எஸ்தர் 3:1-15
3 இதற்குப் பின்பு அகாஸ்வேரு ராஜா, ஆகாகியனான+ அம்மெதாத்தாவின் மகன் ஆமானைக்+ கௌரவித்து, எல்லா அதிகாரிகளையும்விட உயர்ந்த பதவியில் வைத்தார்.+
2 அரண்மனை வாசலில் இருந்த ராஜாவின் ஊழியர்கள் எல்லாரும், அவருடைய கட்டளைப்படி ஆமானுக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். ஆனால், மொர்தெகாய் அப்படிச் செய்யவில்லை.
3 அதனால், அரண்மனை வாசலில் இருந்த ராஜாவின் ஊழியர்கள் மொர்தெகாயைப் பார்த்து, “ராஜாவுடைய கட்டளையை ஏன் மீறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
4 இப்படி ஒவ்வொரு நாளும் அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள், ஆனால் மொர்தெகாய் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அதனால் அவர்கள் ஆமானிடம், “மொர்தெகாய் செய்வது சரிதானா என்று நீங்களே பாருங்கள்” என்றார்கள்.+ தான் ஒரு யூதன்+ என்று மொர்தெகாய் அவர்களிடம் சொல்லியிருந்தார்.
5 மொர்தெகாய் தனக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழாததை ஆமான் கவனித்தபோது அவனுக்குப் பயங்கர கோபம் வந்தது.+
6 அதனால், மொர்தெகாயை ஒழித்துக்கட்ட நினைத்தான். ஆனாலும், மொர்தெகாயின் இனத்தாரைப் பற்றி ராஜாவின் ஊழியர்கள் தன்னிடம் சொல்லியிருந்ததால் அவர்களையும் சேர்த்து ஒழித்தால்தான் தனக்குக் கௌரவம் என்று நினைத்தான். அதனால், அகாஸ்வேருவின் சாம்ராஜ்யம் முழுவதும் வாழ்ந்த மொர்தெகாயின் இனத்தாரான யூதர்கள் எல்லாரையும் தீர்த்துக்கட்ட வழிதேடினான்.
7 அது அகாஸ்வேரு ராஜா ஆட்சி செய்த 12-ஆம் வருஷத்தின்+ முதலாம் மாதமான நிசான்* மாதம். யூதர்களை எந்த மாதத்தில் எந்த நாளில் தீர்த்துக்கட்டலாம் என்று தீர்மானிப்பதற்காக ஆமானுக்கு முன்னால் ‘பூர்’+ என்ற குலுக்கல் போடப்பட்டது. 12-ஆம் மாதமான ஆதார்* மாதத்திற்குக்+ குலுக்கல் விழுந்தது.
8 பின்பு அகாஸ்வேரு ராஜாவிடம் ஆமான், “உங்களுடைய சாம்ராஜ்யத்தில் உள்ள+ எல்லா மாகாணங்களிலும் ஒரு இனத்தார் பரவியிருக்கிறார்கள்.+ அவர்களுடைய சட்டங்கள் மற்ற இனத்தாருடைய சட்டங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றன. அவர்கள் ராஜாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதே இல்லை. அவர்களை இப்படியே விட்டுவைப்பது ராஜாவுக்கு நல்லதல்ல.
9 ராஜாவுக்குச் சரியாகப் பட்டால், அவர்களைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்று சாம்ராஜ்யமெங்கும் கட்டளை அனுப்புங்கள். அரண்மனை கஜானாவுக்கு நான் 10,000 வெள்ளி தாலந்தை* அதிகாரிகளிடம் கொடுக்கிறேன்”* என்று சொன்னான்.
10 உடனே ராஜா, தன்னுடைய முத்திரை மோதிரத்தைக்+ கழற்றி ஆகாகியனான+ அம்மெதாத்தாவின் மகனும் யூதர்களின் எதிரியுமான ஆமானிடம் கொடுத்தார்.+
11 பின்பு அவனிடம், “அந்த ஜனங்களையும் வெள்ளியையும் உன்னிடமே ஒப்படைக்கிறேன். உன் இஷ்டப்படி செய்” என்று சொன்னார்.
12 முதலாம் மாதம் 13-ஆம் நாளில் ராஜாவுடைய செயலாளர்கள்+ வரவழைக்கப்பட்டார்கள். ஆமான் ஆணையிட்ட எல்லாவற்றையும் அதிபதிகளுக்கும் மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் எல்லா இனத்தாரின் தலைவர்களுக்கும், அந்தந்த மாகாணங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களிலும் அந்தந்த ஜனங்களின் மொழிகளிலும் அவர்கள் எழுதினார்கள்.+ அவை அகாஸ்வேரு ராஜாவின் பெயரில் எழுதப்பட்டு, அவருடைய முத்திரை மோதிரத்தால் முத்திரை போடப்பட்டன.+
13 ராஜாவின் எல்லா மாகாணங்களுக்கும் தூதுவர்கள்* மூலமாக அந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. “சிறியவர்கள், பெரியவர்கள், பிள்ளைகள், பெண்கள் என்று பார்க்காமல் யூதர்கள் எல்லாரையும் ஒரே நாளில், அதாவது 12-ஆம் மாதமாகிய ஆதார் மாதம்+ 13-ஆம் நாளில், கொன்றுபோடுங்கள். அவர்களை அடியோடு ஒழித்துக்கட்டுங்கள். அவர்களுக்குச் சொந்தமானதையெல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள்”+ என்று அந்தக் கடிதங்களில் எழுதப்பட்டிருந்தது.
14 அவற்றை எல்லா மாகாணங்களுக்கும் அனுப்பி, ஒரு சட்டமாக அமல்படுத்த வேண்டியிருந்தது. அந்த நாளுக்குத் தயாராவதற்காக அந்தச் சட்டத்தை எல்லா ஜனங்களுக்கும் அறிவிக்க வேண்டியிருந்தது.
15 சூசான்* கோட்டையில்* பிறப்பிக்கப்பட்ட அந்தச் சட்டம், ராஜாவின் உத்தரவுப்படி தூதுவர்கள் மூலம் வேகமாக அனுப்பப்பட்டது.+ பின்பு, ராஜாவும் ஆமானும் திராட்சமது குடிக்க உட்கார்ந்தார்கள். ஆனால், சூசான்*+ நகரம் குழப்பத்தில் மூழ்கியிருந்தது.
அடிக்குறிப்புகள்
^ இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
^ இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
^ அல்லது, “இந்தக் கட்டளையை நிறைவேற்றுபவர்களுக்காக நான் 10,000 வெள்ளி தாலந்தை அரண்மனை கஜானாவுக்குத் தருகிறேன்.”
^ ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ அதாவது, “விரைவு அஞ்சல்காரர்கள்.”
^ வே.வா., “சூசா.”
^ வே.வா., “அரண்மனையில்.”
^ வே.வா., “சூசா.”