எரேமியா 7:1-34

7  எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி இதுதான்:  “யெகோவாவாகிய என்னுடைய ஆலயத்தின் நுழைவாசலில் நின்று இந்தச் செய்தியை எல்லாருக்கும் சொல்: ‘யெகோவாவை வணங்குவதற்காக இந்த நுழைவாசலைத் தாண்டி வருகிற யூதா ஜனங்களே, யெகோவா இப்போது சொல்வதைக் கேளுங்கள்.  இஸ்ரவேலின் கடவுளான பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “கெட்ட வழிகளையும் செயல்களையும் விட்டுத் திருந்துங்கள். அப்போது, இந்தத் தேசத்திலேயே நீங்கள் தொடர்ந்து வாழ்வதற்கு நான் அனுமதிப்பேன்.+  ஏமாற்று வார்த்தைகளை நம்பி, ‘இது யெகோவாவின் ஆலயம்! யெகோவாவின் ஆலயம்! யெகோவாவின் ஆலயம்!’+ என்று சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்.  உண்மையிலேயே கெட்ட வழிகளையும் செயல்களையும் விட்டுத் திருந்தினால், மற்றவர்களுடைய வழக்குகளில் நியாயத்துக்காக வாதாடினால்,+  உங்களோடு தங்கியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களையும், அப்பா இல்லாத பிள்ளைகளையும்,* விதவைகளையும்+ கொடுமைப்படுத்தாமல் இருந்தால், அப்பாவிகளைக் கொலை செய்யாமல் இருந்தால், மற்ற தெய்வங்களை வணங்கி உங்களுக்கே கெடுதலைத் தேடிக்கொள்ளாமல் இருந்தால்,+  நான் உங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த இந்தத் தேசத்திலேயே நீங்கள் என்றென்றும் வாழ்வதற்கு அனுமதிப்பேன்.”’”  “ஆனால், மற்றவர்கள் சொல்லும் பொய்களை நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள்;+ அந்தப் பொய்களால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை.  நீங்கள் திருட்டும்,+ கொலையும், மணத்துணைக்குத் துரோகமும், பொய் சத்தியமும் செய்துகொண்டு,+ பாகாலுக்குத் தகன பலி செலுத்திக்கொண்டு,*+ முன்பின் தெரியாத தெய்வங்களை வணங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். 10  நீங்கள் அருவருப்பான இந்த எல்லா காரியங்களையும் செய்துவிட்டு, என் பெயர் தாங்கிய இந்த ஆலயத்துக்கு வந்து என்முன் நின்றுகொண்டு, ‘நாங்கள் காப்பாற்றப்படுவோம்’ என்று சொல்வது நியாயமா? 11  என் பெயர் தாங்கிய இந்த ஆலயம் கொள்ளைக்காரர்களின் குகையைப் போல உங்களுக்குத் தெரிகிறதோ?+ உங்களுடைய அட்டூழியங்களை என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன்” என்று யெகோவா சொல்கிறார். 12  “‘நீங்கள் கெட்ட காரியங்களைச் செய்துகொண்டே இருந்தீர்கள். நான் மறுபடியும் மறுபடியும் உங்களோடு பேசியும் நீங்கள் கேட்கவில்லை.+ உங்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன், ஆனால் நீங்கள் பதில் சொல்லவே இல்லை.+ 13  அதனால், என் பெயரின் மகிமைக்காக சீலோவில்+ நான் முதன்முதலில் தேர்ந்தெடுத்த இடத்துக்கு இப்போது போங்கள்;+ என் ஜனங்களான இஸ்ரவேலர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக+ நான் அதை என்ன செய்தேன் என்று பாருங்கள்’ என்று யெகோவா சொல்கிறார். 14  ‘சீலோவுக்குச் செய்ததைப் போலவே+ நீங்கள் நம்பியிருக்கிற+ இந்த ஆலயத்துக்கும், அதாவது என் பெயரைத் தாங்கியிருக்கிற இந்த இடத்துக்கும்,+ செய்யப்போகிறேன். உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நான் கொடுத்த இந்தத் தேசத்தைக்கூட அதேபோல் பாழாக்கப்போகிறேன். 15  உங்கள் சகோதரர்களான எப்பிராயீமியர்களை நான் ஒதுக்கித்தள்ளியதைப் போலவே உங்கள் எல்லாரையும் என் முன்னாலிருந்து ஒதுக்கித்தள்ளுவேன்.’+ 16  நீ இந்த ஜனங்களுக்காக ஜெபம் செய்யக் கூடாது. அவர்களுக்காக வேண்டிக்கொள்ளவோ கெஞ்சிக் கதறவோ கூடாது.+ நான் அதைக் கேட்க மாட்டேன்.+ 17  யூதா நகரத்திலும் எருசலேமின் வீதிகளிலும் ஜனங்கள் என்ன செய்கிறார்கள் என்று நீ பார்க்கவில்லையா? 18  விண்ணரசிக்காக*+ படையல் அப்பங்களைச் செய்வதற்குப் பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள். தகப்பன்கள் நெருப்பு மூட்டுகிறார்கள். மனைவிகள் மாவு பிசைகிறார்கள். என் கோபத்தைக் கிளறுவதற்காக மற்ற தெய்வங்களுக்குத் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுகிறார்கள்.+ 19  ‘ஆனால், இப்படிச் செய்வதால் என்னையா வேதனைப்படுத்துகிறார்கள்?* தங்களுக்குத்தானே வேதனையையும் அவமானத்தையும் வர வைத்துக்கொள்கிறார்கள்?’+ என்று யெகோவா சொல்கிறார். 20  அதனால், ‘இந்த இடத்தின் மேலும், மனுஷர்கள்மேலும், மிருகங்கள்மேலும், மரங்கள்மேலும், பயிர்கள்மேலும் என் கோபத் தீ பற்றியெரியும்.+ அது அணையாமல் எரியும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 21  இஸ்ரவேலின் கடவுளான பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘போங்கள், இஷ்டம்போல் பலிகளுக்குமேல் பலிகளைச் செலுத்துங்கள்; அந்தத் தகன பலிகளை நீங்களே சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.+ 22  எகிப்திலிருந்து உங்கள் முன்னோர்களை நான் கூட்டிக்கொண்டு வந்தபோது தகன பலிகளைப் பற்றியோ மற்ற பலிகளைப் பற்றியோ நான் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை,+ அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. 23  ஆனால், “நீங்கள் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்; அப்போது நான் உங்கள் கடவுளாக இருப்பேன், நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்.+ என்னுடைய எல்லா கட்டளைகளின்படியும் நீங்கள் நடக்க வேண்டும். அப்போது, சந்தோஷமாக வாழ்வீர்கள்”+ என்று மட்டும் சொன்னேன்.’ 24  அவர்கள் அதைக் காதில் வாங்கவே இல்லை.+ அதற்குப் பதிலாக, தங்களுடைய திட்டங்களின்படியே நடந்தார்கள், தங்களுடைய பொல்லாத இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போனார்கள்.+ முன்னோக்கிப் போவதற்குப் பதிலாகப் பின்னோக்கியே போனார்கள். 25  உங்கள் முன்னோர்கள் எகிப்திலிருந்து வந்த நாளிலிருந்து இந்த நாள்வரை நிலைமை இப்படித்தான் இருந்திருக்கிறது.+ நான் என்னுடைய ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகள் எல்லாரையும் தினமும் அனுப்பினேன்; திரும்பத் திரும்ப அனுப்பினேன்.+ 26  ஆனால், அவர்கள் எதையுமே காதில் வாங்கவில்லை.+ முரட்டுப் பிடிவாதம் பிடித்தார்கள். அவர்களுடைய முன்னோர்களைவிட மோசமாக நடந்துகொண்டார்கள்! 27  நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களிடம் சொன்னாலும்+ அவர்கள் கேட்க மாட்டார்கள். நீ அவர்களைக் கூப்பிட்டாலும் அவர்கள் பதில் பேச மாட்டார்கள். 28  நீ அவர்களிடம், ‘நீங்கள் உங்களுடைய கடவுளாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல்போன ஜனங்கள், அவர் கண்டித்தும் திருந்தாமல்போன ஜனங்கள். உங்களில் யாருமே உண்மைத்தன்மையோடு நடக்கவில்லை. உண்மைத்தன்மை என்ற வார்த்தை உங்கள் வாயில் வருவதுகூட இல்லை’+ என்று சொல். 29  உங்களுடைய நீளமான* தலைமுடியை வெட்டி எறியுங்கள். குன்றுகளில் புலம்பல் பாட்டைப் பாடுங்கள். ஏனென்றால், யெகோவா இந்தத் தலைமுறையை வெறுத்து ஒதுக்கிவிட்டார். நீங்கள் எல்லாரும் அவருடைய கோபத்தைக் கிளறிவிட்டீர்கள். 30  ‘யூதா ஜனங்கள் நான் வெறுக்கிற காரியங்களைச் செய்திருக்கிறார்கள்’ என்று யெகோவா சொல்கிறார். ‘என்னுடைய பெயர் தாங்கிய ஆலயத்திலே அருவருப்பான சிலைகளை வைத்து அதைத் தீட்டுப்படுத்தினார்கள்.+ 31  பென்-இன்னோம்*+ பள்ளத்தாக்கில்* இருக்கிற தோப்பேத்தில்* ஆராதனை மேடுகளைக் கட்டி, அங்கே அவர்களுடைய மகன்களையும் மகள்களையும் நெருப்பில் சுட்டெரித்தார்கள்.+ அப்படிச் செய்யும்படி நான் கட்டளை கொடுக்கவே இல்லை. அந்த யோசனைகூட எனக்கு* வந்ததே இல்லை.’+ 32  அதனால், யெகோவா சொல்வது இதுதான்: ‘நாட்கள் வரும். அப்போது இந்த இடம் தோப்பேத் என்றோ பென்-இன்னோம் பள்ளத்தாக்கு* என்றோ அழைக்கப்படாமல், படுகொலையின் பள்ளத்தாக்கு என்றே அழைக்கப்படும். இறந்தவர்கள் தோப்பேத்தில் புதைக்கப்படுவார்கள். புதைப்பதற்கு இடமே இல்லாத அளவுக்கு அங்கே பிணங்கள் குவிந்திருக்கும்.+ 33  இந்த ஜனங்களுடைய பிணங்கள் வானத்தில் பறக்கும் பறவைகளுக்கும் பூமியில் நடமாடுகிற மிருகங்களுக்கும் உணவாகும். அவற்றை விரட்டிவிட யாரும் இருக்க மாட்டார்கள்.+ 34  யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் கொண்டாட்டமோ குதூகலமோ இனி இருக்காது. மணமகனுடைய குரலும் மணமகளுடைய குரலும் கேட்காது.+ ஏனென்றால், நான் இந்தத் தேசத்தை அழித்து சின்னாபின்னமாக்குவேன்.’”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அநாதைகளையும்.”
வே.வா., “தூபம் காட்டிக்கொண்டு.”
விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் வணங்கிய ஒரு பெண் தெய்வத்தின் பட்டப்பெயர்; ஒருவேளை, கருவள தெய்வமாக இருந்திருக்கலாம்.
வே.வா., “புண்படுத்துகிறார்கள்; கோபப்படுத்துகிறார்கள்.”
அதாவது, “அர்ப்பணிக்கப்பட்ட.”
அர்த்தம், “இன்னோம் மகனின்.”
சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பைப் பாருங்கள்.
தோப்பேத் என்பது எருசலேமுக்கு வெளியே இருந்த ஓர் இடம். அங்குதான் விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் தங்கள் குழந்தைகளை நரபலி கொடுத்தார்கள்.
நே.மொ., “என் இதயத்தில்.”
சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பைப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா