எரேமியா 11:1-23

11  எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது; அவர்,  “நான் செய்த ஒப்பந்தத்தின் வார்த்தைகளை ஜனங்கள் எல்லாரும் கேட்க வேண்டும். யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களிடம் நீ* இப்படிச் சொல்:  ‘இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்:  “இரும்பு உலை போன்ற+ எகிப்திலிருந்து நான் உங்கள் முன்னோர்களைக் கூட்டிக்கொண்டு வந்தபோது அவர்களிடம்,+ ‘என் பேச்சைக் கேட்டு நடங்கள், என்னுடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுங்கள். அப்போது, நீங்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய கடவுளாக இருப்பேன்.+  அதோடு, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தைத்+ தருவதாக உங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுவேன்’ என்று சொன்னதை இன்று நிறைவேற்றியிருக்கிறேன். அதனால், என் ஒப்பந்தத்தை மீறுகிற எவனும் சபிக்கப்படுவான்”’+ என்றார்.” அதற்கு நான், “ஆமென்,* யெகோவாவே” என்று சொன்னேன்.  அப்போது யெகோவா என்னிடம், “நீ யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இருக்கிற எல்லாரிடமும், ‘நீங்கள் கேட்ட இந்த ஒப்பந்தத்தின்படி நடங்கள்.  உங்கள் முன்னோர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த நாளிலிருந்து இன்றுவரை நான் எச்சரிப்பு கொடுத்து வந்திருக்கிறேன். “என் பேச்சைக் கேட்டு நடங்கள்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி வந்திருக்கிறேன்.+  ஆனால், உங்கள் முன்னோர்கள் அதைக் காதில் வாங்கவே இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பொல்லாத இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போனார்கள்.+ அதனால், நான் கட்டளையிட்டும் அவர்கள் கடைப்பிடிக்காமல்போன இந்த ஒப்பந்தத்தின் எல்லா வார்த்தைகளும் அவர்களுக்குப் பலிக்கும்படி செய்தேன்’ என்று அறிவிப்பு செய்” என்றார்.  பின்பு யெகோவா என்னிடம், “யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்கள் சதி செய்கிறார்கள். 10  அவர்களுடைய முன்னோர்கள் என் பேச்சைக் கேட்காமல் பல குற்றங்கள் செய்ததைப் போலவே இவர்களும் செய்கிறார்கள்.+ பொய் தெய்வங்களைப் பக்தியோடு கும்பிடுகிறார்கள்.+ இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் அவர்களுடைய முன்னோர்களோடு நான் செய்த ஒப்பந்தத்தை மீறுகிறார்கள்.+ 11  அதனால் யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் அவர்களை அழிக்கப்போகிறேன்.+ அவர்களால் தப்பிக்கவே முடியாது. உதவிக்காக அவர்கள் என்னைக் கூப்பிட்டாலும் நான் கேட்க மாட்டேன்.+ 12  அப்போது, யூதா ஜனங்களும் எருசலேம் ஜனங்களும் எந்தத் தெய்வங்களுக்குத் தகன பலிகள் செலுத்தினார்களோ* அந்தத் தெய்வங்களிடம் போய்க் கதறுவார்கள்.+ ஆனால், அந்தத் தெய்வங்களால் அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றவே முடியாது. 13  யூதா ஜனங்களே, உங்கள் நகரங்களைப் போல உங்கள் தெய்வங்களும் ஏராளமாகிவிட்டன. எருசலேமின் வீதிகளைப் போல உங்கள் பலிபீடங்களும் ஏராளமாகிவிட்டன. வெட்கங்கெட்ட தெய்வமாகிய பாகாலுக்குத் தகன பலி செலுத்தவே நீங்கள் அவற்றைக் கட்டினீர்கள்.’+ 14  நீ* இந்த ஜனங்களுக்காக ஜெபம் செய்யக் கூடாது. அவர்களுக்காக வேண்டிக்கொள்ளவோ கெஞ்சிக் கதறவோ கூடாது.+ அழிவு வரும்போது அவர்கள் உதவிக்காக என்னைக் கூப்பிட்டாலும் நான் கேட்க மாட்டேன். 15  எனக்குப் பிரியமான ஜனங்களில் இத்தனை பேர் என்னைப் போலித்தனமாக வணங்கும்போது,அவர்கள் எந்த உரிமையோடு என் வீட்டில் தங்க முடியும்? அவர்கள் பலி செலுத்திவிட்டால் அழிவிலிருந்து தப்பித்துவிட முடியுமா? அழிவு நாளில் அவர்கள் சந்தோஷப்பட முடியுமா? 16  ஒருகாலத்தில் யெகோவா அவர்களை,‘பழங்கள் காய்த்துக் குலுங்குகிற அழகான ஒலிவ மரம்’ என்று அழைத்திருந்தார். ஆனால், இப்போது பயங்கரமான சத்தத்தோடு தீ வைத்துவிட்டார்.எதிரிகள் அந்த மரத்தின் கிளைகளை முறித்துவிட்டார்கள். 17  இஸ்ரவேல் ஜனங்களையும் யூதா ஜனங்களையும் மரம்போல் நட்டு வைத்தவரான பரலோகப் படைகளின் யெகோவா+ அழிவைக் கொண்டுவரப் போவதாகச் சொல்லியிருக்கிறார். ஏனென்றால், அவர்கள் பாவம் செய்திருக்கிறார்கள், பாகாலுக்குத் தகன பலிகளைச் செலுத்தி அவருடைய கோபத்தைக் கிளறியிருக்கிறார்கள்”+ என்று சொன்னார். 18  யெகோவாவே, நீங்கள் எனக்கு விஷயத்தைத் தெரிவித்தீர்கள்.அவர்கள் செய்வதையெல்லாம் எனக்குக் காட்டினீர்கள். 19  வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப் போல நான் இருந்தேன். அவர்கள் என்னைத் தீர்த்துக்கட்ட சதி செய்து, “மரத்தைப் பழங்களோடு சேர்த்து வெட்டிப்போடலாம்,இந்த உலகத்திலிருந்தே அவனை ஒழித்துக்கட்டலாம்,அவனுடைய பேர்கூட அழிந்துபோகட்டும்” என்று பேசி வைத்திருந்தது எனக்குத் தெரியவில்லை.+ 20  பரலோகப் படைகளின் யெகோவாவே, நீங்கள் நீதியான தீர்ப்பைக் கொடுக்கிறவர்.இதயத்தையும் அடிமனதின் யோசனைகளையும்* ஆராய்கிறவர்.*+ என்னுடைய வழக்கை உங்களிடமே ஒப்படைத்துவிட்டேன்.என்னை எதிர்க்கிறவர்களை நீங்கள் பழிவாங்குவதை என் கண்ணாலேயே பார்க்க வையுங்கள். 21  என்னிடம், “நீ யெகோவாவின் பெயரில் தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது;+ சொன்னால், எங்கள் கையால் சாவாய்” என்று மிரட்டுகிற ஆனதோத்+ ஊர்க்காரர்களுக்கு யெகோவா ஒரு செய்தி சொல்கிறார். 22  பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “நான் அவர்களைத் தண்டிக்கப்போகிறேன். வாலிபர்கள் வாளுக்குப் பலியாவார்கள்.+ பிள்ளைகள் பஞ்சத்தினால் சாவார்கள்.+ 23  ஆனதோத்+ ஊர்க்காரர்களுக்குத் தண்டனை கொடுக்கும் வருஷத்தில் நான் அவர்களை அழித்துவிடுவேன். அவர்களில் யாருமே தப்பிக்க மாட்டார்கள்.”

அடிக்குறிப்புகள்

அநேகமாக, “எரேமியா.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்.”
வே.வா., “தூபம் காட்டினார்களோ.”
அதாவது, “எரேமியா.”
நே.மொ., “சிறுநீரகங்களையும்.” வே.வா., “ஆழமான உணர்ச்சிகளையும்.”
வே.வா., “சோதித்தறிகிறவர்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா