எண்ணாகமம் 4:1-49

4  யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும்,  “லேவியின் வழிவந்த கோகாத்தியர்களை+ அவரவர் வம்சத்தின்படியும், தந்தைவழிக் குடும்பத்தின்படியும் கணக்கெடுக்க வேண்டும்.  சந்திப்புக் கூடார வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட எல்லாரையும், அதாவது 30+ வயதுமுதல் 50 வயதுவரை+ உள்ள எல்லாரையும், கணக்கெடுக்க வேண்டும்.+  சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக கோகாத்தியர்களுக்கு நியமிக்கப்பட்ட மிகப் பரிசுத்தமான வேலை+ இதுதான்:  இஸ்ரவேலர்கள் புறப்படும்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் வந்து திரைச்சீலையைக்+ கீழே இறக்கி, அதை வைத்து சாட்சிப் பெட்டியை+ மூட வேண்டும்.  பின்பு, அதன்மேல் கடல்நாய்த் தோல் விரிப்பைப் போட்டு, அதை நீல நிறத் துணியால் மூட வேண்டும். அதைச் சுமப்பதற்குப் பயன்படுத்தப்படும் கம்புகள்+ அதனதன் இடத்தில் இருக்க வேண்டும்.  படையல் ரொட்டிகளுக்கான மேஜைமேல்+ நீல நிறத் துணியை விரிக்க வேண்டும். அதன்மேல் தட்டுகள், கோப்பைகள், கிண்ணங்கள், திராட்சமது காணிக்கைக்கான கூஜாக்கள்+ ஆகியவற்றை வைக்க வேண்டும். தவறாமல் செலுத்தப்படுகிற ரொட்டிகளும்+ அதன்மேல் இருக்க வேண்டும்.  அவற்றைக் கருஞ்சிவப்புத் துணியால் போர்த்தி, பின்பு கடல்நாய்த் தோல் விரிப்பால் மூட வேண்டும். அதைச் சுமப்பதற்குப் பயன்படுத்தப்படும் கம்புகள்+ அதனதன் இடத்தில் இருக்க வேண்டும்.  பின்பு நீல நிறத் துணியை எடுத்து, விளக்குத்தண்டையும்,+ அதன் அகல் விளக்குகளையும்,+ இடுக்கிகளையும், தீய்ந்துபோன திரிகளை எடுத்து வைப்பதற்கான கரண்டிகளையும்,+ குத்துவிளக்குக்கான எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூட வேண்டும். 10  குத்துவிளக்கையும் அதற்கான எல்லா சாமான்களையும் கடல்நாய்த் தோல் விரிப்பில் சுற்றி, சுமப்பதற்கான ஒரு கோலில் இணைத்துக்கட்ட வேண்டும். 11  தங்கப் பீடத்தை+ நீல நிறத் துணியால் போர்த்தி, கடல்நாய்த் தோல் விரிப்பால் அதை மூட வேண்டும். அதைச் சுமப்பதற்குப் பயன்படுத்தப்படும் கம்புகள்+ அதனதன் இடத்தில் இருக்க வேண்டும். 12  பரிசுத்த இடத்தில் தவறாமல் சேவை செய்யப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள்+ எல்லாவற்றையும் எடுத்து நீல நிறத் துணியில் வைக்க வேண்டும். அதைக் கடல்நாய்த் தோல் விரிப்பால் மூடி, சுமப்பதற்கான ஒரு கோலில் இணைத்துக்கட்ட வேண்டும். 13  பலிபீடத்திலிருந்து+ சாம்பலை எடுத்துவிட்டு, அதை ஊதா நிற கம்பளியால் போர்த்த வேண்டும். 14  பலிபீடத்தில் சேவை செய்யப் பயன்படுத்தும் பாத்திரங்கள் எல்லாவற்றையும், அதாவது தணல் அள்ளும் கரண்டிகள், முள்கரண்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், கிண்ணங்கள் போன்ற எல்லாவற்றையும்+ அதன்மேல் வைத்து கடல்நாய்த் தோல் விரிப்பால் மூட வேண்டும். பலிபீடத்தைச் சுமப்பதற்குப் பயன்படுத்தப்படும் கம்புகள்+ அதனதன் இடத்தில் இருக்க வேண்டும். 15  இஸ்ரவேலர்கள் புறப்படும்போது, பரிசுத்த இடத்துக்கான எல்லா பொருள்களையும் ஆரோனும் அவனுடைய மகன்களும் போர்த்திவைக்க வேண்டும்.+ அதன்பின், கோகாத்தியர்கள் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போக வேண்டும்.+ ஆனால், பரிசுத்த இடத்துக்கான பொருள்களை அவர்கள் தொடக் கூடாது. அப்படித் தொட்டால் அவர்கள் செத்துப்போவார்கள்.+ இவைதான் சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக கோகாத்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொருள்களாகும். 16  விளக்குகளுக்கான எண்ணெய்,+ தூபப்பொருள்,+ தவறாமல் செலுத்தப்படும் உணவுக் காணிக்கை, அபிஷேகத் தைலம்+ ஆகியவற்றுக்கு குருவாகிய ஆரோனின் மகன் எலெயாசார்தான்+ பொறுப்பு. வழிபாட்டுக் கூடாரத்துக்கும் அதிலுள்ள எல்லா பொருள்களுக்கும், பரிசுத்த இடத்துக்கும் அதிலுள்ள எல்லா சாமான்களுக்கும் அவர்தான் பொறுப்பு” என்று சொன்னார். 17  பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 18  “லேவியர்களில் கோகாத் வம்சத்தார்+ அழிந்துபோகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 19  அவர்கள் மகா பரிசுத்தமான பொருள்களின் பக்கத்தில் வந்து சாகாதபடி இப்படிச் செய்யுங்கள்.+ ஆரோனும் அவனுடைய மகன்களும் வழிபாட்டுக் கூடாரத்துக்குள்ளே போக வேண்டும். பின்பு, கோகாத்தியர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும், என்னென்ன பொருள்களைச் சுமக்க வேண்டும் என்றும் சொல்ல வேண்டும். 20  கோகாத்தியர்கள் கூடாரத்துக்குள் போய் பரிசுத்த பொருள்களை ஒரு நொடிகூட பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், அவர்கள் செத்துப்போவார்கள்”+ என்றார். 21  பின்பு யெகோவா மோசேயிடம், 22  “கெர்சோனியர்களை+ அவரவர் வம்சத்தின்படியும், தந்தைவழிக் குடும்பத்தின்படியும் கணக்கெடுக்க வேண்டும். 23  சந்திப்புக் கூடாரம் சம்பந்தமான வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட எல்லாரையும், அதாவது 30 வயதுமுதல் 50 வயதுவரை உள்ள எல்லாரையும், கணக்கெடுக்க வேண்டும். 24  கெர்சோன் வம்சத்தாரின் பொறுப்பிலுள்ள பொருள்களும் அவர்கள் சுமக்க வேண்டிய பொருள்களும் இவைதான்:+ 25  சட்டங்களின் மேலுள்ள நாரிழை விரிப்பு,*+ அதற்கு மேலுள்ள கம்பளி,* அதற்கும் மேலுள்ள விரிப்பு, அதற்கும் மேலுள்ள கடல்நாய்த் தோல் விரிப்பு,+ சந்திப்புக் கூடார வாசலின் திரை,+ 26  வழிபாட்டுக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் சுற்றியுள்ள பிரகாரத்தின் மறைப்புகள்,+ பிரகார நுழைவாசலின் திரை,+ கூடாரக் கயிறுகள், வழிபாட்டுக் கூடாரச் சேவைக்குப் பயன்படுத்தப்படுகிற பாத்திரங்கள் மற்றும் வேறு சில பொருள்கள். இவைதான் அவர்களுடைய பொறுப்பில் இருக்கின்றன. 27  ஆரோனும் அவனுடைய மகன்களும் கெர்சோனியர்கள்+ செய்கிற எல்லா வேலைகளையும் அவர்கள் சுமக்கிற சுமைகளையும் மேற்பார்வை செய்ய வேண்டும். இந்த எல்லா சுமைகளையும் சுமக்கும் பொறுப்பை நீங்கள் அவர்களுக்குத் தர வேண்டும். 28  இதுதான் சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக கெர்சோனியர்கள் செய்ய வேண்டிய சேவை.+ குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமாரின் தலைமையில் அவர்கள் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.+ 29  மெராரியர்களை+ அவரவர் வம்சத்தின்படியும், தந்தைவழிக் குடும்பத்தின்படியும் நீ பெயர்ப்பதிவு செய்ய வேண்டும். 30  சந்திப்புக் கூடார வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட எல்லாரையும், அதாவது 30 வயதுமுதல் 50 வயதுவரை உள்ள எல்லாரையும், பெயர்ப்பதிவு செய்ய வேண்டும். 31  மெராரியர்கள் சுமக்க வேண்டிய சந்திப்புக் கூடாரப் பொருள்கள் இவைதான்:+ வழிபாட்டுக் கூடாரத்தின் சட்டங்கள்,+ கம்புகள்,+ தூண்கள்,+ பாதங்கள்,+ 32  பிரகாரத்தைச் சுற்றியுள்ள கம்பங்கள்,+ அவற்றின் பாதங்கள்,+ கூடார ஆணிகள்,+ கூடாரக் கயிறுகள், மற்றும் வேறு சில கருவிகள். அதனுடன் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் அவர்கள் செய்ய வேண்டும். யார் யார் எதை எதைச் சுமந்துகொண்டு போக வேண்டுமென்று நீங்கள் சொல்ல வேண்டும். 33  இதுதான் சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக மெராரியர்கள்+ செய்ய வேண்டிய வேலை. குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமாரின் தலைமையில் அவர்கள் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்”+ என்றார். 34  பின்பு, கோகாத்தியர்களை+ அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் மோசேயும் ஆரோனும் ஜனங்களின் தலைவர்களும்+ பெயர்ப்பதிவு செய்தார்கள். 35  சந்திப்புக் கூடார வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட எல்லாரையும், அதாவது 30 வயதுமுதல் 50 வயதுவரை உள்ள எல்லாரையும்,+ அப்படிப் பெயர்ப்பதிவு செய்தார்கள். 36  அவரவர் வம்சங்களின்படி பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 2,750 பேர்.+ 37  இவர்கள்தான் கோகாத் வம்சத்தில் சந்திப்புக் கூடார வேலைக்காகப் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள். மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படியே, மோசேயும் ஆரோனும் இவர்களைப் பெயர்ப்பதிவு செய்தார்கள்.+ 38  பின்பு, கெர்சோனியர்கள்+ அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். 39  சந்திப்புக் கூடார வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட எல்லாரும், அதாவது 30 வயதுமுதல் 50 வயதுவரை உள்ள எல்லாரும், பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். 40  வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 2,630 பேர்.+ 41  இவர்கள்தான் கெர்சோன் வம்சத்தில் சந்திப்புக் கூடார வேலைகளுக்காகப் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள். யெகோவாவின் கட்டளைப்படியே, மோசேயும் ஆரோனும் இவர்களைப் பெயர்ப்பதிவு செய்தார்கள்.+ 42  மெராரியர்கள் அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். 43  சந்திப்புக் கூடார வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட எல்லாரும், அதாவது 30 வயதுமுதல் 50 வயதுவரை உள்ள எல்லாரும்,+ பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். 44  அவரவர் வம்சங்களின்படி பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 3,200 பேர்.+ 45  இவர்கள்தான் மெராரி வம்சத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள். மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படியே, மோசேயும் ஆரோனும் இவர்களைப் பெயர்ப்பதிவு செய்தார்கள்.+ 46  இந்த எல்லா லேவியர்களையும் அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் மோசேயும் ஆரோனும் ஜனங்களின் தலைவர்களும் பெயர்ப்பதிவு செய்தார்கள். 47  30 வயதுமுதல் 50 வயதுவரை உள்ள அந்த ஆட்கள் எல்லாரும் சந்திப்புக் கூடார வேலைகளுக்கும் அதன் பொருள்களைச் சுமக்கிற வேலைகளுக்கும் நியமிக்கப்பட்டார்கள்.+ 48  பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 8,580 பேர்.+ 49  மோசேக்கு யெகோவா கொடுத்த உத்தரவுப்படி, அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வேலையைச் செய்யவும் சுமையைச் சுமக்கவும் நியமிக்கப்பட்டு, பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளை கொடுத்தபடியே அவர்கள் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “சந்திப்புக் கூடார விரிப்பு.”
நே.மொ., “வழிபாட்டுக் கூடார விரிப்பு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா