எஸ்தர் 4:1-17

4  நடந்ததையெல்லாம் மொர்தெகாய் கேள்விப்பட்டபோது,+ தன்னுடைய உடையைக் கிழித்துவிட்டு, துக்கத் துணி* உடுத்திக்கொண்டு, தன்மேல் சாம்பலைப் போட்டுக்கொண்டார். பின்பு நகரத்தின் நடுவில் போய், கதறிக் கதறி அழுதார்.  துக்கத் துணி உடுத்திய யாரும் அரண்மனை வாசலுக்குள் நுழையக் கூடாது என்பதால் அவர் அந்த வாசல்வரைதான் போனார்.  ராஜாவின் கட்டளை எந்தெந்த மாகாணங்களை+ எட்டியதோ அங்கெல்லாம் இருந்த யூதர்கள் விரதமிருந்து,+ ஓலமிட்டு அழுது, துக்கம் அனுசரித்தார்கள். நிறைய பேர் துக்கத் துணியிலும்* சாம்பலிலும்+ படுத்துக் கிடந்தார்கள்.  எஸ்தரின் பணிப்பெண்களும் பணியாளர்களும்* அவளிடம் விஷயத்தைச் சொன்னபோது, அவள் பதறிப்போனாள். துக்கத் துணி உடுத்தியிருந்த மொர்தெகாய்க்கு வேறு உடைகளைக் கொடுத்து அனுப்பினாள். ஆனால், அவர் அவற்றை வாங்கிக்கொள்ளவில்லை.  அதை எஸ்தர் கேள்விப்பட்டபோது, தனக்குப் பணிவிடை செய்ய ராஜா நியமித்த பணியாளரான ஆத்தாகுவைக் கூப்பிட்டு, என்ன நடந்ததென்று மொர்தெகாயிடம் விசாரித்து வரும்படி கட்டளை கொடுத்தாள்.  அதனால், அரண்மனை வாசலுக்கு எதிரில் நகரத்தின் பொது சதுக்கத்தில் இருந்த மொர்தெகாயிடம் ஆத்தாகு போனார்.  மொர்தெகாய் தனக்கு நடந்ததைப் பற்றியும், யூதர்களைத் தீர்த்துக்கட்ட+ அரண்மனை கஜானாவுக்கு ஆமான் தருவதாகச் சொன்ன தொகையைப்+ பற்றியும் ஆத்தாகுவிடம் சொன்னார்.  யூதர்களை அழிப்பதற்காக சூசான்*+ கோட்டையில்* பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் நகலை ஆத்தாகுவிடம் கொடுத்து, அதை எஸ்தரிடம் காட்டும்படியும் அவளுக்கு எல்லாவற்றையும் விளக்கும்படியும் சொன்னார்.+ அதோடு, ராஜாவை நேரில் போய்ப் பார்த்து அவளுடைய ஜனங்களுக்குக் கருணை காட்டும்படி கெஞ்சிக் கேட்கும்படி சொல்லச் சொன்னார்.  ஆத்தாகு திரும்பி வந்து மொர்தெகாய் சொன்ன எல்லாவற்றையும் எஸ்தரிடம் விளக்கினார். 10  உடனே எஸ்தர் ஆத்தாகுவை மொர்தெகாயிடம்+ அனுப்பி, 11  “இந்த 30 நாட்களாக ராஜா என்னைக் கூப்பிடவில்லை. ராஜா கூப்பிடாமல் அரண்மனை உள்முற்றத்துக்குள்+ யாராவது போனால், அவர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, மரண தண்டனைதான் கிடைக்கும்! ராஜா தன்னுடைய பொன் செங்கோலை நீட்டினால் மட்டும்தான் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும்.+ இது ராஜாவின் எல்லா ஊழியர்களுக்கும் அவருடைய மாகாணங்களில் வாழ்கிற எல்லா ஜனங்களுக்கும் நன்றாகத் தெரியுமே” என்று சொல்லச் சொன்னாள். 12  அவரும் எஸ்தர் சொன்னதை மொர்தெகாயிடம் சொன்னார். 13  அப்போது, மொர்தெகாய் அவரைத் திரும்ப எஸ்தரிடம் அனுப்பி, “நீ ராஜாவின் அரண்மனையில் இருப்பதால், மற்ற யூதர்கள் கொல்லப்படும்போது நீ மட்டும் தப்பித்துவிடலாம் என்று நினைக்காதே. 14  நீ இப்போது அமைதியாக இருந்தால், யூதர்களுக்கு உதவியும் விடுதலையும் வேறொரு வழியில் கிடைக்கும்,+ ஆனால் நீயும் உன் அப்பாவின் குடும்பத்தாரும் அழிந்துபோவீர்கள். யாருக்குத் தெரியும், இப்படிப்பட்ட காலத்தில் உதவி செய்வதற்காகவே நீ ராணியாக ஆகியிருக்கலாம்”+ என்று சொல்லச் சொன்னார். 15  அதைக் கேட்ட எஸ்தர் மறுபடியும் ஆத்தாகுவை மொர்தெகாயிடம் அனுப்பி, 16  “நீங்கள் சூசானில் இருக்கும் யூதர்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டி எனக்காக விரதமிருங்கள்.+ மூன்று நாட்களுக்கு ராத்திரியும் பகலும் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ வேண்டாம்.+ என்னுடைய பணிப்பெண்களோடு சேர்ந்து நானும் விரதமிருக்கிறேன். அதன்பின், சட்டத்தை மீறி ராஜாவிடம் போகிறேன்; என் உயிர் போனால் போகட்டும்” என்று சொல்லச் சொன்னாள். 17  உடனே மொர்தெகாய் கிளம்பிப்போய், எஸ்தர் சொன்ன எல்லாவற்றையும் செய்தார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “அண்ணகர்களும்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “அரண்மனையில்.”
வே.வா., “சூசா.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா