எரேமியா 26:1-24

26  யூதாவின் ராஜாவாகிய யோசியாவின் மகன் யோயாக்கீம் ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது+ யெகோவாவிடமிருந்து இந்தச் செய்தி வந்தது:  “யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ யெகோவாவின் ஆலயப் பிரகாரத்துக்குப் போய் நின்றுகொண்டு, யெகோவாவை வணங்குவதற்காக யூதாவின் நகரங்களிலிருந்து ஆலயத்துக்கு வருகிற எல்லா ஜனங்களிடமும் பேசு. நான் உன்னைச் சொல்லச் சொல்கிற எல்லாவற்றையும் அவர்களிடம் சொல். அதில் ஒரு வார்த்தையைக்கூட விட்டுவிடாதே.  அவர்கள் ஒருவேளை அதைக் கேட்டு தங்களுடைய கெட்ட வழிகளையும் அக்கிரமங்களையும் விட்டுத் திருந்தலாம். அப்போது, நான் என் மனதை மாற்றிக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டுவிடுவேன்.+  நீ அவர்களிடம், “யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் உங்களுக்குக் கொடுத்த சட்டத்தை* நீங்கள் கடைப்பிடிக்காமல் போனால்,  நான் திரும்பத் திரும்ப அனுப்பிய என் ஊழியர்களான தீர்க்கதரிசிகளின் பேச்சை இதுவரை கேட்காததுபோல் இனியும் கேட்காமல் போனால்,+  நான் இந்த ஆலயத்தை சீலோவைப்+ போல் பாழாக்கிவிடுவேன். பூமியெங்கும் இருக்கிற ஜனங்கள் இந்த நகரத்தைப் பார்த்து சபிக்கும்படி செய்வேன்’+ என்று சொல்ல வேண்டும்.”’”  யெகோவாவின் ஆலயத்தில் எரேமியா சொன்ன இந்த வார்த்தைகளை குருமார்களும் தீர்க்கதரிசிகளும் ஜனங்களும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.+  யெகோவா சொல்லச் சொன்ன எல்லாவற்றையும் எரேமியா சொல்லி முடித்த பின்பு அந்தக் குருமார்களும் தீர்க்கதரிசிகளும் ஜனங்களும் அவரைப் பிடித்து, “உன்னைத் தீர்த்துக்கட்டப் போகிறோம்.  ‘இந்த ஆலயம் சீலோவைப் போலப் பாழாக்கப்படும்’ என்றும், ‘இந்த நகரம் யாருமே குடியிருக்க முடியாதளவுக்கு நாசமாக்கப்படும்’ என்றும் யெகோவாவின் பெயரில் நீ ஏன் சொன்னாய்?” என்று மிரட்டினார்கள். அப்போது, யெகோவாவின் ஆலயத்தில் இருந்த எல்லா ஜனங்களும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டார்கள். 10  யூதாவின் அதிகாரிகள் எரேமியாவின் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜாவின் அரண்மனையிலிருந்து யெகோவாவின் ஆலயத்துக்கு வந்தார்கள். பின்பு, யெகோவாவுடைய ஆலயத்தின் புதிய நுழைவாசலில் உட்கார்ந்தார்கள்.+ 11  அவர்களிடமும் ஜனங்களிடமும் அங்கிருந்த குருமார்களும் தீர்க்கதரிசிகளும் இப்படிச் சொன்னார்கள்: “இவனுக்கு மரண தண்டனை கொடுப்பதுதான் சரி.+ நீங்களே உங்கள் காதால் கேட்டது போல, இந்த நகரம் நாசமாக்கப்படும் என்று இவன் சொல்லிக்கொண்டு இருக்கிறான்.”+ 12  அப்போது எரேமியா அந்த அதிகாரிகளையும் ஜனங்களையும் பார்த்து, “இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்ல யெகோவாதான் என்னை அனுப்பினார். அவர் சொல்லச் சொன்னதைத்தான் உங்களிடம் சொன்னேன்.+ 13  அதனால், உங்களுடைய கெட்ட வழிகளையும் செயல்களையும் விட்டுத் திருந்துங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேளுங்கள். அப்போது, யெகோவா தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு, உங்களுக்குக் கொடுக்கப்போவதாகச் சொன்ன தண்டனையைக் கொடுக்காமல் விட்டுவிடுவார்.+ 14  இப்போது நான் உங்கள் கையில் இருக்கிறேன். உங்கள் இஷ்டப்படி என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். 15  ஆனால், ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் என்னைக் கொன்றுவிட்டால், ஒரு அப்பாவியைக் கொன்ற பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின் மேலும் இந்த ஜனங்கள்மேலும் சுமத்திக்கொள்வீர்கள். ஏனென்றால், இந்த வார்த்தைகளைச் சொல்லச் சொல்லி என்னை அனுப்பியது உண்மையில் யெகோவாதான்” என்றார். 16  அப்போது அதிகாரிகளும் எல்லா ஜனங்களும், அந்தக் குருமார்களையும் தீர்க்கதரிசிகளையும் பார்த்து, “இவன் நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் பெயரில்தான் பேசியிருக்கிறான். அதனால், இவனுக்கு மரண தண்டனை கொடுப்பது சரியல்ல” என்றார்கள். 17  அதோடு, ஊர்ப் பெரியோர்கள் சிலர் எழுந்து, சபையாகக் கூடிவந்த எல்லா ஜனங்களையும் பார்த்து இப்படிச் சொன்னார்கள்: 18  “எசேக்கியா ராஜா+ யூதாவை ஆட்சி செய்த காலத்தில் மொரேசாவைச் சேர்ந்த மீகா+ என்பவர் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தார். அவர் யூதா ஜனங்களிடம், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “வயலைப் போல சீயோன் உழப்படும்.எருசலேம் மண்மேடாகும்.+ஆலயம் இருக்கிற மலை அடர்ந்த காடாகும்”’+என்று சொன்னார். 19  அதைக் கேட்டபோது யூதாவின் ராஜா எசேக்கியாவும் யூதா ஜனங்களும் அவரைக் கொன்றுவிட்டார்களா? இல்லையே. அதற்குப் பதிலாக, எசேக்கியா யெகோவாவுக்குப் பயந்து யெகோவாவின் கருணைக்காகக் கெஞ்சினாரே. அதனால், யெகோவாவும் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு அவர்களுக்குக் கொடுக்கப்போவதாகச் சொன்ன தண்டனையைக் கொடுக்காமல் விட்டுவிட்டாரே.+ ஆனால், இப்போது நமக்கு நாமே பேரழிவைக் கொண்டுவரப் பார்க்கிறோம். 20  கீரியாத்-யெயாரீமைச்+ சேர்ந்த செமாயாவின் மகன் ஊரியாவும் யெகோவாவின் பெயரில் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரும் எரேமியாவைப் போலவே இந்த நகரத்துக்கும் இந்தத் தேசத்துக்கும் அழிவு வருமென்று சொல்லிவந்தார். 21  யோயாக்கீம் ராஜாவும்+ அவருடைய மாவீரர்களும் அதிகாரிகளும் அதைக் கேட்டார்கள். அதனால், ஊரியாவைக் கொலை செய்ய ராஜா முடிவுசெய்தார்.+ அதைக் கேள்விப்பட்ட ஊரியா பயந்துபோய் எகிப்துக்குத் தப்பியோடினார். 22  அப்போது யோயாக்கீம் ராஜா, அக்போரின் மகனாகிய எல்நாத்தானையும்+ இன்னும் சில ஆட்களையும் எகிப்துக்கு அனுப்பினான். 23  அவர்கள் எகிப்துக்குப் போய் ஊரியாவைப் பிடித்து யோயாக்கீம் ராஜாவிடம் கொண்டுவந்தார்கள். ராஜா அவரை வாளால் வெட்டி,+ அவருடைய உடலைப் பொது ஜனங்களுடைய கல்லறையிலே தூக்கி வீசினான்.” 24  ஆனால், சாப்பானின் மகனாகிய+ அகிக்காம்+ எரேமியாவுக்கு ஆதரவாக இருந்ததால், எரேமியா ஜனங்களுடைய கையில் சாகாமல் தப்பித்துக்கொண்டார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அறிவுரையை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா