எரேமியா 12:1-17

12  யெகோவாவே, நான் உங்களிடம் முறையிடும்போதும்,நியாயத்தைப் பற்றி உங்களோடு வழக்காடும்போதும், நீங்கள் நீதியுள்ளவர் என்பதை நிரூபிக்கிறீர்கள்.+ஆனாலும், கெட்டவர்கள் ஏன் ஓகோவென்று வாழ்கிறார்கள்?+ துரோகிகள் ஏன் நிம்மதியாக இருக்கிறார்கள்?   நீங்கள் அவர்களை நட்டு வைத்தீர்கள். அவர்கள் நன்றாக வேர்விட்டு வளர்ந்து காய்த்துக் குலுங்குகிறார்கள். உங்களிடம் நெருங்கியிருப்பதாக வாயளவில் சொல்கிறார்கள், ஆனால், அவர்களுடைய அடிமனது* உங்களைவிட்டுத் தூரமாக இருக்கிறது.+   யெகோவாவே, நான் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்;+ நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள்.என் இதயத்தைச் சோதித்துப் பார்க்கிறீர்கள்; உங்கள்மேல் எவ்வளவு பக்தி இருக்கிறதென்று பார்க்கிறீர்கள்.+ வெட்டப்படுவதற்காகப் பிரித்து வைக்கப்படுகிற ஆடுகளைப் போலஅழிவு நாளுக்காக அந்த ஜனங்களைப் பிரித்து வையுங்கள்.   தேசம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு வறண்டு கிடக்க வேண்டும்?வயல்களின் விளைச்சல் எவ்வளவு காலத்துக்குக் காய்ந்து கிடக்க வேண்டும்?+ அங்கே வாழ்கிறவர்கள் அக்கிரமங்கள் செய்ததால்மிருகங்களும் பறவைகளும்கூட மறைந்துபோய்விட்டன. ஏனென்றால், “நமக்கு என்ன நடந்தாலும் அவர் பார்க்கப்போவதில்லை” என்று அவர்கள் சொன்னார்கள்.   கடவுள் என்னிடம், “நீ மனுஷர்களோடு ஓடும்போதே களைத்துப்போய்விட்டால்குதிரைகளோடு எப்படி ஓடுவாய்?+ சமாதானமான தேசத்தில் நீ மெத்தனமாக வாழ்ந்து பழகிவிட்டால்,யோர்தானின் புதர்க் காடுகளில் என்ன செய்வாய்?   உன் சகோதரர்கள்கூட, உன் அப்பாவின் குடும்பத்தார்கூட, உனக்குத் துரோகம் செய்துவிட்டார்கள்.+அவர்கள் உனக்கு எதிராகக் கூச்சல் போடுகிறார்கள். அவர்கள் உன்னிடம் நல்ல விஷயங்களைப் பேசினாலும்அவர்களை நம்பாதே.   நான் என்னுடைய வீட்டையும் என்னுடைய சொத்தையும் கைவிட்டுவிட்டேன்.+ என் உயிருக்கு உயிரானவளை அவளுடைய எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டேன்.+   என்னுடைய சொத்தாகிய என் ஜனங்கள் காட்டிலுள்ள சிங்கத்தைப் போல ஆகிவிட்டார்கள். என்னைப் பார்த்துக் கர்ஜிக்கிறார்கள். அதனால், நான் அவர்களை வெறுத்துவிட்டேன்.   என்னுடைய சொத்தாகிய என் ஜனங்கள் பிணம் தின்னும் பலவண்ணப் பறவையைப் போல இருக்கிறார்கள்.பிணம் தின்னும் மற்ற பறவைகள் அவர்களைச் சுற்றிவளைத்து தாக்குகின்றன.+ காட்டிலுள்ள மிருகங்களே, நீங்களும் வாருங்கள்.வந்து சாப்பிடுங்கள்.+ 10  மேய்ப்பர்கள் பலர் என்னுடைய திராட்சைத் தோட்டத்தை அழித்துவிட்டார்கள்.+எனக்குச் சொந்தமான நிலத்தை மிதித்துப்போட்டார்கள்.+ நான் ஆசையாக வைத்திருந்த நிலத்தை வனாந்தரத்தைப் போலப் பாழாக்கிவிட்டார்கள். 11  அது பொட்டல்காடாகிவிட்டது. காய்ந்துபோய்விட்டது,* வெறுமையாகிவிட்டது.+முழு தேசமே வெறிச்சோடிவிட்டது.ஆனால், யாருமே எச்சரிக்கையை மனதில்* வாங்கவில்லை.+ 12  வனாந்தரத்திலுள்ள எல்லா பாதைகளின்* வழியாகவும் கொலைகாரர்கள் வந்திருக்கிறார்கள்.தேசம் முழுவதையும் யெகோவாவின் வாள் பதம் பார்க்கிறது.+ யாருக்குமே சமாதானம் இல்லை. 13  கோதுமையை விதைத்தார்கள், ஆனால் முட்களை அறுவடை செய்கிறார்கள்.+ அவர்கள் பாடுபட்டு உழைத்தும் பிரயோஜனமே இல்லை. யெகோவாவின் கோபம் பற்றியெரிவதால் அவர்களுக்கு விளைச்சலே கிடைக்காது.அதைப் பார்த்து வெட்கப்பட்டுப்போவார்கள்” என்று சொன்னார். 14  யெகோவா சொல்வது இதுதான்: “என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுத்த சொத்தைப் பொல்லாதவர்களாகிய அக்கம்பக்கத்து தேசத்தார் பறித்துக்கொண்டார்கள்.*+ அதனால் நான் அவர்களை அவர்களுடைய தேசத்திலிருந்து துரத்தியடிப்பேன்.+ அவர்கள் மத்தியிலிருந்து யூதா ஜனங்களைத் துரத்தியடிப்பேன். 15  ஆனால், அவர்களைத் துரத்தியடித்த பின்பு மறுபடியும் அவர்கள்மேல் இரக்கம் காட்டுவேன். அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களுடைய தேசத்துக்கே கொண்டுவந்து, அவர்களுடைய சொத்தையே அனுபவிக்க வைப்பேன்.” 16  “அவர்கள் பாகாலின் பெயரில் சத்தியம் செய்ய என் ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தது போலவே, ‘உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை’* என்று சத்தியம் செய்ய அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். என் ஜனங்களைப் போலவே என் வழியில் நடக்க வேண்டும். அப்படிச் செய்தால், அவர்களை என் ஜனங்களோடு சீரும் சிறப்புமாக வாழ வைப்பேன். 17  ஆனால், அவர்களில் யாராவது என் பேச்சைக் கேட்காவிட்டால் அவர்களையும் துரத்தியடிப்பேன்; துரத்தியடிப்பது மட்டுமல்லாமல் அடியோடு அழித்தும் போடுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “சிறுநீரகங்கள்.” வே.வா., “ஆழமான உணர்ச்சிகள்.”
அல்லது, “துக்கப்படுகிறது.”
நே.மொ., “இதயத்தில்.”
வே.வா., “தேய்ந்த பாதைகளின்.”
நே.மொ., “தொடுகிறார்கள்.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா