எரேமியா 44:1-30

44  எகிப்து+ தேசத்தைச் சேர்ந்த மிக்தோலிலும்,+ தக்பானேசிலும்,+ நோப்பிலும்,*+ பத்ரோசிலும்+ வாழ்ந்துகொண்டிருந்த எல்லா யூதர்களிடமும் அறிவிக்கச் சொல்லி எரேமியாவுக்கு ஒரு செய்தி கிடைத்தது; அவர் அவர்களிடம்,  “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘எருசலேமையும் யூதாவின் நகரங்களையும் நான் எப்படி அழித்திருக்கிறேன் என்று நீங்களே பார்த்திருக்கிறீர்கள்.+ இன்று அவை பாழாய்க் கிடக்கின்றன. அங்கே மனுஷ நடமாட்டமே இல்லை.+  ஏனென்றால், உங்களுக்கோ உங்கள் முன்னோர்களுக்கோ தெரியாத தெய்வங்களைத் தேடிப்போய்,+ அவற்றைக் கும்பிட்டு, அவற்றுக்குப் பலிகள் செலுத்தி, என் கோபத்தைக் கிளறினீர்கள்.+  நான் என்னுடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகள் எல்லாரையும் திரும்பத் திரும்ப உங்களிடம் அனுப்பி, “நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைத் தயவுசெய்து செய்யாதீர்கள்”+ என்று சொன்னேன்.  ஆனால், நீங்கள் காதில் வாங்கவே இல்லை. மற்ற தெய்வங்களுக்குப் பலி செலுத்துவதை நிறுத்தவில்லை. அந்தப் பாவத்தைவிட்டு விலகவில்லை.+  அதனால், நான் கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் யூதாவின் நகரங்களையும் எருசலேமின் வீதிகளையும் கொளுத்தினேன். இன்று அவை பாழாய்க் கிடக்கின்றன.’+  இப்போது, பரலோகப் படைகளின் கடவுளும் இஸ்ரவேலின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘ஏன் உங்களுக்கே பேரழிவைத் தேடிக்கொள்கிறீர்கள்? ஒருவர்விடாமல் எல்லா ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் கைக்குழந்தைகளும் யூதாவிலிருந்து ஒட்டுமொத்தமாக அழிந்துபோக வேண்டுமா?  நீங்கள் குடியிருக்கிற எகிப்து தேசத்தின் தெய்வங்களுக்கு உங்கள் கைகளால் பலிகள் செலுத்தி ஏன் என்னுடைய கோபத்தைக் கிளறுகிறீர்கள்? நீங்கள் அழிந்துபோவீர்கள். உலகமே உங்களைப் பழித்தும் சபித்தும் பேசும்.+  யூதா தேசத்திலும் எருசலேமின் வீதிகளிலும் உங்களுடைய முன்னோர்களும் யூதாவின் ராஜாக்களும்+ அவர்களுடைய மனைவிகளும் செய்த அக்கிரமங்களையும்,+ நீங்களும் உங்களுடைய மனைவிகளும் செய்த அக்கிரமங்களையும்+ மறந்துவிட்டீர்களா? 10  இன்றுவரை நீங்கள் மனம் வருந்தவில்லை. எனக்குப் பயப்படவில்லை.+ உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நான் கொடுத்த சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை.’+ 11  அதனால், இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘யூதாவை ஒட்டுமொத்தமாக அழிக்க நான் முடிவு செய்துவிட்டேன். 12  விடாப்பிடியாக எகிப்துக்குப் போய் வாழ்ந்துகொண்டிருக்கிற யூதா ஜனங்கள் என் கையில் சிக்குவார்கள். எகிப்து தேசத்தில் அவர்கள் எல்லாரும் அழிந்துபோவார்கள். வாளுக்கும் பஞ்சத்துக்கும் பலியாவார்கள். சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் வாளினாலும் பஞ்சத்தினாலும் சாவார்கள்.+ அவர்களுக்குக் கோரமான முடிவு வரும். அதைப் பார்த்து எல்லாரும் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+ 13  எருசலேமில் இருந்தவர்களை நான் வாளினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும்+ தண்டித்தது போலவே எகிப்தில் வாழ்கிறவர்களையும் தண்டிப்பேன். 14  எகிப்துக்குப் போய் வாழ்ந்துகொண்டிருக்கிற யூதா ஜனங்கள் தப்பிக்க மாட்டார்கள். யூதா தேசத்துக்குத் திரும்பி வரவே மாட்டார்கள். திரும்பி வந்து வாழ ஏங்குவார்கள். ஆனால், ஒருசிலரைத் தவிர வேறு யாரும் திரும்பி வர மாட்டார்கள்’” என்று சொன்னார். 15  அப்போது, பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மனைவிகளும், பொய் தெய்வங்களுக்கு அவர்கள் பலி செலுத்தி வந்ததை அறிந்திருந்த அவர்களுடைய கணவர்களும், எகிப்திலுள்ள+ பத்ரோசில்+ வாழ்ந்துவந்த எல்லா ஜனங்களும் எரேமியாவைப் பார்த்து, 16  “யெகோவாவின் பெயரில் நீங்கள் சொன்னதையெல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம். 17  நாங்கள் நேர்ந்துகொண்டபடி விண்ணரசிக்கு*+ திராட்சமது காணிக்கையையும் மற்ற காணிக்கைகளையும் செலுத்தியே தீருவோம். நாங்களும் எங்கள் முன்னோர்களும், ராஜாக்களும், அதிகாரிகளும் யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அதைத்தான் செய்துவந்தோம். அப்போது, வயிறார சாப்பிட்டு வசதியாக வாழ்ந்தோம். கெட்டது எதுவும் எங்களுக்கு நடக்கவில்லை. 18  விண்ணரசிக்கு* திராட்சமது காணிக்கையையும் மற்ற காணிக்கைகளையும் செலுத்துவதை எப்போது நிறுத்தினோமோ அப்போதிலிருந்தே எங்களுக்கு எல்லா கஷ்டமும் வர ஆரம்பித்துவிட்டது. நாங்கள் வாளுக்கும் பஞ்சத்துக்கும் பலியானோம்” என்று சொன்னார்கள். 19  பின்பு அந்தப் பெண்கள், “நாங்கள் என்ன எங்களுடைய கணவரிடம் கேட்காமலா விண்ணரசிக்கு திராட்சமது காணிக்கையையும் மற்ற காணிக்கைகளையும் செலுத்தினோம்? எங்கள் கணவருடைய சம்மதத்தோடுதானே விண்ணரசியின் உருவத்தில் அப்பங்கள் செய்து அவளுக்குப் படைத்தோம்?” என்று கேட்டார்கள். 20  அப்போது, எரேமியா தன்னோடு பேசிக்கொண்டிருந்த அந்தக் கணவர்களிடமும் மனைவிகளிடமும் மற்ற ஜனங்களிடமும் இப்படிச் சொன்னார்: 21  “நீங்களும், உங்கள் முன்னோர்களும், ராஜாக்களும், அதிகாரிகளும், மற்ற ஜனங்களும் யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் பலிகள் செலுத்தியதை+ யெகோவா மறக்கவில்லை, அவர் அதை நினைத்துப் பார்த்தார். 22  நீங்கள் செய்த அக்கிரமங்களையும் அருவருப்புகளையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் கடைசியில் யெகோவா உங்கள் தேசத்தைப் பாழாக்கினார். அதற்குக் கோரமான முடிவு வந்தது. அங்கு மனுஷ நடமாட்டம் இல்லாமல் போனதைப் பார்த்த எல்லாரும் பழித்துப் பேசினார்கள். இன்று உங்கள் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.+ 23  நீங்கள் யெகோவாவின் பேச்சைக் கேட்காமலும் அவருடைய சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படியாமலும் அவருடைய எச்சரிப்புகளை* காதில் வாங்காமலும் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தீர்கள், பொய் தெய்வத்துக்குப் பலிகள் செலுத்தினீர்கள். அதனால்தான், இன்று உங்களுக்கு இந்தக் கதி”+ என்று சொன்னார். 24  பின்பு எரேமியா அந்த எல்லா ஜனங்களிடமும் பெண்களிடமும், “எகிப்தில் வாழ்கிற யூதா ஜனங்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். 25  இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்களும் உங்கள் மனைவிகளும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டீர்கள். “நாங்கள் நேர்ந்துகொண்டபடி விண்ணரசிக்குத் திராட்சமது காணிக்கையையும் மற்ற காணிக்கைகளையும் செலுத்தியே தீருவோம்”+ என்று சொன்னீர்கள். பெண்களே, உங்களுடைய நேர்த்திக்கடனைக் கண்டிப்பாகச் செலுத்தத்தான் போகிறீர்கள்!’ 26  எகிப்து தேசத்தில் வாழ்கிற யூதா ஜனங்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்: ‘யெகோவா சொல்வது இதுதான்: “என்னுடைய மகத்தான பெயரின் மேல் சத்தியமாகச் சொல்கிறேன்! எகிப்து தேசத்தில் இருக்கிற யூதா ஜனங்கள்+ யாருமே இனி, ‘உன்னதப் பேரரசராகிய உயிருள்ள கடவுளான யெகோவாமேல் ஆணை!’*+ என்று சொல்லி சத்தியம் செய்ய மாட்டார்கள். 27  அவர்களுக்கு நான் நல்லது செய்யப்போவதில்லை. அவர்களை எப்போது தண்டிக்கலாம் என்றுதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.+ எகிப்து தேசத்திலிருக்கிற யூதா ஜனங்கள் எல்லாரும் வாளுக்கும் பஞ்சத்துக்கும் பலியாகி, அடியோடு அழிந்துபோவார்கள்.+ 28  ஒருசிலர் மட்டும்தான் வாளுக்குத் தப்பி யூதா தேசத்துக்குத் திரும்பி வருவார்கள். எகிப்து தேசத்தில் குடியிருக்கப் போன யூதா ஜனங்கள்+ எல்லாரும், நான் சொன்னது உண்மையா அவர்கள் சொன்னது உண்மையா என்று அப்போது தெரிந்துகொள்வார்கள்!”’” என்று சொன்னார். 29  “யெகோவா சொல்வது இதுதான்: ‘இந்த இடத்தில் நான் உங்களைத் தண்டிக்கப்போவதற்கு அடையாளமாக ஒன்றைச் செய்யப்போகிறேன். அதைப் பார்க்கும்போது, உங்களை அழிக்கப்போவதாக நான் சொன்ன வார்த்தைகள் கண்டிப்பாக நிறைவேறும் என்று தெரிந்துகொள்வீர்கள். 30  யெகோவா சொல்வது இதுதான்: “யூதாவின் ராஜாவான சிதேக்கியாவைக் கொலைவெறிபிடித்த அவனுடைய எதிரியான பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் கையில் நான் கொடுத்தது போலவே, எகிப்தின் ராஜாவான பார்வோன் ஒப்பிராவையும் கொலைவெறிபிடித்த எதிரிகளின் கையில் கொடுத்துவிடுவேன்.”’”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மோப்பிலும்.”
விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் வணங்கிய ஒரு பெண் தெய்வத்தின் பட்டப்பெயர்; ஒருவேளை கருவள தெய்வமாக இருந்திருக்கலாம்.
விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் வணங்கிய ஒரு பெண் தெய்வத்தின் பட்டப்பெயர்; ஒருவேளை கருவள தெய்வமாக இருந்திருக்கலாம்.
வே.வா., “நினைப்பூட்டுதல்களை.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா