எண்ணாகமம் 36:1-13

36  யோசேப்பின் கொள்ளுப்பேரனும் மனாசேயின் பேரனும் மாகீரின்+ மகனுமான கீலேயாத்தின் வம்சத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள், மோசேயிடமும் இஸ்ரவேலின் கோத்திரத் தலைவர்களிடமும் வந்து,  “எஜமானே, இஸ்ரவேலர்களுக்குத் தேசத்தைக் குலுக்கல் முறையில் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டுமென்று யெகோவா உங்களிடம் சொன்னார்.+ எங்கள் சகோதரன் செலோப்பியாத்தின் சொத்தை அவருடைய மகள்களுக்குக் கொடுக்க வேண்டுமென்றும் யெகோவா உங்களிடம் சொன்னார்.+  ஆனால், அந்தப் பெண்கள் இஸ்ரவேலிலுள்ள வேறொரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்களைக் கல்யாணம் செய்துகொண்டால், அவர்களுடைய சொத்து எங்களுடைய பரம்பரையைவிட்டுப் போய்விடும். குலுக்கல் முறையில் எங்கள் கோத்திரத்துக்குக் கிடைத்த சொத்து, அவர்களுடைய கணவர்களின் கோத்திரத்துக்குப் போய்விடும்.  அதுமட்டுமல்ல, இஸ்ரவேலர்களின் விடுதலை* வருஷம்+ வரும்போது, அந்தப் பெண்களின் சொத்து எங்களுடைய கோத்திரத்தைவிட்டுக் கைமாறி அவர்களுடைய கணவர்களின் கோத்திரத்துக்கு நிரந்தரமாகப் போய்விடுமே” என்றார்கள்.  அப்போது, யெகோவாவின் உத்தரவுப்படி மோசே இஸ்ரவேலர்களிடம், “யோசேப்பு கோத்திரத்தார் சொல்வது சரிதான்.  செலோப்பியாத்தின் மகள்களைப் பற்றி யெகோவா கொடுக்கும் கட்டளை என்னவென்றால், ‘அவர்கள் தங்களுக்குப் பிடித்தவரைக் கல்யாணம் செய்யலாம். ஆனால், அவர்களுடைய அப்பாவின் கோத்திரத்தைச் சேர்ந்தவரை மட்டும்தான் கல்யாணம் செய்ய வேண்டும்.  இஸ்ரவேலர்களின் சொத்து ஒரு கோத்திரத்திலிருந்து இன்னொரு கோத்திரத்துக்குப் போகக் கூடாது. ஏனென்றால், இஸ்ரவேலர்கள் அவரவர் கோத்திரத்தின் சொத்தை அவரவரே வைத்துக்கொள்ள வேண்டும்.  இஸ்ரவேலில் ஒரு பெண்ணுக்குப் பரம்பரைச் சொத்து கிடைத்தால், அவள் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், தன்னுடைய அப்பாவின் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கே மனைவியாக வேண்டும்.+ அப்போதுதான், இஸ்ரவேலர்கள் தங்களுடைய கோத்திரத்தின் சொத்தை தங்களிடமே வைத்துக்கொள்ள முடியும்.  இஸ்ரவேலர்களின் சொத்து ஒரு கோத்திரத்திலிருந்து இன்னொரு கோத்திரத்துக்குப் போகக் கூடாது. ஏனென்றால், இஸ்ரவேலர்கள் அவரவர் கோத்திரத்தின் சொத்தை அவரவரே வைத்துக்கொள்ள வேண்டும்’” என்றார். 10  மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செலோப்பியாத்தின் மகள்கள் செய்தார்கள்.+ 11  செலோப்பியாத்தின்+ மகள்களான மக்லாளும், திர்சாளும், ஒக்லாளும், மில்காளும், நோவாளும் தங்களுடைய அப்பாவின் சகோதரர்களுடைய மகன்களைக் கல்யாணம் செய்துகொண்டார்கள். 12  யோசேப்பின் மகனாகிய மனாசேயின் வம்சத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு அவர்கள் மனைவிகளானார்கள். இதனால், அவர்களுடைய சொத்து அவர்களுடைய அப்பாவின் கோத்திரத்திலேயே இருந்தது. 13  எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில், மோசே மூலம் யெகோவா இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த கட்டளைகளும் நீதித்தீர்ப்புகளும் இவைதான்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “யூபிலி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா