எண்ணாகமம் 32:1-42

32  ரூபன் வம்சத்தாருக்கும்+ காத் வம்சத்தாருக்கும்+ ஆடுமாடுகள் ஏராளமாக இருந்தன. யாசேர் பிரதேசமும்+ கீலேயாத் பிரதேசமும் ஆடுமாடுகள் மேய்வதற்கு நல்ல இடமாக இருப்பதை அவர்கள் பார்த்தார்கள்.  அதனால், காத் வம்சத்தாரும் ரூபன் வம்சத்தாரும் மோசேயிடமும் குருவாகிய எலெயாசாரிடமும் ஜனங்களின் தலைவர்களிடமும் வந்து,  “அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன்,+ எலெயாலே, சேபாம், நேபோ,+ பெயோன்+ ஆகிய இடங்களை  இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா வீழ்த்தினார்.+ இவை ஆடுமாடுகள் மேய்வதற்கு நல்ல இடங்கள். உங்கள் ஊழியர்களாகிய எங்களுக்கு ஏராளமான ஆடுமாடுகள் இருக்கின்றன.+  அதனால் நீங்கள் பெரியமனதுபண்ணி, உங்கள் ஊழியர்களாகிய எங்களுக்கு இந்த இடங்களைச் சொத்தாகக் கொடுங்கள். ஆனால், யோர்தானை மட்டும் கடந்துபோகச் சொல்லாதீர்கள்” என்றார்கள்.  அப்போது மோசே, காத் வம்சத்தாரிடமும் ரூபன் வம்சத்தாரிடமும், “உங்களுடைய சகோதரர்கள் போருக்குப் போகும்போது நீங்கள் மட்டும் இங்கே இருக்க வேண்டுமோ?  யெகோவா அந்தத் தேசத்தைக் கண்டிப்பாகத் தரப்போவதாய்ச் சொல்லியிருக்கும்போது, அங்கு போக நினைக்கிறவர்களின் ஆர்வத்தை நீங்கள் ஏன் கெடுக்கிறீர்கள்?  அந்தத் தேசத்தைப் பார்ப்பதற்கு உங்களுடைய தகப்பன்களை காதேஸ்-பர்னேயாவிலிருந்து நான் அனுப்பியபோது அவர்களும் இப்படித்தான் செய்தார்கள்.+  அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை போய்+ அந்தத் தேசத்தைப் பார்த்துவிட்டு வந்த பிறகு, யெகோவா தரப்போவதாய்ச் சொல்லியிருந்த தேசத்துக்குப் போக நினைத்தவர்களின் ஆர்வத்தைக் கெடுத்தார்கள்.+ 10  அதனால், அந்த நாளில் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. அப்போது அவர், 11  ‘எகிப்திலிருந்து வந்தவர்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்கள், ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் நான் வாக்குக் கொடுத்த தேசத்தைப்+ பார்க்கப்போவதில்லை.+ ஏனென்றால், அவர்கள் முழு இதயத்தோடு எனக்குக் கீழ்ப்படியவில்லை. 12  யெகோவாவாகிய எனக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படிந்த+ கெனிசியனான எப்புன்னேயின் மகன் காலேபையும்+ நூனின் மகன் யோசுவாவையும்+ தவிர வேறு யாரும் அதைப் பார்க்கப்போவதில்லை’ என்று ஆணையிட்டுச் சொன்னார்.+ 13  இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்ததால், அவர்களை 40 வருஷங்கள் வனாந்தரத்திலேயே அலைந்து திரிய வைத்தார்.+ பாவம் செய்த அந்தத் தலைமுறையில் எல்லாரும் சாகும்வரை யெகோவா அவர்களை அப்படி அலைந்து திரிய வைத்தார்.+ 14  உங்களுடைய தகப்பன்களைப் போலவே நீங்களும் இப்போது பாவம் செய்கிறீர்கள். இஸ்ரவேலின் மேல் யெகோவாவின் கோபம் இன்னும் அதிகமாகப் பற்றியெரியும்படி செய்கிறீர்கள். 15  நீங்கள் அவரைவிட்டு விலகிப்போனால், எல்லா ஜனங்களும் மறுபடியும் இந்த வனாந்தரத்திலேயே கிடக்கும்படி அவர் கண்டிப்பாக விட்டுவிடுவார். உங்களால் இவர்கள் எல்லாரும் அழிந்துபோவார்கள்” என்றார். 16  அதன்பின் அவர்கள் அவரிடம் வந்து, “நாங்கள் இங்கேயே எங்களுடைய ஆடுமாடுகளுக்குத் தொழுவங்களையும்* பிள்ளைகளுக்கு நகரங்களையும் கட்டிக்கொள்கிறோம். 17  இங்குள்ள ஜனங்களால் எந்த ஆபத்தும் வராதபடி எங்களுடைய பிள்ளைகள் மதில் சூழ்ந்த நகரங்களில் குடியிருக்கட்டும். ஆனால், நாங்கள் இஸ்ரவேலர்களை அவர்களுடைய இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும்வரை அவர்களுக்கு முன்னாலேயே போவோம். எப்போதும் போருக்குத் தயாராக இருப்போம்.+ 18  இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் அவரவர் சொத்து கிடைக்கும்வரை நாங்கள் எங்களுடைய வீடுகளுக்குத் திரும்ப மாட்டோம்.+ 19  யோர்தானுக்குக் கிழக்கே எங்களுடைய பங்கை நாங்கள் வாங்கிக்கொண்டதால்,+ யோர்தானுக்கு மேற்கிலும் அதைத் தாண்டியும் அவர்களோடு பங்கு கேட்க மாட்டோம்” என்றார்கள். 20  அதற்கு மோசே அவர்களிடம், “போர் செய்வதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் யெகோவாவின் முன்னிலையில் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு,+ 21  யோர்தானைக் கடந்து போனால், யெகோவா தன்னுடைய எதிரிகளை விரட்டியடித்த பின்பு,+ 22  அதாவது யெகோவா அந்தத் தேசத்தை வீழ்த்திய பிறகு,+ நீங்கள் திரும்பி வரலாம்.+ அப்போது யெகோவாவுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் முன்னால் குற்றமற்றவர்களாக இருப்பீர்கள். யெகோவாவின் முன்னிலையில் இந்தத் தேசம் உங்களுக்குச் சொந்தமாகும்.+ 23  நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால், யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிடுவீர்கள். அந்தப் பாவத்துக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். 24  இப்போது, உங்கள் பிள்ளைகளுக்காக நகரங்களையும் உங்கள் மந்தைகளுக்காகத் தொழுவங்களையும் நீங்கள் கட்டிக்கொள்ளலாம்.+ ஆனால், நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும்” என்றார். 25  அப்போது, காத் வம்சத்தாரும் ரூபன் வம்சத்தாரும் மோசேயிடம், “எஜமானே, உங்கள் கட்டளைப்படியே உங்கள் ஊழியர்களாகிய நாங்கள் செய்வோம். 26  எங்கள் மனைவிமக்கள் எல்லாரும் எங்கள் வீட்டு விலங்குகளோடு கீலேயாத்தின் நகரங்களில் குடியிருப்பார்கள்.+ 27  ஆனால் எஜமானே, உங்கள் ஊழியர்களாகிய நாங்கள், நீங்கள் சொல்கிறபடியே, யெகோவாவின் முன்னிலையில் போர் செய்வதற்கு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு யோர்தானைக் கடந்துபோவோம்”+ என்றார்கள். 28  அதனால், இவர்களைப் பற்றி குருவாகிய எலெயாசாருக்கும் நூனின் மகன் யோசுவாவுக்கும் இஸ்ரவேலின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களுக்கும் மோசே இப்படிக் கட்டளை கொடுத்தார்: 29  “காத் வம்சத்தாரும் ரூபன் வம்சத்தாரும் யெகோவாவின் முன்னிலையில் போர் செய்வதற்கு ஆயுதங்கள் எடுத்துக்கொண்டு உங்களோடு யோர்தானைக் கடந்து வந்தால், அந்தத் தேசமும் உங்கள்முன் வீழ்ச்சி அடைந்தால், கீலேயாத் பிரதேசத்தை இவர்களுடைய பங்காகக் கொடுத்துவிடுங்கள்.+ 30  ஆனால், இவர்கள் ஆயுதங்கள் எடுத்துக்கொண்டு உங்களோடு யோர்தானைக் கடந்து வராமல் இருந்தால், கானான் தேசத்தில் உங்களோடு குடியேற வேண்டும்.” 31  அதற்கு காத் வம்சத்தாரும் ரூபன் வம்சத்தாரும், “உங்கள் ஊழியர்களாகிய நாங்கள் யெகோவா சொன்னபடியே செய்வோம். 32  நாங்கள் ஆயுதங்கள் எடுத்துக்கொண்டு யெகோவாவின் முன்னிலையில் யோர்தானைக் கடந்து கானான் தேசத்துக்குப் போவோம்,+ ஆனால் எங்களுடைய பங்கு யோர்தானுக்குக் கிழக்கிலேயே இருக்கும்” என்றார்கள். 33  அப்போது காத் வம்சத்தாரிடமும் ரூபன் வம்சத்தாரிடமும்+ யோசேப்பின் மகனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடமும்,+ எமோரியர்களின் ராஜாவான சீகோனின் ராஜ்யத்தையும்+ பாசானின் ராஜாவான ஓகின் ராஜ்யத்தையும்+ மோசே கொடுத்தார். அதாவது, அவர்களுடைய நகரங்களையும் அங்கிருந்த ஊர்களையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் கொடுத்தார். 34  காத் வம்சத்தார் மதில் சூழ்ந்த நகரங்களாகிய தீபோன்,+ அதரோத்,+ ஆரோவேர்,+ 35  ஆத்ரோத்-சோபான், யாசேர்,+ யொகிபேயா,+ 36  பெத்-நிம்ரா,+ பெத்தாரன்+ ஆகியவற்றையும் மந்தைகளுக்குத் தொழுவங்களையும் கட்டிக்கொண்டார்கள். 37  ரூபன் வம்சத்தார் எஸ்போன்,+ எலெயாலே,+ கீரியாத்தாயீம்,+ 38  பெயர் மாற்றப்பட்ட நகரங்களான நேபோ,+ பாகால்-மெயோன்+ ஆகியவற்றையும் சிப்மாவையும் கட்டினார்கள். திரும்பக் கட்டிய நகரங்களுக்கு அவர்கள் புதிய பெயர்களை வைத்தார்கள். 39  மனாசேயின் மகனாகிய மாகீரின் மகன்கள்+ கீலேயாத்துக்கு எதிராகப் படையெடுத்துப் போய் அதைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியர்களை விரட்டியடித்தார்கள். 40  அதனால், மனாசேயின் மகன் மாகீருக்கு மோசே கீலேயாத்தைக் கொடுத்தார், அவன் அதில் குடியிருந்தான்.+ 41  மனாசேயின் மகனாகிய யாவீர் கீலேயாத்தின் சிற்றூர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் போய் அவற்றைக் கைப்பற்றினான். அவற்றுக்கு அவோத்-யாவீர் என்று பெயர் வைத்தான்.+ 42  நோபாக் என்பவன் கேனாத்துக்கு எதிராகப் படையெடுத்துப் போய், அதையும் அதன் சிற்றூர்களையும்* கைப்பற்றினான். நோபாக் என்ற தன்னுடைய பெயரை அதற்கு வைத்தான்.

அடிக்குறிப்புகள்

இவை கற்சுவர்களால் கட்டப்பட்ட நிரந்தரத் தொழுவங்களைக் குறிக்கின்றன.
வே.வா, “அதைச் சுற்றியுள்ள ஊர்களையும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா