எரேமியா 9:1-26

9  என் தலை தண்ணீர்க் குளமாகவும்,என் கண்கள் கண்ணீர் ஊற்றாகவும் இருக்கக் கூடாதா?+ அப்போது, கொலை செய்யப்பட்ட என் ஜனங்களை நினைத்துராத்திரி பகலாகக் கண்ணீர் வடித்துக்கொண்டே இருப்பேனே!   வனாந்தரத்தில் எனக்கு ஒரு சத்திரம் இருக்கக் கூடாதா? அப்போது, நான் என்னுடைய ஜனங்களை விட்டுவிட்டுப் போய்விடுவேனே!ஏனென்றால், அவர்கள் எல்லாருமே கடவுளுக்குத் துரோகம் செய்கிறார்கள்.+நம்பியவரை ஏமாற்றுகிற கும்பலாக இருக்கிறார்கள்.   வில்லிலிருந்து அம்புகள் புறப்படுவது போல அவர்களுடைய வாயிலிருந்து பொய்கள் புறப்படுகின்றன.தேசத்தில் உண்மையே இல்லை, பொய்களுக்குப் பஞ்சமே இல்லை.+ “அவர்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறார்கள்.என் பேச்சைக் கேட்பதே இல்லை”+ என்று யெகோவா சொல்கிறார்.   “நீங்கள் எல்லாரும் மற்றவர்களிடம் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுங்கள்.உங்கள் சகோதரனைக்கூட நம்பாதீர்கள். எல்லாருமே நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்.+மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறார்கள்.+   ஒவ்வொருவனும் அடுத்தவனை ஏமாற்றுகிறான்.யாருமே உண்மை பேசுவதில்லை. பொய் பேசுவதற்குத்தான் தங்கள் நாவைப் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்.+ கெட்டதைச் செய்து செய்தே களைத்துப்போயிருக்கிறார்கள்.   நீ மோசடிக்காரர்களின் நடுவே வாழ்ந்துகொண்டிருக்கிறாய். அவர்கள் மோசடி செய்வதில் ஊறிப்போயிருப்பதால் என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை” என்று யெகோவா சொல்கிறார்.   அதனால், பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “நான் அவர்களைப் புடமிட்டுச் சுத்தமாக்குவேன்.+என் ஜனங்களை நான் வேறு என்னதான் செய்ய முடியும்?   பொய் பேசுகிற அவர்களுடைய நாவுகள் விஷ அம்புகள். மற்றவர்களிடம் இனிக்க இனிக்கப் பேசுகிறார்கள்.ஆனால், கெடுதல் செய்வதற்குத்தான் மனதில் திட்டம் போடுகிறார்கள்.”   “இதையெல்லாம் நான் தட்டிக்கேட்க வேண்டாமா? இப்படிப்பட்ட ஒரு தேசத்தை நான் தண்டிக்க வேண்டாமா?”+ என்று யெகோவா கேட்கிறார். 10  “நான் மலைகளைப் பார்த்து அழுது புலம்புவேன்.வனாந்தரத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்காகப் புலம்பல் பாட்டுப் பாடுவேன்.ஏனென்றால், அவை கொளுத்தப்பட்டுக் கிடக்கின்றன; அங்கே மனுஷ நடமாட்டம் இல்லை.ஆடுமாடுகளின் சத்தம்கூட கேட்பதில்லை. பறவைகள் அங்கிருந்து பறந்து போய்விட்டன, மிருகங்களும் ஓடிவிட்டன.+ 11  நான் எருசலேமைக் கற்குவியலாகவும்,+ நரிகளின் குகையாகவும் மாற்றுவேன்.+யாருமே குடியிருக்க முடியாதபடி யூதாவின் நகரங்களைப் பாழாக்குவேன்.+ 12  இதையெல்லாம் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானம் உள்ளவர் யார்? இதையெல்லாம் ஜனங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று யெகோவா யாரிடம் சொன்னார்? தேசம் ஏன் அழிந்துபோனது? அது ஏன் நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டது? அது ஏன் வனாந்தரத்தைப் போலக் காய்ந்து கருகிக் கிடக்கிறது?ஏன் மனுஷ நடமாட்டமே இல்லாமல் போனது?” 13  யெகோவா சொல்வது இதுதான்: “அவர்கள் என் சட்டத்தை* கடைப்பிடிக்காமல் அசட்டை செய்தார்கள். என் பேச்சை மீறினார்கள். 14  தங்கள் இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போனார்கள்.+ அவர்களுடைய முன்னோர்கள் கற்றுக்கொடுத்தபடியே பாகாலின் சிலைகளை வணங்கினார்கள்.+ 15  அதனால், இஸ்ரவேலின் கடவுளான பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘இந்த ஜனங்களுக்குச் சாப்பிட எட்டியையும் குடிக்க விஷத் தண்ணீரையும் கொடுப்பேன்.+ 16  இவர்களுக்கோ இவர்களுடைய முன்னோர்களுக்கோ தெரியாத தேசங்களுக்கு இவர்களைச் சிதறிப்போக வைப்பேன்.+ வாளை அனுப்பி இவர்களை அடியோடு அழிப்பேன்.’+ 17  பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:‘புத்தியோடு* நடந்துகொள்ளுங்கள். புலம்பல் பாட்டுப் பாடும் பெண்களை வரச் சொல்லுங்கள்.+திறமையான புலம்பல்காரிகளுக்குச் சொல்லி அனுப்புங்கள். 18  அவர்கள் சீக்கிரமாக வந்து நமக்காக அழுது புலம்பட்டும்.அதைக் கேட்டு நம் கண்களிலிருந்து கண்ணீர் அருவிபோல் கொட்டட்டும்.தாரை தாரையாக வழிந்தோடட்டும்.+ 19  ஜனங்கள் இப்படிப் புலம்புகிற சத்தம் சீயோனில் கேட்கிறது:+ “நம் வாழ்க்கை பாழாய்ப் போய்விட்டதே! அவமானம் தாங்க முடியவில்லையே! எதிரிகள் நம் வீடுகளை இடித்துவிட்டார்களே! தேசத்தைவிட்டே நம்மைத் துரத்திவிட்டார்களே!”+ 20  பெண்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். அவருடைய வார்த்தைகளை நம்புங்கள். இந்தப் புலம்பல் பாட்டை உங்கள் மகள்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.மற்ற பெண்களுக்கும் கற்றுக்கொடுங்கள்.+ 21  ஏனென்றால், வீதிகளில் விளையாடுகிற பிள்ளைகளைப் பறித்துக்கொண்டு போவதற்காகவும்,பொது சதுக்கங்களில் உள்ள வாலிபர்களை வாரிக்கொண்டு போவதற்காகவும்,சாவு நம்முடைய ஜன்னல் வழியாக வந்துவிட்டது.நம்முடைய கோட்டைகளுக்குள் நுழைந்துவிட்டது.’+ 22  நீ இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது இதுதான்: “ஜனங்களுடைய பிணங்கள் எருவைப் போல நிலத்தில் கிடக்கும்.அறுத்துப் போடப்பட்ட கதிர்களைப் போலக் கிடக்கும்.அவற்றை எடுக்க யாருமே வர மாட்டார்கள்.”’”+ 23  யெகோவா சொல்வது இதுதான்: “ஞானி தன்னுடைய ஞானத்தைப் பற்றிப் பெருமையடிக்க வேண்டாம்.+பலசாலி தன்னுடைய பலத்தைப் பற்றிப் பெருமையடிக்க வேண்டாம்.பணக்காரன் தன்னுடைய சொத்துகளைப் பற்றிப் பெருமையடிக்க வேண்டாம்.”+ 24  யெகோவா சொல்வது இதுதான்: “யாராவது பெருமை பேச விரும்பினால், என்னைப் பற்றிய அறிவும் ஆழமான புரிந்துகொள்ளுதலும் இருப்பதைப் பற்றியே பெருமை பேசட்டும்.+யெகோவாவாகிய நான் மாறாத அன்பையும் நியாயத்தையும் நீதியையும் காட்டுகிற கடவுள் என்று பெருமையாகச் சொல்லட்டும்.+இவற்றை நான் விரும்புகிறேன்.”+ 25  யெகோவா சொல்வது இதுதான்: “நாட்கள் வரும்; அப்போது, உடலில் விருத்தசேதனம் செய்தும் உள்ளத்தில் விருத்தசேதனம் செய்யாமல் இருக்கிற எல்லாரையும் நான் தண்டிப்பேன்.+ 26  எகிப்தையும்+ யூதாவையும்+ ஏதோமையும்+ மோவாபையும்,+ அம்மோனியர்களையும்+ நான் தண்டிப்பேன். நெற்றி ஓரங்களில் முடியை வெட்டிக்கொண்டு வனாந்தரத்தில் வாழ்கிற ஜனங்களையும் தண்டிப்பேன்.+ ஏனென்றால், இஸ்ரவேலைச் சேராத இந்த ஜனங்கள் எல்லாரும் உடலில் விருத்தசேதனம் செய்யாமல் இருக்கிறார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் உள்ளத்தில் விருத்தசேதனம் செய்யாமல் இருக்கிறார்கள்.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அறிவுரையை.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலோடு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா