எரேமியா 43:1-13

43  யெகோவா சொல்லச் சொன்ன எல்லாவற்றையும் எரேமியா ஒன்றுவிடாமல் ஜனங்களிடம் சொன்னார். அவர்களுடைய கடவுளான யெகோவா சொன்ன எல்லா விஷயங்களையும் அவர் சொல்லி முடித்த பின்பு,  ஒசாயாவின் மகன் அசரியாவும், கரேயாவின் மகன் யோகனானும்,+ அகங்காரம்பிடித்த* மற்ற எல்லாரும் எரேமியாவிடம் வந்து, “நீ பொய் சொல்கிறாய்! எகிப்துக்குப் போக வேண்டாம் என்று எங்கள் கடவுளான யெகோவா சொல்லியிருக்கவே மாட்டார்.  நேரியாவின் மகன் பாருக்+ சொல்லித்தான் நீ இப்படிப் பேசுகிறாய்! அவனுடைய ஆசையே, நாங்கள் கல்தேயர்களிடம் சிக்க வேண்டும், அவர்கள் எங்களை பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போக வேண்டும், அல்லது இங்கேயே சாகடிக்க வேண்டும் என்பதுதான்”+ என்று சொன்னார்கள்.  அதனால், கரேயாவின் மகன் யோகனானும் படைத் தலைவர்களும் ஜனங்களும் யெகோவா சொன்னபடி யூதா தேசத்தில் தங்கவில்லை.  அதற்குப் பதிலாக, கரேயாவின் மகன் யோகனானும் படைத் தலைவர்களும், சிதறிப்போயிருந்த தேசங்களிலிருந்து யூதாவுக்குத் திரும்பி வந்து வாழ்ந்துகொண்டிருந்த ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போனார்கள்.+  சாப்பானின்+ மகனாகிய கெதலியாவிடம்+ காவலாளிகளின் தலைவனான நேபுசராதான்+ விட்டுச்சென்ற ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், ராஜாவின் மகள்களையும், அவர்களோடுகூட தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் மகன் பாருக்கையும் கூட்டிக்கொண்டு போனார்கள்.  அவர்கள் யெகோவாவின் பேச்சைக் கேட்காமல் எகிப்து தேசத்திலிருந்த தக்பானேஸ்+ நகரத்துக்குப் போனார்கள்.  தக்பானேஸ் நகரத்தில் யெகோவா எரேமியாவிடம்,  “யூத ஆண்களின் கண்களுக்கு முன்பாக நீ பெரிய கற்களை எடுத்து, தக்பானேசில் பார்வோனின் அரண்மனை வாசலிலே அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற செங்கற்களுக்குள் அவற்றை மறைத்து வைத்துக் காரை பூசிவிடு. 10  பின்பு அவர்களிடம் இப்படிச் சொல்: ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “என் ஊழியனும் பாபிலோனின் ராஜாவுமான நேபுகாத்நேச்சாரை நான் வர வைப்பேன்.+ நான் மறைத்து வைத்திருக்கிற இந்தக் கற்களுக்கு மேல் அவனுடைய சிம்மாசனத்தை நிறுத்துவேன். அவன் தன்னுடைய ராஜ கூடாரத்தை அவற்றின் மேல் விரிப்பான்.+ 11  அவன் வந்து எகிப்து தேசத்தைத் தாக்குவான்.+ உங்களில் சிலர் கொள்ளைநோயினால் சாவீர்கள். சிலர் சிறைபிடிக்கப்பட்டுப் போவீர்கள். சிலர் வாளால் வெட்டிக் கொல்லப்படுவீர்கள்.+ 12  எகிப்தில் இருக்கிற கோயில்களுக்கு நான் தீ வைப்பேன்.+ அவன் அவற்றை எரித்து, அங்கிருக்கிற சிலைகளைக் கைப்பற்றிக்கொண்டு போய்விடுவான். ஒரு மேய்ப்பன் எப்படிச் சர்வ சாதாரணமாகத் தன் சால்வையைப் போர்த்திக்கொண்டு போவானோ அப்படியே அவன் சர்வ சாதாரணமாக எகிப்து தேசத்தைப் போர்த்திக்கொண்டு, பத்திரமாக* கிளம்பிப் போவான். 13  எகிப்தில் இருக்கிற பெத்-ஷிமேஸ்* தூண்களை உடைத்துப்போடுவான். அங்கிருக்கிற கோயில்களைத் தீ வைத்துக் கொளுத்துவான்”’” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
நே.மொ., “சமாதானத்தோடு.”
வே.வா., “சூரியனின் கோயில்.” அதாவது, ஹெலியோபாலிஸ்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா