எரேமியா 41:1-18

41  எலிஷாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனுமான இஸ்மவேல்+ ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன், ராஜாவின் முக்கிய அதிகாரிகளில் ஒருவன். ஏழாம் மாதத்தில் அவன் மிஸ்பாவில்+ இருக்கிற அகிக்காமின் மகனான கெதலியாவிடம் பத்து ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்தான். பின்பு, மிஸ்பாவில் அவர்கள் எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.  அப்போது, நெத்தனியாவின் மகன் இஸ்மவேலும் அவனுடைய பத்து ஆட்களும் திடீரென்று எழுந்து, யூதாவின் அதிகாரியாக பாபிலோன் ராஜா நியமித்திருந்த சாப்பானின் மகனான அகிக்காமின் மகன் கெதலியாவை வாளால் வெட்டிப்போட்டார்கள்.  கெதலியாவோடு மிஸ்பாவில் இருந்த யூதர்களையும் அங்கிருந்த கல்தேய படைவீர்களையும்கூட இஸ்மவேல் வெட்டிப்போட்டான்.  கெதலியா கொல்லப்பட்ட விஷயம் மற்றவர்களுக்குத் தெரியவருவதற்கு முன்பு, இரண்டாம் நாளில்,  சீகேமிலிருந்தும்+ சீலோவிலிருந்தும்+ சமாரியாவிலிருந்தும்+ 80 ஆட்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு உணவுக் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.+ அவர்கள் தங்களுடைய தாடியைச் சிரைத்திருந்தார்கள், உடையைக் கிழித்திருந்தார்கள், உடலைக் கீறியிருந்தார்கள்.+  அவர்களைச் சந்திப்பதற்காக நெத்தனியாவின் மகனான இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து அழுதுகொண்டே போனான். அவர்களைப் பார்த்ததும், “அகிக்காமின் மகனான கெதலியாவிடம் வாருங்கள்” என்று சொல்லி அவர்களைக் கூட்டிக்கொண்டு போனான்.  ஆனால், நகரத்துக்குள் வந்தவுடன் அவனும் அவனுடைய ஆட்களும் அவர்களைக் கொன்று கிணற்றில் வீசினார்கள்.  அவர்களில் பத்துப் பேரை மட்டும் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் இஸ்மவேலிடம், “எங்களைக் கொன்றுவிடாதீர்கள். நாங்கள் கோதுமையையும் பார்லியையும் எண்ணெயையும் தேனையும் நிலத்தடியில் ஏராளமாக வைத்திருக்கிறோம்” என்றார்கள்.  கொல்லப்பட்டவர்களின் உடல்களையெல்லாம் இஸ்மவேல் ஒரு பெரிய கிணற்றில் குவித்தான். அது இஸ்ரவேலின் ராஜாவான பாஷாவிடமிருந்து+ தப்பிப்பதற்காக ஆசா ராஜா வெட்டிய கிணறு. 10  மிஸ்பாவில்+ மீதியாக இருந்த ஜனங்களையெல்லாம் இஸ்மவேல் சிறைபிடித்துக்கொண்டு போனான். காவலாளிகளின் தலைவனான நேபுசராதான், அகிக்காமின் மகனான கெதலியாவின்+ பொறுப்பில் விட்டிருந்த ராஜாவின் மகள்களையும் மற்ற ஜனங்களையும் சிறைபிடித்துக்கொண்டு அம்மோனியர்களின்+ தேசத்துக்குப் புறப்பட்டான். 11  நெத்தனியாவின் மகனான இஸ்மவேல் செய்த கொடுமையை கரேயாவின் மகனான யோகனானும்+ அவரோடு இருந்த படைத் தலைவர்கள் எல்லாரும் கேள்விப்பட்டபோது, 12  எல்லா ஆட்களையும் கூட்டிக்கொண்டு நெத்தனியாவின் மகனான இஸ்மவேலோடு போர் செய்யக் கிளம்பினார்கள். கிபியோனில் உள்ள பெரிய நீர்தேக்கத்துக்கு* பக்கத்தில் அவர்கள் அவனைக் கண்டுபிடித்தார்கள். 13  இஸ்மவேலின் பிடியில் இருந்த எல்லாரும், கரேயாவின் மகனான யோகனானையும் அவரோடு இருந்த படைத் தலைவர்களையும் பார்த்தபோது ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். 14  உடனே, அவர்கள் கரேயாவின் மகனான யோகனானிடம் போய்ச் சேர்ந்துகொண்டார்கள். 15  ஆனால், நெத்தனியாவின் மகனான இஸ்மவேலும் அவனுடைய ஆட்களில் எட்டுப் பேரும் யோகனானிடமிருந்து தப்பித்து அம்மோனியர்களின் தேசத்துக்கு ஓடினார்கள். 16  இஸ்மவேல் கெதலியாவைக்+ கொன்றபின் மிஸ்பாவிலிருந்து+ சிறைபிடித்துக்கொண்டு போயிருந்த ஜனங்களை யோகனானும் அவரோடு இருந்த எல்லா படைத் தலைவர்களும் கிபியோனிலிருந்து திரும்பக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஆண்களையும் போர்வீரர்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் அரண்மனை அதிகாரிகளையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள். 17  அவர்கள் எகிப்துக்குப் போக முடிவு செய்து,+ பெத்லகேமுக்குப்+ பக்கத்திலே கிம்காம் என்ற இடத்திலிருந்த ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். ஏனென்றால், அவர்கள் கல்தேயர்களை நினைத்துப் பயந்தார்கள். 18  பாபிலோன் ராஜா அதிகாரியாக நியமித்திருந்த அகிக்காமின் மகன் கெதலியாவை நெத்தனியாவின் மகன் இஸ்மவேல் கொலை செய்திருந்ததால்தான்+ அப்படி கல்தேயர்களை நினைத்துப் பயந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “பெரிய குளத்துக்கு”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா