எரேமியா 49:1-39
49 அம்மோனியர்களைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்:
“இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ?
அவனுக்கு வாரிசு இல்லையோ?
பிறகு ஏன் காத்+ நகரத்தை மல்காம்+ கைப்பற்ற வேண்டும்?
மல்காமைக் கும்பிடுகிறவர்கள் ஏன் இஸ்ரவேலின் நகரங்களில் குடியிருக்க வேண்டும்?”
2 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, காலம் வருகிறது.அப்போது, அம்மோனியர்களுடைய+ நகரமான ரப்பாவில்+ போர் முழக்கம் கேட்கும்படி செய்வேன்.
அவள் வெறும் மண்மேடாக ஆவாள்.அவளுடைய சிற்றூர்கள்* தீ வைத்துக் கொளுத்தப்படும்.’
யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேலைக் கைப்பற்றியவர்களை இஸ்ரவேல் கைப்பற்றும்.’+
3 ‘எஸ்போனே, அழுது புலம்பு! ஆயி அழிக்கப்பட்டாள்!
ரப்பாவின் சிற்றூர்களே, அலறுங்கள்!
துக்கத் துணியை* போட்டுக்கொள்ளுங்கள்!
ஒப்பாரி வையுங்கள்; தொழுவங்களில்* அலைந்து திரியுங்கள்.ஏனென்றால், மல்காம் தெய்வம் சிறைபிடிக்கப்படும்.அதன் பூசாரிகளும் அதிகாரிகளும்கூட சிறைபிடிக்கப்படுவார்கள்.+
4 துரோகம் செய்கிற மகளே, உன்னுடைய பள்ளத்தாக்குகளைப் பற்றியும்தண்ணீர் பாய்ந்தோடுகிற சமவெளியைப் பற்றியும் ஏன் பெருமையடிக்கிறாய்?உன்னுடைய சொத்துகள்மேல் நீ நம்பிக்கை வைத்திருக்கிறாய்.“என்னோடு மோதுவதற்கு யார் வரப்போகிறார்கள்?” என்று சொல்லிக்கொள்கிறாய்.’”
5 “உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:‘நான் உனக்கு எதிராகப் பயங்கரமான அழிவைக் கொண்டுவரப் போகிறேன்.
சுற்றியுள்ள ஜனங்கள் உன்னைத் தாக்குவார்கள்.உன்னுடைய ஜனங்கள் நாலாபக்கமும் சிதறி ஓடுவார்கள்.
அவர்களை ஒன்றுசேர்க்க யாரும் இருக்க மாட்டார்கள்.’”
6 “‘ஆனால், சிறைபிடிக்கப்பட்டுப் போன அம்மோனியர்களை நான் பிற்பாடு கூட்டிச்சேர்ப்பேன்’ என்று யெகோவா சொல்கிறார்.”
7 ஏதோமைப் பற்றி பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“தேமானில்+ ஞானம் இல்லாமல் போய்விட்டதா?
புத்திசாலிகளால்* நல்ல ஆலோசனை தர முடியவில்லையா?
அவர்களுடைய புத்தி* கெட்டுப்போய்விட்டதா?
8 தேதான்+ ஜனங்களே, தப்பித்து ஓடுங்கள்! முதுகைக் காட்டி ஓடுங்கள்!
தாழ்வான பகுதிகளுக்குப் போய்ப் பதுங்கி வாழுங்கள்.
ஏனென்றால், நான் ஏசாவைத் தண்டிக்கும் நேரம் வருகிறது.அப்போது நான் அவனை அழிப்பேன்.
9 திராட்சைக் குலைகளை அறுக்க வருகிறவர்கள்கொஞ்சத்தை விட்டுவைப்பார்கள், இல்லையா?
ராத்திரியில் வருகிற திருடர்கள்தங்களுக்குப் போதுமானதை மட்டும் எடுத்துக்கொள்வார்கள், இல்லையா?+
10 ஆனால், நான் ஏசாவுக்குச் சொந்தமான எல்லாவற்றையுமே எடுத்துவிடுவேன்.
அவனால் எங்குமே ஒளிந்துகொள்ள முடியாதபடிஅவனுடைய மறைவிடங்களை வெட்டவெளிச்சமாக்குவேன்.
அவனுடைய பிள்ளைகளையும் சகோதரர்களையும் அக்கம்பக்கத்து ஜனங்களையும் கொன்றுபோடுவேன்.+அவன் அடியோடு அழிந்துபோவான்.+
11 அப்பா இல்லாத பிள்ளைகளை என்னிடம் விட்டுவிடு.நான் அவர்களுடைய உயிரைக் காப்பாற்றுவேன்.உன்னுடைய விதவைகள் என்மேல் நம்பிக்கை வைப்பார்கள்.”
12 யெகோவா சொல்வது இதுதான்: “என்னுடைய கோபக் கிண்ணத்திலிருந்து குடிக்க வேண்டுமென்ற தீர்ப்பைப் பெறாதவர்களே அதைக் குடிக்க வேண்டும் என்றால், நீ அதைக் குடிக்காமல் தப்பிக்க முடியுமா? முடியாது. தண்டனையை நீ முழுமையாக அனுபவித்தே தீர வேண்டும்.”+
13 “யெகோவா சொல்வது இதுதான்: ‘என்மேல் ஆணையாகச் சொல்கிறேன், போஸ்றாவுக்கு வரும் கோரமான முடிவைப்+ பார்க்கிறவர்கள் அவளைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள். அவளுடைய எல்லா நகரங்களும் அடியோடு அழிந்துபோகும்.”+
14 யெகோவாவிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது.எல்லா தேசங்களுக்கும் அதைச் சொல்ல ஒரு தூதுவர் அனுப்பப்பட்டிருக்கிறார்.
அவர் எல்லாரிடமும், “ஒன்றுதிரண்டு வாருங்கள்.அவளோடு போர் செய்யப் புறப்படுங்கள்”+ என்று சொல்கிறார்.
15 “நான் உன்னைத் தேசங்களிலேயே அற்பமான தேசமாக்கினேன்.எல்லாராலும் வெறுக்கப்படுகிற தேசமாக்கினேன்.+
16 பாறைகளின் நடுவே பாதுகாப்பாகக் குடியிருக்கிறவளே,மிகவும் உயரமான குன்றின் மேல் உட்கார்ந்திருக்கிறவளே,நீ எல்லாரையும் பயமுறுத்தி, அகங்காரமாக* நடந்து மோசம்போனாயே!கழுகைப் போல உயரத்திலே நீ கூடு கட்டினாலும்அங்கிருந்து நான் உன்னைக் கீழே தள்ளுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
17 “ஏதோமுக்கு வரும் கோரமான முடிவைப்+ பார்க்கிறவர்கள் கதிகலங்கிப்போவார்கள். அவளுக்கு வரும் எல்லா தண்டனைகளையும் பார்த்துக் கேலி செய்வார்கள்.*
18 சோதோமும் கொமோராவும் அவற்றைச் சுற்றியிருந்த ஊர்களும்+ அழிந்தது போலவே ஏதோமும் அழிந்துபோவாள். அங்கே யாரும் குடியிருக்க மாட்டார்கள். மனுஷ நடமாட்டமே இருக்காது”+ என்று யெகோவா சொல்கிறார்.
19 “யோர்தானை ஒட்டியுள்ள புதர்க் காடுகளிலிருந்து பாய்ந்து வருகிற சிங்கத்தைப் போல+ ஒருவன் பாய்ந்து வந்து பாதுகாப்பான மேய்ச்சல் நிலங்களைத் தாக்குவான். ஆனால், நான் அவனை* ஒரே நொடியில் அவளைவிட்டு ஓட வைப்பேன். தேர்ந்தெடுக்கப்பட்டவனின் கையில் அவளைக் கொடுப்பேன். என்னைப் போல யார் இருக்கிறார்கள்? எனக்கே சவால்விட யாரால் முடியும்? எந்த மேய்ப்பனால் என்முன் நிற்க முடியும்?+
20 அதனால் ஜனங்களே, ஏதோமுக்கு எதிராக யெகோவா எடுத்திருக்கிற முடிவைப் பற்றியும், தேமானின்+ ஜனங்களுக்கு எதிராக அவர் யோசித்திருக்கிற விஷயத்தைப் பற்றியும் கேளுங்கள்:
மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகள் கண்டிப்பாக இழுத்துச் செல்லப்படும்.
அவற்றின் தொழுவங்களை அவர் வெறுமையாக்குவார்;+ ஏனென்றால், அவர்கள் பாவம் செய்தார்கள்.
21 அவர்கள் விழும் சத்தத்தில் பூமி அதிருகிறது.
அலறல் சத்தம் கேட்கிறது!
செங்கடல்+ வரைக்கும் சத்தம் கேட்கிறது.
22 மேலே பறக்கும் கழுகு கீழே பாய்ந்து வருவது போல,அவர் போஸ்றாவைப் பிடிப்பதற்காகச் சிறகுகளை விரித்துக்கொண்டு வருவார்.+
குழந்தையைப் பெற்றெடுக்கிற பெண்ணின் நெஞ்சம் துடிப்பது போலஅந்த நாளில் ஏதோமின் வீரர்களுடைய நெஞ்சம் துடிக்கும்.”
23 தமஸ்குவுக்கு+ எதிரான தண்டனைத் தீர்ப்பு:
“காமாத்,+ அர்பாத் ஜனங்கள் அவமானப்பட்டுப் போயிருக்கிறார்கள்.ஏனென்றால், அவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி வந்திருக்கிறது.
அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள்.
அமைதியில்லாமல் கொந்தளிக்கிற கடலைப் போல இருக்கிறார்கள்.
24 தமஸ்குவின் தைரியமெல்லாம் போய்விட்டது.
அவள் தப்பித்து ஓடப் பார்க்கிறாள், ஆனால் பயத்தில் உறைந்துபோகிறாள்.
குழந்தையைப் பெற்றெடுக்கிற பெண்ணைப் போலவலியிலும் வேதனையிலும் துடிக்கிறாள்.
25 சந்தோஷக் களையோடும் புகழோடும் இருந்தவளைவிட்டுஜனங்கள் ஏன் இன்னும் தப்பித்து ஓடவில்லை?
26 அந்த நாளில் அவளுடைய வாலிபர்கள் பொது சதுக்கங்களில் விழுந்து கிடப்பார்கள்.எல்லா வீரர்களும் அழிந்துபோவார்கள்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
27 “நான் தமஸ்குவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.அது பெனாதாத்தில்+ இருக்கிற கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.”
28 பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் கைப்பற்றிய கேதாரையும்+ ஆத்சோரின் ராஜ்யங்களையும் பற்றி யெகோவா சொல்வது இதுதான்:
“கேதாருக்கு எதிராகப் புறப்பட்டுப் போங்கள்.கிழக்கில் வாழ்கிற ஜனங்களைக் கொன்றுபோடுங்கள்.
29 அவர்களுடைய கூடாரங்களையும் மந்தைகளையும்கூடாரத் துணிகளையும் மற்ற எல்லா பொருள்களையும்
ஒட்டகங்களையும் எடுத்துக்கொண்டு போங்கள்.‘எந்தப் பக்கம் திரும்பினாலும் பயங்கரமாக இருக்கிறது!’ என்று ஜனங்கள் அலறுவார்கள்.”
30 யெகோவா சொல்வது இதுதான்: “தொலைதூரத்துக்குத் தப்பியோடுங்கள்.
ஆத்சோர் ஜனங்களே, தாழ்வான பகுதிகளுக்குப் போய்ப் பதுங்கி வாழுங்கள்.
ஏனென்றால், பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் உங்களுக்கு எதிராகச் சதி செய்திருக்கிறான்.உங்களைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருக்கிறான்.”
31 யெகோவா சொல்வது இதுதான்: “கதவுகளோ தாழ்ப்பாள்களோ இல்லாமல்,சமாதானத்தோடும் பாதுகாப்போடும் வாழ்கிற ஜனத்துக்கு எதிராகப் புறப்பட்டுப் போங்கள்.
அவர்கள் தனியாக வாழ்கிறார்கள்.
32 அவர்களுடைய ஒட்டகங்கள் கைப்பற்றப்படும்.அவர்களுடைய ஏராளமான கால்நடைகள் சூறையாடப்படும்.
அவர்களை எல்லா திசைகளிலும் சிதறி ஓட வைப்பேன்.நெற்றி ஓரங்களில் முடியை வெட்டிக்கொள்கிற அந்த ஜனத்துக்கு+எல்லா பக்கத்திலிருந்தும் ஆபத்தை வர வைப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
33 ஆத்சோர் பிரதேசம் நரிகள் தங்கும் இடமாக மாறும்.அது ஒட்டுமொத்தமாகப் பாழாகிப்போகும்.
அங்கே யாரும் குடியிருக்க மாட்டார்கள்.மனுஷ நடமாட்டமே இருக்காது.”
34 சிதேக்கியா ராஜா யூதாவை ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது+ ஏலாமைப்+ பற்றி எரேமியா தீர்க்கதரிசியிடம் யெகோவா சொன்னது இதுதான்:
35 “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘ஏலாமின் பலத்துக்கு அடையாளமாக இருக்கிற வில்லை நான் முறிக்கப்போகிறேன்.+
36 வானத்தின் நான்கு மூலைகளிலிருந்தும் நான்கு காற்றுகள் ஏலாமின் மேல் அடிக்கும்படி செய்வேன். ஜனங்கள் நாலாபக்கமும் அடித்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் சிதறி ஓடாத தேசமே இருக்காது.’”
37 யெகோவா சொல்வது இதுதான்: “கொலைவெறி பிடித்த எதிரிகளுக்கு முன்னால் ஏலாமியர்களை நான் நடுங்க வைப்பேன். பயங்கர கோபத்தோடு அவர்களைத் தண்டிப்பேன். வாளை அனுப்பி அவர்களை அடியோடு அழிப்பேன்.”
38 “என்னுடைய சிம்மாசனத்தை ஏலாமில் நிறுத்துவேன்.+ அதன் ராஜாவையும் அதிகாரிகளையும் அழிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
39 “ஆனால் கடைசி நாட்களில், ஏலாமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா, “அவளைச் சுற்றியுள்ள ஊர்கள்.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ இவை கற்சுவர்களால் கட்டப்பட்ட நிரந்தரத் தொழுவங்களைக் குறிக்கின்றன.
^ வே.வா., “ஞானம்.”
^ வே.வா., “புரிந்துகொள்ளும் திறன் உள்ளவர்களால்.”
^ இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
^ நே.மொ., “விசில் அடிப்பார்கள்.”
^ ஒருவேளை, “ஏதோமை.”