எபேசியருக்குக் கடிதம் 5:1-33
5 அதனால், அன்பான பிள்ளைகளைப் போல் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.+
2 கிறிஸ்து நமக்காக* நறுமணம் வீசுகிற காணிக்கையாகவும் பலியாகவும்+ கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்து, நம்மேல்* அன்பு காட்டியது போலவே+ நீங்களும் தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்.+
3 பாலியல் முறைகேடு,* எல்லா விதமான அசுத்தம், பேராசை ஆகியவற்றைப் பற்றிய பேச்சுகூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது.+ இவை பரிசுத்தமான மக்களுக்கு ஏற்றவை அல்ல.+
4 அதேபோல், வெட்கக்கேடான நடத்தை, முட்டாள்தனமான பேச்சு, ஆபாசமான கேலிப் பேச்சு ஆகியவை உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது.+ இவையெல்லாம்கூட ஏற்றவை அல்ல, கடவுளுக்கு நன்றி சொல்வதுதான் ஏற்றது.+
5 பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவனோ,+ அசுத்தமான செயல்களைச் செய்கிறவனோ, பேராசை பிடித்தவனோ,+ அதாவது சிலை வழிபாடு செய்கிறவனோ, கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்படவே மாட்டான்*+ என்பது உங்களுக்குத் தெரியும். சொல்லப்போனால், அதை நன்றாகப் புரிந்துகொண்டும் இருக்கிறீர்கள்.
6 இப்படிப்பட்ட காரியங்களால்தான், கீழ்ப்படியாதவர்கள்மேல் கடவுளுடைய கடும் கோபம் வரப்போகிறது. அதனால், ஒருவனும் உங்களை வீண் வார்த்தைகளால் ஏமாற்றிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
7 அவர்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளாதீர்கள்.
8 ஒருகாலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள். இப்போதோ நம் எஜமானோடு ஒன்றுபட்டிருப்பதால்,+ ஒளியாக இருக்கிறீர்கள்.+ தொடர்ந்து ஒளியின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள்.
9 ஏனென்றால், ஒளி எங்கேயோ அங்கேதான் எல்லா விதமான நல்ல குணமும் நீதியும் நேர்மையும் இருக்கும்.*+
10 நம் எஜமானுக்கு எது பிரியமானது என்பதை எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.+
11 இருளுக்குரிய பலனற்ற செயல்களை அவர்களோடு சேர்ந்து செய்வதை நிறுத்துங்கள்.+ அதற்குப் பதிலாக, அவற்றை வெட்டவெளிச்சமாக்குங்கள்.
12 அவர்கள் ரகசியமாகச் செய்கிற காரியங்களைச் சொல்வதற்குக்கூட வெட்கக்கேடாக இருக்கிறது.
13 வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுகிற* எல்லா காரியங்களும் ஒளியால் வெட்டவெளிச்சமாகின்றன. இப்படி, வெட்டவெளிச்சமாகிற எல்லாமே ஒளியாக இருக்கின்றன.
14 அதனால், “தூங்குகிறவனே, விழித்துக்கொள். மரணத்திலிருந்து எழுந்திரு.+ கிறிஸ்து உன்மேல் ஒளிவீசுவார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.+
15 அதனால், நீங்கள் ஞானமில்லாதவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு அதிக கவனம் செலுத்துங்கள்.
16 உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.*+ ஏனென்றால், நாட்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன.
17 அதனால், புத்தியில்லாமல் நடந்துகொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக, யெகோவாவின்* விருப்பம்* என்னவென்று புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டே இருங்கள்.+
18 அதோடு, உங்களைச் சீரழிக்கிற* குடிவெறியை விட்டுவிட்டு,+ எப்போதும் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்படுங்கள்.
19 சங்கீதங்களையும் புகழ் பாடல்களையும் பக்திப் பாடல்களையும் ஒன்றுசேர்ந்து* பாடுங்கள்;+ உங்கள் இதயத்தில் யெகோவாவை* புகழ்ந்து+ இனிமையான பாடல்களைப் பாடுங்கள்.+
20 நம் கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிறவருக்கு நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில்+ எல்லாவற்றுக்காகவும் எப்போதும் நன்றி சொல்லுங்கள்.+
21 கிறிஸ்துவுக்குப் பயந்து, ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு நடங்கள்.+
22 மனைவிகளே, நம்முடைய எஜமானுக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதுபோல், உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.+
23 ஏனென்றால், கிறிஸ்து சபைக்குத் தலையாக இருப்பதுபோல்,+ கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்.+ கிறிஸ்து தன்னுடைய உடலாகிய சபையின் மீட்பராக இருக்கிறார்.
24 கிறிஸ்துவுக்குச் சபை கட்டுப்பட்டு நடப்பதுபோல் மனைவிகளும் தங்கள் கணவருக்கு எல்லா விஷயத்திலும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
25 கணவர்களே, சபைக்காகக் கிறிஸ்து தன்னையே கொடுத்து அதன்மீது அன்பு காட்டியதுபோல்+ நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்.+
26 கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரால்* சபையைச் சுத்தப்படுத்திப் புனிதமாக்குவதற்காக அவர் அப்படிச் செய்தார்.+
27 எந்தவொரு கறையோ எந்தவொரு குறையோ இல்லாமல் பரிசுத்தமான, களங்கமில்லாத+ சபையாக அது தனக்கு முன்னால் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்.+
28 அதேபோல, கணவர்களும் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும். தன் மனைவிமீது அன்பு காட்டுகிறவன் தன்மீதே அன்பு காட்டுகிறான்.
29 ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான், அதைக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிப்பான். கிறிஸ்துவும் இப்படித்தான் சபையை நேசிக்கிறார்.
30 ஏனென்றால், நாம் அவருடைய உடலின் உறுப்புகளாக இருக்கிறோம்.+
31 “இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்;* அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக* இருப்பார்கள்.”+
32 இந்தப் பரிசுத்த ரகசியம்+ மகத்தானது. இப்போது கிறிஸ்துவையும் சபையையும் பற்றித்தான் சொல்கிறேன்.+
33 இருந்தாலும், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள்மீது அன்பு காட்டுவதுபோல், உங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்;+ மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்.+
அடிக்குறிப்புகள்
^ அல்லது, “உங்களுக்காக.”
^ அல்லது, “உங்கள்மேல்.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ நே.மொ., “அரசாங்கத்தை ஆஸ்தியாகப் பெற மாட்டான்.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ நே.மொ., “ஏனென்றால், எல்லா விதமான நல்ல குணமும் நீதியும் நேர்மையும் ஒளியின் கனிகளாக இருக்கின்றன.”
^ வே.வா., “கண்டனத்துக்குரிய.”
^ நே.மொ., “குறித்த நேரத்தை விலைக்கு வாங்குங்கள்.”
^ வே.வா., “சித்தம்.”
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “முரட்டுத்தனமாக நடக்க வைக்கிற.”
^ அல்லது, “உங்களுக்குள்.”
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ நே.மொ., “தண்ணீர் குளியலால்.”
^ இதற்கான மூல வார்த்தை, பசைபோல் இறுக ஒட்டிக்கொண்டிருப்பதை அர்த்தப்படுத்துகிறது.
^ நே.மொ., “சதையாக.”