எரேமியா 40:1-16

40  காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான்+ எரேமியாவை ராமாவிலிருந்து+ விடுதலை செய்து அனுப்பிய பின்பு எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது. நேபுசராதான் எரேமியாவுக்குக் கைவிலங்குகள் மாட்டி அங்கே கொண்டுபோயிருந்தான். பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி பிடித்து வைக்கப்பட்ட எருசலேம் ஜனங்களோடும் யூதா ஜனங்களோடும் எரேமியா இருந்தார்.  அப்போது, காவலாளிகளின் தலைவன் எரேமியாவைத் தனியாகக் கூப்பிட்டு, “இந்த நகரத்துக்கு வந்திருக்கிற அழிவைப் பற்றி உன் கடவுளாகிய யெகோவா முன்பே சொல்லியிருந்தார்.  யெகோவா அதை அப்படியே நடத்திக் காட்டியிருக்கிறார். ஏனென்றால், நீங்கள் எல்லாரும் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தீர்கள், அவருடைய பேச்சைக் கேட்கவில்லை. அதனால்தான் உங்களுக்கு இந்தக் கதி வந்திருக்கிறது.+  இப்போது நான் உன்னுடைய கைவிலங்குகளைக் கழற்றி உன்னை விடுதலை செய்கிறேன். என்னோடு பாபிலோனுக்கு வர உனக்கு விருப்பம் இருந்தால் நீ வரலாம். உன்னை நான் கவனித்துக்கொள்கிறேன். உனக்கு அங்கே வர விருப்பம் இல்லையென்றால் வர வேண்டாம். இந்தத் தேசத்தில் எங்கு போக விரும்பினாலும் நீ போகலாம்”+ என்று சொன்னான்.  எரேமியா போகாமல் தயங்கிக்கொண்டே இருந்தபோது காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான் அவரிடம், “நீ சாப்பானின்+ மகனாகிய அகிக்காமின்+ மகன் கெதலியாவிடம்+ போய், அவரோடு இருக்கிற ஜனங்களுடன் தங்கு. ஏனென்றால், அவரை யூதாவின் நகரங்களுக்கு அதிகாரியாக பாபிலோன் ராஜா நியமித்திருக்கிறார். அங்கே போக விருப்பம் இல்லையென்றால் நீ வேறு எங்கு வேண்டுமானாலும் போகலாம்” என்று சொன்னான். பின்பு, அவருக்கு உணவும் அன்பளிப்பும் கொடுத்து அனுப்பி வைத்தான்.  எரேமியா மிஸ்பாவிலிருந்த+ அகிக்காமின் மகன் கெதலியாவிடம் போனார். அங்கே இருந்த ஜனங்களோடு தங்கினார்.  பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படாமல் தேசத்திலேயே விடப்பட்ட+ பரம ஏழைகளான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் அதிகாரியாக அகிக்காமின் மகன் கெதலியாவை பாபிலோன் ராஜா நியமித்திருந்த செய்தியைத் தேசத்திலிருந்த எல்லா படைத் தலைவர்களும் அவர்களோடு இருந்த ஆட்களும் கேள்விப்பட்டார்கள்.  அவர்கள் எல்லாரும், அதாவது நெத்தனியாவின் மகன் இஸ்மவேல்,+ கரேயாவின் மகன்களான யோகனான்+ மற்றும் யோனத்தான், தன்கூமேத்தின் மகன் செராயா, நெத்தோபாத்தியனான ஏப்பாயின் மகன்கள், மாகாத்தியன் ஒருவனுடைய மகன் யெசனியா+ ஆகியவர்களும் அவர்களுடைய ஆட்களும், மிஸ்பாவிலிருந்த+ கெதலியாவிடம் வந்தார்கள்.  சாப்பானின் மகனாகிய அகிக்காமின் மகன் கெதலியா, அவர்களிடமும் அவர்களுடைய ஆட்களிடமும் உறுதிமொழி கொடுத்து, “கல்தேயர்களுக்குச் சேவை செய்யப் பயப்படாதீர்கள். இந்தத் தேசத்திலேயே இருந்து, பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்யுங்கள். அப்போது எந்தக் கஷ்டமும் இல்லாமல் வாழ்வீர்கள்.+ 10  நான் மிஸ்பாவிலேயே தங்கி, இங்கே வருகிற கல்தேயர்களிடம் உங்கள் சார்பாகப் பேசுகிறேன். ஆனால், நீங்கள் போய் திராட்சமதுவையும் கோடைக் காலத்துப் பழங்களையும் எண்ணெயையும் பாத்திரங்களில் சேமித்து வைத்து, நீங்கள் சொந்தமாக்கிக்கொண்ட நகரங்களில் குடியிருங்கள்”+ என்றார். 11  பாபிலோன் ராஜா யூதாவில் சில ஜனங்களை விட்டுவைத்திருக்கிறார் என்றும், அவர்களுக்கு அதிகாரியாக சாப்பானின் மகனாகிய அகிக்காமின் மகன் கெதலியாவை நியமித்திருக்கிறார் என்றும் மோவாபிலும் அம்மோனிலும் ஏதோமிலும் மற்ற இடங்களிலும் இருந்த எல்லா யூதர்களும் கேள்விப்பட்டார்கள். 12  அதனால், தாங்கள் சிதறிப்போயிருந்த அந்த எல்லா இடங்களிலிருந்தும் யூதாவுக்குத் திரும்பிவர ஆரம்பித்தார்கள். அவர்கள் மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் வந்து சேர்ந்தார்கள். பின்பு, திராட்சமதுவையும் கோடைக் கால பழங்களையும் ஏராளமாகச் சேமித்து வைத்தார்கள். 13  கரேயாவின் மகன் யோகனானும் தேசமெங்கும் இருந்த படைத் தலைவர்களும் மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் வந்து, 14  “அம்மோனியர்களின்+ ராஜாவான பாலிஸ் உங்களைக் கொலை செய்வதற்காக நெத்தனியாவின் மகன் இஸ்மவேலை அனுப்பியிருப்பது உங்களுக்குத் தெரியாதா?”+ என்று கேட்டார்கள். ஆனால், அவர்கள் சொன்னதை அகிக்காமின் மகன் கெதலியா நம்பவில்லை. 15  அப்போது, கரேயாவின் மகன் யோகனான் மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் ரகசியமாக வந்து, “நான் போய் நெத்தனியாவின் மகன் இஸ்மவேலை யாருக்கும் தெரியாமல் கொலை செய்துவிடுகிறேன். அவன் கையில் நீங்கள் ஏன் சாக வேண்டும்? உங்களிடம் வந்திருக்கிற யூதா ஜனங்கள் ஏன் சிதறிப்போக வேண்டும்? மிச்சமிருக்கிற யூதா மக்கள் ஏன் அழிந்துபோக வேண்டும்?” என்றார். 16  ஆனால், அகிக்காமின் மகன் கெதலியா+ கரேயாவின் மகன் யோகனானிடம், “வேண்டாம், அப்படிச் செய்யாதே! நீ இஸ்மவேலைப் பற்றிப் பொய் சொல்கிறாய்” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா