எஸ்தர் 7:1-10

7  ராஜாவும் ஆமானும்+ எஸ்தர் ராணி ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு வந்தார்கள்.  அந்த இரண்டாம் நாள் விருந்தின் முடிவில் திராட்சமது பரிமாறப்பட்டபோது ராஜா மறுபடியும் எஸ்தரிடம், “எஸ்தர் ராணியே, உனக்கு என்ன வேண்டுமென்று சொல். உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். உன் விருப்பம் என்ன? என்னுடைய சாம்ராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்” என்று சொன்னார்.+  அதற்கு எஸ்தர் ராணி, “ராஜாவுக்கு என்மேல் பிரியம் இருந்தால், ராஜாவுக்கு நல்லதாகப் பட்டால், எனக்கும் என் ஜனங்களுக்கும்+ உயிர்ப்பிச்சை தர வேண்டும். நான் கேட்டுக்கொள்வது இதுதான். என்னுடைய விருப்பமும் இதுதான்.  நானும் என் ஜனங்களும் கொலை செய்யப்படுவதற்காகவும் அடியோடு அழிக்கப்படுவதற்காகவும் விற்கப்பட்டிருக்கிறோம்.+ நாங்கள் வெறுமனே அடிமைகளாக விற்கப்பட்டிருந்தால்கூட, நான் பேசாமல் இருந்திருப்பேன். ஆனால், ராஜாவுக்கே நஷ்டம் ஏற்படப்போவதால் இந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிடுவது நியாயமாக இருக்காது” என்று சொன்னாள்.  உடனே அகாஸ்வேரு ராஜா, “இப்படியொரு அக்கிரமத்தைச் செய்யத் துணிந்தவன் யார்? அவன் எங்கே?” என்று கேட்டார்.  அதற்கு எஸ்தர், “இதோ, இந்தக் கேடுகெட்ட ஆமான்தான் அந்த எதிரி!” என்று சொன்னாள். ராஜாவுக்கும் ராணிக்கும் முன்பாக ஆமான் வெலவெலத்துப் போனான்.  ராஜா பயங்கர கோபத்துடன் விருந்தைவிட்டு எழுந்து அரண்மனைத் தோட்டத்துக்குப் போனார். ஆனால் ஆமான், ராஜா எப்படியும் தன்னைத் தண்டிக்கப்போகிறார் என்பதை உணர்ந்து, தன்னுடைய உயிரைக் காப்பாற்றும்படி எஸ்தர் ராணியிடம் கெஞ்சிக் கேட்க எழுந்து நின்றான்.  ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சமது பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பி வந்தபோது, எஸ்தர் உட்கார்ந்திருந்த மெத்தையில் ஆமான் விழுந்து கிடப்பதைப் பார்த்தார். உடனே, “இவன் என் அரண்மனையிலேயே என் ராணியைக் கற்பழிக்கக்கூட துணிந்துவிட்டானா?” என்று கத்தினார். உடனே, அங்கிருந்தவர்கள் ஆமானின் முகத்தைத் துணியால் மூடினார்கள்.  அரண்மனை அதிகாரிகளில் ஒருவரான அற்போனா+ ராஜாவைப் பார்த்து, “ராஜாவின் உயிரைக் காப்பாற்றிய+ மொர்தெகாயைத் தொங்கவிடுவதற்காக ஆமான் ஒரு மரக் கம்பத்தைக்கூட நாட்டி வைத்திருக்கிறான்.+ அது அவனுடைய வீட்டுக்கு வெளியில் சுமார் 73 அடி* உயரத்தில் நிற்கிறது” என்று சொன்னார். அதற்கு ராஜா, “அந்த மரக் கம்பத்திலேயே இவனைத் தொங்கவிடுங்கள்!” என்றார். 10  அதன்படி, மொர்தெகாய்க்காக அவன் நாட்டியிருந்த மரக் கம்பத்திலேயே அவனைத் தொங்கவிட்டார்கள். அப்போதுதான் ராஜாவின் ஆத்திரம் அடங்கியது.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “50 முழ.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா