எஸ்தர் 2:1-23

2  அகாஸ்வேரு ராஜாவின்+ ஆத்திரம் அடங்கியபோது, வஸ்தி செய்த குற்றத்தையும்+ அவளுக்குக் கொடுத்த தீர்ப்பையும்+ பற்றி அவர் நினைத்துப் பார்த்தார்.  அப்போது அவருடைய உதவியாளர்கள், “ராஜாவே, உங்களுக்காக அழகான, இளம் கன்னிப் பெண்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.  அதற்காக உங்கள் சாம்ராஜ்யத்தில்+ இருக்கிற எல்லா மாகாணங்களிலும் அதிகாரிகளை நியமியுங்கள். அழகான, இளம் கன்னிப் பெண்கள் எல்லாரையும் சூசான்* கோட்டையின்* அந்தப்புரத்துக்குக் கூட்டிக்கொண்டு வரச் சொல்லுங்கள். ராஜாவின் பணியாளரும்* பெண்களின் பாதுகாவலருமான யேகாயின்+ பொறுப்பில் அவர்களை ஒப்படைக்கச் சொல்லுங்கள். வாசனைத் தைலங்களால் அவர்களுக்கு அழகு சிகிச்சைகள்* செய்யச் சொல்லுங்கள்.  அதன்பின் ராஜாவே, உங்களுக்கு எந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறதோ அந்தப் பெண்ணையே வஸ்திக்குப் பதிலாக+ பட்டத்து ராணியாக்குங்கள்” என்று சொன்னார்கள். அந்த ஆலோசனை ராஜாவுக்குப் பிடித்திருந்ததால் அப்படியே செய்தார்.  பென்யமீன் வம்சத்தைச்+ சேர்ந்த கீஸ் என்பவரின் கொள்ளுப் பேரனும், சீமேயின் பேரனும், யாவீரின் மகனுமான மொர்தெகாய்+ என்ற யூதர் சூசான்+ கோட்டையில் இருந்தார்.  பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார், யூதாவின் ராஜா எகொனியாவையும்*+ மற்றவர்களையும் எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போனபோது இவரையும்* பிடித்துக்கொண்டு போயிருந்தான்.  மொர்தெகாய் தன் அப்பாவுடைய சகோதரனின் மகளான அத்சாளை,+ அதாவது எஸ்தரை, தன் சொந்த மகள் போல வளர்த்துவந்தார். ஏனென்றால், அவளுடைய அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள். அவள் ரொம்ப அழகாகவும் லட்சணமாகவும் இருந்தாள்.  ராஜாவின் ஆணையும் சட்டமும் அறிவிக்கப்பட்டபோது, இளம் பெண்கள் நிறைய பேர் சூசான் கோட்டைக்குக் கொண்டுவரப்பட்டு யேகாயின் பொறுப்பில் விடப்பட்டார்கள்.+ அப்போது, எஸ்தரும் ராஜாவின் மாளிகைக்குக் கொண்டுவரப்பட்டு, பெண்களின் பாதுகாவலரான யேகாயிடம் ஒப்படைக்கப்பட்டாள்.  அவருக்கு எஸ்தரை மிகவும் பிடித்துவிட்டது; அவள் அவரிடம் நல்ல பெயரெடுத்ததால், அவளுக்கு அழகு சிகிச்சைகள்*+ செய்வதற்கும் சத்தான உணவு வகைகளைக் கொடுப்பதற்கும் உடனடியாக ஏற்பாடு செய்தார். அதோடு, ராஜாவின் மாளிகையிலிருந்த இளம் பெண்களில் ஏழு பேரை அவளுடைய பணிப்பெண்களாக நியமித்தார். பின்பு, அவளையும் அந்தப் பணிப்பெண்களையும் அந்தப்புரத்திலிருந்த மிகச் சிறந்த இடத்துக்கு மாற்றினார். 10  எஸ்தர் தன்னுடைய ஜனங்களைப்+ பற்றியோ சொந்தபந்தங்களைப் பற்றியோ யாரிடமும் எதையும் சொல்லவில்லை; ஏனென்றால், அதைப் பற்றி வாயே திறக்கக் கூடாதென்று+ மொர்தெகாய்+ சொல்லி வைத்திருந்தார். 11  எஸ்தர் எப்படி இருக்கிறாள், அவளுக்கு என்ன நடக்கிறது என்றெல்லாம் தெரிந்துகொள்வதற்காக மொர்தெகாய் தினமும் அந்தப்புரத்து முற்றத்தின் வழியாகப் போவதும் வருவதுமாக இருந்தார். 12  அந்தப்புரத்துக்குக் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு, முதல் ஆறு மாதங்கள் வெள்ளைப்போள*+ தைலத்தாலும், அடுத்த ஆறு மாதங்கள் பரிமளத் தைலத்தாலும் விதவிதமான வாசனைத் தைலங்களாலும்+ அழகு சிகிச்சை* செய்யப்படும். அந்த 12 மாதங்களுக்குப் பின்பு ஒவ்வொரு பெண்ணாக அகாஸ்வேரு ராஜாவிடம் கொண்டுபோகப்படுவார்கள். 13  அந்தப்புரத்திலிருந்து ராஜாவின் மாளிகைக்குக் கொண்டுபோகப்படும்போது ஒவ்வொரு பெண்ணும் தான் விரும்பிய எல்லாவற்றையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். 14  அவள் சாயங்காலம் ராஜாவிடம் கொண்டுபோகப்படுவாள், பின்பு காலையில் மறுமனைவிகளின் அந்தப்புரத்துக்கு* கொண்டுபோகப்படுவாள். அங்கு ராஜாவின் பணியாளரும்+ மறுமனைவிகளின் பாதுகாவலருமான சாஸ்காசிடம் ஒப்படைக்கப்படுவாள். ராஜா அவளை மிகவும் விரும்பி, பெயர் சொல்லி கூப்பிட்டால் மட்டும்தான் அவளால் அவரிடம் மறுபடியும் போக முடியும்.+ 15  ராஜாவிடம் கொண்டுபோகப்படுவதற்கு மொர்தெகாயின் அப்பாவுடைய சகோதரரான அபியாயேலின் மகளாகிய எஸ்தரின் முறை வந்தது. மொர்தெகாயின் வளர்ப்பு மகளாகிய அவள்,+ ராஜாவின் பணியாளரும் பெண்களின் பாதுகாவலருமான யேகாய் சிபாரிசு செய்ததைத் தவிர வேறு எதையும் கூடுதலாகக் கேட்கவில்லை. (எஸ்தர் அங்கிருந்த நாளெல்லாம், பார்க்கிற எல்லாருடைய மனதையும் கவர்ந்திருந்தாள்.) 16  அகாஸ்வேரு ராஜா ஆட்சி செய்த ஏழாம் வருஷம்,+ பத்தாம் மாதமாகிய தேபேத்* மாதத்தில் அவருடைய அரச மாளிகைக்கு எஸ்தர் கொண்டுபோகப்பட்டாள். 17  ராஜா மற்ற எல்லா பெண்களையும்விட எஸ்தரையே மிகவும் விரும்பினார். மற்ற எல்லா கன்னிப் பெண்களையும்விட அவள்மேல் அதிக பிரியமும் பாசமும் வைத்தார். அதனால் ராஜா அவளுக்குக் கிரீடம்* சூட்டி, வஸ்திக்குப் பதிலாக+ பட்டத்து ராணியாக்கினார்.+ 18  அவளைக் கௌரவிப்பதற்காகத் தன்னுடைய எல்லா தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் பிரமாண்டமான ஒரு விருந்தை ஏற்பாடு செய்தார். அதுமட்டுமல்ல, எல்லா மாகாணங்களிலும் பொதுமன்னிப்பு* தருவதாக அறிவித்து, ராஜாவின் அந்தஸ்துக்குத் தகுந்தபடி அன்பளிப்புகளை வாரி வழங்கினார். 19  கன்னிப் பெண்கள்*+ இரண்டாவது தடவை கொண்டுவரப்பட்டபோது, மொர்தெகாய் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தார். 20  மொர்தெகாய் சொல்லியிருந்தபடியே எஸ்தர் தன்னுடைய சொந்தபந்தங்களையும் ஜனங்களையும்+ பற்றி யாரிடமும் வாய் திறக்கவில்லை. அவரிடம் வளர்ந்த காலமெல்லாம் அவருடைய பேச்சைத் தட்டாமல் நடந்துகொண்டது போலவே இப்போதும் நடந்துகொண்டாள்.+ 21  மொர்தெகாய் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தபோது, ராஜாவின் அரண்மனை அதிகாரிகளாகவும் வாயிற்காவலர்களாகவும் வேலை செய்த பிக்தானும் தேரேசும் அகாஸ்வேரு ராஜாவின் மேல் இருந்த கோபத்தில் அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்கள். 22  மொர்தெகாய்க்கு அது தெரியவந்ததும் எஸ்தர் ராணியின் காதில் விஷயத்தைப் போட்டார். எஸ்தரும் மொர்தெகாய் சொல்லச் சொன்னதாக ராஜாவிடம் அதைத் தெரிவித்தாள். 23  உடனே விசாரணை நடத்தப்பட்டது. மொர்தெகாய் சொன்னது உண்மைதான் என்பது தெரியவந்தபோது, அந்த ஆட்கள் இரண்டு பேரும் மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டார்கள். இவையெல்லாம் அந்தக் காலத்து சரித்திரப் புத்தகத்தில் ராஜாவுக்கு முன்பாகப் பதிவு+ செய்யப்பட்டன.

அடிக்குறிப்புகள்

வே.வா., “சூசா.”
வே.வா., “அரண்மனையின்.”
நே.மொ., “அண்ணகரும்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “மசாஜ்.”
2ரா 24:8-ல் யோயாக்கீன் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கே ‘இவர்’ என்பது கீசாகவும் இருக்கலாம், மொர்தெகாயாகவும் இருக்கலாம்.
வே.வா., “மசாஜ்.”
வே.வா., “மசாஜ்.”
வே.வா., “இரண்டாம் வீட்டுக்கு.”
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
வே.வா., “தலைப்பாகை.”
வரி செலுத்துவதிலிருந்தும் ராணுவ சேவையிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுவதைக்கூட இது உட்படுத்தலாம்.
வே.வா., “இளம் பெண்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா