எரேமியா 36:1-32

36  யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த நான்காவது வருஷத்தில்+ எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது; அவர்,  “நீ ஒரு சுருளை எடுத்து, நான் இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும்+ எல்லா தேசங்களுக்கும்+ எதிராகச் சொன்னதையெல்லாம் எழுது. யோசியாவின் காலத்தில் நான் உன்னிடம் முதன்முதலாகப் பேசிய நாளிலிருந்து இந்த நாள்வரை+ சொன்னதையெல்லாம் எழுது.  நான் கொடுக்க நினைத்திருக்கிற தண்டனைகளைப் பற்றியெல்லாம் யூதா ஜனங்கள் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் ஒருவேளை கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தலாம். அப்போது, நான் அவர்களுடைய குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பேன்”+ என்று சொன்னார்.  உடனே எரேமியா, நேரியாவின் மகனாகிய பாருக்கைக் கூப்பிட்டு+ யெகோவா சொன்ன எல்லா விஷயங்களையும் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல பாருக் அதையெல்லாம் ஒரு சுருளில் எழுதினார்.+  பின்பு எரேமியா பாருக்கிடம், “நான் யெகோவாவின் ஆலயத்துக்குள் போக முடியாதபடி தடை செய்யப்பட்டிருக்கிறேன்.  அதனால், நீதான் ஆலயத்துக்குள் போக வேண்டும். நான் சொல்லச் சொல்ல நீ எழுதிய யெகோவாவின் வார்த்தைகள் எல்லாவற்றையும் அங்கே சத்தமாக வாசிக்க வேண்டும். விரத நாளிலே யெகோவாவின் ஆலயத்தில் கூடியிருக்கிற ஜனங்களுக்கு முன்பாக அதை வாசிக்க வேண்டும். பல நகரங்களிலிருந்து வந்திருக்கிற யூதா ஜனங்கள் எல்லாரும் அதைக் கேட்பார்கள்.  அதன்பின், அவர்கள் ஒருவேளை யெகோவாவின் கருணைக்காகக் கெஞ்சலாம். கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தலாம். ஏனென்றால், இந்த ஜனங்களைப் பயங்கர கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் தண்டிக்கப்போவதாக யெகோவா சொல்லியிருக்கிறார்” என்று சொன்னார்.  தீர்க்கதரிசியான எரேமியா சொன்னதையெல்லாம் நேரியாவின் மகனாகிய பாருக் செய்தார். யெகோவாவின் ஆலயத்துக்குள் போய் யெகோவாவின் வார்த்தைகளை அந்தச் சுருளிலிருந்து* சத்தமாக வாசித்தார்.+  யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த ஐந்தாம் வருஷம்,+ ஒன்பதாம் மாதத்தில், எருசலேம் ஜனங்களும் யூதாவின் நகரங்களிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்தவர்களும் யெகோவாவுக்குமுன் விரதமிருக்க வேண்டுமென்று அறிவிப்பு செய்யப்பட்டது.+ 10  பின்பு, பாருக் அந்தச் சுருளிலிருந்த எரேமியாவின் வார்த்தைகளை யெகோவாவின் ஆலயத்தில் சத்தமாக வாசித்தார். நகலெடுப்பவராகிய* சாப்பானின் மகன்+ கெமரியாவுடைய+ சாப்பாட்டு அறையிலே எல்லா ஜனங்களுக்கு முன்பாகவும் அதை வாசித்தார். அந்த அறை யெகோவாவுடைய ஆலயத்தின் புதிய நுழைவாசலுக்குப் பக்கத்திலுள்ள மேல் பிரகாரத்தில் இருந்தது.+ 11  சுருளிலிருந்து வாசிக்கப்பட்ட யெகோவாவின் வார்த்தைகளையெல்லாம் சாப்பானின் மகனாகிய கெமரியாவின் மகன் மிகாயா கேட்டவுடன், 12  ராஜாவின் அரண்மனையில் இருந்த செயலாளரின் அறைக்குப் போனார். அங்கே, செயலாளரான எலிஷாமா,+ செமாயாவின் மகன் தெலாயா, அக்போரின்+ மகன் எல்நாத்தான்,+ சாப்பானின் மகன் கெமரியா, அனனியாவின் மகன் சிதேக்கியா ஆகிய அதிகாரிகளும் மற்ற எல்லா அதிகாரிகளும்* உட்கார்ந்திருந்தார்கள். 13  ஜனங்களுக்கு முன்பாகச் சுருளிலிருந்து பாருக் வாசித்த எல்லாவற்றையும் மிகாயா அவர்களிடம் சொன்னார். 14  அந்த அதிகாரிகள் அதைக் கேட்டபோது, கூஷியின் கொள்ளுப்பேரனும் செலேமியாவின் பேரனும் நெத்தனியாவுடைய மகனுமாகிய யெகுதியை பாருக்கிடம் அனுப்பி, “ஜனங்களுக்கு முன்பாக நீ வாசித்த அந்தச் சுருளை எடுத்துக்கொண்டு வா” என்று சொல்லச் சொன்னார்கள். அதன்படியே, நேரியாவின் மகனாகிய பாருக் அந்தச் சுருளை எடுத்துக்கொண்டு அவர்களிடம் போனார். 15  அவர்கள் அவரிடம், “தயவுசெய்து இங்கே உட்கார்ந்து, சுருளில் இருப்பதைச் சத்தமாக வாசித்துக் காட்டு” என்றார்கள். பாருக்கும் அதை அவர்களுக்கு வாசித்துக் காட்டினார். 16  அதைக் கேட்டவுடன் அவர்கள் மிரண்டுபோய் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்; பின்பு பாருக்கிடம், “இந்த விஷயங்களையெல்லாம் நாங்கள் கண்டிப்பாக ராஜாவிடம் சொல்ல வேண்டும்” என்றார்கள். 17  அதோடு, “நீ எப்படி இதையெல்லாம் எழுதினாய் என்று தயவுசெய்து சொல். எரேமியா சொல்லித்தான் எழுதினாயா?” என்று கேட்டார்கள். 18  அதற்கு பாருக், “ஆமாம், எரேமியா சொல்லச் சொல்லத்தான் எல்லாவற்றையும் இந்தச் சுருளில் மையினால் எழுதினேன்” என்று சொன்னார். 19  அப்போது அந்த அதிகாரிகள், “நீயும் எரேமியாவும் போய் ஒளிந்துகொள்ளுங்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று யாருக்கும் சொல்ல வேண்டாம்”+ என்றார்கள். 20  பின்பு, அவர்கள் அரண்மனை முற்றத்துக்குப் போனார்கள். செயலாளரான எலிஷாமாவின் அறையிலே அந்தச் சுருளை வைத்துவிட்டு ராஜாவிடம் போய் அந்தச் சுருளைப் பற்றிச் சொன்னார்கள். 21  உடனே, ராஜா அந்தச் சுருளை எடுத்துவரச் சொல்லி யெகுதியை+ அனுப்பினார். யெகுதி செயலாளரான எலிஷாமாவின் அறைக்குப் போய் அதை எடுத்துவந்தார். பின்பு, ராஜாவுக்கு முன்பாகவும் அவருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த எல்லா அதிகாரிகளுக்கு முன்பாகவும் அதை வாசிக்க ஆரம்பித்தார். 22  அது ஒன்பதாம் மாதம்.* ராஜா குளிர் கால மாளிகையில் உட்கார்ந்துகொண்டிருந்தார். குளிர்காய்வதற்கான நெருப்பு அவர் முன்னால் எரிந்துகொண்டிருந்தது. 23  யெகுதி அந்தச் சுருளிலிருந்து மூன்று, நான்கு பத்திகளை வாசித்ததும் ராஜா அந்தப் பகுதியை செயலாளரின் கத்தியால் வெட்டி நெருப்பில் தூக்கி வீசினார். யெகுதி வாசிக்க வாசிக்க ராஜா இப்படியே அந்தச் சுருளை வெட்டிப் போட்டுக்கொண்டே இருந்தார். கடைசியில் மொத்த சுருளும் எரிந்துபோனது. 24  சுருளிலிருந்த வார்த்தைகளைக் கேட்டு ராஜாவோ அவருடைய ஊழியர்களோ தங்கள் உடையைக் கிழிக்கவில்லை. யாரும் பயப்படவே இல்லை. 25  சுருளை எரிக்க வேண்டாமென்று எல்நாத்தானும்+ தெலாயாவும்+ கெமரியாவும்+ ராஜாவிடம் கெஞ்சிக் கேட்டும் ராஜா மசியவில்லை. 26  அதற்குப் பதிலாக, தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும் செயலாளராகிய பாருக்கையும் கைது செய்யச் சொல்லி தன்னுடைய மகன் யெர்மெயேலிடமும், அசரியேலின் மகன் செராயாவிடமும், அப்தெயேலின் மகன் செலேமியாவிடமும் கட்டளை கொடுத்தார். ஆனால், அவர்களிடம் சிக்கிக்கொள்ளாதபடி எரேமியாவையும் பாருக்கையும் யெகோவா பாதுகாத்தார்.+ 27  எரேமியா சொல்லச் சொல்ல பாருக் எழுதிய சுருளை+ ராஜா நெருப்பில் எரித்த பின்பு யெகோவா எரேமியாவிடம், 28  “நீ இன்னொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜா யோயாக்கீம் எரித்துப்போட்ட சுருளில்+ எழுதிய அதே வார்த்தைகளை மறுபடியும் எழுது. 29  யூதாவின் ராஜா யோயாக்கீமிடம் இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது இதுதான்: “நீ சுருளை நெருப்பில் எரித்தாயே! பாபிலோன் ராஜா கண்டிப்பாக வந்து இந்தத் தேசத்தையும் இங்கிருக்கிற மனுஷர்களையும் மிருகங்களையும் ஒழித்துக்கட்டுவார்+ என்று இந்தத் தீர்க்கதரிசி எப்படி எழுதலாம் என்று கேட்டாயே! 30  அதனால், யூதாவின் ராஜா யோயாக்கீமுக்கு எதிராக யெகோவா சொல்வது இதுதான்: ‘அவனுடைய வம்சத்தில் யாரும் தாவீதின் சிம்மாசனத்தில்+ உட்கார மாட்டார்கள். அவனுடைய பிணம் ராத்திரி பகலாக வெயிலிலும் குளிரிலும் கிடக்கும்.+ 31  நான் அவனையும் அவனுடைய வம்சத்தையும் அவனுடைய ஊழியர்களையும் அழிப்பேன். அவர்கள் என்னுடைய பேச்சைக் கேட்காததால்+ நான் எச்சரித்தபடியே அவர்களுக்கும் எருசலேம் ஜனங்களுக்கும் யூதா ஜனங்களுக்கும் எல்லா தண்டனைகளையும் கொடுப்பேன்’”’”+ என்று சொன்னார். 32  பிறகு, எரேமியா இன்னொரு சுருளை எடுத்து நேரியாவின் மகனும், செயலாளருமான பாருக்கிடம் கொடுத்தார்.+ யூதாவின் ராஜா யோயாக்கீம் எரித்த சுருளில்+ இருந்த எல்லா வார்த்தைகளையும் எரேமியா சொல்லச் சொல்ல பாருக் எழுதினார். அதுபோன்ற இன்னும் பல வார்த்தைகளும் சேர்க்கப்பட்டன.

அடிக்குறிப்புகள்

வே.வா., “புத்தகத்திலிருந்து.”
வே.வா., “எழுத்தராகிய.”
அதாவது, “அரண்மனை அதிகாரிகளும்.”
அதாவது, “நவம்பர் மாத பிற்பகுதியும் டிசம்பர் மாத முற்பகுதியும்.” இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா