எண்ணாகமம் 15:1-41

15  பின்பு யெகோவா மோசேயிடம்,  “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் கொடுக்கப்போகிற தேசத்துக்கு+ நீங்கள் போய்ச் சேர்ந்த பின்பு,  ஒரு மாட்டையோ ஆட்டையோ யெகோவாவுக்குப் பிடித்த வாசனை பலியாக+ அவருடைய பலிபீடத்தில் செலுத்த நீங்கள் விரும்பலாம். அதைத் தகன பலியாகவோ,+ விசேஷமாக நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் பலியாகவோ, நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலியாகவோ,+ பண்டிகைகளுக்கான பலியாகவோ+ யெகோவாவுக்குச் செலுத்தினால்,  அதற்கான உணவுக் காணிக்கையாக, ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* நைசான மாவில்+ ஒரு லிட்டர்* எண்ணெய் கலந்து யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.  அந்தத் தகன பலியுடன் அல்லது ஒவ்வொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடன் ஒரு லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும்.+  அல்லது ஒரு செம்மறியாட்டுக் கடாவைச் செலுத்தினால், அதற்கான உணவுக் காணிக்கையாக, ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* நைசான மாவில் ஒன்றேகால் லிட்டர்* எண்ணெய் கலந்து கொண்டுவர வேண்டும்.  அதோடு, ஒன்றேகால் லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.  ஆனால், ஒரு காளையைத் தகன பலியாகவோ+ விசேஷமாக நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் பலியாகவோ+ சமாதான பலியாகவோ யெகோவாவுக்குச் செலுத்தினால்,+  அதற்கான உணவுக் காணிக்கையாக,+ ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* நைசான மாவில் ஒன்றே முக்கால் லிட்டர் எண்ணெயைக் கலந்து கொண்டுவர வேண்டும். 10  அதோடு, ஒன்றே முக்கால் லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாகக்+ கொண்டுவந்து பலிபீடத்தின் நெருப்பில் ஊற்ற வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். 11  ஒவ்வொரு காளையுடனும் செம்மறியாட்டுக் கடாவுடனும் செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடனும் வெள்ளாட்டுடனும் இவற்றைச் செலுத்த வேண்டும். 12  நீங்கள் எத்தனை மிருகங்களைச் செலுத்தினாலும் சரி, ஒவ்வொன்றோடும் இவற்றைக் கொண்டுவர வேண்டும். 13  இஸ்ரவேல் குடிமக்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் தகன பலி செலுத்த வேண்டும். அதன் வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். 14  உங்களோடு தங்கியிருக்கிற வேறு தேசத்தைச் சேர்ந்தவனோ தலைமுறை தலைமுறையாக உங்களோடு குடியிருக்கிற வேறு தேசத்தைச் சேர்ந்தவனோ தகன பலியைச் செலுத்த விரும்பினால், நீங்கள் செலுத்துவது போலவே அவனும் செலுத்த வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். 15  இஸ்ரவேல் சபையாராகிய உங்களுக்கும் சரி, உங்களோடு குடியிருக்கும் வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டம் இருக்க வேண்டும். அந்தச் சட்டத்தைத் தலைமுறை தலைமுறைக்கும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். நீங்களும் சரி, வேறு தேசத்து ஜனங்களும் சரி, யெகோவாவின் சட்டத்தை ஒரே விதமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.+ 16  உங்களுக்கும் சரி, உங்களோடு குடியிருக்கும் வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டமும் ஒரே நியாயமும்* இருக்க வேண்டும்’” என்றார். 17  பின்பு யெகோவா மோசேயிடம், 18  “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் கூட்டிக்கொண்டு போகிற தேசத்துக்கு நீங்கள் வந்தபின், 19  அந்தத் தேசத்தில் விளைவதை நீங்கள் சாப்பிடும்போது,+ யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்த வேண்டும். 20  முதல் விளைச்சலின்+ முதல் மாவில்* வட்ட ரொட்டிகள் சுட்டு காணிக்கையாகச் செலுத்த வேண்டும். களத்துமேட்டிலிருந்து கொண்டுவந்து செலுத்தும் காணிக்கையைப் போலவே இதையும் செலுத்த வேண்டும். 21  முதல் விளைச்சலின் முதல் மாவில்* ரொட்டிகள் சுட்டு யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். தலைமுறை தலைமுறைக்கும் இதை நீங்கள் செலுத்த வேண்டும். 22  நீங்கள் ஒரு தவறு செய்து, மோசே மூலம் யெகோவா கொடுத்த இந்தக் கட்டளைகளைத் தெரியாத்தனமாக மீறிவிட்டால், 23  அதாவது தலைமுறை தலைமுறையாக நீங்கள் கடைப்பிடிப்பதற்காக மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளைகளைத் தெரியாத்தனமாக மீறிவிட்டால், ஜனங்கள் யாருக்கும் தெரியாமல் அதைச் செய்துவிட்டால், யெகோவாவுக்காக 24  ஜனங்கள் எல்லாரும் ஒரு இளம் காளையைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அதற்கான உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும்.+ பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் செலுத்த வேண்டும்.+ 25  இஸ்ரவேலர்கள் எல்லாருக்காகவும் குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார், அப்போது அவர்களுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ ஏனென்றால், அவர்கள் தெரியாத்தனமாகத் தவறு செய்துவிட்டார்கள். அதற்காக யெகோவாவுக்குத் தகன பலியையும் பாவப் பரிகார பலியையும் யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவந்தார்கள். 26  இஸ்ரவேல் ஜனங்களும் அவர்களோடு குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களும் தெரியாத்தனமாகத் தவறு செய்ததால் மன்னிப்பு பெறுவார்கள். 27  உங்களில் ஒருவன் தெரியாத்தனமாகத் தவறு செய்தால், பாவப் பரிகார பலியாக ஒருவயது பெண் வெள்ளாட்டுக் குட்டியை அவன் கொண்டுவர வேண்டும்.+ 28  அவனுக்காகக் குருவானவர் யெகோவாவுக்கு முன்னால் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ 29  தெரியாத்தனமாகத் தவறு செய்யும் இந்த விஷயத்தில், இஸ்ரவேல் குடிமக்களாகிய உங்களுக்கும் சரி, உங்களோடு குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டம் இருக்க வேண்டும்.+ 30  ஒருவன் வேண்டுமென்றே பாவம் செய்தால்,+ அவன் இஸ்ரவேல் குடிமக்களில் ஒருவனாக இருந்தாலும் சரி, வேறு தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அது யெகோவாவைப் பழிப்பதற்குச் சமம். அவன் கொல்லப்பட வேண்டும். 31  அவன் யெகோவாவின் வார்த்தையை அலட்சியம் செய்து அவருடைய கட்டளையை மீறியதால், கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ அவனுடைய குற்றத்துக்காக அவன் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்’”+ என்றார். 32  இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது, ஒருவன் ஓய்வுநாளில்+ விறகு பொறுக்குவதைச் சிலர் பார்த்தார்கள். 33  அவர்கள் அவனை மோசேக்கும் ஆரோனுக்கும் ஜனங்களுக்கும் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார்கள். 34  அவன் செய்த குற்றத்துக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமென்று கடவுளுடைய சட்டத்தில் கொடுக்கப்படாததால் அவன் காவலில் வைக்கப்பட்டான்.+ 35  அப்போது யெகோவா மோசேயிடம், “அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்,+ ஜனங்கள் எல்லாரும் அவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொல்ல வேண்டும்”+ என்றார். 36  மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளைப்படியே ஜனங்கள் எல்லாரும் அவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொன்றார்கள். 37  பின்பு யெகோவா மோசேயிடம், 38  “இஸ்ரவேலர்கள் தங்களுடைய அங்கிகளின் ஓரங்களில் தொங்கல்கள் வைத்து, அந்தத் தொங்கல்களுக்கு மேலே நீல நிற நாடாவைத் தைக்க வேண்டுமென்று அவர்களிடம் சொல். தலைமுறை தலைமுறைக்கும் அவர்கள் இப்படிச் செய்ய வேண்டும்.+ 39  ‘ஏனென்றால், நீங்கள் அந்தத் தொங்கல்களைப் பார்க்கும்போது, யெகோவாவின் கட்டளைகள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்து அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ உங்களுடைய மனதும்* கண்ணும் போகிற போக்கில் போய் நீங்கள் எனக்குத் துரோகம் செய்யக் கூடாது.+ 40  நீங்கள் என்னுடைய எல்லா கட்டளைகளையும் ஞாபகத்தில் வைத்துக் கடைப்பிடிப்பதற்கும், உங்கள் கடவுளாகிய என் முன்னால் பரிசுத்தமாக இருப்பதற்கும்+ இந்தச் சட்டம் உதவும். 41  நானே உங்கள் கடவுளாகிய யெகோவா. நான்தான் உங்கள் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக உங்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன்.+ நானே உங்கள் கடவுளாகிய யெகோவா’”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
நே.மொ., “ஒரு ஹின் அளவில் நான்கில் ஒரு பங்கு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “சுமார் 2 கிலோ.”
நே.மொ., “ஒரு ஹின் அளவில் மூன்றிலொரு பங்கு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “சுமார் 3 கிலோ.”
வே.வா., “நீதித்தீர்ப்பும்.”
நே.மொ., “கொரகொரப்பான மாவில்.”
நே.மொ., “கொரகொரப்பான மாவில்.”
நே.மொ., “இதயமும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா