடைத்த பரம்பரைச் சொத்தாக அது இருக்கும்.
17 தன்னுடைய வேலைக்காரர்களில் ஒருவனுக்கு ஒரு நிலத்தை அவர் கொடுத்தால், விடுதலை வருஷம்வரை அது அவனுக்குச் சொந்தமானதாக இருக்கும்.+ பின்பு, அது அந்தத் தலைவருக்கே வந்து சேரும். அவருடைய மகன்களுக்கு மட்டும்தான் நிலம் நிரந்தர சொத்தாகக் கிடைக்கும்.
18 ஜனங்களுடைய சொத்தை அவர் அபகரிக்கக் கூடாது. அவருக்குச் சொந்தமான நிலங்களை மட்டும்தான் அவருடைய மகன்களுக்குக் கொடுக்க வேண்டும். மற்ற ஜனங்களுடைய நிலங்களைப் பறித்துக்கொண்டு அவர்களை அங்கிருந்து விரட்டிவிடக் கூடாது.’”
19 பின்பு, அவர் என்னை நுழைவாசலுக்குப் பக்கத்தில்,+ வடக்கே பார்த்தபடி இருக்கிற குருமார்களின் பரிசுத்தமான சாப்பாட்டு அறைகளுக்குப் போகிற வழியாகக் கொண்டுபோனார்.+ அங்கே மேற்குப் பக்கமாக பின்புறத்தில் நான் ஒரு இடத்தைப் பார்த்தேன்.
20 அவர் என்னிடம், “இங்குதான் குருமார்கள் குற்ற நிவாரண பலிகளையும் பாவப் பரிகாரப் பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் வேக வைக்க வேண்டும்.+ ஜனங்களை எதேச்சையாகப் பரிசுத்தமாக்கிவிடாதபடிக்கு, அவர்கள் எதையும் வெளிப்பிரகாரத்துக்குக் கொண்டுபோகக் கூடாது”+ என்றார்.
21 பின்பு, அவர் என்னை வெளிப்பிரகாரத்தின் நான்கு மூலைகள் வழியாகவும் கொண்டுபோனார். வெளிப்பிரகாரத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு சிறிய பிரகாரம் இருந்ததைப் பார்த்தேன்.
22 அவற்றின் நீளம் 40 முழம்,* அகலம் 30 முழம். அந்த நான்கு பிரகாரங்களுமே ஒரே அளவில் இருந்தன.
23 அந்த நான்கு பிரகாரங்களுக்கு உள்ளேயும் திட்டுகள்* சுற்றிவர இருந்தன. அவற்றின் கீழே, பலிகளை வேக வைக்கும் அடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
24 அவர் என்னிடம், “ஆலயத்தில் சேவை செய்கிறவர்கள் இங்குதான் ஜனங்களுடைய பலிகளை வேக வைப்பார்கள்”+ என்றார்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “முதலாம் பிறை.”
^ அதாவது, “சுமார் 10 கிலோ.”
^ நே.மொ., “ஒரு ஹின் அளவு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ அதாவது, “சுமார் ஒன்றரை கிலோ.”
^ நே.மொ., “ஒரு ஹின் அளவில் மூன்றிலொரு பங்கு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “வழக்கமான.”
^ இது பெரிய முழத்தைக் குறிக்கிறது. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட கற்கள்.”