எரேமியா 27:1-22

27  யூதாவின் ராஜாவாகிய யோசியாவின் மகன் யோயாக்கீம்* ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து இந்தச் செய்தி கிடைத்தது:  “யெகோவா என்னிடம் சொன்னது இதுதான்: ‘நீ வார்களையும் நுகத்தடிகளையும் செய்து உன் கழுத்தில் மாட்டிக்கொள்.  பின்பு ஏதோமின் ராஜாவுக்கும்,+ மோவாபின் ராஜாவுக்கும்,+ அம்மோனியர்களின் ராஜாவுக்கும்,+ தீருவின் ராஜாவுக்கும்,+ சீதோனின் ராஜாவுக்கும்+ அவற்றைக் கொடுத்தனுப்பு. யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவைப் பார்ப்பதற்காக எருசலேமுக்கு வந்திருக்கும் தூதுவர்களின் கையில் அவற்றைக் கொடுத்தனுப்பு.  அப்போது அவர்களிடம் இப்படிச் சொல்: “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்லும் இந்த வார்த்தைகளை உங்கள் எஜமான்களிடம் நீங்கள் சொல்ல வேண்டும்.  ‘நான்தான் இந்தப் பூமியையும் மனுஷர்களையும் பூமியில் நடமாடுகிற மிருகங்களையும் என்னுடைய மகா வல்லமையினாலும் பலத்தினாலும் படைத்தேன். எனக்கு விருப்பமானவனுக்கு அவற்றைக் கொடுக்கிறேன்.+  இப்போது என் ஊழியனும் பாபிலோன் ராஜாவுமான நேபுகாத்நேச்சாரின் கையில் எல்லா தேசங்களையும் கொடுத்திருக்கிறேன்.+ காட்டு மிருகங்களைக்கூட அவனுக்கு அடிபணிய வைத்திருக்கிறேன்.  எல்லா தேசத்தாரும் அவனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வார்கள். ஆனால், பிற்பாடு அவனுடைய தேசமே கைப்பற்றப்படும்.+ பல தேசத்தாரும் பெரிய பெரிய ராஜாக்களும் அவனை அடிமைப்படுத்துவார்கள்.’+  யெகோவா சொல்வது இதுதான்: ‘பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் நுகத்தடியின்கீழ் வந்து அவனுக்கு அடிபணிய மறுக்கிற தேசத்தை அல்லது ராஜ்யத்தை நான் அவனுடைய கையாலேயே அடியோடு அழிக்கும்வரை அதை வாளினாலும்+ பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் தண்டிப்பேன்.’  ‘அதனால், தீர்க்கதரிசிகளும் குறிசொல்கிறவர்களும் கனவு காண்கிறவர்களும் மந்திரவாதிகளும் சூனியக்காரர்களும் உங்களிடம், “நீங்கள் பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்ய மாட்டீர்கள்” என்று சொல்வதை நம்பாதீர்கள். 10  அவர்கள் பொய்த் தீர்க்கதரிசனங்களைச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டால் நீங்கள் எல்லாரும் தூர தேசத்துக்குக் கொண்டுபோகப்படுவீர்கள். நான் உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன். நீங்கள் அழிந்துபோவீர்கள். 11  ஆனால், பாபிலோன் ராஜாவின் நுகத்தடியின்கீழ் வந்து அவனுக்கு அடிபணிகிற தேசத்தாரை நான் அவர்களுடைய தேசத்திலேயே விட்டுவைப்பேன். அவர்கள் அங்கேயே பயிர்செய்து அங்கேயே வாழ்வார்கள்’ என்று யெகோவா சொல்கிறார்.”’” 12  யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவிடமும்+ நான் அதே செய்தியைச் சொன்னேன். அவரிடம், “பாபிலோன் ராஜாவின் நுகத்தடியின்கீழ் வந்து அவருக்கும் அவருடைய ஜனங்களுக்கும் அடிபணிந்து நடங்கள். அப்போது நீங்கள் உயிர்பிழைப்பீர்கள்.+ 13  பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்யாத தேசத்தாரை வாளினாலும்+ பஞ்சத்தினாலும்+ கொள்ளைநோயினாலும்+ தாக்கப்போவதாக யெகோவா சொல்லியிருக்கிறாரே. நீங்களும் உங்கள் ஜனங்களும் ஏன் அவர் கையில் சாக வேண்டும்? 14  ‘நீங்கள் பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்ய மாட்டீர்கள்’+ என்று சொல்கிற தீர்க்கதரிசிகளின் பேச்சைக் கேட்காதீர்கள். ஏனென்றால், அவர்கள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+ 15  யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் அவர்களை அனுப்பவில்லை. அவர்களாகவே என் பெயரில் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டால் நான் உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன். நீங்களும் உங்கள் தீர்க்கதரிசிகளும் அழிந்துபோவீர்கள்’+ என்றேன்.” 16  குருமார்களிடமும் எல்லா ஜனங்களிடமும் இப்படிச் சொன்னேன்: “யெகோவா சொல்வது இதுதான்: ‘“இதோ, யெகோவாவின் ஆலயத்திலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்ட பாத்திரங்கள் சீக்கிரத்திலேயே திரும்பக் கொண்டுவரப்படும்”+ என்று சொல்கிற தீர்க்கதரிசிகளின் பேச்சைக் கேட்காதீர்கள். அவர்கள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+ 17  அவர்கள் சொல்வதை நம்பாதீர்கள். பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்யுங்கள். அப்போது உயிர்பிழைப்பீர்கள்.+ இந்த நகரம் ஏன் அழிய வேண்டும்? 18  அவர்கள் உண்மையிலேயே யெகோவாவின் வார்த்தைகளைச் சொல்லும் தீர்க்கதரிசிகளாக இருந்தால், யெகோவாவின் ஆலயத்திலும் யூதாவின் ராஜாவுடைய அரண்மனையிலும் எருசலேமிலும் இருக்கிற மீதி பாத்திரங்களை பாபிலோன் ராஜா கொண்டுபோகாதபடி பரலோகப் படைகளின் யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்கட்டும்.’ 19  இந்த நகரத்தில் மீதியிருக்கிற பாத்திரங்களையும், தூண்களையும்,+ ‘செம்புக் கடல்’ தொட்டியையும்,*+ தள்ளுவண்டிகளையும்+ குறித்து பரலோகப் படைகளின் யெகோவா ஒரு செய்தி சொல்கிறார். 20  யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் மகன் எகொனியாவையும், யூதா மற்றும் எருசலேமின் பிரமுகர்களையும் நேபுகாத்நேச்சார் ராஜா எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனபோது அவற்றை எடுத்துச் செல்லவில்லை.+ 21  இப்போது யெகோவாவின் ஆலயத்திலும் யூதாவின் ராஜாவுடைய அரண்மனையிலும் எருசலேமிலும் இருக்கிற மீதி பாத்திரங்களைக் குறித்து இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: 22  ‘“அவை பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.+ நான் நடவடிக்கை எடுக்கும் நாள்வரை அவை அங்கேயே இருக்கும். பின்பு, நான் அவற்றை மறுபடியும் இந்த இடத்துக்கே கொண்டுவருவேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”

அடிக்குறிப்புகள்

பழமையான சில கையெழுத்துப் பிரதிகளின்படி, “சிதேக்கியா.”
அதாவது, “ஆலயத்தின் தண்ணீர்த் தொட்டியையும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா