எண்ணாகமம் 22:1-41
22 பின்பு, இஸ்ரவேல் ஜனங்கள் புறப்பட்டுப் போய் மோவாப் பாலைநிலத்தில் முகாம்போட்டார்கள். அது யோர்தானுக்கு இக்கரையில், எரிகோவுக்கு எதிரில் இருந்தது.+
2 எமோரியர்கள்மேல் இஸ்ரவேலர்கள் நடத்திய தாக்குதல்கள் எல்லாவற்றையும் சிப்போரின் மகன் பாலாக்+ கேள்விப்பட்டிருந்தான்.
3 அதோடு, இஸ்ரவேலர்கள் ஏராளமாக இருந்ததால், அவர்களை நினைத்து அவனுடைய ஜனங்களான மோவாபியர்கள் மிகவும் பயந்தார்கள், சொல்லப்போனால் கதிகலங்கினார்கள்.+
4 அதனால், அவர்கள் மீதியான் தேசத்துப் பெரியோர்களிடம்,*+ “காட்டிலுள்ள புல்லை மாடுகள் மேய்ந்துவிடுவதுபோல், இந்த ஜனங்கள் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாவற்றையும் மேய்ந்துவிடுவார்கள் போலிருக்கிறதே” என்றார்கள்.
சிப்போரின் மகன் பாலாக் அந்தச் சமயத்தில் மோவாப் தேசத்தின் ராஜாவாக இருந்தான்.
5 பெயோரின் மகன் பிலேயாமைக்+ கூட்டிக்கொண்டு வருவதற்காக பாலாக் தன்னுடைய தூதுவர்களை அனுப்பினான். பிலேயாமுடைய தேசத்தின் ஆற்றுக்கு* பக்கத்தில் இருக்கிற பெத்தூருக்கு அவர்களை அனுப்பி, “எகிப்திலிருந்து ஒரு பெரிய கூட்டமே வந்திருக்கிறது. தேசமெங்கும் அவர்கள் பரவியிருக்கிறார்கள்,+ என் எதிரிலேயே குடியிருக்கிறார்கள்.
6 அவர்கள் என்னைவிட பலசாலிகள். அதனால், தயவுசெய்து நீங்கள் வந்து எனக்காக அவர்களைச் சபியுங்கள்.+ அப்போது ஒருவேளை நான் அவர்களைத் தோற்கடித்து, இந்தத் தேசத்தைவிட்டுத் துரத்தியடிக்க முடியும். ஏனென்றால், நீங்கள் யாரை ஆசீர்வதிக்கிறீர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், யாரைச் சபிக்கிறீர்களோ அவர்கள் சபிக்கப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்” என்று சொல்லச் சொன்னான்.
7 அதனால், மோவாப் தேசத்துப் பெரியோர்களும் மீதியான் தேசத்துப் பெரியோர்களும், சபிப்பதற்கான* கூலியை எடுத்துக்கொண்டு பிலேயாமிடம்+ போனார்கள். பாலாக் சொல்லி அனுப்பிய செய்தியை அவனிடம் சொன்னார்கள்.
8 அதற்கு அவன், “இன்றைக்கு ராத்திரி இங்கேயே தங்கியிருங்கள். யெகோவா எனக்கு என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுவிட்டு உங்களுக்குச் சொல்கிறேன்” என்றான். அதனால், மோவாபின் அதிகாரிகள் பிலேயாமுடன் தங்கினார்கள்.
9 கடவுள் பிலேயாமுக்குத் தோன்றி,+ “உன்னோடு இருக்கிற இந்த ஆட்கள் யார்?” என்று கேட்டார்.
10 அதற்கு பிலேயாம் உண்மைக் கடவுளிடம், “மோவாபின் ராஜாவும் சிப்போரின் மகனுமாகிய பாலாக் இவர்களை என்னிடம் அனுப்பி,
11 ‘எகிப்திலிருந்து ஒரு பெரிய கூட்டமே வந்திருக்கிறது. தேசமெங்கும் அவர்கள் பரவியிருக்கிறார்கள். எனக்காக நீங்கள் வந்து அவர்களைச் சபியுங்கள்.+ அப்போது ஒருவேளை நான் அவர்களோடு போர் செய்து அவர்களைத் துரத்தியடிக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறான்” என்றான்.
12 அதற்குக் கடவுள் பிலேயாமிடம், “நீ இந்த ஆட்களுடன் போகக் கூடாது. அந்த ஜனங்களைச் சபிக்கவும் கூடாது, அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்”+ என்றார்.
13 பிலேயாம் காலையில் எழுந்து பாலாக்கின் அதிகாரிகளிடம், “நீங்கள் உங்களுடைய தேசத்துக்குப் போங்கள், உங்களுடன் வருவதற்கு யெகோவா எனக்கு அனுமதி தரவில்லை” என்றான்.
14 அதனால், மோவாபின் அதிகாரிகள் கிளம்பி பாலாக்கிடம் வந்து, “பிலேயாம் எங்களோடு வர முடியாதென்று சொல்லிவிட்டார்” என்றார்கள்.
15 உடனே பாலாக் இன்னும் நிறைய அதிகாரிகளை, அதுவும் பெரிய பெரிய அதிகாரிகளை அனுப்பினான்.
16 அவர்கள் பிலேயாமிடம் போய், “சிப்போரின் மகன் பாலாக் உங்களிடம் இப்படிச் சொல்லச் சொன்னார்: ‘தயவுசெய்து வாருங்கள், வராமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்.
17 நான் உங்களை ரொம்பவே கௌரவப்படுத்துவேன், நீங்கள் எதைச் செய்யச் சொன்னாலும் செய்வேன். தயவுசெய்து வந்து எனக்காக இந்த ஜனங்களைச் சபியுங்கள்’” என்றார்கள்.
18 ஆனால் பிலேயாம் பாலாக்கின் ஊழியர்களிடம், “எனக்காக பாலாக் தன்னுடைய மாளிகையையே கொடுத்தாலும், அதில் வெள்ளியையும் தங்கத்தையும் கொட்டிக் கொடுத்தாலும், என் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைக்கு விரோதமாக என்னால் ஒன்றும் செய்ய முடியாது. சின்ன விஷயமோ பெரிய விஷயமோ எதையும் செய்ய முடியாது.+
19 ஆனால், இன்றைக்கு ராத்திரியும் தயவுசெய்து இங்கே தங்கியிருங்கள், யெகோவா என்னிடம் வேறெதாவது சொல்கிறாரா என்று பார்க்கலாம்” என்றான்.+
20 அன்றைக்கு ராத்திரி கடவுள் பிலேயாமிடம் தோன்றி, “இந்த ஆட்கள் உன்னைக் கூட்டிக்கொண்டு போக வந்திருந்தால், அவர்களுடன் போ. ஆனால், நான் சொல்லச் சொல்வதை மட்டும்தான் நீ சொல்ல வேண்டும்”+ என்றார்.
21 பிலேயாம் காலையில் எழுந்து, தன்னுடைய கழுதைமேல் சேணம்* வைத்து, மோவாபின் அதிகாரிகளோடு புறப்பட்டான்.+
22 ஆனாலும், அவன் போனதால் கடவுள் அவன்மேல் மிகவும் கோபப்பட்டார். பிலேயாம் தன்னுடைய வேலைக்காரர்கள் இரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு, கழுதையின் மேல் ஏறிப்போனான். அப்போது, யெகோவாவின் தூதர் அவனுக்கு எதிராக வந்து வழியில் நின்றார்.
23 உருவிய வாளுடன் யெகோவாவின் தூதர் வழியில் நிற்பதை அந்தக் கழுதை பார்த்தபோது, வழியைவிட்டு விலகி வயலுக்குள் போக முயற்சி செய்தது. கழுதையை மறுபடியும் வழிக்குக் கொண்டுவருவதற்காக பிலேயாம் அதை அடித்தான்.
24 அப்போது, இரண்டு திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவிலிருந்த குறுகிய பாதையில் யெகோவாவின் தூதர் நின்றுகொண்டார். அதன் இரண்டு பக்கங்களிலும் கற்சுவர்கள் இருந்தன.
25 அந்தக் கழுதை யெகோவாவின் தூதரைப் பார்த்தபோது, மதிலோடு மதிலாக நெருக்கிக்கொண்டு போனது. அதனால், பிலேயாமின் கால் அந்தச் சுவரில் நசுங்கியது. அவன் மறுபடியும் அதை அடித்தான்.
26 யெகோவாவின் தூதர் மீண்டும் அங்கிருந்து போய், அந்தக் கழுதை வலது பக்கமோ இடது பக்கமோ திரும்ப முடியாதபடி ஒரு குறுகலான இடத்தில் நின்றுகொண்டார்.
27 யெகோவாவின் தூதரைப் பார்த்தபோது அந்தக் கழுதை அப்படியே உட்கார்ந்துகொண்டது. அதனால் பிலேயாம் ஆத்திரமடைந்து, தன்னுடைய தடியால் கழுதையைப் போட்டு அடித்தான்.
28 கடைசியில், யெகோவா அந்தக் கழுதையைப் பேச வைத்தார்.+ அது பிலேயாமிடம், “இப்படி என்னை மூன்று தடவை அடிப்பதற்கு+ நான் உங்களுக்கு என்ன செய்தேன்?” என்று கேட்டது.
29 அதற்கு பிலேயாம் அந்தக் கழுதையைப் பார்த்து, “நீ என்னை முட்டாளாக்குகிறாய். என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்திருந்தால், உன்னைக் கொன்றே போட்டிருப்பேன்!” என்றான்.
30 அதற்கு அந்தக் கழுதை, “உங்கள் வாழ்நாளெல்லாம் நான்தானே உங்களைச் சுமந்து வந்திருக்கிறேன்? இதற்கு முன்பு எப்போதாவது இப்படிச் செய்திருக்கிறேனா?” என்று கேட்டது. அதற்கு அவன், “இல்லை!” என்றான்.
31 அப்போது யெகோவா பிலேயாமின் கண்களைத் திறந்தார்.+ உருவிய வாளுடன் யெகோவாவின் தூதர் நிற்பதை அவன் பார்த்தான். உடனே, சாஷ்டாங்கமாக விழுந்தான்.
32 அப்போது யெகோவாவின் தூதர் அவனிடம், “ஏன் உன்னுடைய கழுதையை மூன்று தடவை அடித்தாய்? இதோ! உனக்கு எதிராக நான் வந்திருக்கிறேன். நீ என் விருப்பத்துக்கு நேர்மாறாகப் போய்க்கொண்டிருக்கிறாய்.+
33 உன் கழுதை என்னைப் பார்த்து மூன்று தடவை விலகிப் போக முயற்சி செய்தது.+ அது மட்டும் விலகிப் போகாமல் இருந்திருந்தால், நான் உன்னைக் கொன்றிருப்பேன். அதை உயிரோடு விட்டிருப்பேன்” என்றார்.
34 அதற்கு பிலேயாம் யெகோவாவின் தூதரிடம், “நான் பாவம் செய்துவிட்டேன். என்னைச் சந்திப்பதற்காக நீங்கள்தான் வழியில் நின்றுகொண்டிருந்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. உங்களுக்குப் பிடிக்காவிட்டால், நான் திரும்பிப் போய்விடுகிறேன்” என்றான்.
35 அதற்கு யெகோவாவின் தூதர் பிலேயாமிடம், “நீ அந்த ஆட்களுடன் போ. ஆனால், நான் சொல்லச் சொல்வதை மட்டும்தான் நீ சொல்ல வேண்டும்” என்றார். அதனால், பாலாக்கின் அதிகாரிகளுடன் பிலேயாம் போனான்.
36 பிலேயாம் வருவதை பாலாக் கேள்விப்பட்டதுமே, அவனைச் சந்திக்க தன்னுடைய தேசத்தின் எல்லையில் இருந்த மோவாபின் நகரத்துக்குப் போனான். அது அர்னோன் கரையோரத்தில் இருந்தது.
37 அங்கே பாலாக் பிலேயாமிடம், “நான் உங்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்கு ஆட்களை அனுப்பினேனே, நீங்கள் ஏன் வரவில்லை? உங்களை என்னால் பெரிதாகக் கௌரவப்படுத்த முடியாதென்று நினைத்தீர்களா?”+ என்றான்.
38 அதற்கு பிலேயாம் பாலாக்கிடம், “நான்தான் இப்போது வந்துவிட்டேனே. இருந்தாலும், என் இஷ்டப்படி என்னால் எப்படிப் பேச முடியும்? கடவுள் என் வாயில் அருளுகிற வார்த்தைகளைத்தான் என்னால் பேச முடியும்”+ என்றான்.
39 பிலேயாம் பாலாக்குடன் போனான். அவர்கள் கீரியாத்-ஊசோத்துக்கு வந்துசேர்ந்தார்கள்.
40 பாலாக் ஆடுமாடுகளைப் பலி செலுத்தி, அவற்றில் கொஞ்சத்தை பிலேயாமுக்கும் அவனுடன் இருந்த அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தான்.
41 பாமோத்-பாகால் என்ற இடம் வசதியாக இருக்கும் என்பதால் காலையில் பிலேயாமை பாலாக் அங்கு கூட்டிக்கொண்டு வந்தான். அங்கிருந்து அவனால் எல்லா இஸ்ரவேலர்களையும் பார்க்க முடிந்தது.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “மூப்பர்களிடம்.”
^ அநேகமாக, “யூப்ரடிஸ் ஆற்றுக்கு.”
^ வே.வா., “குறிசொல்வதற்கான.”
^ சேணம் என்பது மிருகங்களின் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதற்குப் போடப்படும் தோலினால் ஆன இருக்கை.