எண்ணாகமம் 14:1-45
14 அதைக் கேட்ட ஜனங்கள் எல்லாரும் அந்த ராத்திரி முழுவதும் சத்தமாக அழுது புலம்பிக்கொண்டே இருந்தார்கள்.+
2 அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முணுமுணுத்தார்கள்.+ “நாம் எகிப்திலேயே செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இந்த வனாந்தரத்திலேயே செத்துப்போனால்கூட பரவாயில்லை!
3 யெகோவா எதற்காக நம்மை அந்தத் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போய் எதிரிகளின் வாளுக்குப் பலியாக்கப் பார்க்கிறார்?+ நம் மனைவிமக்களை அந்த ஜனங்கள் பிடித்து வைத்துக்கொள்வார்களே.+ எகிப்துக்குத் திரும்பிப் போவதுதான் நல்லது” என்றெல்லாம் முணுமுணுத்தார்கள்.+
4 “நமக்கு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு எகிப்துக்கே திரும்பிப் போய்விடுவோம்” என்றுகூட பேசிக்கொண்டார்கள்.+
5 இதைக் கேட்டபோது மோசேயும் ஆரோனும் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
6 அந்தத் தேசத்தை உளவு பார்த்துவிட்டு வந்த நூனின் மகனாகிய யோசுவாவும்+ எப்புன்னேயின் மகனாகிய காலேபும்+ தங்களுடைய உடையைக் கிழித்துக்கொண்டு,
7 இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும், “நாங்கள் உளவு பார்த்த தேசம் ரொம்ப ரொம்ப நல்ல தேசம்.+
8 யெகோவாவுக்கு நம்மேல் பிரியம் இருந்தால், அந்தத் தேசத்துக்கு நிச்சயம் நம்மைக் கூட்டிக்கொண்டு போவார், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குத் தருவார்.+
9 யெகோவாவின் பேச்சை மாத்திரம் மீறிவிடாதீர்கள். அங்குள்ள ஜனங்களை நினைத்துப் பயப்படாதீர்கள்,+ அவர்களை நாம் ஒழித்துக்கட்டுவோம். அவர்களைப் பாதுகாக்க யாரும் இல்லை, ஆனால் நம்மோடு யெகோவா இருக்கிறார்.+ அவர்களை நினைத்துப் பயப்படாதீர்கள்” என்று சொன்னார்கள்.
10 அதைக் கேட்ட இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும், அந்த இரண்டு பேர்மேலும் கல்லெறிய வேண்டுமென்று பேசிக்கொண்டார்கள்.+ அப்போது, சந்திப்புக் கூடாரத்தின் மேல் யெகோவாவின் மகிமை தோன்றியதை அந்த ஜனங்கள் பார்த்தார்கள்.+
11 பின்பு யெகோவா மோசேயிடம், “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த ஜனங்கள் எனக்கு மரியாதை காட்டாமல் இருப்பார்கள்?+ இவர்கள் நடுவில் நான் பல அற்புதங்களைச் செய்திருந்தும் எத்தனை நாளைக்குத்தான் என்மேல் விசுவாசம் வைக்காமல் இருப்பார்கள்?+
12 நான் இவர்களைக் கொள்ளைநோயால் தாக்கி, அழிக்கப்போகிறேன். ஆனால் உன்னை, இவர்களைவிட பெரிய தேசமாகவும் பலமான தேசமாகவும் ஆக்கப்போகிறேன்”+ என்றார்.
13 ஆனால் மோசே யெகோவாவிடம், “இவர்களை உங்களுடைய வல்லமையால் எகிப்தியர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு வந்தீர்களே. இப்போது இவர்களை நீங்கள் அழித்துவிட்டால் அந்த எகிப்தியர்கள் அதைக் கேள்விப்பட மாட்டார்களா?+
14 அதைப் பற்றி கானான் தேசத்து ஜனங்களுக்குச் சொல்ல மாட்டார்களா? யெகோவாவாகிய நீங்கள் இஸ்ரவேலர்களோடு இருக்கிறீர்கள், இவர்கள் முன்னால் நேருக்கு நேராகத் தோன்றியிருக்கிறீர்கள்+ என்பதையெல்லாம் அந்தத் தேசத்து ஜனங்களும் கேள்விப்பட்டிருக்கிறார்களே.+ அதுமட்டுமல்ல, நீங்கள் யெகோவா, உங்களுடைய மேகம் இவர்களுக்கு மேலே இருக்கிறது, பகலில் மேகத் தூணிலும் ராத்திரியில் நெருப்புத் தூணிலும் இவர்களுக்கு முன்னால் போகிறீர்கள்+ என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறார்களே.
15 அப்படியிருக்கும்போது, இஸ்ரவேல் ஜனங்களை நீங்கள் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டால், உங்களுடைய பெயரையும் புகழையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிற தேசத்தாரெல்லாம் என்ன சொல்வார்கள்?
16 ‘இந்த ஜனங்களுக்குக் கொடுப்பதாகச் சொன்ன தேசத்துக்கு யெகோவாவினால் இவர்களைக் கூட்டிக்கொண்டு போக முடியவில்லை, அதனால்தான் இவர்களை வனாந்தரத்தில் அழித்துவிட்டார்’ என்று சொல்ல மாட்டார்களா?+
17 யெகோவாவே, நீங்கள் எவ்வளவு மகத்தானவர் என்று தயவுசெய்து காட்டுங்கள். ஏனென்றால்,
18 ‘யெகோவா சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்,+ குற்றத்தையும் மீறுதலையும் மன்னிப்பவர். ஆனால், குற்றவாளியை அவர் ஒருபோதும் தண்டிக்காமல் விட மாட்டார். தகப்பன்கள் செய்யும் குற்றத்துக்காக மகன்களையும் மூன்றாம் நான்காம் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களையும் தண்டிப்பார்’ என்று நீங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்.+
19 தயவுசெய்து உங்களுடைய அளவுகடந்த அன்பை* காட்டி இந்த ஜனங்களுடைய பாவத்தை மன்னியுங்கள். எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்ததிலிருந்து மன்னித்தது போலவே இப்போதும் மன்னியுங்கள்” என்றார்.+
20 அதற்கு யெகோவா, “நீ கேட்டுக்கொண்டபடியே நான் இவர்களை மன்னிக்கிறேன்.+
21 ஆனால், என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* இந்தப் பூமியெல்லாம் யெகோவாவின் மகிமையால் நிறைந்திருக்கும்.+
22 இவர்கள் என் மகிமையைப் பார்த்திருந்தும், எகிப்திலும் வனாந்தரத்திலும் நான் செய்த அற்புதங்களைப் பார்த்திருந்தும்,+ பத்துத் தடவை என்னைச் சோதித்துப் பார்த்தார்கள்,+ என் பேச்சைக் காதில் வாங்கவே இல்லை.+
23 அதனால், இவர்களுடைய முன்னோர்களுக்கு நான் வாக்குக் கொடுத்த தேசத்தை இவர்களில் யாருமே பார்க்க மாட்டார்கள். எனக்கு மரியாதை காட்டாத யாரும் அதைப் பார்க்க மாட்டார்கள்.+
24 ஆனால், என் ஊழியனாகிய காலேப்+ இவர்களைப் போல் நடந்துகொள்ளாமல், முழு இதயத்தோடு எனக்குக் கீழ்ப்படிந்துவருகிறான். அதனால், அவன் உளவு பார்த்த தேசத்துக்கு அவனை நான் நிச்சயம் கூட்டிக்கொண்டு போவேன், அவனுடைய வம்சத்தார் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+
25 அமலேக்கியர்களும் கானானியர்களும் பள்ளத்தாக்கிலே குடியிருப்பதால்,+ நாளைக்கு நீங்கள் இங்கிருந்து திரும்பி, செங்கடலுக்குப் போகும் வழியாக வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப் போக வேண்டும்”+ என்றார்.
26 யெகோவா மோசேயையும் ஆரோனையும் பார்த்து,
27 “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பொல்லாத ஜனங்கள் எனக்கு விரோதமாக முணுமுணுத்துக்கொண்டே இருப்பார்கள்?+ இவர்கள் என்ன சொல்லி முணுமுணுக்கிறார்கள் என்பதை நான் கேட்டேன்.+
28 நீ இவர்களிடம், ‘யெகோவா சொல்வது என்னவென்றால், “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* என் காதுபட நீங்கள் பேசியபடியே உங்களுக்குச் செய்வேன்.+
29 எனக்கு விரோதமாக முணுமுணுத்த நீங்கள் எல்லாரும் இந்த வனாந்தரத்திலேயே செத்துப்போவீர்கள்.+ பெயர்ப்பதிவு செய்யப்பட்ட 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ள நீங்கள் எல்லாரும் கண்டிப்பாகச் சாவீர்கள்.+
30 நான் உங்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர வேறு யாரும் போக மாட்டீர்கள்.+
31 உங்கள் பிள்ளைகளை எதிரிகள் பிடித்து வைத்துக்கொள்வார்கள் என்று சொன்னீர்களே, அதே பிள்ளைகளை நான் அந்தத் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன்.+ நீங்கள் ஒதுக்கித்தள்ளிய தேசத்தை+ அவர்கள் அனுபவிப்பார்கள்.
32 ஆனால், நீங்கள் இந்த வனாந்தரத்தில் சாவீர்கள்.
33 உங்கள் மகன்கள் தங்களுடைய மந்தைகளை 40 வருஷங்களுக்கு+ இந்த வனாந்தரத்தில் மேய்க்க வேண்டியிருக்கும். நீங்கள் செய்த துரோகங்களுக்காக அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள். நீங்கள் எல்லாருமே இந்த வனாந்தரத்தில் சாகும்வரை அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள்.+
34 நீங்கள் அந்தத் தேசத்தை உளவு பார்த்த 40 நாட்களின்படியே,+ ஒரு நாளுக்கு ஒரு வருஷம் என்ற கணக்கில் 40 வருஷங்கள்+ உங்கள் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படுவீர்கள். என்னை எதிர்த்தால் உங்களுடைய கதி என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
35 யெகோவாவாகிய நான் இதைச் சொல்லியிருக்கிறேன். எனக்கு எதிராக ஒன்றுகூடிய இந்தப் பொல்லாத ஜனங்களை நான் தண்டிப்பேன். இந்த வனாந்தரத்தில் அவர்களுக்கு முடிவு வரும், இங்கேயே அவர்கள் செத்துப்போவார்கள்.+
36 உளவு பார்ப்பதற்காக மோசே அனுப்பிய ஆட்கள், திரும்பி வந்து அந்தத் தேசத்தைப் பற்றி மோசமாகப் பேசியதாலும், அவருக்கு எதிராக முணுமுணுக்க ஜனங்களைத் தூண்டியதாலும்+ தண்டிக்கப்படுவார்கள்.
37 அந்தத் தேசத்தைப் பற்றி மோசமாகப் பேசிய ஆட்கள் தண்டிக்கப்பட்டு, யெகோவாவின் முன்னால் செத்துப்போவார்கள்.+
38 ஆனால், அந்தத் தேசத்தை உளவு பார்க்கப் போனவர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும் எப்புன்னேயின் மகனாகிய காலேபும் நிச்சயம் உயிர்பிழைப்பார்கள்”’”+ என்றார்.
39 மோசே இவற்றை இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும் சொன்னபோது, அவர்கள் மிகவும் அழுது புலம்ப ஆரம்பித்தார்கள்.
40 பின்பு விடியற்காலையில் எழுந்து, “நாங்கள் பாவம் செய்துவிட்டோம், யெகோவா சொல்லியிருந்த இடத்துக்குப் போக இப்போது தயாராக இருக்கிறோம்” என்று சொல்லிக்கொண்டு உயரமான மலைப்பகுதிக்குப் போகப் பார்த்தார்கள்.+
41 ஆனால் மோசே அவர்களிடம், “நீங்கள் ஏன் யெகோவாவின் கட்டளையை மீறி நடக்கிறீர்கள்? நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்காது.
42 அதனால் போகாதீர்கள், யெகோவா உங்களோடு இல்லை, மீறிப் போனால் எதிரிகள் உங்களை வீழ்த்திவிடுவார்கள்.+
43 அங்கே அமலேக்கியர்களும் கானானியர்களும் இருக்கிறார்கள்.+ நீங்கள் வாளால் கொல்லப்படுவீர்கள். நீங்கள் யெகோவாவிடமிருந்து விலகிவிட்டதால் யெகோவா உங்களோடு இருக்க மாட்டார்”+ என்றார்.
44 அவர்கள் மோசேயின் பேச்சைக் கேட்காமல் அகங்காரத்தோடு* அந்த மலைப்பகுதிக்குப் போனார்கள்.+ ஆனால், யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியும் மோசேயும் முகாமிலிருந்து போகவில்லை.+
45 அப்போது அந்த மலைப்பகுதியில் குடியிருந்த அமலேக்கியர்களும் கானானியர்களும் இறங்கிவந்து அவர்களைத் தாக்கி, ஓர்மாவரை துரத்திக்கொண்டு போனார்கள்.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “மாறாத அன்பை.”
^ வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
^ வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
^ இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.