எபேசியருக்குக் கடிதம் 4:1-32
4 அதனால், நம் எஜமானுக்காகக் கைதியாய் இருக்கிற நான்+ உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்;+
2 எப்போதும் மனத்தாழ்மையாகவும்+ சாந்தமாகவும் பொறுமையாகவும்+ நடந்துகொள்ளுங்கள்; அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்;+
3 கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானமாக* வாழ்வதற்கும் ஊக்கமாக முயற்சி செய்யுங்கள்.+
4 ஒரே நம்பிக்கை உண்டு,+ அந்த நம்பிக்கையைப் பெற நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதேபோல், ஒரே உடலும்+ ஒரே சக்தியும்+ உண்டு.
5 ஒரே எஜமானும்+ ஒரே விசுவாசமும் ஒரே ஞானஸ்நானமும் உண்டு.
6 எல்லாருக்கும் ஒரே கடவுளும் தகப்பனும் உண்டு. அவர் எல்லாருக்கும் மேலானவர், எல்லார் மூலமும் செயல்படுகிறவர், எல்லாருக்குள்ளும் செயல்படுகிறவர்.
7 அளவற்ற கருணை என்ற இலவச அன்பளிப்பு+ நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டது; கிறிஸ்து நமக்குக் கொடுத்த அளவின்படி அதைப் பெற்றுக்கொண்டோம்.
8 அதனால்தான், “அவர் மேலே ஏறிப்போனபோது, சிறைபிடிக்கப்பட்ட கைதிகளைப் பிடித்துக்கொண்டுபோனார், மனிதர்களைப் பரிசுகளாகக் கொடுத்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.+
9 ‘ஏறிப்போய்’ என்ற வார்த்தை, அவர் கீழே இறங்கி வந்திருந்தார் என்பதையும், அதாவது பூமிக்கு வந்திருந்தார் என்பதையும், அர்த்தப்படுத்துகிறது, இல்லையா?
10 கீழே இறங்கி வந்திருந்தவர்தான் எல்லா காரியங்களையும் நிறைவேற்றுவதற்காக எல்லா வானங்களுக்கும் மேலாக+ ஏறிப்போனவராகவும் இருக்கிறார்.+
11 அவர் சிலரை அப்போஸ்தலர்களாகவும்,+ சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும்,+ சிலரை நற்செய்தியாளர்களாகவும்,*+ சிலரை மேய்ப்பர்களாகவும் போதகர்களாகவும்+ சபைக்குக் கொடுத்தார்.
12 பரிசுத்தவான்களைச் சரிப்படுத்துவதற்காகவும்,* ஊழியம் சம்பந்தமான வேலைகளைச் செய்வதற்காகவும், கிறிஸ்துவின் உடலைப் பலப்படுத்துவதற்காகவும் அவர்களைக் கொடுத்தார்.+
13 நாம் எல்லாரும் விசுவாசத்திலும் கடவுளுடைய மகனைப் பற்றிய திருத்தமான அறிவிலும் ஒன்றுபட்டு* இருப்பதற்காகவும், கிறிஸ்து எந்தளவுக்கு முதிர்ச்சி நிறைந்தவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு முழு வளர்ச்சி அடைவதற்காகவும்+ அவர்களைக் கொடுத்தார்.
14 அதனால், இனி நாம் குழந்தைகளாக இருக்கக் கூடாது. மனிதர்களுடைய தந்திரத்தையும் சூழ்ச்சியான ஏமாற்று வழிகளையும் நம்பி, அலைகளால் அலைக்கழிக்கப்படவோ அவர்களுடைய போதனைகளாகிய பலவிதமான காற்றால் இங்குமங்கும் அடித்துச் செல்லப்படவோ கூடாது.+
15 அதற்குப் பதிலாக, சத்தியத்தைப் பேசி, தலையாக இருக்கிற கிறிஸ்துவின்+ கீழ் எல்லாவற்றிலேயும் அன்பினால் வளருகிறவர்களாக இருக்க வேண்டும்.
16 அவரால்தான் எல்லா உடலுறுப்புகளும்,+ அவற்றுக்கு உதவி செய்கிற எல்லா மூட்டுகளாலும் ஒன்றோடொன்று இசைவாக இணைக்கப்பட்டு ஒற்றுமையாக வேலை செய்கின்றன; ஒவ்வொரு உறுப்பும் அதனதன் வேலையைச் சரியாகச் செய்வதால் முழு உடலும் வளர்ச்சியடைந்து அன்பால் பலப்படுத்தப்படுகிறது.+
17 அதனால், உலக மக்கள் தங்களுடைய வீணான எண்ணங்களின்படி+ நடப்பதுபோல் நீங்களும் இனி நடக்கக் கூடாதென்று+ நம் எஜமான் முன்னால் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
18 அவர்கள் வேண்டுமென்றே கடவுளைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள், அவர்களுடைய இதயம் மரத்துப்போயிருக்கிறது; அதனால் அவர்களுடைய மனம் இருண்டு போயிருக்கிறது, கடவுள் தருகிற வாழ்வு கிடைக்காதபடி அவர்கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
19 ஒழுக்க உணர்வு துளிகூட இல்லாமல், எல்லாவித அசுத்தமான செயல்களையும் பேராசையோடு செய்து வருவதற்காக வெட்கங்கெட்ட நடத்தைக்கு*+ தங்களையே கொடுத்துவிட்டார்கள்.
20 ஆனால், கிறிஸ்து இப்படி நடந்துகொண்டதாக நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை.
21 இயேசுவிடம் இருக்கிற சத்தியத்தின்படியே நீங்கள் அவரிடம் கேட்டு, அவர் மூலம் கற்பிக்கப்பட்டவர்களாக இருந்தால் அது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.
22 உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றிக்கொள்ளவும் வஞ்சிக்கிற ஆசைகளால்+ சீரழிந்துவருகிற பழைய சுபாவத்தைக் களைந்துபோடவும் கற்பிக்கப்பட்டீர்கள்.+
23 உங்கள் மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை* புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.+
24 கடவுளுடைய விருப்பத்தின்படி,* உண்மையான நீதிக்கும் உண்மைத்தன்மைக்கும்* ஏற்றபடி உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.+
25 நீங்கள் இப்போது பொய்யைக் களைந்திருப்பதால், ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எப்போதும் உண்மை பேசுங்கள்;+ ஏனென்றால், நாம் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்கிறோம்.+
26 பயங்கர கோபம் வந்தாலும், பாவம் செய்யாதீர்கள்;+ சூரியன் மறைவதற்கு முன்னால் உங்கள் கோபம் தணிய வேண்டும்.+
27 பிசாசுக்கு எந்த வாய்ப்பும் கொடுத்துவிடாதீர்கள்.*+
28 திருடுகிறவன் இனி திருடாமல் இருக்க வேண்டும்; இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்காக,+ தானே தன் கையால் பாடுபட்டு நேர்மையாக உழைக்க வேண்டும்.+
29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம்.+ கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாய் இருப்பதற்காக, சூழ்நிலைக்கு ஏற்றபடி, அவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்.+
30 அதோடு, நீங்கள் மீட்புவிலையால் விடுவிக்கப்படும் நாளுக்கென்று+ முத்திரையாகப் பெற்றிருக்கிற+ கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல்* இருங்கள்.+
31 எல்லா விதமான மனக்கசப்பையும்,+ சினத்தையும், கடும் கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும்,+ மற்ற எல்லா விதமான கெட்ட குணத்தையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்.+
32 ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்.+ கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னியுங்கள்.+
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “சமாதானப் பிணைப்பில் ஒன்றிணைக்கப்பட்டவர்களாக.”
^ வே.வா., “நல்ல செய்தியை அறிவிக்கிறவர்களாகவும்.”
^ வே.வா., “பரிசுத்தவான்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காகவும்.”
^ வே.வா., “ஒற்றுமையாக.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ வே.வா., “உங்கள் மனதை உந்துவிக்கிற சக்தியை.”
^ வே.வா., “சித்தத்தின்படி.”
^ வே.வா., “பற்றுமாறாத குணத்துக்கும்.”
^ வே.வா., “இடம் கொடுத்துவிடாதீர்கள்.”
^ வே.வா., “வேதனைப்படுத்தாமல்.”