எரேமியா 39:1-18

39  சிதேக்கியா ராஜா யூதாவை ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷம், 10-ஆம் மாதம், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் தன்னுடைய படைகளோடு வந்து எருசலேமைச் சுற்றிவளைத்தான்.+  சிதேக்கியா ஆட்சி செய்த 11-ஆம் வருஷம், நான்காம் மாதம், ஒன்பதாம் தேதியில் அவர்கள் நகரத்தின் மதிலை உடைத்தார்கள்.+  பின்பு, பாபிலோன் ராஜாவுடைய அதிகாரிகளான நெர்கல்-சரேத்சேர் என்ற சம்கார், நேபோ-சர்சேகிம் என்ற ரப்சாரிஸ்,* நெர்கல்-சரேத்சேர் என்ற ரப்மாக்* ஆகியவர்களும் மற்ற அதிகாரிகளும் உள்ளே போய் ‘நடு நுழைவாசலில்’+ உட்கார்ந்தார்கள்.  யூதாவின் ராஜா சிதேக்கியாவும் எல்லா வீரர்களும் அவர்களைப் பார்த்தபோது தப்பித்து ஓடினார்கள்.+ ராத்திரியில் ராஜாவின் தோட்டத்து வழியாகப் போய், இரண்டு மதில்களுக்கு இடையிலிருந்த நுழைவாசலைத் தாண்டி, அரபா+ வழியாகத் தப்பித்து ஓடினார்கள்.  ஆனால், கல்தேயர்களின் வீரர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு போய், எரிகோவின் பாலைநிலத்திலே சிதேக்கியாவைப் பிடித்தார்கள்.+ அவரை காமாத்திலிருந்த+ ரிப்லாவுக்குக் கொண்டுபோய் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் முன்னால் நிறுத்தினார்கள்.+ ராஜா அவருக்குத் தண்டனை விதித்தான்.  அதோடு, ஆட்களை வைத்து சிதேக்கியாவின் கண் முன்பாகவே அவருடைய மகன்களை வெட்டிப்போட்டான். யூதாவின் முக்கியப் பிரமுகர்கள் எல்லாரையும்கூட வெட்டிக் கொன்றான்.+  பின்பு சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி, பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.+  அதன்பின், ராஜாவின் அரண்மனையையும் ஜனங்களுடைய வீடுகளையும் கல்தேயர்கள் தீ வைத்துக் கொளுத்தினார்கள்,+ எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள்.+  நகரத்தில் மிச்சமிருந்த ஜனங்களையும், பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், யூதாவிலிருந்த மற்ற ஜனங்களையும் காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான்+ பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான். 10  ஆனால், பரம ஏழைகள் சிலரை மட்டும் அவன் யூதா தேசத்தில் விட்டுவிட்டான். அவர்களுக்குத் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கொடுத்து வேலை செய்ய வைத்தான்.*+ 11  பின்பு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதானிடம், 12  “நீ எரேமியாவைக் கூட்டிக்கொண்டு போய் நன்றாகக் கவனித்துக்கொள். அவரை ஒன்றும் பண்ணிவிடாதே. அவர் கேட்பதையெல்லாம் கொடு”+ என்றான். 13  காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான், நேபுசஸ்பான் என்ற ரப்சாரிஸ்,* நெர்கல்-சரேத்சேர் என்ற ரப்மாக்* ஆகியவர்களும் பாபிலோன் ராஜாவுடைய முக்கிய அதிகாரிகளும் ஆட்களை அனுப்பி, 14  எரேமியாவை ‘காவலர் முற்றத்திலிருந்து’+ வெளியே கொண்டுவந்தார்கள். பின்பு, அவரை சாப்பானின்+ மகனாகிய அகிக்காமின்+ மகன் கெதலியாவிடம்+ ஒப்படைத்து, அவருடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகச் சொன்னார்கள். அதன்பின், எரேமியா ஜனங்கள் மத்தியில் வாழ்ந்துவந்தார். 15  ‘காவலர் முற்றத்தில்’+ எரேமியா அடைக்கப்பட்டிருந்தபோது யெகோவா அவரிடம், 16  “நீ போய் எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்கிடம்+ இப்படிச் சொல்: ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “நான் சொன்னபடியே இந்த நகரத்துக்குச் செய்யப்போகிறேன். இதை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக அழிக்கப்போகிறேன். இது நிறைவேறுவதை நீ உன் கண்களால் பார்ப்பாய்.”’ 17  யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த நாளில் நான் உன்னைக் காப்பாற்றுவேன். நீ யாரைக் கண்டு பயப்படுகிறாயோ அவர்கள் கையில் உன்னைக் கொடுக்க மாட்டேன்.’ 18  யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் கண்டிப்பாக உன்னைப் பாதுகாப்பேன். நீ என்மேல் நம்பிக்கை வைத்ததால்+ வாளுக்குப் பலியாக மாட்டாய். நான் உன் உயிரைக் காப்பாற்றுவேன்’”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “நெர்கல்-சரேத்சேர், சம்கார்-நேபோ, சர்சேகிம், ரப்சாரிஸ்.”
அதாவது, “தலைமை மந்திரவாதி (ஜோதிடர்).”
அல்லது, “கட்டாய வேலை வாங்கினான்.”
வே.வா., “அரண்மனையின் முக்கிய அதிகாரி.”
அதாவது, “தலைமை மந்திரவாதி (ஜோதிடர்).”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா